சபதம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6571
ஓச்சிற திருவிழாவிற்குச் சென்றிருந்தபோது நாணி ஒரு அண்டாவை வாங்கினாள். நான்கரை ரூபாய் விலை கூறப்பட்ட அண்டாவை மூன்றே முக்கால் ரூபாய் தந்து அவள் விலைக்கு வாங்கினாள். சிறு பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக கொஞ்சம் பேரீச்சம் பழங்களையும், ஐந்தாறு முறுக்குகளையும் வாங்கி அண்டாவிற்குள் போட்டாள். முறம் ஒன்றை வாங்கி அண்டாவிற்கு மேலே வைத்தாள். தொடர்ந்து அண்டாவை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, பெருமை தாண்டவமாட மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாறு மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
நாணியின் வீட்டின் கிழக்குப் பக்கத்தில் கல்யாணி கயிறு திரித்துக் கொண்டு நின்றிருந்தாள். நாணி கல்யாணியைப் பார்த்தாள். ஆனால், பார்த்ததைப் போல காட்டிக் கொள்ளவில்லை. கடைக் கண்களால் பார்த்தாள்- அவளுடைய தலையில் இருந்த அண்டாவை கல்யாணி பார்த்தாளா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. கல்யாணி அண்டாவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நாணி சற்று நெளிந்து கொண்டே மேலும் சிறிது வேகமாக நடந்தாள்.
"அண்டாவை ஓச்சிறயிலயா வாங்கினேடீ?'' கல்யாணி கேட்டாள்.
"ஆமாம்...'' நாணி திரும்பி நிற்காமலே கூறிவிட்டுத் தன் நடையைத் தொடர்ந்தாள்.
"அதன் விலை என்னடி?''
"சும்மா கிடைச்சது.'' நாணி அலட்சியமான குரலில் கூறினாள்.
கல்யாணி கேட்டாள்: "சும்மா கிடைக்கிறதுக்கு உன் அப்பனா அங்கே வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு?''
நாணி திரும்பி நின்றாள்: "ஃபு.......! உன் அப்பன்தான்டி அங்கே இருக்காரு.''
கல்யாணிக்கு கோபம் அதிகரித்தது: "பு....! என் அப்பாவைப் பற்றி சொல்றதுக்கு நீ யாருடி? ஒரு அண்டா வாங்கி விட்டோம்கறதுக்காக உனக்கு என்னடி இந்த அளவுக்கு கொழுப்பு!''
நாணி கோபத்துடன் நின்றாள். "நான் ஒரு அண்டாவை வாங்கினதுக்காக உனக்கு ஏன்டி இந்த அளவுக்குப் பொறாமை?''
"எனக்கு பொறாமை எதுவும் இல்லைடி... உன் அண்டா என் நாய்க்கு கூட தேவையில்லை...''
"அப்படி இல்லைன்னா இங்கே வா... தர்றேன்...''
"ஒரு அண்டாவை வாங்கணும்னு நான் நினைச்சாலும் நடக்கும்டீ...''
"நீயும் உன் வீட்டுக்காரனும் நினைச்சாக்கூட நடக்காதுடீ...''
"ஃபு...'' கல்யாணி கயிறைக் கீழே வைத்துவிட்டு ஐந்தாறு அடிகள் முன்னால் வந்தாள். "என் வீட்டுக்காரரைப் பற்றி பேசினால் உன்னோட...''
"சொன்னா நீ எதை எடுப்பேடீ?'' நாணியும் ஐந்தாறு அடிகள் முன்னால் வந்தாள்.
"எதை எடுப்பேன்னு பார்க்கணுமாடீ? அந்த ஆளு இங்கே இருக்குறப்போ சொல்ல முடியுமா?''
"அவனும் அவனோட அப்பனும் இருந்தாக்கூட நான் சொல்வேன்டீ...''
"வாய்ல பற்கள் இருக்காது.''
"புல்லே! அதை நீயே வச்சுக்கடீ...''
கல்யாணி தோற்றுப் போய் விட்டாள். அவள் சொன்னாள்: "நான் நினைச்சால், ஒரு அண்டாவை வாங்க முடியுமா முடியாதான்னு காட்டுறேன்.''
"முடியாதுடீ... இதோட விலை அஞ்சு ரூபாயாக்கும்....''
"போடீ... அஞ்சு ரூபாய்னு கேட்டால் நான் என்ன பயந்து போயிடுவேனா?''
"அப்படின்னா ஒரு அண்டாவை வாங்கிக் காட்டுடீ. நீ பிறந்ததிலிருந்து அஞ்சு ரூபாவைப் பார்த்திருக்கியாடீ?''
"சரிடீ... நீ பார்த்திருக்கியா?''
