இரவின் காலடி ஓசை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
“நான் ஒரு வர்ணம் அடிப்பவன். பெண் பிள்ளைகளின் பின்பகுதியைக் கிள்ளும் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை. நல்ல மனிதர்களைப் பற்றி மோசமாகப் பேசக்கூடாது'' - அவன் சொன்னான். அவனுடைய குரலில் இருந்த எளிமை பயணிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“மனிதர்களைத் தொடாமல் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், சொந்தக் காரில் போக வேண்டியதுதானே?'' - ஒருவன் என்னைப் பார்த்துக் கேட்டான். எல்லாரும் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். பிறகு முதலில் வந்த நிறுத்தத்தில் நான் பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினேன். களைப்பைப் போக்குவதற்கும், கோபத்தைத் தணிப்பதற்கும் நான் ஒரு மரநிழலில் போய் உட்கார்ந்தேன்.
என்னுடைய தலைக்கு மேலே பறவைகள் ஓசை உண்டாக்கின. கழுகைப் போல அமைதியாக இருக்கும் சில பறவைகள் என் மூளையில் சிறகடித்தன. இனி நான் எங்கே செல்வேன்? என் தந்தை என்னைத் தேடி வராவிட்டால், இந்த இரவு நேரத்தை நான் எங்கு செலவழிப்பது? என் தந்தை பைத்தியம் பிடித்து, தன் கண்ணாடியைக் கூட முகத்தில் அணிய மறந்து, என்னைத் தேடி ஓடி வந்து "என்னை மன்னிச்சிடு, என் ஸ்ரீதேவிக் குட்டி' என்று கூறி கண்ணீர்விட்டால், நான் ஒரு வெற்றி வீராங்கனையின் தலை நிமிர்தலுடன் வீட்டிற்குத் திருப்பிச் செல்வேன். டாக்டர் மாலதி என்ற பெண் எங்களுடைய வாழ்க்கையை விட்டு விலகிப் போகவும் செய்வாள். மீண்டும் நான் என்னுடைய உறுதியான அதிகார பலத்துடன் ஒரு காலத்தில் ஆட்சி செய்த சாம்ராஜ்யம் எனக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகும். நான்தானே ராணி? என் தந்தை என்னுடைய முக்கிய பிரஜையாக மட்டுமே இருந்தார். நான் பலவற்றையும் நினைத்து, பலவற்றையும் கனவு காண்கிறேன் என்று நினைத்தவாறு அந்த மரத்தடியில் படுத்திருந்தேன். என்னைச் சுற்றி மத்தியான வெயில் சிறிய மஞ்சள் நிற விரிப்புகளை விரித்திருந்தது.
நான் கண் விழித்தபோது, சீருடை அணிந்த சில பெண்களும் ஆண்களும் என்னைப் பிடித்துத் தூக்கி ஒரு ஸ்டேஷன் வண்டிக்குள் ஏற்றினார்கள். அவர்கள் எமனின் ஆட்களாக இருப்பார்களோ என்று நான் எண்ணினேன்.
“என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?''- நான் கேட்டேன். அவர்கள் என்னை ஒரு இருக்கையில் படுக்க வைத்து, என் கையில் ஏதோ குத்தினார்கள். வண்டியில் என்னுடைய தலைப்பகுதியில் அதுவரை வாய் திறக்காமலும் அசையாமலும் உட்கார்ந்திருந்த ஒரு ஆள் சொன்னார்:
“மேனிக் டிப்ரெஸ்ஸிவ்... கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்கணும்.''
“நானா? நான் ஒரு டிப்ரெஸ்ஸிவ்வா? நீங்கள் என்ன சதித்திட்டம் தீட்டி என்னைப் பிடித்துச் செல்வதற்காக வந்தீர்கள்? இதற்குக் காரணம் டாக்டர் மாலதியா?'' -நான் உரத்த குரலில் கேட்டேன். அவர்களுடைய மௌனம், மரங்களிலும் வீடுகள் மீதும் பனி விழுவதைப் போல அந்த ஓடிக்கொண்டிருந்த வாகனத்தில் மெல்ல... மெல்ல... விழுந்து, கனத்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு என்னுடைய நாக்கை உயர்த்தவோ, எதிர்ப்பை வெளிப்படுத்தவோ என்னால் முடியவில்லை. காலத்திலும் தோற்றத்திலும் வந்த மாற்றங்களை அதற்குப் பிறகு நான் உணரவே இல்லை. எப்போதும் என்னுடைய தலையில் மறதியின் பனித்துகள்கள் விழுந்து கொண்டேயிருந்தன.
