சபதம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6574
அப்படி நின்று கொண்டிருக்கும்போது அவள் பலவற்றையும் பார்த்தாள். அன்றொரு நாள் நாணி அண்டாவைத் தூக்கிக் கொண்டு வந்தபோது, அவள் கூறிய வார்த்தைகள், அடுத்த வருடம் ஓச்சிற திருவிழாவின்போது அண்டா வாங்க வேண்டும் என்ற சபதம், கோழிக் குஞ்சுகள் வளர்ந்து அவை அனைத்தும் முட்டைகள் இடுவது, அந்த முட்டைகள் அனைத்தையும் விற்றுக் காசாக்குவது, அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓச்சிற திருவிழாவிற்குச் செல்வது, அண்டா வாங்குவது, அதைத் தூக்கிக் கொண்டு நாணி பார்க்கிற மாதிரி வருவது- இப்படிப் பலவற்றையும் அவள் கற்பனையில் கண்டாள்.
மேற்குப் பக்கத்திலிருந்து மாமரத்திற்குக் கீழே ஒரு ஆரவராம். "கீய.. கீய... கீய..."
கல்யாணி மனதிற்குள் ஒரு பரபரப்புடன் "குழ... குழ..." இவ்வாறு சத்தம்போட்டுக் கொண்டே அவள் மாமரத்தின் அடியை நோக்கி ஓடினாள்.
"கீய.. கீய.. கீய..." பறந்து செல்லும் பருந்தின் காலில் இருந்தவாறு கோழிக் குஞ்சு சத்தம் போட்டது.
"அய்யோ...! நாசம் பண்ணிட்டியா?'' கல்யாணி பருந்து பறந்து செல்லும் திசையை நோக்கி ஓடினாள். "குழ... குழ... குழ...''
வேலி! கல்யாணி வேலிமீது ஏறி, அவளும் வேலியும் சேர்ந்து கீழே விழுந்தார்கள்.
நாணி அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கல்யாணி கீழே விழுவதைப் பார்த்து அவள் கைகளைத் தட்டிச் சிரித்தாள்.
கல்யாணி வேகமாக எழுந்தாள். மானக் கேடு, கோழி இழப்பு! கவலையும் கோபமும். "நீ என்னத்தைப் பார்த்து சிரிக்கிறே?'' அவள் நாணியைப் பார்த்துக் கேட்டாள்.
"உன் அழகைப் பார்த்துட்டு...'' நாணி சிரித்துக் கொண்டே கூறினாள்.
"உனக்கு நான் யார்னு காட்டுறேன்டி'' கல்யாணி கோபத்தை அடக்கிக் கொண்டு, திரும்பி நடந்தாள்.
"காட்டுறப்போ பார்த்துக்கலாம்- இப்போ நீ போ...'' நாணி உரத்த குரலில் சொன்னாள்.
கல்யாணி மாமரத்திற்குக் கீழே சென்றாள். தாய்க் கோழி மற்ற குஞ்சுகளை இறக்கைக்குக் கீழே வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. அவள் மேலே பார்த்தாள்.
"கீய... கீய... கீய..." பருந்து கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. அன்று கல்யாணி உணவு சாப்பிடவில்லை.
கோழிக் குஞ்சுகள் வளர்ச்சியடைய ஆரம்பித்தன- நான்கு சேவல்களும் ஐந்து பெட்டைகளும். தாய்க் கோழி அதற்குப் பிறகும் முட்டை இட்டது. கல்யாணி அந்த முட்டை எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கினாள். கிடைத்த காசை அந்த நேரத்திலேயே அடுப்புக் கல்லுக்கு அடியில் கொண்டு போய் பத்திரப்படுத்தி வைத்தாள். தேநீர் பருக காசு தராததற்காக, ஒவ்வொரு நாளும் அவள் கோபாலனுடன் சண்டை போட வேண்டியதிருந்தது.
ஒருநாள் கோபாலன் மறைந்திருந்து கல்யாணி காசுகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டான். மறுநாள் முட்டை விற்ற காசை வைப்பதற்காக அவள் அடுப்புக் கல்லை அகற்றினாள். அங்கு காசுகள் எதுவும் இல்லை.
"அய்யோ... அவன் என் காசுகளை எடுத்துட்டுப் போயிட்டானே!'' அவள் அடுப்புக் கல்லை எடுத்து எறிந்தாள். கோபாலனின் "ட்ரங்க் பெட்டி"யை எடுத்து வெளியில் போட்டாள். அவனுடைய பழைய கோட்டைப் பிடித்து இழுத்துக் கிழித்தாள். அதனால் அவளுடைய கோபம் தீரவில்லை. அவள் ஓடிச் சென்று குட்டப்பனுக்கு ஐந்தாறு அடிகள் கொடுத்தாள். அவன் தரையில் கிடந்து அழுதான்.
