இரவின் காலடி ஓசை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
அன்று இரவு தூக்கமே வராமல் சிறிது நேரம் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கிடந்துவிட்டு, நான் படுக்கையை விட்டு எழுந்து எங்களுடைய வீட்டின் தளங்களிலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகளிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். என் தந்தைக்கு பூஜை, பிரார்த்தனை
ஆகியவற்றில் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாய்க்குச் சொந்தமாக இருந்த பூஜையறையில் இருந்த ஒரு விநாயகர் சிலைக்கு முன்னால் எல்லா நேரங்களிலும் ஒரு குத்து விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். வீட்டில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த அதற்கு முன்னால் கவலையுடன் நான் விழுந்து வணங்கினேன். “நீ இருந்தும் இந்த வீட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை உண்டாகி இருக்கிறதே!'' -நான் முணுமுணுத்தேன். விளக்கின் திரி அதற்கு பதில் கூறவில்லை. வரவேற்பறையிலும், தளங்களிலும் அலங்காரப் பொருட்களாக இருந்த சிலைகளுக்கு முன்னாலும் நான் தலை குனிந்து நின்றேன். எனக்கு உதவி செய்வதற் காகவாவது டாக்டர் மாலதியை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நான் அவற்றிடம் கேட்டுக்கொண்டேன். இரண்டு ஏக்கர் பரப்பளவிற்கு விரிந்து கிடந்த தோட்டமும் அதில் இருக்கும் பழ மரங்களும் பூந்தோட்டங்களும் எனக்குச் சொந்தமாக ஆகாமல் போய் விட்டால், இந்த அழகான இல்லம் வேறொருத்தருக்குச் சொந்தம் என்று ஆகிவிட்டால்... ஒரு நிமிடம்கூட வாழ மாட்டேன் என்று நான் யாரிடம் என்றில்லாமல் கூறிக்கொண்டேன். என்னுடைய வளர்ப்புப் பூனை "ம்யாவ்” என்று குரல் எழுப்பியது. “உன் இடமும் இல்லாமல் போகும்'' -நான் அவளிடம் சொன்னேன். எனக்கு எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. என்னுடைய கண்ணீர் கன்னங்களிலும் கழுத்திற்குக் கீழேயும் துளித்துளியாக விழுந்து கொண்டிருந்தது. எனக்குள் உண்டான மாறுதல் என் தந்தையிடம் ஏமாற்றத்தை உண்டாக்கியது. தொடர்ந்து அவர் கோபப்படக்கூடிய மனிதராக மாறினார். என் போராட்டத்திற்குக் கீழ்ப்படிந்து மாலதி என்ற பெண்ணை உதறி விடுவதற்கு என் தந்தை தயாராக இல்லை. என் தந்தை பதினான்கு வருடங்கள் ஒரு பெண்ணின் தேவையே இல்லாமல் எனக்காக மட்டுமே அப்படிப்பட்ட சுகங்களைத் தியாகம் செய்து வாழ்ந்தார் என்றும்; இனி வரும் நாட்களிலாவது இளமையை இழக்காதவரும், நல்ல உடல் நலத்தைக் கொண்டவருமான அவர் திருமணம் செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டுமென்றும் என் தந்தை மற்றும் தாயாரின் நண்பர்களும் சிநேகிதர்களும் என்னிடம் கூறினார்கள்.
“ஸ்ரீதேவி, நீ திருமணமாகி இந்த வீட்டை விட்டு வெளியே போன பிறகு, உன் அப்பாவை யார் பார்த்துக் கொள்வார்கள்?'' -அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
என் தந்தைக்கு தனிமையைத் தரக் கூடாது என்பதற்காக என்றென்றும் ஒரு திருமணமாகாத பெண்ணாக அந்த வீட்டில் இருக்கத் தயார் என்று நான் சொன்னதை அவர்கள் தீவிரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
“உன்னைப் போன்ற ஒரு அழகான இளம் பெண் திருமணம் ஆகாமல் அலமாரிக்குள் அடைந்து கிடப்பதா? அது நடக்காத விஷயம். இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு உன்னுடைய வாசலில் இளைஞர்கள் வரிசையில் வந்து நிற்க ஆரம்பிப்பார்கள்'' -அம்மிணியம்மா சொன்னாள்.
