செங்கல்லும் ஆசாரியும்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7275
எம்.ஏ. மலையாளம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சில மாதங்கள் ஆன பிறகும் வேலை எதுவும் கிடைக்காததால், பாபு, மெத்ரானச்சனைப் பார்க்கத் தீர்மானித்தான். முதலில் அவன் அம்மாவின் மூத்த சகோதரியைப் போய்ப் பார்த்தான். அந்த மூத்த அக்காவின் இளைய மருமகன் திருமணம் செய்திருந்தது மெத்ரானச்சனின் இரண்டாவது தங்கையின் மூத்த மகளை.
பெரியம்மா சொன்னாள்: "நான் அம்மாக்கிட்ட சொல்லி, உன் வேலை விஷயமா ஏற்பாடு பண்ணச் சொல்றேன். சரி... நீ போ... வேலை கெடைச்ச பிறகு எங்களுக்குக் கெட்ட பெயர் வராமப் பார்த்துக்கோ. அதை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சுக்கோ.''
பாபு சொன்னான்: "அதென்ன பெரியம்மா அப்படிச் சொல்றீங்க? என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லியா?''
"யாருக்குத் தெரியும்? மனிதனோட மனசு, மாறி நடக்குறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது!''
பெரியம்மாவிற்கும் சரி, பாபுவிற்கும் சரி... அவன் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று- அவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் அவர்களால் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
2
சில நாட்கள் கழித்து பெரியம்மாவின் மகன் உண்ணி, பாபுவைத் தேடி வந்தான்.
"புதன்கிழமை காலையில பதினொரு மணிக்கு உன்னை அரண்மனைக்கு வரச்சொன்னாங்க.'' உண்ணி சொன்னான்.
அதைக் கேட்டதும் பாபுவின் இதயம் "டிக் டிக்" என்று அடித்தது.
மெத்ரானச்சனை அவன் நேரடியாகப் பார்க்கப் போகிறான்.
பாபு அரண்மனைக்குப் போய் வரவேற்பறையில் சில நிமிடங்கள் காத்திருந்தான். சிறிது நேரம் ஆனபிறகு காரியதரிசி அச்சன் வந்து சொன்னார்: "அச்சன் உன்னைக் கூப்பிடுறாரு...''
அவன் உள்ளே சென்று மெத்ரானச்சனை காலில் விழுந்து வணங்கினான். அவரின் நீட்டிய கையில் இருந்த மோதிரத்தில் முத்தம் பதித்தான்.
மெத்ரானச்சன் பாபுவைப் பார்த்து அமரும்படி கையால் சைகை காட்டினார். அவரின் மோதிரத்தில் இருந்த சிலுவையின் மத்தியில் பதிக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் ஒளிர்ந்தது. அதைப் பார்த்தபோது, பாபுவிற்கு அழ வேண்டும்போல் இருந்தது. அவன் தேம்பித் தேம்பி அழுதவாறு மெத்ரானச்சனின் முன்னால் முழு உடம்பையும் தரையில் பதித்து விழுந்து அவரின் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சொன்னான்: "பிதாவே... என்னால கஷ்டத்தைத் தாங்கிக்க முடியல...'' பிதாவின் காலணியில் அன்று புதிதாகப் போட்ட பாலீஷ் கமகமத்தது.
பாபு காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டதால், இருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்த மெத்ரானச்சன், காரியதரிசி அச்சனை இன்டர்காமில் அழைத்தார்: "ஜேம்ஸ் அச்சா... கொஞ்சம் இங்கே வரமுடியமா?''
காரியதரிசி அச்சன் வந்தார். மெத்ரானச்சன் சப்தமே கேட்காத வண்ணம் மெதுவான குரலில் அவரிடம் கேட்டார்: "இது யார்?'' காரியதரிசி அச்சன் ஏற்கெனவே வந்திருக்கும் நபரைப் பற்றிக் கூறியிருந்தாலும், மெத்ரானச்சன் அதை முழுமையாக மறந்து போயிருந்தார். பாபு, மெத்ரானச்சனின் கால்களில் தலையை வைத்து அழுது கொண்டிருந்தான். காரியதரிசி அச்சன் மெத்ரானச்சனின் காதில் என்னவோ சொன்னார். பிறகு குனிந்து பாபுவின் இரண்டு தோள்களையும் பற்றியவாறு சொன்னார்: "எழுந்திரு... அழாதே... வந்த விஷயம் என்னன்னு சொல்லலியே!''
பாபு, மெத்ரானச்சனின் தவிட்டு நிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்த காலணிகளில் முகத்தைப் பதித்து அழுதான். "பிதாவே... அந்த மோதிரத்தோட வெளிச்சத்தைப் பார்த்தப்போ என்னால துக்கத்தை அடக்க முடியல...''
மெத்ரானச்சன் தன் கையை உயர்த்தி மோதிரத்தைப் பார்த்தார்.
