சபதம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
மாதவி திரும்பி நடந்தாள். கல்யாணி பின்னால் ஓடிச் சென்று மெதுவான குரலில் சொன்னாள்: "அங்கே வெற்றிலை இருந்தால், கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்.''
"இருந்தால் எடுத்துட்டு வர்றேன்.'' மாதவி வேகமாக நடந்தாள்.
கல்யாணி சக்கரங்களை எண்ணிப் பார்த்தாள். ஏழு சக்கரங்களை கையில் எடுத்துக் கொண்டு மீதியை மடியில் வைத்தாள். அவள் வைத்தியரின் அருகில் சென்று கையை நீட்டிக் கொண்டு சொன்னாள்: "வைத்தியரே, உங்களுக்கு ஒரு தட்சிணை...''
வைத்தியர் புன்சிரிப்பைத் தவழ விட்டார். கூச்சத்துடன் கையை நீட்டினார். கல்யாணி சக்கரங்களை கையில் கொடுத்தாள்.
"பரவாயில்லை... ஜலதோஷ காய்ச்சல்தான். இந்த மாத்திரையை இப்பவே கொடுத்திடு. பிறகு கஷாயத்திற்கும் எழுதித் தர்றேன்....'' வைத்தியர் சக்கரத்தையும் மாத்திரை டப்பாவையும் மடியில் வைத்து, ஓலைக் குடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
கல்யாணியின் கையில் நான்கே கால் சக்கரங்கள் மீதியிருந்தன. அதிலிருந்து கால் சக்கரத்தை எடுத்துக் கொண்டு போய் சுக்கு, சீரகம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்தாள். நீரைக் கொதிக்க வைத்து ஒரு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தாள்.
அன்று அவள் கயிறு திரிக்கவில்லை. முந்தின நாள் செய்த பழைய சாதத்தை எடுத்துச் சாப்பிட்டாள். குட்டப்பனுக்கு கொஞ்சம் கொடுத்தாள். அவன் வாசலில் இருந்து கொண்டு மண்ணை அள்ளி விளையாட ஆரம்பித்தான். அவள் காலையில் திறந்து விட்ட கோழிகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து விட்டு, திண்ணையில் வந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கினாள். "இருந்தாலும்... அஞ்சு ரூபா இருக்குதே!" அவள் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். "அண்டா வாங்குவதற்கு அதுபோதும். ஓச்சிற திருவிழா ஒண்ணாம் தேதி தொடங்குது. அன்றைக்கே போய் அண்டாவை வாங்கிடணும். அவள் என் முன்னால் ஆணாக வந்து நிற்பதைக் கொஞ்சம் பார்க்கணும். இன்னும் பத்து, பதினெட்டு நாட்கள் இருக்கின்றனவே! அதற்குள் கிடைக்கிற முட்டைகளை விற்றுக் காசாக்கணும். அதைக் கொடுத்து ஒரு சட்டியும் குடையும் பாயும் வாங்கணும். மாதவிக்கு ஒரு ரவிக்கையும் பையனுக்கு ஒரு ஆடையும்..."
நேரம் மதியத்தை தாண்டி விட்டிருந்தது.
"ச்சீ... போ... உன்னை நான்...'' கோபாலன் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருந்தான்.
கல்யாணி பதைபதைப்படைத்து எழுந்து உள்ளே சென்றாள்: "என்ன? என்ன?''
"ஒரு பீடி தா. தேநீருக்கு சூடு இல்லை. சக்கரத்தை எங்கேடீ வச்சிருக்கே?''
கல்யாணிக்கு பயம் வந்து விட்டது. அவள் மாதவியை அழைத்துக் கொண்டு வந்தாள். "வாய்க்கு வந்தபடி உளறிக்கிட்டு இருக்காருடி, மாதவி''.
"மாத்திரை கொடுத்தீங்களா?''
"ம்... மாத்திரை கொடுத்த பிறகுதான் காய்ச்சல் அதிகமாயிருச்சு.''
"அது அப்படித்தான். ஒரு மாத்திரை கொடுக்குறப்போ, காய்ச்சல் அதிகமா ஆகும். பிறகு குறைஞ்சிடும். இன்னொரு மாத்திரையையும் கரைச்சுக் கொடுங்க.''
கல்யாணி இன்னொரு மாத்திரையையும் கரைத்துக் கொடுத்தாள். ஓச்சிற கடவுளுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டிக் கொண்டாள்.
மாலை நேரம் வந்தது. கல்யாணி சந்தைக்குச் சென்று இரவு உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தாள். இரவு உணவு சமைத்து அவளும் குட்டப்பனும் சாப்பிட்டார்கள். கோபாலன் நீர்கூட குடிக்கவில்லை. அவன் என்னென்னவோ கூறிக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் கல்யாணி தூங்காமல் கண் விழித்திருந்தாள். அவளுக்கு பயமாகவும் இருந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அழைத்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை. எப்படியோ ஒரு வகையாகப் பொழுது புலர்ந்தது. அவள் வைத்தியரைத் தேடிச் சென்று விவரங்களைக் கூறினாள்.
