சபதம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
அவளுடைய சபதம்! ஓச்சிற திருவிழா! அண்டா? அய்யோ... அவள் மிகவும் சிரமப்பட்டு கட்டிய லட்சியக் கோட்டை! "இல்லை... அதை நான் எடுக்க மாட்டேன்.'' அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.
நேரம் மாலை ஆகிவிட்டிருந்தது. மாலை நேரம் தாண்டியவுடன் நோயாளிக்கு கஷாயம் தர வேண்டும். அந்த விஷயத்தை வைத்தியர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். குட்டப்பன் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்திருந்தான். அன்று அவளும் எதுவும் சாப்பிடவில்லை.
"தண்ணி...'' கோபாலன் நீர் கேட்டான். பார்லி நீர்தான் கொடுக்க வேண்டும்.
கல்யாணி கவலைக்குள்ளானாள். சபதத்தையும் ஓச்சிற திருவிழாவையும் அண்டாவையும் அவள் மறந்துவிட்டாள். அவள் மாதவியை அழைத்துச் சொன்னாள்: "மீதி இருப்பதையும் எடுத்துக் கொண்டு வா, மாதவி!''
மாதவி தகரப் பெட்டியைக் கொண்டு வந்து கல்யாணியின் கையில் கொடுத்தாள். "பெட்டியைப் பின்னால் தந்தால் போதும்.'' இவ்வாறு கூறிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
கல்யாணி பன்னிரண்டு சக்கரங்களை எடுத்து மடியில் வைத்தாள். பெட்டியை எடுத்துக் கொண்டு போய் ஒரு மூலையில் வைத்தாள். பாயைக் கொண்டு அதை மூடினாள். பிறகு சந்தைக்கு வேகமாக ஓடினாள். கஷாயத்திற்கான மருந்துகள், பார்லி, அரிசி, உப்பு, மிளகாய், மண்ணெண்ணெய் என்று பல சாமான்களையும் வாங்கிக் கொண்டு அவள் மாலை நேரம் கடந்தபிறகு திரும்பி வந்தாள். ஒரு அடுப்பில் கஷாயம், இன்னொரு அடுப்பில் பார்லி, வேறொரு அடுப்பில் அரிசி- இப்படி அவள் வேகமாக நெருப்பை எரியவிட ஆரம்பித்தாள்.
குட்டப்பன் சமையலறையில் வந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். கல்யாணி சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த மரவள்ளிக் கிழங்கை அவனுக்கு சுட்டுக் கொடுத்தாள். அவனுடைய அழுகை நின்றது.
"தண்ணி... தண்ணி...'' கோபாலன் நீர் கேட்டான்.
கல்யாணி எதுவும் பேசவில்லை. எதையும் பேசுவதற்கு அவளுக்கு சக்தியும் இல்லை. அவளுடைய கண்களிலிருந்து இடையில் அவ்வப்போது அடுப்பின் மீதும் சட்டியிலும் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகும் அவள் நெருப்பை ஊதி எரிய விட்டுக் கொண்டிருந்தாள்.
பார்லி நல்ல முறையில் கொதித்தது. அவள் கொஞ்சம் நீரை எடுத்து ஆறச் செய்து கோபாலனுக்குக் கொடுத்தாள். அதற்குள் அரிசியும் ஒரு வகையில் வெந்து விட்டிருந்தது. அவள் கொஞ்சம் சாதத்தை எடுத்து குட்டப்பனுக்குக் கொடுத்தாள். ஊதி ஊதி கொஞ்சம் சாதத்தை அவளும் சாப்பிட்டாள்.
பிறகு கஷாயம் என்ற வகையில் முறைப்படி நீரை சுண்டச் செய்து, பொடியைச் சேர்த்து, கோபாலனுக்குக் கொடுத்தாள். தொடர்ந்து கோபாலனுக்கு அருகிலேயே படுத்துக் கிடந்தாள்.
பொழுது விடிந்தது. கல்யாணி திடுக்கிட்டு எழுந்தாள். நோயாளிக்கு மருந்தையும் பார்லி நீரையும் கொடுத்தாள். முந்தின நாள் இரவில் தயாரித்த கஞ்சியிலிருந்து பருக்கை முழுவதையும் பிரித்தெடுத்து குட்டப்பனுக்குக் கொடுத்தாள். நீரை அவளும் குடித்தாள். தொடர்ந்து முண்டையும் ரவிக்கையையும் மாற்றி அணிந்து கொண்டு, தகரப் பெட்டியிலிருந்த சக்கரங்கள் முழுவதையும் எடுத்து மடியில் வைத்துக் கொண்டு வைத்தியரைப் பார்ப்பதற்காகக் கிளம்பினாள்.
வைத்தியரிடம் எல்லா விவரங்களையும் கூறினாள். முந்தின நாள் கொடுக்க வேண்டியிருந்த கால் ரூபாயைக் கொடுத்தாள். பிறகு ஒரு மருந்தை வாங்க வேண்டும்! அதை வாங்கினாள்.