என்னுடைய கல்லூரியில் என்னுடன் சேர்ந்து படித்த இளைஞர் களில் ஒருவன்கூட என்னை ஈர்க்கவில்லை. நான் அவர்கள் ஒவ்வொருவரையும் என் தந்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். உருக்குக் கம்பிகளைப் போன்ற நரைத்த முடிகளை இங்குமங்குமாகக் காட்டும் அந்தத் தலையையும், சுத்தத்தையும், இளமையான கைவிரல்களையும், மூலிகை வாசனை வரும் சோப்பை மட்டுமே பயன்படுத்தும் என் தந்தை அருகில் இருப்பதைக் காட்டும் நறுமணத்தையும் என்னால் எப்படி மறக்க முடியும்? இளம் நிறங்களில் இருக்கும் சில்க் சட்டைகளை மட்டுமே அவர் அணிந்தார். என் தந்தை ஆடை அணியும் உயர்ந்த நிலை, என் கண்ணோட்டத்தில் இளைஞர்களை மிகவும் பாமரர்களாகக் காட்டியது. அவர்கள் உரத்த குரலில் பேசும் முறை என்னை வெறுப்படையச் செய்தது. கட்டுப்பாடு இல்லாத குரல்களும்தான். என் தந்தையின் குரல் மென்மையானதாகவும் ஆண்மைத்தனம் கொண்டதாகவும் இருந்தது. அந்தக் குரல் கழுத்திற்குக் கீழே இதயத்திற்குள்ளிருந்து வரக்கூடிய சத்தமாக இருந்தது. அதன் வேர்கள் துடிக்கக்கூடிய இதயத்தில் இருந்தன. அதனால்தான் இருக்க வேண்டும் - என் தந்தை தன்னுடைய சிறுசிறு தேவைகளுக்காக என்னை அழைப்பதை நிறுத்தியபோது, நான் திடீரென்று வறுமையில் வாடிக்கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. நான் இல்லாமல் அவர் கடைகளுக்குப் போகவும், தனக்குத் தேவைப்பட்ட புதிய ஆடைகளை வாங்கவும் ஆரம்பித்த போது, நான் முழுமையாக நொறுங்கிப் போய் விட்டேன். நான் அந்த வீட்டில் ஒரு தேவையற்ற பொருளாக ஆகிக் கொண்டிருந்தேன். மாலதி என்ற மணப்பெண் வலக் காலை வைத்து ஏறி வருவதற்காக அந்தப் பளிங்குப் படிகள் காத்துக் கிடந்தன. என் தந்தையின் மெத்தையில் விலை மதிப்புள்ள சாட்டின் விரிப்புகள் தோன்றின. ஜன்னல் கதவுகளில் சில்க் திரைச்சீலைகள் வந்து விழுந்தன. எந்தச் சமயத்திலும் அடைக்கப்படாமல் இருந்த அந்தக் கதவு எல்லா நேரங்களிலும் மூடப்பட்டிருந்தது. கதவுக்கு அப்பால் என் பாசத்திற்குரிய தந்தை படுத்திருக்கிறார் என்பதும், கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் முன்பைப் போல அவர் என்னைக் கட்டிபிடித்துக் கொண்டு, என் முடிகளில் தன் விரல்களைக் கொண்டு வருடுவார் என்பதும், என் மனதில் இருக்கும் அச்சங்களை அறிவாலும் பாசத்தாலும் முழுமையாக இல்லாமல் செய்வார் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு வினோதமான கெட்ட எண்ணம் கதவுக்கு வெளியே நின்றிருந்த என் கைகளை செயல்பட விடாமல் செய்தது. என் தந்தை வாசிக்கும் பத்திரிகையின் பக்கங்களின் சத்தங்களை எவ்வளவு கூர்மையாக கவனித்தும் என்னால் கேட்க முடியவில்லை. என் தந்தையும் என்னைப் போலவே அறிமுகமில்லாத, புதுமையான ஒரு மவுனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு விட்டாரோ? தந்தையின் கண்களும் ஈரமாகின்றனவோ? என் தந்தையும் நானும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு எங்களுடைய இரவு உணவைச் சாப்பிட்டதை அவர் மறந்துவிட்டாரோ? மழை தொடங்கியதும், என் அறைக்குள் வந்து ஜன்னல் கதவுகளை அடைத்ததை என் தந்தை நினைத்துப் பார்க்கவில்லையா?
என் தந்தையின் நினைவுகளும் டாக்டர் மாலதியின் கட்டுப் பாட்டிற்குள் சிக்கிக்கொண்டு விட்டனவா? என் தந்தையின் அன்றாடச் செயல்களில் பல மாற்றங்களையும் அவள் உண்டாக்கி விட்டிருக்கிறாள். திருமணத்திற்குப் பிறகு, தனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்ற விஷயத்தை என் தந்தை அவ்வப்போது மறந்துகூட போகலாம்.