சபதம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
இறுதியில் கோபாலன் கல்யாணியையும் சிறிய மகனையும் அழைத்துக் கொண்டு நாணியின் வீட்டின் கிழக்குப் பகுதியில் தாறுமாறாகக் கிடந்த ஒரு இடத்தைச் சீர்செய்து, அதில் வந்து வசித்துக் கொண்டிருக்கிறான்.
கல்யாணி தென்னை மட்டையை உரித்தும் கயிறு திரித்தும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள். காலையில் கோபாலன் எழுந்து செல்வான். நண்பர்களிடம் யாசித்தோ பிடுங்கியோ தேநீர் குடிப்பதையும் பீடி புகைப்பதையும் நிறைவேற்றிக் கொள்வான். அது எதுவுமே நடக்கவில்லையென்றால், கல்யாணியிடம் சண்டை போட்டு, அவள் கயிறு திரித்துச் சம்பாதித்த பணத்திலிருந்து அரை சக்கரத்தையோ (பழைய திருவாங்கூர் நாணயம்) ஒரு சக்கரத்தையோ பிடுங்கிக் கொண்டு செல்வான்.
அன்று காலையில் கல்யாணி தந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு போய், தேநீர் பருகுவதும் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பதும் முடிந்து வந்து கொண்டிருந்தான்.
"ஏதாவது இருக்காடீ?'' கோபாலன் கேட்டான்.
"ஆமாம்... இருக்கு. கறியும் சோறும்...'' அவள் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கோபமும் கவலையும் இப்படி உடைத்துக் கொண்டு வெளியே வர ஆரம்பித்தன.
கோபாலன் அருகில் சென்றான். "நீ ஏன் அழறே?'
"என் மனசுல இருக்கிறதை... யார் கேக்குறது?'' அவளுடைய கோபம் அதிகமானது. "காலையில இருந்த ஒரு காசையும் கொண்டு போய் கொடுத்து தேநீரையும் பலகாரத்தையும் சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க... ஏதாவது இருக்கான்னு கேட்டுக் கொண்டு...''
"நீ என்னடி இந்த அளவுக்கு கோபப்படுறே?'' கோபாலனுக்கும் கோபம் வந்தது.
கல்யாணி வெறுப்பு மேலோங்க கூறினாள்: "இல்லை... கோபப்படவில்லை... கொஞ்சறேன்... கொஞ்சணும்தான் தோணுது''.
"அடியே... நீ உன் நாக்கை அடக்கி வச்சிக்கிறது நல்லது. இல்லாவிட்டால் உன் தலையை நான் உடைச்சிடுவேன்.''
கல்யாணி கோபத்தால் துடித்தாள். "என்னோட.... அந்த... நான் ஏதாவது சொல்லிடப் போறேன்.''
"என்னடி... நீ சொல்லப்போறே? எங்கே... சொல்லு...'' கோபாலன் கையை உயர்த்திக் கொண்டு நெருங்கினான்.
கல்யாணி அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. "ம்... என்ன செய்றீங்கன்னு பார்க்குறேன்.''
கோபாலன் கையை ஆட்டியவாறு சொன்னான்: "ஒண்ணு கொடுத்தேன்னு வச்சுக்கோ... உன் கதை முடிஞ்சிடும்.''
"ம்... கதையை முடிப்பீங்க. அதற்கு வளர்த்து வச்சிருக்கணும். நான் தேங்காய் மட்டையை உரிச்சும் கயிறு திரித்தும் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கேன்.''
"சரிடீ... உனக்கு நான் பாடம் கத்துத் தர்றேன்.'' இவ்வாறு கூறிவிட்டு கோபாலன் திரும்பி நடந்தான்.
"ம்... சரி போங்க. படிக்கிறது யாருன்னு...'' கல்யாணி உரத்த குரலில் சொன்னாள்.
கோபாலன் படிகளைக் கடந்து நடந்தான். கல்யாணி எழுந்து குழந்தையை திண்ணையில் ஒரு கிழிந்த பாயில் படுக்க வைத்து விட்டு கயிறு திரிக்க ஆரம்பித்தாள்.
"இங்கே என்ன சண்டை?'' தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் மாதவி சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக வந்திருந்தாள்.
"இங்கே ஒரு காசு இருந்தால், காலையில தேநீர் குடிக்கிறதுக்காக போனாருடி, மாதவி. இப்போ வந்து ஏதாவது இருக்கான்னு கேக்குறாரு. எனக்கு என்னோட நாக்கு அரிக்க ஆரம்பிச்சிருச்சு. இங்கே எப்படி வாழ்ந்து கொண்டிருக்கேன்னு உனக்குத் தெரியாதா? நான் ஒரு வேலை செய்துதான்டி மூணு பேரோட வயித்தையும் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்? ஆடையையும் சோப்பையும் சென்ட்டையும் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ அணியிறதுக்கு ஆடை இல்லை. திங்கிறதுக்கு இல்லை. நீ என்னை கொஞ்சம் பாரு. நான் இப்படியா இருந்தேன்?'' கல்யாணியின் கண்கள் நிறைந்தன.
