இரவின் காலடி ஓசை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
“ஸ்ரீதேவி, இவங்கதான் மனநோய் மருத்துவமனையை ஆட்சி செய்யும் டாக்டர் மாலதி. எனக்கு என்றைக்காவது பைத்தியம் பிடித்தால், எனக்கு இலவசமாக சிகிச்சை செய்வதாக மாலதி கூறியிருக்காங்க'' - என் தந்தை குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு சொன்னார்.
நான் சிரிக்கவில்லை. என் தந்தைக்குப் பைத்தியம் பிடித்தால், அதை நினைத்து நான் சிரிக்க முடியாதே! என் தந்தையும் டாக்டர் மாலதியும் வெறும் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். என் தந்தை அந்தப் பெண் அருகில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பதை சமையல் காரர்களும் சமையலைப் பரிமாறுபவர்களும் என்னைப் போலவே புரிந்துகொண்டிருந்தார்கள்.
மூன்றரை மணிக்கு தேநீர் குடித்த பிறகு, என் தந்தை தனியாக டாக்டரை தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு போய் வீட்டிலோ மருத்துவமனையிலோ விட்டுவிட்டு வந்தார். என் தந்தை திரும்பி வருவதற்கு முன்னால் வேலைக்காரர்கள் என் காதுகளில் விழுவது மாதிரி அந்தப் பெண்ணை விமர்சித்தார்கள். "எஜமானை அவங்க மயக்கிட்டாங்க” என்று சமையல்காரன் உரத்த குரலில் சொன்னான். "கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தால், நாங்கள் அல்ல- ஸ்ரீதேவிக்குட்டிதான் சிரமப்படும்” என்று ஒரு கிழவி சொன்னாள்.
“அப்பா அந்த பெண்ணைத் திருமணம் செய்தால், நான் அந்த நிமிடத்திலேயே வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவேன்'' என்று நான் சொன்னேன். “குழந்தை, நீ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகக் கூடாது. உனக்கு உரிமை இருக்குற வீடு. இதை ஒரு இரண்டாம் தாய்க்கு வீசிக் கொடுத்துவிட்டு, நீ இந்த ஊரை விட்டுப் போய்விட்டால் அவங்களுக்கென்ன இழப்பு?” -சமையல் காரன் கேட்டான்: “இழப்பு உனக்குத்தான், ஸ்ரீதேவிக்குட்டி.''
என்னுடைய வளர்ப்புத் தாயான கிழவி சொன்னாள்.
அன்று சாயங்காலம் தன்னுடன் இருந்து டி.வி. பார்ப்பதற்காக என் தந்தை என்னை முன்னறைக்கு அழைத்தார். நான் அந்த அழைப்பை மறுத்துவிட்டேன். என்னுடைய அறைக்குள்ளேயே உணவு நேரம் வரை புத்தகம் வாசிப்பதில் ஈடுபட்டு நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். டாக்டர் மாலதியுடன் நெருங்க நெருங்க நான் என் தந்தையை விட்டு விலகி விலகி, அந்தப் பெண்ணை என் வீட்டில் இரண்டாவது தாயாக ஏற்றுக்கொள்ளும் நாள் வரும்போது, நான் முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒருத்தியாக மாற வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. அவளை வாழ்க்கையின் பங்காளியாக ஆக்கக்கூடிய தந்தை என்னுடைய தேவை இல்லையே! உண்மையாகச் சொல்லப்போனால் என் தாய் இறந்த துக்க நாளிலிருந்து இந்தப் பதினைந்து வருட காலமாக நான்தான் என் தந்தையின் வாழ்க்கைப் பங்காளியாக இருந்து வந்திருக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த ஆடைகளை அவர் அணிந்தார். நான் விருப்பப்பட்ட தம்பதிகளை மட்டுமே அவர் வீட்டில் நடக்கும் விருந்துகளுக்கு அழைத்தார். எனினும், திடீரென்று எங்கிருந்து வந்து சேர்ந்தாள் இந்த டாக்டர் மாலதி? எந்த மண் மேட்டுக்குள்ளிருந்து மேலே வந்தது இந்த சாணகப் புழு?
