இரவின் காலடி ஓசை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
இல்லத்தரசியாக டாக்டர் மாலதி வந்து சேர்ந்தால், வேலைக்காரர்களும் அவளுடைய உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற ஆரம்பிப்பார்கள். என்னுடைய கட்டளைகளை ஒரு பைத்தியக்காரியின் உத்தரவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண் அவர்களிடம் கூறுவாள். என் தந்தை கூறியதால் இருக்க வேண்டும் - மறுநாள் காலை பத்து மணி ஆகும்போது அம்மிணியம்மா என் அறைக்கு வந்தாள். என்னை அருகில் நிறுத்தி, என் கன்னங்களை வருடியவாறு அவள் சொன்னாள்:
“ஸ்ரீதேவி, உன் மனதில் என்ன கவலை இருந்தாலும், அதைப் பற்றி என்கிட்ட சொல்லு. நான் உன் தாயின் மிகவும் விருப்பத்திற் குரிய சினேகிதியாக இருந்தேன். உன் சொந்தத் தாயிடம் கூறுவதைப் போல, முழு சுதந்திரத்துடன் என்கிட்ட பேசணும்.''
நான் எதுவும் கூறாமல் அவளுடைய மடியில் தலையை வைத்துப் படுத்தேன். அவளிடம் என்றல்ல - யாரிடமும் நான் என் தந்தையை விமர்சித்துக் கூறுவதற்குத் தயாராக இல்லை. என் தந்தைக்கும் எனக்குமிடையே இருக்கும் விஷயங்களில் அன்னியர்களோ வேலைக்காரர்களோ தலையிடுவதை நான் விரும்பவில்லை.
“ஸ்ரீதேவி, உன்னை நினைச்சு அப்பா எந்த அளவிற்குக் கவலைப் படுகிறார் என்று உனக்குத் தெரியாதா? குழந்தை, அப்பாவுக்கு இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திடாதே! அப்பாவுக்கு மாரடைப்பு ஏதாவது வந்துட்டா....? குழந்தை, அதை நீ விரும்பமாட்டேல்ல?'' - அவள் கேட்டாள்.
“நான் என்ன செய்யவேண்டும் என்று அப்பா விரும்புகிறார்? சீக்கிரமா முகத்துல பரு இருக்குறவன் யாரையாவது திருமணம் செய்து கொண்டு நான் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டுமென்று என் தந்தை ஆசைப்படுகிறாரா என்ன? என் தந்தை டாக்டர் மாலதியைத் திருமணம் செய்து கொண்டு வந்தால், நான் இங்கு அவர்களுக்குத் தொல்லையாக இருப்பேன் என்று அப்பா நினைக்கிறாரோ? என்னால் கிழட்டுத் தம்பதிகள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை'' - நான் சொன்னேன்.
அம்மிணியம்மா சிரித்தாள்.
“அப்பாவும் ஒரு ஆண்தானே? முதுமை வர்றதுக்கு இன்னும் பத்தோ இருபதோ வருடங்கள் தாண்டனும். அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். உனக்கும் ஒரு அம்மா கிடைப்பாளே!'' - அவள் சொன்னாள்.
“எனக்கா? அந்தப் பெண்ணை நான் ஒரு தாயாக எடுத்துக் கொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? பைத்தியம் பிடித்தவர்களுக்கு மத்தியில் இருந்ததால் அவளும் அரை லூசாகவே ஆகிவிட்டாள். எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்குன்னு அவள் என் அப்பாவிடம் சொல்லியிருக்கா. என்னை மனநல மருத்துவ மனையில் கொண்டுபோய் அவள் சேர்க்கச் சொன்னால், அப்பா அவள் கூறியபடி நடப்பார்'' - நான் சொன்னேன்.
அம்மிணியம்மா என் உதட்டில் தன்னுடைய கைவிரலை வைத்தாள்.
“உஷ்...... சத்தம் போட்டுச் சொல்லாதே. அப்பாவுக்கும் மகளுக்கு மிடையே இருக்கும் கருத்து வேறுபாட்டை வேலைக்காரர்கள் தெரிஞ்சிக்கக் கூடாது'' - அவள் சொன்னாள்.
“இங்கே வேலை பார்ப்பவர்களை வெறும் வேலைக்காரர்களாக நான் நினைப்பது இல்லை. அவர்கள் என்மீது வாழ்நாள் முழுவதும் பாசம் வைத்திருப்பவர்கள். அவர்கள் எனக்கு என்னுடைய சொந்தக்காரர்களைப் போல.... அவர்களுடைய அன்பு மட்டும்தான் எனக்கு ஆறுதலாக இருக்கு'' - நான் பதைப்பதைப்புடன் சொன்னேன்.
