தீர்த்த யாத்திரை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
யோஹான்னான் அண்ணே... அந்த ஜன்னலைக் கொஞ்சம் திறந்துவிட்டா, காத்து நல்லா உள்ளே வருமே!''
"நிச்சயமா காத்து நல்லா வரும் ஃபாதர்.'' நான் சொன்னேன். ஃபாதரே நடந்து போய் ஜன்னலைத் திறந்துவிட்டார். நான் எனக்குள் சொன்னேன்: "அப்பாடா... ஃபாதரிடம் விஷயத்தைச் சொல்லியாச்சு. இனி எல்லாமே நல்லபடி நடக்கும்!" சமீபத்தில் நான் ஃபாதரைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்:
"ஃபாதர், வாளாடியில் இருக்குற ஏலத் தோட்டத்துல இருந்து வேட்டைக்காரன் நீலஞ்சிற மத்தாயி கொஞ்சம் மான்கறியைக் காய வச்சு கொடுத்தனுப்பி இருக்கான். ஃபாதர், நீங்க கொஞ்சம் இங்கே வந்தா, அதை நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து ருசி பார்க்கலாம். பிறகு... ஜோமோன் இந்த முறை பிராந்திக்குப் பதிலா ப்ளுலேபல்ன்ற விஸ்கியைக் கொடுத்து விட்டிருக்கான். அதையும் ஒரு கை பார்ப்போமே?''
"சரி... யோஹன்னான் அண்ணே...'' ஃபாதர் சொன்னார்: "நல்ல விஷயம்தான்!''
காயவைத்த மான் கறியை மிகவும் சுவையாகச் சமைப்பது எப்படித் தெரியுமா? முதலில் அதை தீயில் இப்படியும் அப்படியுமாய் திருப்பித் திருப்பி எல்லாப் பக்கமும் நன்றாக வேகும்படி சுட வேண்டும். அதற்குப் பிறகு அம்மியில் வைத்து குழவியால் நன்றாக அடித்துச் சின்னச் சின்ன துண்டுகளாக ஆக்க வேண்டும். அதற்குப் பிறகு அதனை நார் நாராகக் கிழிக்க வேண்டும். கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யைச் சூடாக்கி அதில் வெள்ளைப் பூண்டும் கருவேப்பிலையும் போட்டு கருகுகிற வரை வறுக்க வேண்டும். இப்போது சின்னச் சின்ன துண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் மான் இறைச்சியை எண்ணெய்யில் போட வேண்டும். கொஞ்சம் மிளகுப் பொடியைச் சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். என்ன ருசி இருக்கும் தெரியுமா? ஃபாதரும் நானும் வறுவல் கறியையும், முட்டை பொரியலையும் ப்ளூ லேபல் விஸ்கியையும் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது, நான் ஃபாதரிடம் சொன்னேன். "ஃபாதர்... சமீபத்துல என் வாழ்க்கையில ஒரு வினோதமான சம்பவம் நடந்துச்சு. நான் இப்போ அதைச் சொல்லலாமா?'' ஃபாதர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "யோஹன்னான் அண்ணே... இது குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவ மன்னிப்பு கேக்குற விஷயமா... இல்லாட்டி கதையா? பாவமன்னிப்பு விஷயம்னா நான் கொஞ்சம் விலகி இருக்கணும்.''
"ஃபாதர்...'' நான் சொன்னேன்: "ரெண்டும் சேர்ந்ததுதான்னு வச்சுக்கோங்களேன். என்னைப் பொறுத்தவரை செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு பாவ மன்னிப்பு கேக்குறது வேற, கதை வேறன்னு நான் நினைக்கல!'' நான் இப்படிச் சொன்னதும், ஃபாதர் சிரித்தவாறே என்னைப் பார்த்தார். நான் சொன்னேன்:
"ஃபாதர்... உங்களுக்கு இது ஒரு தமாஷ்... எனக்கு என்னோட எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. என்னோட பாவங்கள் நிறைஞ்ச வாழ்க்கையை இதோட நிறுத்திக்கணும்னு கடவுள் எனக்குக் காட்டின ஒரு அடையாளமா இது இருக்குமோன்னு எனக்கு ஒரே பயமா இருக்கு. இதுல கொஞ்சம் ஆபாசம் இருக்கு.
அதைப் பெரிசா எடுத்துக்காம ஃபாதர், நீங்க என்னை மன்னிக்கணும்.''
ஃபாதர் சொன்னார். "அண்ணே... உங்களோட விசேஷங்களை நான் என்ன முதல் தடவையாவா கேக்குறேன்! ரொம்ப நீட்டி முழக்கி சொல்லணும்னு அவசியம் இல்ல. சுருக்கமா சொன்னா போதும். தெரியுதா?'' நான் சொன்னேன்: "பாதர்... இதுல முக்கியமான ஒரு விஷயமே- விவரமா சொல்றதுலதான் இருக்கு!'' "சரி...'' ஒவ்வொரு சுண்டுவிரலையும் ஒவ்வொரு காதில் வைத்துக்கொண்டு ஃபாதர் சொன்னார்.
