சபதம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
பீடிக்கும் தேநீருக்கும் காசு கிடைத்துவிட்டால், பிறகு கோபாலன் நல்லவன்தான். உண்மையிலேயே சொல்லப்போனால், அவன் அவள்மீது அன்பு வைத்திருந்தான். அவளுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பதற்கு முடியாததை நினைத்து அவனுக்குக் கவலையும் இருந்தது.
சில நேரங்களில் அவள் அவனை எல்லை கடந்து திட்டுவாள். அப்போது கையை ஓங்கிக் கொண்டு போவானே தவிர, அடிக்க மாட்டான். சில நேரங்களில் "உன் எதுவும் எனக்கு வேண்டாம்டீ'' என்று கூறி அவன் வெளியேறிப் போய் விடுவான். அப்படிப்போன பிறகு, கல்யாணிக்கு கவலையாகிவிடும். அவள் சாதத்தையும் குழம்பையும் ஆக்கி வைத்துக்கொண்டு காத்திருப்பாள். கோபாலன் வரும் வரை அவள் சாப்பிட மாட்டாள். சிரமங்கள் அதிகமாக உண்டாவதாலும், திடீரென்று வரக்கூடிய கோபத்தாலும், அவள் தன்னை மறந்து எதையாவது கூறிவிடுவாளே தவிர, அவளும் அவன்மீது அன்பு கொண்டிருந்தாள்.
கல்யாணி தான் நின்றிருந்த இடத்திலேயே நின்று கொண்டு அவை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள். "பதினேழு வயதில் திருமணம் நடந்தது...'' அவள் தொண்டை இடற தொடர்ந்து சொன்னாள்: "கையில காசு இருந்த காலத்தில் தந்தவர்தான். இப்போ இல்லாமல் போனது என்னோட தலைவிதி. இனிமேலும் அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தால், கிடைக்கும்.''
"அந்த அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்.'' மாதவி அதை ஒப்புக் கொண்டு சொன்னாள்.
கல்யாணி கண்ணீரைத் துடைத்து விட்டு, தொடர்ந்து சொன்னாள்: "பாசம் உள்ள மனிதர்டீ, மாதவி- பாசமான மனிதர் கையில் காசு இல்லாத குறைதான். கையில காசு இருந்த காலத்தில் எனக்குக் கொண்டு வந்து தந்த சீமைப் பலகாரத்தின் ருசி இப்பக்கூட என் நாக்குல இருக்கு. அது எதையும் நான் மறக்க மாட்டேன். பிறகு... காசு இல்லாத கஷ்ட நிலை வர்றப்போ, நான் ஏதாவது சொல்வேன். இருந்தாலும், அடிக்க மாட்டார்டீ உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருப்பாரு.'' அவள் மீண்டும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்: "என் ஓச்சிற கடவுளே?'' தொழுத கைகளுடன் மேலே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்: "எதையும் தரலைன்னாலும், பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்.''
"அழாதீங்க கல்யாணி அக்கா.'' மாதவி ஆறுதல் சொன்னாள்: "ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால், எதுவும் வராது. சீக்கிரமா போயி வயல்காடனை அழைச்சிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்குறேன்.''
கல்யாணி முகத்தைத் துடைத்து, முண்டையும் ரவிக்கையையும் மாற்றினாள். வாசலில் இறங்கி கிழக்குப் பக்கம் திரும்பி வணங்கினாள். "பார்த்துக்கோ மாதவி!'' இவ்வாறு கூறிவிட்டு அவள் நடந்தாள்.
மாதவி தன்னுடைய வீட்டிற்குச் சென்று ஒரு பழைய பாயையும் கொஞ்சம் வெற்றிலையையும் வைத்தியர் வரும்போது கொடுப்பதற்காக எடுத்துக்கொண்டு வந்தாள். இரண்டு மணி நேரம் கடக்கவில்லை. வயல்காடன் முன்னாலும் கல்யாணி பின்னாலுமாக வந்து நின்றார்கள். வைத்தியர் உள்ளே நுழைந்து நோயாளியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். முக்கியமான சில விவரங்களை கல்யாணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பாயில் உட்கார்ந்து வெற்றிலை போட்டார். "யாரிடமாவது காட்டினாயா?''
கல்யாணி சொன்னாள்: "நொண்டி வைத்தியரிடம் காட்டினேன். ஒரு மாத்திரையையும் ஒரு கஷாயத்தையும் தந்தாரு. அதைக் கொடுத்ததும், காய்ச்சல் கடுமையா ஆயிடுச்சு!''
"ம்... நிலைமையை மோசமாக்கிட்டியே! சரி... இருக்கட்டும். கொஞ்சம் சிரமமானதாக இருந்தாலும் குணப்படுத்திடலாம். நல்ல முறையில் கவனித்துக் கொள்ளணும். வைத்தியசாலையில் இருந்து ஒரு பொடியும் ஒரு அரிஷ்டமும் வாங்கணும். பார்லி நீரை மட்டுமே கொடுக்கணும். ஒரு கஷாயமும் வைத்துக் கொடுக்கணும்.'' -வைத்தியர் இவ்வாறு சிகிச்சையை முடிவு செய்தார். "கஷாயத்தைப் பற்றி எழுதுவதற்காக சிறிய தாளையும் பென்சிலையும் கொண்டு வா.'' அவர் கட்டளையிட்டார்.