திரும்பிச் செல்லும்போது அவளுடைய கையில் இரண்டரை சக்கரங்கள் மட்டுமே இருந்தன.
இனி என்ன வழி? தரையில் நடந்து கொண்டே அவள் சிந்தித்துப் பார்த்தாள். "என்னிடம் உள்ள எல்லா காசுகளும் தீர்ந்து போனாலும், இந்த நோயைக் குணப்படுத்தி விட்டுத்தான் நான் அடங்குவேன்.'' இப்படி அவள் மனதிற்குள் சபதம் செய்து கொண்டாள்.
மேலும் ஒருநாள் கடந்தது. கோபாலனின் உடல்நலக் கேட்டிற்கு சிறிது முன்னேற்றம் உண்டானது. மருந்துகளையும் பார்லி நீரையும் நேரம் தவறாமல் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் வைத்தியரிடம் விவரங்களைக் கூறுவாள்: "இனிமேல் கஷாயத்தைக் கொஞ்சம் மாற்றணும்...'' -அவர் ஒரு பெரிய கஷாயத்தை எழுதிக் கொடுத்தார். அதற்கு மருந்து வாங்குவதற்கு எட்டு சக்கரங்கள் வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் ஆனால், வைத்தியசாலையிலிருந்து மருந்து வாங்க வேண்டும். பார்லி நீரில் பாலையும் சர்க்கரையையும் கலந்து கொடுக்க வேண்டுமென்று வைத்தியர் கூறியிருப்பதால், பார்லியையும் பாலையும் சர்க்கரையையும் வாங்க வேண்டும். நோயாளியின் விஷயம் இந்த வகையில் இருந்தது. அவளுடைய, குட்டப்பனுடைய செலவும் நடக்க வேண்டும்.
கல்யாணியின் கையில் இருந்த காசு முழுவதும் தீர்ந்து முடிந்தது. "என்னிடம் இருக்கும் காசு அனைத்தும் செலவழிந்து முடிந்தாலும், நோயைக் குணப்படுத்தி விட்டுத்தான் நான் அடங்குவேன்.'' இதுதான் அவளுடைய சபதம். இன்னொரு சபதம் அண்டா வாங்க வேண்டும் என்பது. ஒன்றுக்கொன்று முரண்படக் கூடிய இரண்டு சபதங்கள்! இரண்டையும் நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே எஞ்சியிருந்தது- தாய்க் கோழியையும் சேர்த்து ஆறு பெட்டைக் கோழிகளும் நான்கு சேவல்களும்.
சேவல்களை விற்பதற்கு அவள் தீர்மானித்தாள். ஒன்பது சக்கரங்கள் வீதம், முப்பத்தாறு சக்கரங்களுக்கு நான்கு சேவல்களையும் விற்றாள்.
மருந்துகள் வாங்கி, பார்லி வாங்கி, பால் வாங்கி, சர்க்கரை வாங்கி வீட்டுக்குத் தேவைப்படும் செலவுகளையும் செய்தாள். பிறகு அதில் எதுவுமே மிச்சமில்லை.
இனி என்ன செய்வது? "என் பிள்ளையையே விற்றுக்கூட நோயை நான் குணப்படுத்துவேன்!'' அவள் பிடிவாதமான குரலில் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். பெட்டைக் கோழிகளையும் விற்பதற்குத் தீர்மானித்தாள்.
ஒரு பெட்டைக் கோழிக்கு பத்தரை சக்கரம்- மத்தாயி மாப்பிள்ளை சொன்னார். கல்யாணி ஒத்துக் கொண்டாள். ஆறு பெட்டைக் கோழிகளையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வந்து மத்தாயி மாப்பிள்ளைக்கு முன்னால் வைத்தாள். ஒரு வருட சம்பாத்தியத்தின் ஊற்றுக் கண்கள், அண்டா வாங்க வேண்டுமென்ற ஆசையின் குழந்தைகள், அவளுக்கு தினந்தோறும் முட்டைகள் தந்து கொண்டிருந்த பெட்டைக் கோழிகள்- கடவுளே! அந்தக் கோழிகள் அனைத்தும் அவளையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தது.
"என்ன அழறே!'' மத்தாயி மாப்பிள்ளை கேட்டார்.
"என் பிள்ளைகளைப்போல வளர்த்தேன், மத்தாயி மாப்பிள்ளை''. -அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னாள்: "நான் இறந்தாலும், இவை எதையும் விற்கக் கூடாதுன்னு இருந்தேன். கையில பணம் இருந்தப்போ தந்த மனிதராச்சே! உடல்நலம் பாதிக்கப்படுறப்போ நாம பார்க்க வேண்டாமா?''
"பிறகு? நாம இல்லாம பிறகு யாரு பார்ப்பாங்க?'' அவர் அறுபத்து ஐந்து சக்கரங்களை எண்ணி கல்யாணியின் கையில் கொடுத்தார். கோழிகளைக் கூடைக்குள் போட்டு தலையில் வைத்துக் கொண்டு நடந்தார்.