"இந்தக் காது மூலம் உள்ளே போகுது. இந்தக் காது வழியே வெளியே வருது. நம்மளோட காரியங்கள் எதுவாக இருந்தாலும் கடவுள் மன்னிக்கட்டும். இந்த விஸ்கி பரவாயில்லையே! இதோட பேர் என்னன்னு சொன்னீங்கண்ணே...?''
"ப்ளூ லேபல்.'' நான் சொன்னேன். "ஃபாதர்... இங்கே அப்பப்போ பெண்கள் வர்றது உண்டுன்னு உங்களுக்குத் தெரியுமில்லியா?'' ஃபாதர் ஸ்பூனால் ஐஸ்கட்டியை எடுத்துக் கொண்டிருந்தார். நான் சொன்னேன்: "ஒரு புரோக்கர்தான் பெண்களை இங்கே அழைச்சிட்டு வர்றான்ற விஷயம் ஃபாதர்... உங்களுக்குத் தெரியுமா?'' நான் கேட்ட கேள்விக்கு ஃபாதர் எதுவும் பதில் சொல்லவில்லை. நான் சொன்னேன்: "நம்மோட படமாவன் குஞ்ஞு- அவன்தான் அந்த புரோக்கர். அநேகமாக ஃபாதர்... அவன் ஏற்கெனவே உங்க முன்னாடி கூண்டுல நின்னு தன்னோட தப்புகளையெல்லாம் ஒப்புக்கொண்டிருக்கலாம். ஃபாதர், நான் சொல்றது சரிதானா?'' நான் உரத்த குரலில் சிரித்தவாறு ஃபாதரைப் பார்த்தேன். அவர் ஜன்னல் வழியாக எதையோ வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நான் சொன்னதை கவனித்தது மாதிரி தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும், ஃபாதர் மான் கறியை எடுத்து வாய்க்குள் போட்டு மென்றவாறு சொன்னார்.
"ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. மத்தாயி நல்லது இல்லைன்னா இங்க எதையும் கொடுத்து விடுறதே இல்ல!'' நான் சொன்னேன்:
"ஆரம்பத்துல என்னோட துப்பாக்கியை வச்சுத்தான் அவன் எப்படி சுடுறதுன்ற விஷயத்தையே தெரிஞ்சுக்கிடடான்.
அதற்குப் பிறகு நான் அந்தத் துப்பாக்கியை அவன்கிட்டயே கொடுத்துட்டேன். வேட்டைக்குப் போகணும். துப்பாக்கியால ஏதாவது ஒரு மிருகத்தைச் சுடணும்ன்ற ஆசையெல்லாம் படிப்படியா எனக்கு இல்லாமலே போச்சு. ஃபாதர்... காம விஷயங்கள்மேல எனக்கு உண்டான விருப்பம்... துப்பாக்கியை வச்சு வெடிக்கணும்ன்ற ஆசை எப்படி எனக்கு இல்லாம போச்சோ, அதேமாதிரி காம எண்ணங்களும் என்னைவிட்டு ஏன் போகல?'' ஃபாதர் கண்ணாடி டம்ளரில் விஸ்கியை ஊற்றி அதையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு ரசித்துக்கொண்டிருந்தார். பின்னர் இரண்டு மூன்று ஐஸ்கட்டிகளைப் போட்டு, குடிக்க ஆரம்பித்தார்.
"ஃபாதர்...'' நான் சொன்னேன்: "நீங்க இந்த உலகத்துல எவ்வளவோ ஆளுங்களைப் பார்த்திருப்பீங்க. என்னை இனிமேல் இந்த வயசுல காதலிக்க எந்தப் பெண்ணும் வரமாட்டா... உங்களால நான் சொன்னதைப் புரிஞ்சுக்க முடியுதா.''
ஃபாதர் தாடையில் கை வைத்தவாறு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"டேய், வர்கீஸ்...'' நான் சமையலறைப் பக்கம் பார்த்து சத்தம் போட்டேன். "கொஞ்சம் ஆம்லெட் தயார் பண்ணு!'' தொடர்ந்து ஃபாதரிடம் சொன்னேன். "அதுனாலதான் நான் படமாவன் குஞ்ஞுகூட பழகவே ஆரம்பிச்சேன். உண்மை என்ன தெரியுமா? ஃபாதர்... வயசாகிப்போன கிழவன்களையும் கிழவிகளையும் யாருமே காதலிக்காததுக்கு காரணம் என்னன்னு நினைக்கிறீங்க? புத்தகங்கள் ஆயிரம் சொல்லலாம். காதலுக்கு வெறும் இதயம் மட்டும் இருந்தா போதாது. நல்ல மினுமினுப்பான உடலும் வேணும். அந்த ஒரே காரணத்தாலதான் ஜாலியா வாழ்க்கையை நடத்தணும்ன்ற என்னோட ஆசையின் சாவி படமாவன் குஞ்ஞு கையில போய் சிக் கிக்கிடுச்சு. ஃபாதர்... நீங்க என்ன சொல்றீங்க?''