"எனக்கொரு வேலை கிடைக்கலைன்னா, நான் தற்கொலை பண்ணிக்குவேன்.'' கண்ணீர் விட்டவாறு பாபு சொன்னான். காரியதரிசி அச்சன், பாபுவின் இரண்டு தோள்களையும் பற்றி அவனை எழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் பாபுவோ, மெத்ரானச்சனின் கால்களை விடுவதாயில்லை.
காரியதரிசி அச்சன், மெத்ரானச்சனை உற்றுப் பார்த்தார். மெத்ரானச்சன் குனிந்து பாபுவைப் பார்த்துக் கேட்டார்: "குழந்தை... நீ எதுவரை படிச்சிருக்கே?''
பாபு அவரின் காலணியை விட்டு தலையைத் தூக்கி ஆர்வத்துடன் சொன்னான்: "மலையாளம் எம்.ஏ. இரண்டாம் வகுப்பு!''
மெத்ரானச்சன் தொடர்ந்தார்: "உனக்கு என்ன வேலை செய்ய விருப்பம்?''
பாபு தலையை உயர்த்தி மெத்ரானச்சனைப் பார்த்தான்.
கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்ததால், பிதாவைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
பிதா என்ன நினைத்தாரோ- மோதிரம் அணிந்த தன் கையை ஆடையின் பாக்கெட்டினுள் நுழைத்தார்.
பாபு சொன்னான்: "பிதாவே, நான் எந்த வேலைன்னாலும் செய்வேன்!''
மெத்ரானச்சன் காரியதரிசி அச்சனை அர்த்தம் தொனிக்க பார்த்துச் சிரித்தவாறு கேட்டார்: "பெரிய பள்ளியில் குழி வெட்டுற வேலையைப் பார்க்கத் தயாரா இருக்கியா?'' மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டியவாறு அவனின் பதிலுக்காக அவர் காத்திருந்தார்.
பாபு, பிதா சிரிப்பதைப் பார்த்தான். தொடர்ந்து அவன் சொன்னான்: "பிதாவே... எனக்கு அந்த வேலை வேண்டாம்!''
மெத்ரானச்சன் சிரித்தவாறு- ஜன்னலுக்கு வெளியே பார்த்தவாறு கேட்டார்:
"ஏன் பிடிக்கல?''
மீண்டும் அவர் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினார்.
"எனக்கு மரணம், சவப்பெட்டி, எலும்புகள், கல்லறை இவற்றைப் பார்த்தால் ரொம்ப பயம்.'' பாபு சொன்னான்.
"ஹா... ஹா... ஹா...'' பிதா சிரித்தார். "அப்போ எம்.ஏ. மலையாளம் படிச்சிருந்தாக்கூட கடவுளைப் பார்த்தா பயம்தான். இல்லியா?''
காரியதரிசி அச்சன் சிரிப்பை அடக்க முடியாமல், முகத்தை இன்னொரு பக்கம் திருப்பினார்.
பாபு எழுந்து நின்று தன் முகத்தைத் துடைத்தான்.
மெத்ரானச்சன் என்னவோ யோசித்தவாறு பாபுவிடம் கேட்டார்: "புத்தகம் படிப்பது பிடிக்குமா?''
பாபு சொன்னான்: "பிதாவே... நான் ஒரு புத்தகப் புழு...''
"சபாஷ்...'' பிதா சொன்னார்: "நல்ல புழுவா கெட்ட புழுவா?''
அவன் பிதாவை ஒரக்கண்ணால் பார்த்தான்.
பிதா சொன்னார்: "நல்ல புத்தகம் படிக்கிற புழுவா, கெட்ட புத்தகம் படிக்கிற புழுவான்னு கேக்குறேன்!''
"நல்ல புழு, பிதாவே!''
"வெரி குட்... நம்ம கல்லூரி நூல் நிலையத்துக்கு ஒரு ப்யூன் தேவைப்படுது. உனக்கு அந்த வேலை பிடிச்சிருக்கா?''
பாபுவின் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
மெத்ரானச்சன் பாக்கெட்டில் இருந்த கையை வெளியே எடுத்து இரத்தினத்தைத் தேய்த்தவாறு கேட்டார்: "என்ன, வேலை பிடிச்சிருக்கா?''
அடுத்த நிமிடம்-
பாபு, காரியதரிசி அச்சனை ஒரு பக்கம் தள்ளியவாறு மயக்கமடைந்து கீழே விழுந்தான். காரியதரிசி அச்சன் அவனைக் குனிந்து பார்த்துவிட்டு உதவிக்கு ஆளைக் கூப்பிடப் போனார்.
பிதா மேஜைமேல் இருந்த டிஷ்யூ பேப்பர் ஹோல்டரில் இருந்து ரோஸ் நிறத்தில் இருந்த இரண்டு பேப்பர்களை எடுத்து, பெருமூச்சு விட்டவாறு குனிந்து இரண்டு காலணிகளையும் துடைத்தார். பாபுவின் மூக்கில் இருந்தும் கண்களில் இருந்தும் உதட்டில் இருந்தும் வழிந்த நீரின் கோடுகள் மறைந்து காலணிகள் பிரகாசித்தன.