சபதம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
குட்டப்பன் நகர்ந்து நகர்ந்து சக்கரங்கள் பரவி வைக்கப்பட்டிருந்த பாயில் ஏறினான். அவன் ஒரு பிடி சக்கரத்தை வேகமாகக் கையில் எடுத்தான்.
"இங்கேயிருந்து போ...'' கல்யாணி குட்டப்பனின் கையை மெதுவாகத் தட்டி விட்டாள். சக்கரங்கள் சிதறிக் கீழே விழுந்தன. குட்டப்பன் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான்.
"இதை அங்கே கொண்டு போய் வை மாதவி'' கல்யாணி சக்கரங்கள் எல்லாவற்றையும் பொறுக்கிப் பெட்டிக்குள் போட்டாள். "உனக்கு நான் இதுல ஒரு ரவிக்கை வாங்கித் தர்றேன்.''
வழியில் ஒரு முனகல் பாட்டு. கல்யாணி திரும்பிப் பார்த்தாள். "அய்யோ... அவர்தான் வர்றாருடீ... பெட்டியை எடுத்துக் கொண்டுபோ.''
மாதவி பெட்டியை எடுத்துக் கொண்டு மிகவும் வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.
கோபாலன் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே படிகளைக் கடந்து வந்து கொண்டிருந்தான். கல்யாணி வேகமாக கயிறைத் திரிக்க ஆரம்பித்தாள்.
இடப மாதம் பத்தாம் தேதி கடந்தது. ஒருநாள் சாயங்கால நேரம் கழிந்து கல்யாணி சமையலறையில் உட்கார்ந்திருந்து நெருப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தாள். குட்டப்பனும் சமையலறையில் இருந்தான்.
வெளியே ஒரு சத்தம் கேட்டது: "ஹு... ஹுஹுஹுஹு..." கல்யாணி வெளியே வந்து பார்த்தாள். கோபாலன் நடுங்கிக் கொண்டே வாசலில் இருந்து திண்ணையில் ஏறினான்.
"என்ன?... என்ன?'' கல்யாணி பதைபதைப்புடன் பார்த்தாள்.
"ஹுஹுஹுஹு... எனக்கு காய்ச்சல்டீ... பாயைப் போடு. நான் படுக்கப் போறேன்.''
கல்யாணி உள்ளே சென்று பாயை விரித்துப் போட்டாள். கோபாலன் போர்வையால் முழுமையாக மூடிக் கொண்டு படுத்தான். கல்யாணி நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். "நெருப்பைப்போல இருக்குற காய்ச்சல்... நெல்லைப் போட்டா மலரா ஆயிடும்... என் கடவுளே!''
அன்று இரவு கோபாலன் எதுவும் சாப்பிடவில்லை. கல்யாணியும் இரவு உணவு உண்ணவில்லை.
காலையில் மாதவி வந்தாள். கல்யாணி கூறினாள்: "காய்ச்சல் வந்து படுத்திருக்காருடி, மாதவி.''
"எப்போ காய்ச்சல் ஆரம்பமாச்சு?''
"நேற்று இரவு நான் அடுப்புல சமையல் பண்ணிக் கொண்டிருந்தப்போ, பின்னால ஒரு முனகல் சத்தம் கேட்டது. நான் எழுந்து சென்று பார்த்தப்போ, இவர் அங்கே நடுங்கிக் கொண்டு நின்னுக்கிட்டு இருக்காரு. "காய்ச்சல்டீ... பாயை விரிச்சுப் போடு"ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே வந்தாரு. நான் போய் பாயை விரிச்சுப் போட்டேன். உடம்பு முழுக்க போர்த்திக்கிட்டு படுத்துட்டாரு. நெற்றியில் கையை வச்சுப் பார்த்தால் சுட்டெரிக்குதுடி...''
"தண்ணி குடிச்சாரா?''
"தண்ணி குடிக்கலடி. அதனால நானும் எதுவும் சாப்பிடல. ஆக்கின சோறு அப்படியே சட்டியில இருக்கு. பிள்ளைக்கு ஐந்தாறு பருக்கைகளை பரிமாறிக் கொடுத்திட்டு, பொழுது விடியிற வரை விளக்கை எரிய வச்சிக்கிட்டு உட்கார்ந்துகிட்டிருந்தேன். இனி என்னடீ செய்யறது?''
மாதவி சொன்னாள்: "அந்த நொண்டி வைத்தியரை அழைச்சிக்கிட்டு வந்தா போதும். அவர்கிட்ட ஒரு கஷாயமோ மாத்திரையோ இருக்கு. எங்க சின்ன அண்ணணுக்குக் காய்ச்சல் வந்தப்போ அந்த கஷாயத்தைத்தான் கொடுத்தோம். பிடிச்சு நிறுத்தியதைப்போல அது நின்னுருச்சு''.
