இரவின் காலடி ஓசை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
என் வீட்டிற்கு என்னை அழைப்பதற்கு அவளுக்கு எப்படி தைரியம் வந்தது? நான் அவளுடைய முக வெளிப்பாட்டைக் கூர்ந்து கவனித்தேன். தான் ஒரு நிரபராதி என்று அந்தப் பெண் நடித்துக் கொண்டிருந்தாள்.
வீட்டை அடைந்தவுடன் என்னை வரவேற்பதற்கு என்னுடைய வயதான வேலைக்காரப் பெண் வரவில்லை. அவள் இறந்து விட்டாள் என்று என் தந்தை கூறினார். பூனை? பூனை ஒரு நாள் காணாமல் போய்விட்டது. மாலதி அதை உயிருடன் புதைத்திருப்பாள் என்று நினைக்க எனக்கு சிரமமாக இல்லை. மாலதி என்ற பெண்ணின் மனதில் உண்டாகும் ஒவ்வொரு கெட்ட எண்ணத்தையும் புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. என்னை பைத்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்புவது... பூனையை மண்ணுக்குள் புதைப்பது... என்னுடைய ஆயாவை வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே போகச் சொல்வது... இனி என் தந்தையை விஷம் கொடுத்துக் கொல்வது... அப்போது இந்த வீடும் சொத்துக்களும் பணிப்பெண்களும் வேலைக்காரர்களும் வாகனங்களும் அவளுக்குச் சொந்தம் என்றாகிவிடும். "நான் உயிருடன் இருக்கும்போது, என் தந்தையைக் கொல்வதற்கு அவளால் முடியாது” -நான் எனக்குள் கூறிக்கொண்டேன். என் தந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் காப்பாற்றுவது என்பது இனிமேல் என்னுடைய வாழ்க்கையின் ஒரே இலக்காக ஆனது. என் படுக்கையறையில் எந்தவொரு மாற்றத்தையும் அந்தப் பெண் உண்டாக்கியிருக்க வில்லை. நான் ஒரு காலத்தில் இங்கிருந்து பிரிந்து சென்றபோது, அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும்- பூனையைத் தவிர- அலமாரியிலும் மேஜை மீதும் அப்படியே இருந்தன. நான் அவிழ்த்துப் போட்ட நைட்டி அதே நிலையில் கட்டிலில் கிடந்தது. களைப்பு அதிகமாக இருந்ததால் அதற்குப் பிறகு யாரிடமும் பேசாமல் நான் கட்டிலில் போய் படுத்துக்கொண்டேன். உறக்கம் மட்டுமே என் வாழ்க்கையில் அழியாமல் எஞ்சியிருந்த ஒரே ஒரு கொடை...
என்னைக் குளிப்பாட்டுவதற்கும் ஆடைகள் அணிவிப்பதற்கும் பணியாட்கள் இருந்தார்கள். என்னுடைய உணவை படுக்கையறைக்கு ஒரு பெரிய மரத்தட்டில் வைத்துக் கொண்டு வந்து தருவதற்கும், சாப்பிட்டு முடித்ததும் எச்சில் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போவதற்கும் பணியாட்கள் இருந்தார்கள். ஆனால், என்னை அணைத்துக் கொள்வதற்கோ முத்தமிடுவதற்கோ யாரும் அந்த வீட்டில் தயாராக இல்லை. என் தந்தைகூட என்னைத் தொடுவதற்குத் தயங்கினார். என் தந்தை என்னைக் காணும் போதெல்லாம், ஒரு வெறுப்பை உணர்வதைப் போல எனக்குத் தோன்றியது.
என்னுடைய அழகு போய்விட்ட காரணத்தாலா என் தந்தை என்னைத் தொடாமல் இருக்கிறார் என்று நான் உரத்த குரலில் கேட்டேன். முகம் பார்க்கும் கண்ணாடியில் என்னுடைய புதிய தோற்றம் தெரிந்ததைப் பார்த்ததும், நான் கவலைக்குள்ளாகி விட்டேன். நிறம் குறைந்து, எலும்பும் தோலும் மட்டுமே கொண்ட ஒருத்தி எனக்கு முன்னால் ஓரங்கள் சிதிலமான பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு நின்றிருக்கிறாள்.
எப்போது என்னுடைய அழகான பற்கள் விழுந்து அவலட்சணமாக ஆயின? எனக்கு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. பைத்தியக்கார மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும், அங்கு நோயாளிகளுடன் சேர்ந்து இருந்த பெண் நான்தான் என்பதை நம்ப என்னால் முடியவில்லை. திரும்பிச் செல்ல வேண்டிய நாள் வந்தபோது என் தந்தை சொன்னார்:
“மாலதி, இனிமேல் அவள் அங்கு திரும்பப் போக வேண்டாம். இப்போது அவளால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அவளைப் பார்த்துக் கொள்வதற்கு நிறைய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.''
