தீர்த்த யாத்திரை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6774
காரணம்- ஃபாதர், அவள் தியானம் செய்யவும், பிரார்த்தனை செய்யவும் இருக்குற நம்ம கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண். அப்படிப்பட்ட சேவையில இருக்கிற ஒரு பெண்ணை இப்படியொரு தொழில் பண்றவளா பார்க்க என் மனசு இடம் கொடுக்கல. நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: "திடீர்னு எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு. இப்போ ஒண்ணும் பிரச்சினை இல்ல. நீ போயி லைட்டை ஆஃப் பண்ணு." அவ முகம் பார்க்க ரொம்ப அழகாகவே இருந்துச்சு, ஃபாதர். அவ முகம் இப்பக்கூட என் ஞாபகத்துல இருக்கு. விளக்கை அணைச்சிட்டு வந்த அவளைப் பார்த்து நான் சொன்னேன். "ஏம்மா... இங்க வா... என்னை நீ தப்பா நினைக்கக் கூடாது. நான் ஒரு விஷயம் உண்மையான்னு தெரிஞ்சுக்கணும்."அவள் இருட்டுல தரையில உட்கார்ந்திருந்த என் பக்கத்துல வந்து நின்னா. நான் என் சந்தேகத்தைத் தீர்க்குறதுக்காக இன்னொரு முறை அவளைத் தொட்டுப் பார்த்தேன். சந்தேகமே இல்லை. அதே மருதான். அவளும் முழுசா வியர்வையில நனைஞ்சு போயிருந்தா. நான் அவளோட கைகள் ரெண்டையும் பிடிச்சு என் கைக்குள்ள வச்சிக்கிட்டு சொன்னேன்: "பெண்ணே... நீ ஒரு தெய்வ நம்பிக்கை கொண்டவள்தானே? அற்புதங்கள் நடக்கிறதில நம்பிக்கை உள்ள பெண்தானே?" "ஆமா..." அவள் சொன்னாள். நான் சொன்னேன்: "என் வாழ்க்கையில ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்திருக்கு. என்னைப்போல இருக்குற ஒருத்தனோட வாழ்க்கையில அற்புதமான காரியங்கள் நடக்குறதுன்றது அவ்வளவு நல்ல விஷயமா எனக்குப்படல. ஒருவேளை நடக்குற இந்த விஷயங்கள் எல்லாம் பிசாசோட வேலையாக்கூட இருக்கலாம். இல்லாட்டின்னா கடவுள் ஏதோ மனசுல வச்சுக்கிட்டு எனக்குத் தர்ற எச்சரிக்கையாகூட இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், கடவுள் இதை செஞ்சாலும் சரி, பிசாசு பண்ணினாலும் சரி, எனக்கு ஒரே பயமா இருக்கு. ஏம்மா... எனக்காக நீ பிரார்த்திப்பியா?" நான் இப்படிச் சொன்னதும் அவள் ஒரு விதத்துல அதிர்ந்து போயிட்டா. ஆனால் நான் அவளோட கைகள் ரெண்டையும் பலமா பிடிச்சுக்கிட்டு சொன்னேன்: "என்னைப் போல பாவம் செஞ்சவங்களுக்கு இல்லாம வேற யாருக்குத்தான் நல்லவங்க பிரார்த்திப்பாங்க? எனக்கு கட்டாயம் நீ உதவணும்." நான் அவளோட கைகள் ரெண்டையும் எடுத்து என்னோட தலையில வச்சேன். நான் சொன்னேன்: "பாவியான எனக்காக நீ கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்யணும். கடவுள் ஆதரவு இல்லாம நின்னுக்கிட்டு இருக்குற எனக்கு ஆச்சரியமான விஷயங்களை இனிமேலும் காட்டாம இருக்கணும்னு நீதான் அவர்கிட்ட வேண்டிக்கணும்!" நான் அவள் முன்னாடி முழங்கால் போட்டு தலைகுனிஞ்சு நின்னேன். ஃபாதர்... அப்ப என்ன நடந்துச்சு தெரியுமா? இருட்டுல என் கண்களுக்கு முன்னாடி அவளோட மரு ஒரு நெருப்புத்துண்டு மாதிரி பிரகாசமா தெரிஞ்சது. ஆனா, என்னைச்சுத்தி எதையுமே பார்க்க முடியாத இருட்டு. ஆனா, என் தலையில கையை வச்சு உடம்பெல்லாம் வேர்த்துப்போய் அந்தப் பெண் நின்னுக்கிட்டு இருக்கா... ஃபாதர்... அப்போ அவளோட தொடை, மரு எல்லாமே அந்த இருட்டுல, ரேடியம்னு நாம சொல்லுவோம்ல... அது மாதிரி பயங்கர பிரகாசமா இருக்கு. என் கண்களை அந்த இடத்தைவிட்டு நகர்த்தாம அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன். இது நரகத்தோட வெளிச்சமா- இல்லாட்டி சொர்க்கத்தோட வெளிச்சமான்னு நான் சிந்திச்சிக்கிட்டு இருந்தப்போ, என்ன காரணத்தாலோ என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. நான் அப்படியே தரையில உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா, அந்தப் பெண்ணை அறையில காணோம். அவள் வெளியே போயிட்டான்றதை அப்பத்தான் புரிஞ்சிக்கிட்டேன். ஃபாதர்... அன்னைக்கு ராத்திரி எனக்குக் கொஞ்சமாவது தூக்கம் வரணுமே! கண்களை கொஞ்சம் மூடினா கூட போதும். அந்தப் பெண்ணோட தொடையும், மருவும் என் கண் முன்னாடி படு பிரகாசமா நெருங்கி நெருங்கி வரும். அதோட புகைவண்டி வர்றது மாதிரி ஒரு ஓசை வேற கேட்கும். அவளுக்குச் சேர வேண்டிய பணத்தை அடுத்த நாள் படமாவன்கிட்ட நான் கொடுத்து அனுப்பினேன். அவன்கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லல.''
