இரவின் காலடி ஓசை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
நேரம் இருட்டும் வரை நான் மற்ற இளம் பெண்களைப் போல உற்சாகத்துடன் காணப் பட்டேன். என்னிடம் இருக்கும் அழகோ, பண வசதியோ, கல்வித் தகுதியோ இல்லாமலிருந்த இளம் பெண்களைப் பற்றி கிண்டல் பண்ணிச் சிரிப்பது, அவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நான் ஆர்வத்தைச் செலுத்தினேன். பிரகாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண் நான் என்று எனக்கு அருகில் இருக்கும் அழகான மாளிகை களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூறுவார்கள்.
தாய் இல்லாமல் வளர வேண்டிய நிலையில் இருந்த எனக்கு, பாசத்தைத் தருவதற்காக ஏராளமான நடுத்தர வயதைக் கொண்ட பெண்களும் தயாராக இருந்தார்கள். என் தந்தையின் கண்களில் படுவதற்கும், அவருடைய மனதில் மறுமணத்தைப் பற்றிய சிந்தனைகளை உண்டாக்குவதற்கும் வயதான கன்னிப் பெண்கள் தீவிரமாக முயற்சி செய்தார்கள். வாசனைப் பொருட்களைத் தேய்த்து, முகத்தை மேலும் வெள்ளை ஆக்கிக்கொண்டு, ஷிஃபான் புடவை அணிந்து என் தந்தையைப் பார்ப்பதற்காக வந்த எந்த நாகரீகப் பெண்ணையும், அவர் அன்புடன் என்னுடைய அறைக்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய ஒரே மகளை சந்தோஷப்படுத்தக்கூடிய ஒருத்திக்கு மட்டுமே, தன்னுடைய இரண்டாவது மனைவியாக வாழ்வதற்கான அதிகாரம் இருக்கிறது என்று அந்தச் செயல் அறிவித் தது. நல்ல தோற்றமும், வசதி படைத்த வருமான என் தந்தை மீது ஈர்ப்புக் கொண்டு, எவ்வளவு நவநாகரீகமான பெண்கள் என் அறைக்குள் என்னிடம் பாசத்தை வெளிப்படுத்த ஓடி வந்திருக்கி றார்கள்! "மகளே, சின்ன செல்லமே” என்றெல்லாம் அழைத்து அவர்கள் தங்களுடைய கூர்மையான மார்பகங்களை நோக்கி என்னுடைய முகத்தைச் சாய்த்து காமம் கலந்த கண்ணீரைச் சிந்தியிருக்கிறார்கள்! என்னுடைய முகத்தைப் பார்க்கும்போது, அதற்கு என் தந்தை முகத்தின் சாயல் இருப்பதை மட்டுமே அவர்கள் பார்த்தார்கள். என் தந்தையின் மெலிந்த, வில்லைப் போன்று வளைந்திருக்கும் உதடுகளையும்... எனக்கு அந்தப் பெண்களைப் பார்க்கும்போது எப்போதும் வெறுப்பு மட்டுமே தோன்றும். அவர்கள் அளித்த பரிசுப் பொருட்கள், நான் பயன்படுத்தாமல் சமையலறையின் பழைய அலமாரிகளில் மலையென குவிந்து கிடந்தன. பல வகைப்பட்ட துணிமணிகள், பவுடர் டப்பாக்கள், சில்க் நாடாக்கள், குழந்தை பொம்மைகள், கதைப் புத்தகங்கள்... நான் அப்படித்தான் வளர்ந்தேன். நானும் என் தந்தையும் மட்டுமே இருக்கும் ஒரு தனிப்பட்ட உலகத்தில், என் படுக்கையறையின் சுவரில் பித்தளைச் சட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் என் தாய் சிரித்துக்கொண்டிருந்தாள். உலகத்தின் முடிவு வரை நீண்டு நின்றிருக்கும் புன்னகை.
அந்தப் புன்னகையில் இருந்த காந்த சக்தியை உணர்ந்திருக்கும் என் தந்தையை - வேறொரு பெண்ணின் சிரிப்பு ஈர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று நான் முடிவெடுத்தேன். என் தந்தையிடம் தேவையே இல்லாமல் நெருங்கிப் பழக முயற்சிக்கும் எந்தவொரு பெண்ணும் என் மனதில் இயல்புத் தன்மையை பாதித்தார்கள். அப்படிப்பட்ட பெண்கள் நான் சிறுவயதில் படித்த "சின்ட்ரெல்லா” என்ற கதையில் வரும் சித்தியை ஞாபகப்படுத்தினார்கள்.
