இரவின் காலடி ஓசை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
யாருடனோ எதனுடனோ எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்த நான், இரவு நேரத்தில் பூஜை அறையின் அணையா விளக்கின் திரியை ஊதி அணைத்தேன். வேலைக்காரர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். என் பூனை மட்டும் அந்த அசாதாரணமான செயலைப் பார்த்து, தனக்கு அதன் அர்த்தம் புரிந்துவிட்டது என்பதைப் போல கண்களை மூடிக் கொண்டது. "ம்யாவ்” -அது சொன்னது.
ம்யாவ்... என் தந்தை ஒரு மாலை வேளையில் என்னை க்ளப்பிற்கு அழைத்துச் சென்றார். என் வயதில் இருப்பவர்களுடன் சேர்ந்து பேட்மின்டனோ கேரமோ விளையாடும்படி அவர் சொன்னார். “உன் வயதில் இருக்கும் சிநேகிதிகள் உனக்கு இல்லாமல் இருக் கிறார்கள். முன்பு செய்ததைப் போல நீ சிநேகிதிகளை அழைத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்கோ ஷாப்பிங்கிற்கோ செல்வதும் இல்லை. சமீபகாலமாக முன்கூட்டியே வயதாகிவிட்ட ஒருத்தியைப் போல நீ ஆகிவிட்டாய்'' - அவர் காரில் இருக்கும்போது கூறினார். டிரைவரின் காதில் விழும்படி அந்த அளவிற்குக் கடுமையான சொற்களை என் தந்தை பயன்படுத்தியது என்னைக் கோபமடையச் செய்தது. க்ளப்பில் இருந்த என் தந்தையின் நண்பர்கள் என்னைச் செல்லப் பெயர்கள் வைத்து அழைத்தபோதும், என்னைப் போன்ற புத்திசாலித்தனமான ஒரு மகள் கிடைத்ததற்காக என் தந்தையைப் புகழ்ந்தபோதும், நான் சாதாரண மரியாதைகளைக்கூட விலக்கி, மிகவும் அமைதியாக இருந்தேன். என் தந்தையின் நண்பர்களுடைய ஆண் பிள்ளைகள் முகப்பருவும் வெளியே தெரியக்கூடிய அளவிற்கு பற்களையும் கொண்டவர்கள். என்னைத் தங்களுடன் சேர்ந்து விளையாட அழைத்தார்கள். கொசுவையோ ஈயையோ தட்டுவதைப் போல நான் என்னுடைய வலது கையால் அவர்களை சிரமமே இல்லாமல் தவிர்த்தேன். என் கண்களில் என்னுடைய வயதில் இருந்த இளைஞர்கள் முழுமையான சிலைகளாகத் தெரிந்தார்கள். அவர்களுடைய செயல்களிலும் அசைவுகளிலும் எந்தவொரு உயர்ந்த தன்மையையும் நான் பார்க்கவில்லை. என்னுடைய முரட்டுத்தனமான நடத்தையால் நான் அவர்களை என்னிடமிருந்து விலகி இருக்கும்படி செய்தேன். மற்ற இளம் பெண்கள் அவர் களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பேட்மின்டன் விளையாடவும், உரையாடவும் செய்தார்கள். நான் என்னுடைய வெள்ளை நிறப் பிரம்பு நாற்காலியில் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழுமையான வெறுப்புடன் அந்த இளம் பெண்களையும் இளைஞர்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். க்ளப்பிற்கு மேலே வானத்தில் ஒரு கூட்டம் நட்சத்திரங்கள் வந்து பரவி நின்றபோது என் தந்தை என்னை நோக்கி நடந்து வந்தார். தனியாகப் புல் வெளியில் அமர்ந்தி ருந்த என்னையே அவர் புருவங்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தார்.
“என்ன ஆச்சு, ஸ்ரீதேவி? அவர்கள் யாரும் உன்னை விளையாடுவதற்கு அழைக்கலையா?'' -என் தந்தை கேட்டார்.
“எனக்கு அவர்களுடன் சேர்ந்து விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை'' -நான் சொன்னேன்.
“அவர்கள் இந்த நகரத்தில் இருக்கும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள். அவர்களுடைய நட்பு உனக்கு அவசியம் தேவை. இன்று இல்லாவிட்டாலும் நாளைக்கு அவர்களில் ஒருவனை உனக்கு கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்'' -என் தந்தை சொன்னார்.