என் தந்தையுடன் கொண்டிருந்த இந்த நிழல் போரில் வேலைக்காரர்கள் என் பக்கம் இருந்தார்கள். என்னுடைய உத்தரவு களைப் பின்பற்றி நடப்பதற்கான சூழ்நிலையே எந்தச் சமயத்திலும் வந்ததில்லை என்று ஒருவரோடொருவர் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தவர்கள் டாக்டர் மாலதியை வெறுத்தார்கள். அவள் உணவு சாப்பிடுவதற்காக வரும் நாளன்று சைவ உணவுகளில் அளவுக்கும் அதிகமாக உப்பைச் சேர்ப்பதில் அவர்கள் உற்சாகம் காட்டினார்கள். மாமிச உணவு சாப்பிடும் நானும் என் தந்தையும் அப்படிப்பட்ட காய்கறிகள் எதையும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதில்லை. டாக்டர் மாலதி உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும்; அவள் மீன், மாமிசம் போன்றவற்றைச் சாப்பிடுவது இல்லை என்றும் என் தந்தை சமையல்காரனிடம் கூறியிருந்தார். அவள் விருந்தாளியாக வந்த நாளன்று அவருக்காக சமையல் செய்யும் சாம்பாரிலும் அவியலிலும் எந்தச் சமயத்திலும் வெங்காயத்தையோ வெள்ளைப் பூண்டையோ சேர்க்கக்கூடாது என்றும் என் தந்தை கட்டளையிட்டிருந்தார்.
அவள் ஒரு நாள் எங்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட உட்கார்ந்திருந்தபோது, நான் சைவ உணவு சாப்பிடுபவர்களைக் கிண்டல் செய்தேன். டாக்டர் மாலதி உணவு சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு என்னையே பார்த்தாள்.
“உண்மையாகச் சொல்லப்போனால் மாமிசம் சாப்பிடுபவர்கள்- பிணத்தைத் தின்பவர்கள்'' -அவள் சொன்னாள்.
“ஆட்டை வெட்டிக் கொன்ற நாளன்றே சமையல் செய்து சாப்பிடுபவர்களை, பிணத்தைத் தின்பவர்கள் என்று கூறுவது சரியாக இருக்குமா?'' -நான் கேட்டேன்.
“கொல்லப்பட்ட எந்த உயிராக இருந்தாலும் பிணம்தான்'' -டாக்டர் மாலதி சொன்னாள். என் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவளுடன் சண்டை போட்டு வெற்றி பெற முடியாது என்ற விஷயத்தை அந்த நிமிடத்தில் நான் புரிந்துகொண்டேன். அதற்குக் காரணம்- அன்றிலிருந்தே என் தந்தை ஒரு சைவம் சாப்பிடக்கூடிய மனிதராக மாறி, நான் எடுத்து வைத்த பொரித்த கோழியை அவர் சுவைத்துப் பார்க்கக்கூட இல்லை. மனிதர்கள் வருடக்கணக்காக மிருகங்களுக்குச் செய்து வரும் மிகப் பெரிய பாவங்களின் காரண மாகத்தான் உலகமெங்கும் மனிதப்பிறவி சபிக்கப்பட்ட இனமாக ஆகிவிட்டது என்று டாக்டர் மாலதி சொன்னாள். மிருகங்களுக்குச் செய்த பாவம் அல்ல- செய்து கொண்டிருக்கும் பாவம் எப்போதும் நம்மை தண்டிக்கப்பட்டவர்களாக ஆக்கும் என்றும், தண்டனைக் குரியவர்களாக ஆக்கும் என்றும் அவள் சொன்னாள்.
“நாம் என்ன தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்?'' -நான் கேட்டேன்.
“புற்று நோய், எய்ட்ஸ், அணு ஆயுதப் போர் பயம்- இவை அனைத்தும் மிருகங்களின் சாபம் மூலம் அனுபவிக்க வேண்டி வந்த தண்டனைகள்தான்'' -அவள் சொன்னாள்.
“மாலதி, விஷயத்தை மாற்றணும். ஸ்ரீதேவியை பயமுறுத்த வேண்டிய தேவையில்லை'' - என் தந்தை சொன்னார். சர்வ சாதாரணமாக, ஒரு புன்சிரிப்புடன், எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த வாக்குவாதங்கள் சிறிதும் முக்கியத்தன்மை அற்றது என்று என் தந்தை நடித்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து என் தந்தை தன் நண்பர்களிடம் கூறினார்:
“ஸ்ரீதேவியை ஒருத்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், அதற்குப் பிறகு எனக்கு எந்தக் கவலையும் இல்லை.''
பதினெட்டு வயதே ஆகியிருக்கும் மகளை, அவள் விருப்பப்படும் காலம் வரைக்கும் படிக்க வைக்கும்படி அவர்கள் ஒவ்வொருவரும் என் தந்தைக்கு அறிவுரை கூறினார்கள்.
“ஸ்ரீதேவி சாதாரண குழந்தைதானே? அவள் இன்னும் கொஞ்ச காலம் விளையாடி வளரட்டும். அவள் வீட்டை விட்டுப் போய்விட்டால், வீடு இருள் நிறைஞ்சதா ஆயிடும்'' -ஒரு நாள் என் தாயின் சினேகிதியாக இருந்த அம்மிணியம்மா சொன்னாள். அவளுடைய கணவரும் அதே கருத்தைத் தொடர்ந்து சொன்னார்.