சபதம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
அதற்குத் தேவையான பணத்தைத் தயார் பண்ணக் கூடிய வழியைப் பற்றியும் அவள் சிந்தித்து முடிவெடுத்தாள்.
அன்று முதல் அவள் கயிறு விற்கும் காசில் இருந்து அரைச் சக்கரம் வீதம் எடுத்து அடுப்புக் கல்லுக்குக் கீழே மறைத்து வைத்தாள். அந்த வகையில் ஒரே வாரத்தில் மூன்றரை சக்கரத்தைச் சேமித்து வைக்க முடிந்தது.
ஊமை வேலுவின் வீட்டில் கோழிக் குஞ்சுகளை விற்பதாக இருக்கிறது என்ற செய்தியை அவள் அறிந்தாள். ஒரு கோழிக் குஞ்சுக்கு இரண்டரை சக்கரம் விலை கூறப்பட்டது. கல்யாணி அடுப்புக் கல்லுக்கு அடியிலிருந்து இரண்டரை சக்கரத்தை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து ஒரு கோழிக் குஞ்சை வாங்கினாள்- ஒரு கறுத்த பெட்டைக் குஞ்சு.
அன்று சாயங்காலம் கோபாலன் வந்தபோது கோழிக் குஞ்சைப் பார்த்தான். "கோழிக் குஞ்சை வாங்குவதற்கு எங்கேயிருந்துடி சக்கரம் கிடைச்சது?''
"வழியில சக்கரம் கிடந்து நான் பொறுக்கி எடுத்தேன்.''
"அப்படின்னா எனக்கும் கொஞ்சம் சக்கரம் தா.''
"போய் பொறுக்கி எடுத்துக்கோங்க.''
கோழிக் குஞ்சை மிகவும் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்வது- அது கல்யாணியின் மிக முக்கியமான வேலையாக இருந்தது. அரிசி வாங்கிக் கொண்டு வந்தால், அதில் ஒரு பகுதியைக் கோழிக் குஞ்சுக்கு கொடுப்பாள். அரிசி வெந்தால், முதலில் பரிமாறுவது கோழிக் குஞ்சுக்குத்தான். சிறு சிறு பூச்சிகளைப் பிடித்து தின்பதற்காக அவள் குப்பையைக் கிளறிக் கொடுப்பாள். காகமும் பருந்தும் வந்து தூக்கிக் கொண்டு போய்விடாமல் அவள் எப்போதும் பத்திரமாக பார்த்துக் கொள்வாள். கோழிக் குஞ்சு கண்களின் பார்வையிலிருந்து மறைந்து போய் விட்டால், அவள் உரத்த குரலில் கூப்பிடுவாள்: "பா... பா... பப்பப்ப...''
வாசலில் சிறு சிறு பூச்சிகளைக் கொத்தித் தின்று கொண்டிருக்கும் கோழிக் குஞ்சைப் பார்த்துக் கொண்டே அவள் தனக்குத்தானே கூறிக் கொள்வாள்! "ம்... நான் அண்டாவை வாங்குற அன்னைக்கு அவள் எனக்கு முன்னால் ஒரு ஆணாக வந்து நிற்பேன் என்று கூறியிருக்கிறாள் அல்லவா? அவள் ஆணாக ஆவதை நான் கொஞ்சம் பார்க்கணும்."
ஒருநாள் இரவு உணவு சாப்பிட்டு முடித்து எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குட்டப்பன் நடுவிலும், கல்யாணியும் கோபாலனும் இரு பக்கங்களிலும். பாதி இரவு தாண்டியது. நல்ல உறக்கம்.
"குழ... குழ...'' என்று அழைத்தவாறு கல்யாணி வேகமாக எழுந்தாள்.
"என்னடி? என்னடி?'' கோபாலனும் பதைபதைப்புடன் எழுந்தான்.
"அய்யோ! என் கோழிக் குஞ்சை பருந்து கொண்டு போயிருச்சே!'' கல்யாணி உரத்த குரலில் கத்தினாள்.
"பருந்தா? நீ என்னடீ சொல்றே! இரவு நேரத்துலயாடீ பருந்து வரும்?''
அதற்குப் பிறகு கல்யாணி எதுவும் கூறவில்லை. அவள் கனவு கண்டிருக்கிறாள்.
கோபாலனுக்குக் கோபம் வந்து விட்டது. "பயமுறுத்திட்டியே! ச்சே... கோழிக் குஞ்சு வளர்க்குற ஒருத்தி! நான் எல்லாத்தையும் கொன்று ஒரு வழி பண்றேன்.''
கோழிக் குஞ்சு படிப்படியாக வளர்ந்தது. வளர்ந்து முட்டையும் போட்டது. முதல் முட்டை- கல்யாணி அதை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவள் சந்தோஷத்தால் தன்னையே மறந்து விட்டாள். அவள் மாதவியை உரத்த குரலில் அழைத்துக் கூறினாள்: "என் கோழி முட்டை போட்டுடுச்சுடி, மாதவி.''
