வானம் - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6449
மானம் வேண்டுமென்றால், அவர்கள் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட வேண்டும். அன்று கணவன் இருப்பான். காதலன் இருப்பான். வேறு யாரும் இல்லை. இந்த ஏற்பாட்டைச் செய்தது யார்? சிவனுடைய திருநாள் அது. ஒரு குறும்புத்தனத்திற்காக ஒரு முனிவரின் மனைவி தந்த தண்டனையால், இரவு நேரத்தில் மனைவிமார்களின் அருகில் செல்ல முடியாமல் கால்களையும் கைகளையும் உதைத்துக் கொண்டு அழும் குழந்தைகளாக திரிமூர்த்திகள் ஆகிவிடுகிறார்கள். மனைவிகள் கணவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். எது எப்படியோ, அந்தக் கதை சுவாரசியமான ஒன்றுதான். கணவனுக்குச் செய்யப்படும் பூஜையின் ஒரு நாள்தான் திருவாதிரை. நல்ல பூஜைதான். அப்படித்தானே கணவனுக்குப் பூஜை செய்ய வேண்டும்? கடவுளுக்கு பூஜை செய்வதைப் போலவா? தந்தையையும் தாயையும் பூஜை செய்வதைப் போலவா? குருவை பூஜை செய்வதைப் போலவா? தந்தையை வணங்குவதைப் போல கணவனை வணங்கினால், அந்தக் கணவன் உறவை அறுத்துக்கொண்டு போய்விடுவான். கடவுளைப் போல கணவனை வழிபடும் மனைவியுடன் சேர்ந்து ஒரு கணவனும் வாழமாட்டான். அவள் "பெண் துறவி" என்று அவன் கூறுவான். அந்த மனைவி எந்த அளவிற்கு ஒரு ரசிகையாக இருக்கிறாள். கணவனை வழிபடுவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகள், தந்திரங்கள் ஆகியவற்றைக் கூறியிருக்கும் கொக்கோகனோ வாத்ஸ்யாயனோ அப்படிப்பட்ட முனிவர்களோ தான் அடுத்த வழிகாட்டிகள். அந்த சாஸ்திரத்தைப் பின்பற்றி கணவனுக்கான பூஜையை நடத்தினால் கணவன் அவளுடைய சொற்களின்படி நடப்பான். அதற்கான பூஜை விதிகளும் தந்திர வழிகளும் முற்றிலும் வேறு! முறைப்படி வழிபட்டால் அந்த தேவதை திருப்திப்படும்; பாததாசனாக ஆகும்.
திருவாதிரை ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவள் கண்டிப்புடன் கூறியபோது வெறுப்பு தோன்றினாலும். பிறகு அதை ரசித்தான். பூஜை செய்வதற்காக அவள் அவளுடைய விருப்ப தேவதையை அங்கு கொண்டு வந்திருந்தாள். கதவின் இடைவெளி வழியாக திருவாதிரைக் களியை அவன் பார்த்தான். இரண்டு குழுக்கள் போட்டி போட்டு விளையாடினார்கள். அன்று அவள்தானே முக்கிய நபர். இரண்டு குழுக்களிலும் அவள் போய் விளையாடினாள். என்ன ஒரு உற்சாகம்! நெற்றியில் இலைக்குறியும் குங்குமப் பொட்டும் அழிய ஆரம்பித்தன... முன்பு எப்போதும் இல்லாத ஒரு பிரகாசம் அவளிடம் காணப்பட்டது. ரதிதேவியின் அருள்!
அர்த்தத்தைத் தெரிந்துகொண்டு பாடல்களைப் பாடவில்லை. அது மட்டும் உண்மை. அர்த்தத்தைத் தெரிந்து கொண்டிருந்தால், சில பாடல்களை அவர்கள் பாடியிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வெட்கம் வந்துவிடும்.
சில பாடல்களையும் விளையாட்டையும் பார்த்து முடித்துவிட்டுப் படுத்தான். அந்தப் பெண்ணாதிக்க உலகத்தின் ஆர்ப்பாட்டத்தில் தூங்க முடியவில்லை. எனினும், தூங்கிவிட்டான். அப்போது அவள் அங்கு வந்தாள். தலைமுடிகளுக்கு மத்தியில் கொஞ்சம் பச்சிலைகளை அவள் சொருகினாள்.
"என்ன அது?''
"தசபுஷ்பத்தைச் சூட்டினேன்.''
"தசபுஷ்பம் என்றால் என்ன?''
"அதை எடுக்கக் கூடாது.''
கன்னங்கள் இரண்டிலும் கையை வைத்துக்கொண்டு அவள் சொன்னாள். அந்த உள்ளங்கைகளுக்குத்தான் என்ன ஒரு குளிர்ச்சி! அவளுடைய முகம் தாழ்ந்தது. முகம் முகத்துடன் சேர்ந்தது.
திடீரென்று அவள் முகத்தை உயர்த்தினாள். அவளைப் பிடிப்ப ற்காகக் கையை நீட்டினான். ஆனால், பிடிக்க முடியவில்லை.
சிறிது நேரம் கடந்ததும் ஆயிரம் அழகிகளின் ஒன்றாகச் சேர்ந்த சிரிப்புச் சத்தம் கேட்டது... அவ்வளவு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து சிரிப்பதை யாராவது கேட்டிருக்கிறீர்களா?