ஃபாதர் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். டம்ளரில் இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் குடித்தார். பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்: "அண்ணே... அவள் உங்களுக்காக பிரார்த்தனை செஞ்சாளா?'' நான் சொன்னேன்: "பிரார்த்தனை பண்ணினா...''
அவர் கேட்டார்: "என்ன சொல்லி பிரார்த்தனை பண்ணினா?''
நான் சொன்னேன்: "ஃபாதர்... அவ பிரார்த்தனை செய்றான்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அவ்வளவுதான்.''
"எப்படி?'' ஃபாதர் கேட்டார்.
"அவ தன்னோட கையை என் தலையில வச்சிருந்தாளா? அதை வச்சு என்னால ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்சது ஆனா, ஃபாதர்... பிசாசுக்கும் அந்த பிரகாசம் இருக்கலாம்...? இதை எல்லாம் நினைச்சுப் பார்த்துத்தான் நான் என்ன பண்றதுன்னு தெரியாம திக்கு முக்காடிப்போய் உட்கார்ந்துட்டேன்.'' ஃபாதர் கண்களைத் திறந்தார். மேஜைப் பக்கம் கண்களை ஓட்டியவாறு என்னைப் பார்த்துச் சிரித்தார். பிறகு சொன்னார்: "அண்ணே... என்னை முழுசா மறந்திட்டீங்களே! கொஞ்சம் இறைச்சி இருந்தா கொண்டு வரச் சொல்லுங்க.'' நான் அப்போதுதான் பார்த்தேன். அவர் சொன்னது சரிதான். அவருக்கு முன்னால் இருந்த ப்ளேட் காலியாக இருந்தது. நான் கதை சொல்லிக்கொண்டிருந்ததில், இந்த விஷயத்தை மறந்தே போய்விட்டேன். நான் சமையலறைப் பக்கம் பார்த்தவாறு சொன்னேன்: "வர்கீஸ்... கொஞ்சம் இறைச்சி கொண்டு வா.''
ஆனால், எந்தவித சத்தத்தையும் காணோம். என்னவென்று நான் போய்ப் பார்த்தபோது, அவன் ஒரு மூலையில் சுவரில் சாய்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான். நான் பாத்திரத்தின் மூடியைத் திறந்து இறைச்சித் துண்டுகளை எடுத்து ப்ளேட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வந்தேன். பிறகு ஃபாதரிடம் கேட்டேன்: "ஃபாதர்... உங்ககிட்ட இப்படியொரு மோசமான விஷயத்தைச் சொல்றதுன்றது அவ்வளவு நல்லதா எனக்குப் படல. ஆனா, உங்களைவிட்டா வேற யாருகிட்ட இதை நான் சொல்ல முடியும்? ஏன் இப்படியொரு காரியம் என் வாழ்க்கையில நடந்திச்சு? இது முழுக்க முழுக்க இயற்கைக்கு விரோதமானதாச்சே! கடவுள் இதை வச்சு எனக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திருப்பாரோ? இல்லாட்டி ஏதாவது மந்திர வாதமாக இருக்குமோ? என்னால இந்த விஷயத்தை மனசுல நினைச்சுப் பாக்குறப்ப எல்லாம் நிம்மதியா இருக்க முடியல!''
ஃபாதர் சொன்னார்: "அண்ணே... எந்த விஷயத்துக்கும் உடனடி பதில் வேணும்னா பாடப் புத்தகங்கள்லதான் இருக்கும். வாழ்க்கையில அப்படி இல்ல. மெதுவாத்தான் பதில் கிடைக்கும்.''