"பரவாயில்லை... கஷாயம் வச்சு கொடு.'' அவர் கஷாயத்திற்கு எழுதிக் கொடுத்தார். இரண்டு நாட்கள் முட்டைகள் விற்றதன் மூலம் கிடைத்த மூன்று சக்கரங்களைக் கொடுத்து கஷாயத்திற்கு மருந்தும் அதில் போடுவதற்கு சர்க்கரையும் வாங்கி அவள் வேகமாக கஷாயம் தயார் பண்ணிக் கொடுத்தாள்.
அன்று அந்த வகையில் நாள் முடிந்தது. கோபாலனின் நோய் அதிகரித்துக் கொண்டிருந்தது. அன்று அங்கு கஞ்சி வைக்கவில்லை. மாதவி குட்டப்பனை அழைத்துக் கொண்டு போய் கஞ்சி கொடுத்தாள். கல்யாணியை அழைக்க, அவள் போகவில்லை.
மறுநாள் பக்கத்து வீடுகளில் இருக்கும் சில பெண்கள் கோபாலனின் நோயைப் பார்ப்பதற்காக வந்தார்கள். "கடுமையான காய்ச்சல். இதை குணப்படுத்துவதற்கு நொண்டி வைத்தியரால் முடியாது.'' அவர்கள் எல்லாருடைய கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.
கல்யாணியின் பதைபதைப்பு அதிகமானது. அவளும் மாதவியும் சேர்ந்து யோசித்தார்கள். மாதவி சொன்னாள்: "உண்மைதான். நொண்டி வைத்தியரால் முடியாது என்றுதான் தோணுது. காய்ச்சல் கடுமை ஆயிடுச்சு. வயல்காடனை அழைத்துக் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும்.''
"அந்த ஆளுக்குப் பணம் தர வேண்டாமா?"
"பிறகு... பணம் தராமல் இருக்க முடியுமா? அவரோட கட்டணம் இரண்டு ரூபாய்...''
"இரண்டு ரூபாயா?'' கல்யாணியின் நெஞ்சில் ஒரு வேதனை. "அய்யோடி... அதுல இருந்து இரண்டு ரூபாய் எடுத்தால், பிறகு மூணு ரூபாய்தானே இருக்கும்!''
"அதற்குப் பிறகு மருந்துக்கு விலை கொடுக்கணும்.''
கல்யாணி சம்மதமற்ற குரலில் சொன்னாள்: "வேண்டாம்டீ... வேண்டாம். அதுல இருந்து நான் இனிமேல் எடுக்க மாட்டேன்.''
"எடுக்கலைன்னா, ஆள் இல்லாமற் போயிடுவார். ரூபாய் வேணுமா? ஆள் வேணுமா?''
கல்யாணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். பதினேழாவது வயதில் கோபாலன் அவளைத் திருமணம் செய்தான். அவனுடைய கையில் பணம் இருந்தபோது, தாராளமாகச் செலவழித்தான். அவளுடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்கிறான். பிறகு... கையில் காசு இல்லாமற் போய்விட்டது. தேநீர் அருந்துவது, பீடி புகைப்பது, தமாஷாக பேசிக் கொண்டிருப்பது, நண்பர்களுடன் சேர்ந்து நடந்து திரிவது... இது ஒரு வழக்கமாகிவிட்டது. "வந்ததெல்லாம் வந்திடுச்சு. இனி அவன் எப்படியோ போகட்டும். உன்னையும் பிள்ளையையும் நான் காப்பாத்துறேன்.'' அவளுடைய தாய் அவளுக்கு இவ்வாறு யோசனை கூறினாள். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. "ஒருத்தர் வந்து சேர்ந்தார். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. இனிமேல் என் குழந்தை வேறொரு மனிதனை அப்பா என்று அழைப்பது நடக்காது.'' இப்படிக் கூறிவிட்டு அவள் கோபாலனுடன் வீட்டை விட்டு வெளியேறி வந்தாள். மட்டை உரித்தும், கயிறு திரித்தும் அவள் அவனுக்கு செலவுக்குப் பணம் தந்தாள். பீடிக்கும் தேநீருக்கும் கொடுப்பதற்கு அவளுடைய கையில் காசு இல்லை. இந்த விஷயத்தில் மட்டுமே அவர்களுக்கிடையே சண்டை உண்டாகும். சில நேரங்களில் அரை சக்கரமோ ஒரு சக்கரமோ மிச்சம் பிடித்து அவனுக்கு தேநீர் குடிப்பதற்காகக் கொடுப்பாள்.