அப்போது கோபாலன் அங்கே வந்தான். கல்யாணி சிங்கத்தைப் போல பாய்ந்து அவனுக்கு அருகில் சென்றாள். கோபாலன் அவளைத் தடுத்து நிறுத்தினான். ஆரவாரம்... ஆரவாரம்...
அன்று அவள் கஞ்சி வைக்கவில்லை. இரவு உணவும் தயாரிக்கவில்லை. எல்லாரும் பட்டினி.
மறுநாள் கல்யாணி யாருக்கும் தெரியாமல் மாதவியை அழைத்துக் கூறினாள்: "மாதவி, நான் ஒரு விஷயத்தைச் சொன்னால் நீ யாரிடமாவது சொல்லுவியாடீ?''
"என்ன? சொல்லுங்க... நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.''
"பிறகு நான் முட்டைகள் விற்கிற காசுகளை உன் கையில் தர்றேன். நீ அதை பத்திரமாக வச்சிருப்பியா?''
"ம்... என் தகரப் பெட்டியில் வச்சிருந்தால், யாரும் எடுக்க மாட்டாங்க. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.''
"இங்கே வச்சிருந்தால் பணம் கைக்கு வராதுடி. அடுப்புக் கல்லுக்குக் கீழே வச்சிருந்ததை அவர் எடுத்துட்டுப் போயிட்டாரு.''
"இங்கே தந்தால் நான் பத்திரமா வச்சிக்கிறேன். கேக்குறப்போ தர்றேன்.''
அந்த வகையில் காசுகளை பத்திரப்படுத்தி வைப்பதற்கு கல்யாணி ஒரு வழியைக் கண்டுபிடித்தாள்.
சிறு குஞ்சுகள் வளர்ச்சியடைந்து முட்டையிட ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து கல்யாணியின் வருமானமும் அதிகரித்தது. சில நேரங்களில் முட்டைகள் விற்றதன் மூலம் ஒன்றரை, இரண்டு சக்கரங்கள் என்ற விகிதத்திலும் கிடைக்க ஆரம்பித்தன.
மாதவியின் தகரப் பெட்டியின் எடை கூடிக் கொண்டு வந்தது.
கோபாலன் வீட்டின் எல்லா இடங்களிலும் கல்யாணி காசுகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பதற்காக அலசி அலசிப் பார்ப்பான். ஒரு இடத்திலும் காசு இருக்காது.
ஒருநாள் கோபாலன் கேட்டான்: "முட்டை விக்கிற காசெல்லாம் எங்கடீ?''
கல்யாணிக்கு வெறி வந்து விட்டது. "முட்டை விற்ற காசை கேக்குறதுக்கு கோழியை வாங்கித் தந்தீங்களா என்ன?''
"அப்படின்னா, இப்போ உன் கோழிகள் எல்லாத்தையும் பிடித்துக் கொண்டு போய் விக்கிறதைப் பார்க்கணுமா?''
"ம்... விப்பீங்க. அதற்கு அம்மாவோட வயித்துக்குள்ளே இன்னொரு தடவை போயிட்டு வரணும்.''
அதைத் தொடர்ந்து கோபாலன் சமாதான உடன்பாட்டிற்கு வருவான். "அடியே.. நீ சக்கரங்கள் எல்லாத்தையும் யாரோட கையிலாவது தந்து வைக்கிறியா என்ன? அவங்க ஏமாத்திடப் போறாங்க.''
"ஏமாத்தட்டும்... இழப்பொண்ணும் இல்லையே!''
கோபாலனின் தந்திரங்கள் எதுவும் கல்யாணியிடம் பலிக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது மட்டுமே அவள் ஒரு சக்கரத்தைத் தருவாள்.
இப்படி நாட்களும் வாரங்களும் மாதங்களும் கடந்தன. இடப மாதம் வந்தது. ஒருநாள் கல்யாணி மாதவியிடம் கேட்டாள்: "இப்போ எவ்வளவுடி சேர்ந்திருக்கு மாதவி?''
"ஆ... நான் எண்ணிப் பார்க்கல.''
"நாம கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். எடுத்துக் கொண்டு வா.''
மாதவி ஒரு சிறிய தகரப் பெட்டியைத் தூக்கி எடுத்துக் கொண்டு வந்தாள். அது நிறைய சக்கரங்கள் இருந்தன. தூரத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குட்டப்பன் எழுந்து வேக வேகமாக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான். குட்டப்பனை ஒரு கையால் விலகி நிற்கச் செய்து விட்டு கல்யாணி சொன்னாள்: "பதினொண்ணே கால் சக்கரம் மீதம் இருக்குடீ, மாதவி.''
"அப்போ இந்த அஞ்சு ரூபாய் எதற்கு?'' மாதவி கேட்டாள்.
"அதுவா? அதைப் பிறகு சொல்றேன். இப்போ இதை அங்கே கொண்டு போய் வை. இங்கே இருக்குற ஆம்பளைக்குத் தெரிஞ்சா, ஒரு காசும் இருக்காதுடீ.''