ஒரு நாள் என்னை சோப்பு போட்டு குளிப்பாட்டி புதிய கவுன் அணிவித்து மருத்துவமனையின் பணிப்பெண்கள் தோட்டத்தில் இருந்த பெஞ்சில் சாய்த்து உட்கார வைத்தார்கள். அன்று என்னைப் பார்ப்பதற்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் ஒழுங்காக நடந்து கொண்டால், ஒரு வேளை என்னை ஒரு வாரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள் என்றும் அந்தப் பெண்கள் என்னிடம் சொன்னார்கள்.
“கொல்லுவேன் என்று கூறி அவர்களுக்குத் தொந்தரவு உண்டாக் கக்கூடாது'' -ஒருத்தி சொன்னாள். என்ன முட்டாள் தனமாக பேசுகிறாள்! நான் அந்த மாதிரியான குணம் கொண்டவளா?
“நீ யாருடன் பேசுகிறாய் என்று தெரியுதா?'' -நான் கம்பீரமான குரலில் கேட்டேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பெஞ்சுக்கு அடியிலிருந்து நிர்வாணமான கால்களை நான் சிரமப்பட்டு வெளியே எடுத்தேன். மெல்லிய தோல், முரட்டுத்தனமான கால்கள்- இவை என்னுடைய கால்கள்தான் என்பதை நான் எப்படி நம்புவேன்? பனிநீர் மலரின் இதழைப் போல இருக்கும் என்னுடைய தோல் எப்படி இந்த அளவிற்கு மோசமாக வடிவம் எடுத்தது? என்னுடைய கால்களை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு, அவருடைய அவலட்சணமான கால்களை என் உடலுடன் சேர்த்து வைத்து இங்குள்ள டாக்டர்கள் தைத்துவிட்டார்களோ?
“ஒரு கண்ணாடி தா. நான் என்னுடைய முகத்தைப் பார்க்க வேண்டும்'' -நான் சொன்னேன்.
“கண்ணாடியைக் காட்டுவதற்கு டாக்டரின் சம்மதம் கிடைக்காது'' -ஒரு பணிப்பெண் சொன்னாள்.
“என் முகத்தை நான் பார்ப்பதற்கு எந்த டாக்டரின் அனுமதி கிடைக்க வேண்டும்?'' -நான் உரத்த குரலில் கேட்டேன்.
“இது என்ன பாழாய்ப் போன ஒரு இடம்! இது ஏதாவது பைத்தியக்கார மருத்துவமனையா? இங்கு இருக்கும் சட்டங்களும் நடைமுறைகளும் மிகவும் வினோதமாக இருக்கின்றனவே?'' -நான் தொடர்ந்து கேட்டேன்.
“நிறுத்துங்க... அவர்கள் வந்துவிட்டார்கள். டாக்டர் மாலதியும் அவங்களோட கணவரும். அவர்கள் போவது வரை நாக்கை கட்டுப்படுத்தணும். அப்படியென்றால் மட்டுமே நீங்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கும்.''
என்னுடைய முக்கிய பணிப்பெண் கூறினாள்.
என் கண்களுக்கு முன்னால் எப்போதும் திரண்டு நின்றிருந்த மூடுபனிக்கு மத்தியில் நான் என் தந்தையையும் மாலதியையும் பார்த்தேன். தலைமுடி முழுவதும் நரைத்து விட்டிருந்த ஒரு தந்தை... கூந்தல் நரைத்த அவருடைய மனைவி... எவ்வளவு வேகமாக அவர்கள் முற்றிலும் வயதான தம்பதிகளாக மாறிவிட்டிருக்கிறார்கள்! "சக்கிக்கு ஏற்ற சங்கரன்!' -நான் சொன்னேன். அதைக் கூறி முடித்தபோது, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஸ்ரீதேவி, நாளை மறுநாள் ஓணம். உன்னை வீட்டிற்கு அழைத்துப் போவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். ஒரு வாரம் கடந்த பிறகு, உனக்கு இங்கே திரும்பி வரவேண்டுமென்று தோன்றினால், நாங்கள் உன்னைத் திரும்பவும் அழைத்துக்கொண்டு வருகிறோம்'' -என் தந்தை கூறினார். நான் தலையை ஆட்டினேன்.
“இந்த கவுனை அணிந்துகொண்டு நான் எப்படி பயணம் செய்வேன்?'' -நான் கேட்டேன்.
“மாலதி புடவையையும் மற்றவற்றையும் கொண்டு வந்திருக்கிறாள்'' -என் தந்தை சொன்னார். டாக்டர் மாலதி என் தோளில் தன் கையை வைத்தாள்.
“எழுந்திரு. ஆடையை மாற்றி விட்டு, நாம் வீட்டிற்குப் போவோம்.''