அன்று சாயங்காலம் கல்யாணி கயிறை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்றாள். மாதவி கூறினாள்: "இனிமேல் நெல் கொடுத்தால், தினமும் முட்டை இடும்.'' அன்று அவள் எப்போதும் இல்லாதமாதிரி வயலின் வழியாக சந்தைக்குச் சென்றாள். கயிறு விற்று அரிசியையும் சர்க்கரையையும் உப்பையும் மிளகாயையும் மண்ணெண்ணெய்யையும் மீனையும் வாங்கிக் கொண்டு அவள் வேகமாக நடந்தாள்.
மாலை மயங்க ஆரம்பித்து விட்டிருந்தது. கல்யாணி கூடையைத் தோளில் வைத்துக் கொண்டு வயல் பக்கம் இறங்கினாள். விளைந்து கிடக்கும் நெற்கதிர்கள் மாலை நேர வெயிலில் மூழ்கி இப்படியும் அப்படியுமாக ஆடி விளையாடிக் கொண்டிருந்தன. வயலின் இரு பக்கங்களிலும் மாலை நேர விளக்குகள் வரிசையாகத் தெரிந்தன.
கல்யாணி தன் நடையின் வேகத்தைக் குறைத்தாள். அவள் சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை. வரப்பில் நின்று கொண்டே எட்டிப் பிடித்து ஐந்தாறு நெற்கதிர்களை அவள் பறித்து கூடைக்குள் போட்டாள். மீண்டும் சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை. அவள் வரப்பை விட்டு வயலுக்குள் இறங்கினாள். வேகமாக பத்து, பதினைந்து நெற்கதிர்களைப் பறித்துக் கூடைக்குள் போட்டாள்.
அந்த வகையில் அவள் தினமும் கோழிக்கு நெல் கொடுப்பாள். ஒவ்வொரு நாளும் கோழி முட்டையிடும். பத்து நாட்கள் முட்டையிட்டது. அவள் ஒரு கூடையில் உமியை அள்ளிப்போட்டு, அதில் முட்டைகள் அனைத்தையும் எடுத்து வைத்தாள். கோழி முட்டைகளுக்குமேலே அடை காக்க ஆரம்பித்தது.
நாட்கள் சில கடந்தன. ஒரு நாள் காலையில் கல்யாணி தூக்கத்திலிருந்து கண் விழித்தபோது, மூலையில் இருந்த கூடையில் "கீ... கீ... கீ...'' என்ற சத்தம் கேட்டது. முட்டைகள் அனைத்தும் விரிந்து விட்டிருந்தன- அவளுடைய எதிர்பார்ப்புகள் அந்த வகையில் ஒவ்வொன்றாக விரிந்து கொண்டிருந்தன. அவள் ஒவ்வொரு குஞ்சையும் தனித் தனியாக எடுத்துப் பார்த்தாள். "இவை அனைத்தும் பெட்டைகளாக இருக்க வேண்டும் என் ஓச்சிற கடவுளே!'' அவள் கைகளைக் கூப்பிக் கொண்டு வேண்டினாள்.
அனைத்தும் பெட்டைக் கோழிகளாக இருக்க வேண்டும், தினமும் அவை அனைத்தும் முட்டை இட வேண்டும், அவை அனைத்தையும் விற்றுக் காசாக்க வேண்டும்- அந்த வகையில் அடுத்த ஓச்சிற திருவிழாவின்போது... "ம்... ஓச்சிற கடவுள்னு இருந்தால், நான் அவளிடம் பதிலுக்கு பதில் கேட்காமல் இருக்க மாட்டேன்." அவளுடைய சந்தோஷத்திற்கு மத்தியில் பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி தலையைக் காட்டியது.
தாய்கோழி குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தது. கல்யாணியின் மனதில் இருந்த ஆசையும் அதிகமானது. கோழிக் குஞ்சுகளைப் பூனை பிடித்து விடுமோ, பருந்தும் காகமும் தூக்கிக் கொண்டு போய் விடுமோ?- உண்ணும்போதும் உறங்கும்போதும் அவளுடைய சிந்தனை அதைப் பற்றியே இருந்தது. ஏதாவது பூனை அந்தப் பக்கமாக வந்தால், அவள் அதை அடித்து விரட்டி விடுவாள். காகங்கள் அருகில் எங்காவது உட்கார்ந்திருந்தால், அவள் கல்லை எடுத்து எறிவாள். வானத்தில் பருந்து பறப்பதைப் பார்த்தால், அவள் குஞ்சுகளை கூடையைப் போட்டு மூடுவாள்.
ஒருநாள் தாய்க் கோழி குஞ்சுகளுக்கு இரையைப் பிரித்துப் போட்டு உண்ண வைப்பதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டே கல்யாணி கயிறு திரித்துக் கொண்டிருந்தாள்.