“ஒரு கணவனிடம் நான் எதிர்பார்க்கக்கூடிய குணங்கள் எதுவும் இந்த இளைஞர்களிடம் இல்லவே இல்லை. முகம் முழுவதும் சலம் நிறைந்த முகப்பரு. பற்களைத் தேய்க்கக்கூட இல்லை. கை விரல்களில் கறுத்த சேறு. இவர்களில் இருந்து ஒரு ஆளை நான் எந்தச் சமயத்திலும் கணவனாக ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைவிட கடலுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்'' -நான் சொன்னேன்.
“நீ ரொம்பவும் மாறிட்டே'' -என் தந்தை குறைப்பட்டுக் கொண்டார்.
“அப்பா, நீங்க ரொம்பவும் மாறிட்டீங்க'' -நான் சொன்னேன்.
தொடர்ந்து க்ளப்பிலிருந்து வீடு வரை காரில் வரும்போது நாங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. இரவு உணவு சாப்பிடுவதற்காக மேஜையின் இரண்டு பக்கங்களில் அமர்ந்திருந்தபோது, தந்தை சொன்னார்.
“இந்த வயதில் சிலருக்கு காரணமே இல்லாமல் ஒரு குணம் வந்து சேர்வது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடியதுதான் என்று மாலதியே சொன்னாங்க. ஜெர்மனியர்கள் அதை "வெல்ஷ்மேஷ்' என்று கூறுகிறார்களாம். இருபது வயது வந்துவிட்டால், அது தானாகவே போய் விடுமாம்.''
“இறுதியில் நான் ஒரு பைத்தியம் என்று அவங்க சொல்லுவாங்க. அப்பா, அந்தப் பெண்ணின் வார்த்தைகளை வேத வார்த்தைகள் என்று நினைப்பது ஆபத்தானது'' -நான் சொன்னேன். என்னைப் பற்றி அந்தப் பெண்ணுடன் விவாதிப்பது என்ற விஷயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு மோசமான செயல் என்று மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. என்னுடைய பேராசிரியர்களும் நண்பர்களும் என்னுடைய கவலைக்கான காரணத்தை இடையில் அவ்வப்போது விசாரிப்பதுண்டு. ஆனால், என் தந்தைமீது நான் வைத்திருந்த பாசத்தால், அவரை மற்றவர்களுக்கு முன்னால் குற்றவாளியாக நிறுத்த எந்தச் சமயத்திலும் என்னால் முடியாது. ஆனால், என் தந்தை? நாற்பத்தெட்டு வயதைக் கடந்த என் தந்தை? என் தந்தை என்னுடைய எதிரியான அந்த மனநல மருத்துவரிடம் வீட்டில் இருக்கும் ரகசியங்கள் முழுவதையும் சொல்லி முடித்துவிட்டார். அவருடைய விலை குறைந்த பரிதாபத்தைப் பெறுவதற்காக தன்னுடைய ஒரே மகளை மனநல நோயாளியாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டார்.
“அப்பா, நான் எந்தக் காலத்திலும் உங்களை மன்னிக்கவே மாட்டேன்'' -நான் சொன்னேன். என் தந்தை தக்காளி சூப் பருகிக் கொண்டிருந்தார். திடீரென்று தன்னுடைய கரண்டியைத் தட்டில் வைத்துவிட்டு, அவர் நாற்காலியை விட்டு எழுந்தார். அவர் என்னை இறுக அணைத்து, என்னிடம் மன்னிப்பு கேட்கத் தயாராவார் என்று நான் அந்த நிமிடத்தில் ஆசைப்பட்டேன். முன்பைப் போல அவர் என்னை இறுக அணைப்பார் என்றும், என் செல்லமகளே என்று அழைத்து என்னுடைய கண்ணீரைத் தன்னுடைய துவாலையால் துடைப்பார் என்றும் நான் நம்பினேன். ஆனால், அவர் என்னைப் பார்க்கக்கூடச் செய்யாமல், தன்னுடைய அறையைத் தேடிப் போய்விட்டார். கதவை சத்தமாக இழுத்து அடைத்தார். இனியொருமுறை அவருடைய அன்பு எனக்குக் கிடைக்காது என்று அப்போது மட்டுமே எனக்குப் புரிந்தது.
நானும் சாப்பாட்டை முழுமையாக முடிக்காமல் எழுந்தேன். வேலைக்காரன் திகைத்துப் போய்விட்டான். நானும் என்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்து கதவைப் "படார்” என்று அடைத்தேன். அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி ஏதாவதொரு நகரத்திற்கு வண்டி ஏறினால் என்ன என்றுகூட நான் நினைத்தேன். எனக்கு நான் பிறந்து வளர்ந்த வீட்டில் இனி என்ன இடம் இருக்கிறது? என் தந்தையின் இதயத்தில் இடமில்லாதபோது நான் இனி யாருக்காக அங்கே வாழ வேண்டும்?