கல்யாணி மாதவியின் முகத்தைப் பார்த்தாள். மாதவி வீட்டிற்குக் ஓடிச் சென்றாள். தன் தம்பியின் நோட்டு புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்தெடுத்து, ஒரு பென்சிலையும் காசுகள் வைக்கப்பட்டிருந்த தகரப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அவள் நிமிடங்களுக்குள் திரும்பி வந்தாள். தாளையும் பென்சிலையும் வைத்தியருக்கு முன்னால் வைத்தாள். வைத்தியர் ஒரு சுலோகத்தைச் சொல்லிக் கொண்டே கஷாயத்தைக் குறிக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையில் கல்யாணியும் மாதவியும் சேர்ந்து சிலவற்றை முணுமுணுத்துக் கொண்டார்கள். கல்யாணி தகரப் பெட்டியிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கான சக்கரங்களை எண்ணி வைத்தாள். பிறகு தனியாக ஒரு ரூபாயை எண்ணி மடியில் வைத்தாள். பிறகு பெட்டியை மாதவியின் கையில் தந்தாள். "இதைக் கொண்டு போய் பத்திரமாகவை. இனி இதிலிருந்து எடுப்பதாக இல்லை.'' கல்யாணியின் கண்கள் நிறைந்துவிட்டன. அவளுடைய ஒரு வருட சம்பாத்தியம் அந்த வகையில் தேய்ந்து தேய்ந்து போய்க் கொண்டிருந்தது. அவளுடைய மனக்கோட்டை அப்படியே தகர்ந்து தகர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அவளுடைய பழிவாங்க வேண்டும் என்ற நெருப்பு அப்படியே எரிந்து எரிந்து அணைந்து கொண்டிருந்தது. நாணிமீது கொண்ட பழிவாங்கும் உணர்ச்சி- கணவன்மீது உள்ள கடமை- இப்படி இரண்டு முரண்பாடுகளுக்கு நடுவில் கிடந்து அவள் நசுங்கிக் கொண்டிருந்தாள். "ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால்...'' -துக்கம் அவளுடைய வார்த்தைகளைத் தடுத்தது.
அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு, ஐம்பத்தேழு சக்கரங்களை இரண்டு கைகளிலும் சேர்த்து அள்ளி எடுத்தாள். வைத்தியருக்கு அருகில் சென்று பணிவுடன் நீட்டினாள்.
வைத்தியர் அதைப் பார்த்தார். "இதைச் சுமந்து கொண்டு போக முடியாது.'' அவர் வெறுப்புடன் கூறினார்.
"நாங்கள் ஏழைங்க...'' கல்யாணி பணிவை வெளிப்படுத்தினாள்.
"மருந்து வாங்குவதற்காக என்னோட வைத்தியசாலைக்கு வர்றப்போ இதை கொண்டு வந்தால் போதும். மருந்துக்கான விலையையும் கொண்டு வரணும்.'' அவர் கஷாயத்திற்கான குறிப்பை கல்யாணியிடம் கொடுத்துவிட்டு எழுந்தார். "பயப்பட வேண்டாம்- உடல் நலக்கேட்டைச் சரி பண்ணிடலாம். நான் சொல்கிறபடியெல்லாம் செய்யணும்.'' அவர் வாசலில் இறங்கி நடந்தார்.
கல்யாணி, வைத்தியசாலைக்குச் சென்று பொடியையும் மருந்தையும் வாங்கினாள். அதற்கு ஒன்றே கால் ரூபாய் விலை. இரண்டு ரூபாய்களை வைத்தியரின் ஃபீஸ் என்ற வகையிலும் ஒரு ரூபாயை மருந்திற்கான விலை என்ற வகையிலும் கொடுத்தாள். கால் ரூபாய் கடன் சொன்னாள்.
நோயாளிக்கு மருந்தையும் பொடியையும் அந்தந்த நேரத்திற்குக் கொடுத்தாள். பிறகு... கஷாயத்திற்கு மருந்து வாங்க வேண்டும். பார்லி வாங்க வேண்டும். கல்யாணி, குட்டப்பன் ஆகியோரின் செலவும் நடக்க வேண்டும். அதற்கெல்லாம் காசு எங்கே இருக்கிறது? ஒரு வருட சம்பாத்தியத்தில் இன்னும் இரண்டு ரூபாய்கள்தான் மிச்சமாக இருக்கின்றன. அதை எடுத்துவிட்டால்...? எடுக்காமல் இருந்துவிட்டால்...? இப்படி தனக்குள் விவாதித்து விவாதித்து அவள் பகல் முழுவதையும் கழித்தாள்.