மாதவி இரக்கம் கலந்த குரலில் சொன்னாள்: "அப்போ எப்படி இருந்தீங்க, கல்யாணி அக்கா? நாழி அரிசி உலையில போட்டா முழுப்படி அரிசியை வடிச்சு எடுப்பீங்களே! எங்க சின்ன அண்ணன் அப்பவே சொல்வாரு... அவரோட பகட்டுத்தனங்களைப் பார்த்து பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கக் கூடாதுன்னு.''
"புளிமூட்டுல இருந்து அவர் கல்யாணத்துக்குப் பெண் கேட்டு வந்தாரு. என் கெட்ட நேரத்தால, நான் அதை வேண்டாம்னு சொல்லிட்டேன். அதற்குப் பிறகுதானே அவர், நொண்டி கொச்சி முத்துவின் மகளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? அவர் இப்போ அவளை கீழேயோ மேலேயோ வைக்காமல், கூடவே வச்சிக்கிட்டு இருக்காரு. சமீபத்துல ஒருநாள் அவள் ஆடை உடுத்தி நடந்து போறதைப் பார்த்தப்போ என் நெஞ்சே எரிஞ்சு போயிருச்சு.''
"அவர் நல்ல வசதியானவர். அவங்க இப்போ நல்லா சந்தோஷமா இருக்காங்க.''
"இதெல்லாம் என் தலைவிதிடீ.'' கல்யாணி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். "ஓச்சிற திருவிழா ஆரம்பிச்சு இப்போ பத்து, பன்னிரெண்டு நாட்கள் ஆயிருச்சுல்ல! எனக்கு ஒரு தடவை அங்கே போக முடிஞ்சதா? எல்லா நாட்களும் நான் போகக் கூடியவள்.''
"பிறகு ஏன் போகல?''
"எப்படிடீ போக முடியும்? உடுத்திட்டுப் போறதுக்கு ஒரு துணி இருக்குதா? நெய் விளக்கு ஏத்துறதுக்கு ஒரு சக்கரம் வேண்டாமா? பிள்ளைக்கு உடம்புக்கு சரி இல்லாம ஆனப்போ, ஒரு கால் வாங்கி வைக்கிறேன்னு நேர்ந்துக்கிட்டேன். அதற்கு ஒரு சக்கரம் வேண்டாமா? பிறகு கையில இரண்டு சக்கரங்கள் இருக்க வேண்டாமாடீ?''
"அது உண்மைதான். போன சனிக்கிழமை நாங்கள் போய் சாமான்கள் வாங்கிட்டு வந்தது... எல்லாத்தையும் சேர்த்து ரெண்டு ரெண்டரை வந்திருச்சு.''
"நீங்க வசதி உள்ளவங்கடி... நான் என்ன அப்படியா? என் தலைவிதி இது. என்னை மாதிரி இருக்குற பெண்கள் ஓச்சிறயில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வருவதைப் பார்க்குறப்போ அழுகை வரும். இன்னைக்கு நான் இதேமாதிரி இங்கே கயிறைத் திரித்துக் கொண்டு நின்னிருக்குறப்போ, மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் அவள் ஒரு அண்டாவை வாங்கிக்கிட்டு வந்தா. அண்டா விலை எவ்வளவுடின்னு நான் கேட்டேன். அவள் என் தந்தையைப் பற்றியும் தாயைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு நடந்து போறா. ஒரு அண்டா வாங்கின நிமிடத்திலிருந்தே அவளுக்கு கீழே மேலே எதுவுமே தெரியலடி...''
மாதவி அதை ஏற்றுக் கொண்டு சொன்னாள்: "எப்படி இருந்தாலும், அவள் ஒரு திமிர் பிடிச்சவதான். சமீபத்தில் நான் போய் அந்த சீனாச்சட்டியைக் கொஞ்சம் கேட்டேன். இப்போ தர்றதுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா. இந்த திமிர்த்தனமும் தலைக்கனமும் எப்போ உண்டானதுன்னு நமக்கென்ன தெரியாதா?''
"பிறகு... நமக்குத் தெரியாதா? மூலையில உட்கார்ந்து கொண்டிருந்தவ... இப்போ அவள் ஒரு பழக்காரி! ம்... ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால், நானும் ஒரு அண்டாவை வாங்குவேன்.''
மாதவியை அவளுடைய தாய் அழைத்தாள். அவள் ஓடிச் சென்றாள்.
அடுத்த வருடம் ஓச்சிற திருவிழாவிற்குச் செல்லும்போது அண்டா ஒன்றை வாங்கியே ஆக வேண்டுமென்று கல்யாணி தீர்மானித்தாள்.