அவளை மற்ற பெண்கள் கிண்டல் பண்ணினார்கள். அவள் போய்விட்டாள். பிடிக்க முடிந்திருந்தால், அவளை விட்டிருக்க மாட்டான். அது மட்டும் உண்மை. ஆனால், பிடியில் சிக்காமல் விலகிச் செல்வதற்கு அவளுக்குத் தெரியும். திருவாதிரை நாளில் பாதி இரவுப் பூ சூடுவதற்கு வரும் மனைவிக்கு அது நன்கு தெரிந்த விஷயம். அது ஒரு வழிபாட்டு விதி. அன்று அவள் விரதம் இருக்க வேண்டும். கணவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்யும் வித்தை!
புத்திருவாதிரை ஒரு இனிமையான அனுபவம். கணவனுக்குச் செய்யப்படும் பூஜை அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான். அனுபவித்திராத ஆண் அதிர்ஷ்டம் இல்லாதவன்! இந்த ஏற்பாட்டைக் கண்டுபிடித்த முன்னோரின் பெயர் வாழ்த்தப்பட வேண்டும்.
திருமணச் சடங்குகள் அனைத்தும் எதற்காக? அவை எதுவும் இல்லாமலே, ஒரு ஆணும் பெண்ணும் வாழும் காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, மகிழ்ச்சியுடன் வாழக் கூடாதா? உண்மையாகவே, அந்த புத்திருவாதிரையால் அவள்மீது கொண்ட மோகம் அதிகமானது.
15
இந்தத் தெருவின் வழியாக நடந்து செல்லும் ஆட்கள் ஒவ்வொருவரும் கசப்பான, இனிமையான ஆயிரமாயிரம் அனுபவங்கள் உள்ளவர்கள். வெற்றி பெற்றவர்களும் தோல்வியைத் தழுவியவர்களும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாறு கொண்டவர்கள். தந்தையைப் பற்றியும் தாயைப் பற்றியும் அவர்களைத் தாண்டி இருக்கும் முன்னோர்களைப் பற்றியும் வரலாறு உள்ளவர்கள். அவர்கள் இப்படியெல்லாம் ஆனதற்கு ஒவ்வொருவரும் கதை கூற முடியும். மனைவி, நண்பர்கள், பிள்ளைகள், சகோதரர்கள்- இவர்களுடன் இருக்கும் உறவைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கதைகள் இருக்கும். எல்லாம் ஒவ்வொரு கதைகள். அந்த மனைவியும் சகோதரர்களும் நண்பர்களும் அந்தக் கதையைக் கூறுவது, அவர்கள் கூறுவதைப் போல இருக்காது.
குமுதத்திற்கு அவளுடைய ஒரு கதை இருந்தது. அவளுடைய தந்தைக்கும் அவருடைய ஒரு கதை. அந்தக் கதைகளில் ஒன்றோடொன்று பொருத்தமாக இருப்பதையும் சிறிய அளவில் வித்தியாசம் உள்ள விஷயங்களையும் வைத்துக்கொண்டு பார்க்கும் போது, குமுதத்தின் விளக்கங்களின்படி அவள் கூறுவதெல்லாம் சரியாக இருக்கலாம். அவருக்கும் சில விஷயங்கள் சரியாக இருக்கும்.
விஸ்வநாதனும் அவனுடைய பாகத்தைக் கூற வேண்டியதிருக்கிறது. அந்த சோகக் கதை. அப்படி ஒவ்வொருவரும் கூற வேண்டியதைக் கூறும்போது, மிகவும் வேதனையைத் தரும் ஒன்றாக அது ஆகிறது. பிரிக்காத கடிதங்கள் எத்தனை இருந்தன? எட்டா பத்தா? பத்து கடிதங்கள் என்று தோன்றுகிறது. அந்தந்த நேரத்தில் அந்தக் கடிதங்கள் அனைத்தையும் வாசித்திருந்தால், புத்திருவாதிரையைக் கொண்டாடியிருக்க முடியுமோ என்னவோ? எது எப்படி இருந்தாலும் கொண்டாடப்பட்டிருக்கும் என்பதுதான் நம்பிக்கை. அந்த சோக நாடகத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவரவர்களுடைய நியாயமும் அவற்றிற்கான விளக்கங்களும் இருக்கத்தானே செய்யும்? எனினும், அந்தக் கடிதங்களை உரிய நேரத்தில் பிரித்து வாசிக்காமல் இருந்தது நல்லதாகப் போய்விட்டது.
உடனே வரவேண்டுமாம்! கடிதம் கிடைத்தவுடன், ஒரு நிமிடத்தைக்கூட வீண் செய்யக்கூடாது. அவள் தந்தி அடித்தாள். மரணத்தைத் தழுவி விடுவேன் என்று பயமுறுத்தினாள். அப்போது அந்தக் கடிதத்தை வாசித்திருந்தால் ஒருவேளை அங்கு போயிருப்பான். அப்படியென்றால் இந்த சரித்திரத்தின் போக்கு மாறியிருக்குமோ? முடிவாகக் கூற முடியவில்லை.