அந்தக் காரணத்தால்தான் இருக்க வேண்டும். அன்று சிறிதும் எதிர்பாராத சூழ்நிலையில் என் தந்தை ஒரு பெண்ணை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்துக் கொண்டு வந்தபோது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எனக்கு அறிமுகமானபோது, புன்னகையைத் தவழவிட்டவாறு என் நெற்றியில் தடவிவிட அவள் முயன்றாள். நான் அதை விரும்பாதது மாதிரி ஒரு முக வெளிப்பாட்டைக் காட்டினேன். என் நெற்றி சுருங்கியது. என் கண்களின் பார்வை கூர்மையான ஒரு கத்தியைப் போல ஆனது. வேதனையால் நெளிவதைப் போல அந்தப் பெண் திடீரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, சுவரில் சாய்ந்து நின்றாள். நாங்கள் ஒருவரோடொருவர் வெளிப்படுத்திக் கொண்ட பேரமைதி என் தந்தையின் கவனத்தை ஈர்த்தது. முகத்தைக் கழுவுவதற்கு மத்தியில் வாஷ்பேசினில் இருந்து கண்களை உயர்த்தி, அவர் முதலில் என்னையும் பிறகு வந்திருந்த பெண்ணையும் பார்த்து சிரிக்க முயற்சித்தார்.
“என்ன, இரண்டு பேரும் ஒருவரோடொருவர் பேசாமல் இருக்கீங்க?'' -என் தந்தை கேட்டார்.
“ஸ்ரீதேவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது'' -தான் ஏதோ விளையாட்டுக்காகக் கூறுவதைப்போல சர்வ சாதாரணமாக அந்தப் பெண் புன்னகைத்துக்கொண்டே கூறினாள்.
“அவளுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்ற நிலையே வந்தது இல்லை. உங்களைப் போன்ற நாகரீகமான ஒரு அறிவாளியை அவளுக்குப் பிடிக்காமல் போகாது'' -என் தந்தை சொன்னார்.
வந்திருந்த பெண்ணின் தலை முடியின் நிறம் பிணம் தின்னிக் காகங்களுடைய சிறகுகளின் அடர்த்தியான கறுப்பு நிறமாக இருந்தது. வெளிறிய முகத்திற்கு அந்தக் கருப்பு நிறம் பொருத்தமாக இருந்தது. உதடுகளில் சிவப்பு லிப்ஸ்டிக்கையும், கன்னங்களில் இளம் சிவப்பு சாயத்தையும் அவள் பயன்படுத்தி இருந்தாள். இடப்பக்க கன்னத்தில் சாயம் சற்று அதிகமாகத் தேய்த்திருந்ததாலோ, கண்களில் அளவுக்கும் அதிகமாக கருப்பு நிறம் இருந்ததாலோ, ஒரு சர்க்கஸ் கோமாளியின் முகத்தை அவளுடைய முகம் ஞாபகப் படுத்தியது. ஆண்களைக் கவர்வதற்காக தினந்தோறும் முகத்தில் சாயம் தேய்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்களைப் பார்க்கும்போது எனக்கு வெறுப்பு மட்டுமல்ல, பரிதாபமும் தோன்றுவது உண்டு. எங்களுடைய வீட்டையும் தோட்டத்தையும் மொத்த செல்வத்தையும் அபகரிப்பதற்காக மட்டுமே என் தந்தையை வழிபடுவது மாதிரி நடிக்கக்கூடிய அந்தப் பெண்ணை நான் பார்த்த நிமிடத்திலிருந்தே வெறுக்கத் தொடங்கினேன்.
அவளுடைய உணவு முறையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு பறவை உண்ணக்கூடிய அளவில் உள்ள உணவையே அவள் அரை மணி நேரம் எடுத்து, மிகவும் மெதுவாக உட்கொண்டாள். பாத்திரங்களை உயர்த்திக் காட்டும்போது, அவள் என் தந்தையிடம் தன்னுடைய புருவங்களை உயர்த்திக்கொண்டு சொன்னாள்: “அய்யோ... இதையெல்லாம் சாப்பிட்டால் என் உடலின் எடை அதிகமாயிடும்.''
அவளுடைய உடலுக்கு, உண்மையாகச் சொல்லப்போனால், உயரத்திற்குத் தக்கபடி எடை இல்லை. அவளுடைய மார்பகங்கள் எலுமிச்சங்காய்கள் அளவிற்குத்தான் இருந்தன. நீலநிற ஷிஃபான் புடவையைக் கொண்டு மூடப்பட்டிருந்த பின்பகுதி ஒட்டிப்போயும், சப்பிப்போயும் இருந்தன. பெண்மைத்தனத்தை விட ஆண்மைத் தனமே அதிகமாக இருந்தது. அந்தத் தோற்றத்திலும், உடலமைப் பிலும், பிறகு அவளுடைய முகத்திலும் இருந்து கண்களை எடுக்க என் தந்தை மிகவும் சிரமப்படுவதைப் போல எனக்குத் தோன்றியது. அவளுடைய கண்களையும் என் தந்தையின் கண்களையும் கண்களுக்குப் புலப்படாத ஒரு கயிறைக் கொண்டு யாரோ கட்டி விட்டிருப்பதைப் போல...