"அப்படின்னா, நீ கொஞ்சம் இங்கே பார்த்துக்கோ.'' இவ்வாறு கூறிவிட்டு கல்யாணி வைத்தியரை அழைப்பதற்காகப் புறப்பட்டாள். சந்தைக்குப் போவதற்காக வைத்திருந்த முண்டையும் ரவிக்கையையும் எடுத்து அணிந்து கொண்டு, உதயமாகிக் கொண்டிருந்த சூரியனை ஒருமுறை வணங்கி விட்டு, அவள் வேகமாக நடந்தாள்.
ஒரு மணி நேரம் ஆனதும், கல்யாணி நொண்டி வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்தாள். கிழிந்து போயிருந்த பாயை எடுத்து வைத்தியர் உட்காருவதற்காக திண்ணையில் போட்டாள். வைத்தியர் ஓலைக் குடையை வாசலில் வைத்துவிட்டு, திண்ணையில் ஏறி உட்கார்ந்து, நோய் பற்றிய விஷயத்தைக் கேட்டார். கல்யாணி குட்டப்பனை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு முந்தைய நாள் அடுப்பில் உலை வைத்துக் கொண்டிருந்தபோது வெளியே முனகல் சத்தம் கேட்டதையும், அவள் ஓடிச் சென்று பார்த்ததையும், அப்போது அங்கே ஆள் நின்று கொண்டு நடுங்கிக் கொண்டிருந்ததையும், "காய்ச்சல்... பாயை விரிச்சுப் போடு" என்று சொன்னதையும்,பாயை விரித்துப் போட்டதையும், உடம்பு முழுக்க மூடிக் கொண்டு படுத்ததையும், நீர்கூட பருகாமல் இருந்ததையும், தான் இரவு உணவு சாப்பிடாமல் இருந்ததையும், விளக்கை எரிய வைத்துக் கொண்டு பொழுது புலர்வது வரை உட்கார்ந்திருந்ததையும் விளக்கிக் கூறினாள்.
வைத்தியர் எல்லாவற்றையும் "உம்" கொட்டிக் கேட்டுவிட்டுக் கூறினார்: "ம்... இது பரவாயில்லை. ஜலதோஷ காய்ச்சல்...'' அவர் மாத்திரைகள் இருந்த டப்பாவைத் திறந்து ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்தார். "சுக்கும் சீரகமும் போட்டு நீரைக் கொதிக்க வைத்து மூன்று மாத்திரைகளை மூணு நேரம் கொடு...''
"கஷாயம் எதுவும் வேண்டாமா?''
"கஷாயம் பின்னால கொடுக்கலாம். இப்போ இதைக் கொடு.''
கல்யாணி மாத்திரையை முண்டின் நுனியில் கட்டிக் கொண்டே வாசலில் இறங்கி மாதவியைச் சைகை செய்து அழைத்தாள். "அந்த ஆளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா மாதவி?''
"ம்... ஏதாவது கொடுக்கணும்.''
"காசு எதுவும் இல்லையேடீ...''
"இல்லைன்னு யார் சொன்னது? என்கிட்ட கொடுத்து வச்சிருக்கிறது காசு இல்லையா?''
"அது ஒரு தேவைக்காக வச்சிருக்கிறது.''
"இதைவிட தேவை என்ன இருக்கு. ஆண் இல்லைன்னா, தேவை இருக்கா?''
கல்யாணி தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். அன்றைய அந்த சம்பவங்கள்- நாணி ஓச்சிறயிலிருந்து அண்டாவைத் தூக்கிக் கொண்டு வந்தது, அதற்கு என்ன விலை என்று கேட்டதற்கு கிண்டல் கலந்த குரலில் அவள் கூறிய வார்த்தைகள், அண்டா வாங்குவேன் என்று கூறிய சபதம், பருந்திற்குப் பின்னால் ஓடியபோது வேலியில் ஏறி விழுந்ததைப் பார்த்து அவள் கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தது- அந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஒரே நினைப்புடன் அவள் கோழியை வளர்த்ததையும், முட்டைகள் விற்ற காசை கோபாலன் என்ற வழிப்பறிக்காரனுக்கு பயந்து மாதவியிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். ஓச்சிற கடவுளின் கருணையில் அண்டா வாங்குவதற்கான பணத்தை அவள் சேமித்து விட்டிருந்தாள். ஓச்சிற திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய ஆசை நிறைவேறப் போகும் இந்தச் சூழ்நிலையில்... கல்யாணி சொன்னாள்: "இல்லை... அதுல இருந்து எடுக்க முடியாது.''
"அதுல இருந்து கொடுக்காமல் பிறகு எப்படி? வைத்தியருக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? சுக்கும் சீரகமும் வாங்க வேண்டாமா? கஷாயத்திற்கு எழுதித் தர்றப்போ மருந்து வாங்க வேண்டாமா?''
அதற்குப் பிறகும் கல்யாணி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினாள்: "சரி... நீ ஒரு காரியம் செய். அங்கே அஞ்சு ரூபாயை வைத்து விட்டு மீதி சக்கரங்களை இங்கே எடுத்துக் கொண்டு வா.''