"நான் பார்த்திருக்கேன்டீ... நீ அண்டாவை வாங்குற அன்னைக்கு உனக்கு முன்னால, நான் ஒரு ஆணாக வந்து நிக்கிறேன்.'' இவ்வாறு கூறிவிட்டு நாணி திரும்பி நடந்தாள்.
அதற்குப் பிறகு கல்யாணி எதுவும் பேசவில்லை. அவளுடைய தன்மானம் காயப்பட்டுவிட்டது. அவள் நினைத்தால் ஒரு அண்டாவை வாங்க முடியாதாம்...? அவள் பிறந்ததிலிருந்து ஐந்து ரூபாயைப் பார்த்ததே இல்லையாம்...! அவளுடைய கண்கள் நிறைந்து விட்டன.
அவளுடைய சிறிய மகன்- குட்டப்பன்- தூக்கம் கலைந்து உரத்த குரலில் அழுதான். அவள் ஓடிச் சென்று அவனைத் தூக்கிக் கொண்டு வந்து வாசலில் உட்கார்ந்து பால் கொடுத்தாள்.
கோபாலன்- கல்யாணியின் கணவன் கைலியை அணிந்து, வலை போட்ட பனியன் அணிந்து, தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு தேநீர் குடித்து முடித்து, பீடியைப் புகைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். அவன் இலங்கையிலிருக்கும் ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தான். வேலையை விட்டெறிந்து விட்டு, கிராமத்திற்கு வந்து இப்போது இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
கோபாலன் இலங்கையிலிருந்து சட்டையுடனும் கோட்டுடனும் குடையுடனும் வந்தான். ஒரு தகர பெட்டியும் அதில் இரண்டு மூன்று வேட்டிகளும் இரண்டு சட்டைகளும் நான்கு பனியன்களும் மூன்று வினோலியா சோப்புக் கட்டிகளும் ஒரு சென்ட் குப்பியும் சீப்பும் கண்ணாடியும் இருந்தன. இலங்கையில் தான் வெள்ளைக்காரரின் "ரைட் ஹேண்ட்"டாக இருந்ததாக கோபாலன் கிராமத்திற்கு வந்தபிறகு எல்லாரிடமும் கூறினான். கிராமத்திற்கு வந்தபிறகு சட்டையும் கோட்டையும் அணிந்து, தலை முடியை வாரி, சென்ட் தேய்த்து ஒவ்வொரு வீடாகச் சென்று இலங்கை விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுதான் அவனுடைய முக்கிய வேலையாக இருந்தது. அப்படிப் பேசித் திரிந்து கொண்டிருந்ததற்கு மத்தியில் அவன் பல இளம் பெண்களையும் நோக்கி காதல் வலையை வீசிக் கொண்டிருந்தான். பல இளம் பெண்களும் அந்த வலையில் சிக்கினார்கள் என்பதாகக் காட்டிக் கொண்டு, அந்த விஷயத்தை இதற்கிடையே சம்பாதித்த நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தான். அப்படிக் கூறிக் கூறி ஒரு இளம் பெண்ணின் சகோதரன் கோபாலனின் கன்னத்தில் ஒரு அடி கொடுத்த பிறகுதான் அப்படிப் பேசிக் கொண்டிருந்தது நின்றது. இறுதியாக கல்யாணியிடம் ஈடுபாடு உண்டானதால், அவன் அவளிடம் சேர்ந்தான். திருமணமும் நடந்தது. இலங்கையில் இருந்தபோது கிடைத்த அன்றாட சம்பளத்திலிருந்து சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து பயணச் செலவு போக மீதமாக இருந்த நாற்பத்து மூன்று ரூபாய் அந்தச் சமயத்தில் செலவாகிவிட்டது.
அதற்குப் பிறகு, இலங்கையிலிருக்கும் ஒரு வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதாகவும், அதை வெகுவிரைவில் அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறி, கல்யாணியின் தாய்க்கு ஒரு சீட்டு கிடைத்த வகையில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த இருபது ரூபாய்களை அவன் கடனாக வாங்கினான். அதுவும் செலவாகிவிட்டது. கல்யாணி கர்ப்பவதியாகவும் ஆனாள்.
பிரசவத்தின்போது அவளுடைய தாயும் தந்தையும் சேர்ந்து செலவு செய்தார்கள். இலங்கையிலிருந்து பணம் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் கோபாலனுக்கு இரண்டு வேளைகள் சோறு தந்து கொண்டிருந்தார்கள்.
இலங்கையிலிருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து மனதில் கவலைப்பட்டார்கள். கல்யாணியின் தாய் மற்றும் தந்தையின் கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து முடிந்தது. வீட்டில் பட்டினி உண்டாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இங்குமங்குமாக சில "முணுமுணுப்புகளும்" உண்டாக ஆரம்பித்தன. அது முதிர்ந்து சண்டையாக மாறியது.