டாக்டர் மாலதி என் கண்களையே உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்கள் பாதாளக் கரண்டிகளைப் போல எனக்குத் தோன்றின. பழைய கிணறுகளுக்குள் கிடக்கும் சேற்றை வாரி எடுக்கும் பாதாளக் கரண்டிகள்... நான் காரணமே இல்லாமல் நடுங்கினேன். என் உள்ளங்கைகள் வியர்த்தன.
“சரி.. பார்ப்போம்'' -டாக்டர் மாலதி சொன்னாள். நான் நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் புன்னகையை வெளிப்படுத்தினேன்.
நான் பேச ஆரம்பிக்கும்போது, மற்றவர்கள் என்னுடைய வார்த் தைகளில் ஒரு அசாதாரணத் தன்மை இருப்பதை உணர்வதைப் போல காலப்போக்கில் எனக்குத் தோன்றியது. அதனால் மற்றவர்கள் அருகில் இருக்கும்போது நான் அமைதியாக இருந்தேன். தனியாக என் படுக்கையறையில் நேரத்தைச் செலவிடும்போது நான் சுதந்திரமாக, யாரிடம் என்றில்லாமல் கருத்துகளைப் பரிமாறினேன். என்னுடைய புத்திசாலித்தனமான நடவடிக்கைகளைப் பார்த்து நானே சிரித்துக்கொண்டேன். அப்படியே காலம் ஓடிக்கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த யாரையும் வெறுக்கக் கூடிய எண்ணங்கள் விலகிச் சென்றன. டாக்டர் மாலதி என்னுடைய சொந்த வாழ்க்கைக்குள் தலையை நுழைக்க முயற்சிக்காமல் இருந்தால், அவளை இரண்டாவது தாயாக ஏற்றுக்கொள்ளவும், அவள் பக்கம் நிற்கவும் நான் தயாராக இருந்தேன்.
“அதன்படி நடக்கணும்'' -நான் சொன்னேன். வாசலில் ஒரு சிகரெட்டை இழுத்தவாறு நடந்து கொண்டிருந்த என் தந்தை நான் இருந்த பக்கம் திரும்பினார்.
“நீ என்னிடம் ஏதாவது சொன்னாயா ஸ்ரீதேவி?''
“இல்லை...'' -நான் சொன்னேன்.
பல நேரங்களில் நான் ஏதாவது கூறினால், அதைக் கேட்டு என் தந்தை என்னிடம் "நீ ஏதாவது சொன்னியா, ஸ்ரீதேவி?” என்று கேட்கும்போது, நான் உடனே கள்ளங்கபடமில்லாத குரலில் கூறுவேன். "இல்லையே!'
நான் அமைதியாக இருக்கும் போதும் உரையாடல்களைக் கேட்கிறேன் என்று என் தந்தை ஒரு நாள் மாலதியிடம் சொன்னார். அந்தப் பெண்ணின் முகம் வெளிறியது. என் தந்தையையும் மனநல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதிருக்கும் என்று அவள் நினைத்திருக்கலாம். ஒரு இரவு நேரத்தில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடாமல் நான் விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். அந்த இரவு நேரத்தில்தான் முதல் தடவையாக நான் அந்த ஓசையைக் கேட்டேன். தோட்டத்திலிருக்கும் சரளைக் கற்கள் நிறைந்த பாதையில் யாரோ மெதுவாக நடந்து வருவதைப்போல் எனக்குத் தோன்றியது. ஒரு மெல்லிய காலடிச் சத்தம்... நான் ஜன்னலின் அருகில் சென்றேன். தோட்டத்தில் அடர்த்தியான இருட்டு இருந்தது. என்னுடைய டார்ச் விளக்கை எடுத்து நான் தோட்டத்தில் இருந்த இருட்டை நீக்க முயற்சித்தேன். புல் வெளியையும் சரளைக் கற்கள் இருந்த பாதையையும் பூஞ்செடிகளையும் மரங்களையும் நான் டார்ச் விளக்கின் அசையும் வெளிச்சத்தில் பார்த்தேன். யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை.
“யார் அது?'' -நான் உரத்த குரலில் கேட்டேன். காலடிச் சத்தம் நின்றது.
“யாரு?'' -நான் மீண்டும் பயந்து கொண்டே கேட்டேன். யாரும் பதில் கூறவில்லை. என் தூக்கத்தை அந்த யாரென்று தெரியாத நபரின் காலடிச் சத்தம் கெடுத்தது. எனக்கு பயம் அதிகமானது.