“அழாதே ஸ்ரீதேவி... நானும் உன்னுடைய அப்பாவும் ஒண்ணா உட்கார்ந்து கொஞ்சம் பேசுறோம். இந்தப் பிரச்சினைக்கு பரிகாரம் கண்டுபிடிக்கணுமே!'' - அவள் சொன்னாள்.
என்னுடைய அறையில் நானும் பூனையும் மட்டுமே எஞ்சி இருந்தோம். என் தாயின் சிரித்துக்கொண்டிருக்கும் ஓவியமும் இருந்தது. நான் கட்டிலில் படுத்து, போர்வையால் என் உடலை மூடிக்கொண்டேன். கல்லூரிக்கு அன்று போக வேண்டாம் என்று நான் படுத்துக்கொண்டே தீர்மானித்தேன். நான் எதற்கு படிப்பைத் தொடர வேண்டும்? என் தேர்வுகளின் வெற்றியைப் பார்த்துப் பெருமைப் படுவதற்கு இனிமேல் யாரும் இல்லையே! படிப்பு சிறிதும் இல்லாதவர்களைவிட படிப்பை முடித்தவர்களால் மனிதர்களை வேதனைப்படச் செய்ய முடியலாம். வேதனைப்படச் செய்யும் தகுதியை நான் எதற்குத் தேடி அடைய வேண்டும்? சமையலோ தையலோ தோட்ட வேலையோ கற்றுக் கொண்டால், வேறு யாரையும் நம்பி இருக்காமல் வாழ என்னால் முடியும். வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஒரு தையல்காரியாகவோ சமையல்காரியாகவோ நான் வாழலாம். என் தந்தையின் வீடு, சொத்து, அன்பு - எல்லாவற்றையும் அந்தப் பெண் தனியாக இருந்து அனுபவிக்கட்டும்....
ஒரு மாலை நேரத்தில் டாக்டர் மாலதி இரவு உணவுக்கு வர இருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்ட நான் என் தோழிகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேன். நான் மாலதியை வெறுக்கிறேன் என்ற விஷயம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் மாலதியின் வழிகாட்டுதல்களை எதிர்பார்ப்பதைப் போல நடித்துக் கொண்டு அவர்கள் சில கேள்விகளைக் கேட்டார்கள். அந்தக் கேள்வி கேட்கும் செயல் ஒரு ஆளை அவமானப்படுத்தும் முயற்சிக்கான ஆரம்பம் என்பதை மாலதி அறிந்திருக்கவில்லை. மனநல நிபுணர் என்ற நிலையில் அந்த இளம்பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சிந்தித்துக் கூறுவதற்கு அவள் முடிந்தவரையில் முயற்சி செய்தாள்.
“விதவையான என் தாய் எப்போது பார்த்தாலும் பணவசதி படைத்த ஆண்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். விருந்து நடக்கும் இடங்களில் அவள் காந்தப் பார்வைகளுடனும் புன்சிரிப்புகளுடனும் ஆண்களை வசீகரிக்க சிறிதும் வெட்கம் இல்லாமல் முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். இதை மாற்றுவதற்கு என்ன வழி?'' - ஒரு இளம்பெண் கேட்டாள்.
“உன் தாய்க்கு தன்னுடைய தனிமை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்திருக்கலாம். தனிமைக்குத் திருமணம் ஒரு பரிகாரமாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. பணவசதி ஒரு ஆளுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுத்ததும் இல்லை. உன் தாயின் இந்த நடவடிக்கைக்குக் காரணமே நீதான். நீ உன் தாயை விட்டு விலகி இருப்பதால் மட்டுமே அவங்க ஆண்களிடம் நிம்மதியைப் பெற முடியும் என்று நம்புறாங்க. பிள்ளைகள் மனரீதியாக தாய், தந்தையிடமிருந்து விலகிச் செல்லும் காலத்தில், வயதான தலைமுறைக்கு பாதுகாப்பே இல்லாமல் போய்விடும். சிலர் ஆசிரமங்களில் போய் தங்கி விடுவார்கள். வேறு சிலர் காதல் உறவுகளில் சிக்கிக் கொள்வார்கள்'' - டாக்டர் மாலதி சொன்னாள்.
“என் தாய் அழகானவள் இல்லை என்பது மட்டுமல்ல; அவலட்சணமானவளும்கூட. அவளுக்குப் பெண்களிடம் இருக்கக் கூடிய உடல் அழகுகள் எதுவும் இல்லை. ஒரு அலியைப்போல இருப்பாள். எனினும், தான் ஒரு அழகி என்று அவள் நம்புகிறாள். பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு ஆண் என் தாயை உயிருக்கு நிகராகக் காதலிக்கிறான். அவனுடைய காதலை என் தாயால் எப்படி சம்பாதிக்க முடிந்தது?'' - இன்னொரு இளம்பெண் கேட்டாள்.