இரவின் காலடி ஓசை - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
யாரோ என்னைக் கொல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்று நான் பயப்பட்டேன். டாக்டர் மாலதி என்னைக் கொலை செய்யும்படி யாருக்காவது பணத்தைத் தந்திருப்பாளோ? தன் வாழ்க்கையை மேலும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் அதைச் செய்யாமல் இருக்கமாட்டாள். நான் இறந்து என்னுடைய பூனையைப் போல மண்ணுக்குக் கீழே புதைக்கப்பட்டுவிட்டால், என் தந்தைக்கும் நிம்மதி கிடைக்கும். என்னுடைய மரணத்துடன் என்மீது இருக்கும் பொறுப்பை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாமே!
வேலைக்காரர்கள் கூட்டமாகக் கூடி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இடமாக சமையலறைக்கு வெளியே இருந்த வாசல் இருந்தது. அங்கு அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, அவர்களுடைய உரையாடல்களைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப் பதில் எனக்கு எப்போதும் உற்சாகம் இருந்தது. அந்தப் பணியாட்க ளுக்கு நடுவில் எனக்கு எந்தச் சமயத்திலும் குற்ற உணர்வு உண்டானதே இல்லை. முதலில் சிலர் கூறுவதுண்டு - "ஸ்ரீதேவிக் குட்டி, இங்கே இருக்க வேண்டாம். அப்பா எங்களைத்தான் திட்டுவார்” என்று. நான் அசைய மாட்டேன். இறுதியில் அவர்கள் நான் அங்கு இருப்பதைப் பற்றிக் குறை கூறுவதை நிறுத்தி விட்டார்கள். நானும் அவர்களுடைய ஒரு தோழியாக ஆனேன்.
“பூனை அருகில் வரும்போது, முகத்திலும் கைகளிலும் கழுத்திலும் அவர்களுக்கு தோல் சிவந்து தடிமனாக ஆகிவிடும்'' - ஒரு நாள் சமையல்காரன் சொன்னான்.
“யாருக்கு?'' -நான் கேட்டேன்.
“நம்முடைய எஜமானிக்கு...'' -அவன் சொன்னான்.
“அது ஒரு அலர்ஜி என்று அவங்க சொன்னாங்க'' - வேலைக்காரி சொன்னாள்.
“அதனால் அவள் பூனையை உயிருடன் புதைத்திருக்க வேண்டும்'' -நான் சொன்னேன். என் குரலில் இருந்த கோபத்தை இல்லாமற் செய்ய நான் படாத பாடு பட்டேன்.
“புதைக்கவில்லை. ஒரு நாள் காலையில் நாங்கள் பால் கொடுக்க அதை அழைச்சப்போ, அது வரவில்லை. எந்த இடத்திலும் அதைப் பார்க்க முடியவில்லை'' - சமையல்காரன் சொன்னான்.
“உன்னைத் தேடி வந்திருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்'' -வேலைக்காரிகளில் ஒருத்தி சொன்னாள்.
“இரவு நேரத்தில் அதை ஒரு பைக்குள் போட்டு தோட்டத்தில் புதைத்திருப்பாள்'” -நான் சொன்னேன்.
“பூனையைத் தொட்டால் அவங்களுக்கு உடல் அரிக்கும். அப்படி எதுவும் நடந்திருக்காது'' - சமையல்காரன் சொன்னான்.
“கைக்கூலி கொடுத்து அதைக் கொன்னுருக்கணும்'' -நான் சொன்னேன். வேலைக்காரர்கள் சிறிது நேரம் எந்தவொரு அபிப்ராயத்தையும் கூறவில்லை. இறுதியில் சமையல்காரன் சொன்னான்: “என்னவோ.. எனக்குத் தெரியல...''
“இரவு நேரங்களில் சரளைக் கற்கள் போடப்பட்டிருக்கும் பாதையின் வழியாக நடந்து வருவது பூனையின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு இரண்டோ மூன்றோ தடவை நான் அந்தக் காலடிச் சத்தங்களைக் கேட்கிறேன்''. -நான் சொன்னேன்.
“குழந்தை, நீ சொன்ன பிறகு நானும் கூர்மையா கவனிச்சுக்கிட்டு படுத்திருந்தேன். நானும் சத்தத்தைக் கேட்டேன்'' - என் வேலைக்காரி சொன்னாள். “காற்றின் சத்தமாக இருக்க வேண்டும். காற்றடிக்கிறப்போ, சரளைக் கற்கள் அசைந்திருக்கும்'' -சமையல்காரன் சொன்னான்.
“அய்யோ... எனக்கு பயமா இருக்கு'' - ஒருத்தி சொன்னாள். நான் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்.
“பூனையின் ஆவி உங்களில் யாரையும் தொந்தரவு செய்யாது. எதிரியை மட்டுமே அது தண்டிக்கும்'' -நான் சொன்னேன்.
மறுநாள் காலையில் நான் எழுந்தபோது வேலைக்காரர்கள் என்னிடம், ஒரு மீனின் முதுகெலும்பைப் போல இருந்த முள்ளை பூனையின் ஆவி வாசலில் இருந்த புல் பரப்பில் போட்டு விட்டுப் போயிருக்கிறது என்று சொன்னார்கள். பூனையின் வாசனை அப்போதும் அந்த இடத்தில் இருந்தது. எஜமானியின் முகத்திலும் கழுத்திலும் சிவப்பு நிறத்தில் கோடுகள் திடீரென்று தெரிந்தன என்றும் கூறினார்கள். பூனையைத் தேடி எல்லாரும் எல்லா அறைகளுக்குள்ளும் சென்றார்கள். யாராலும் அதைப் பிடிக்க முடியவில்லை. நடு இரவு வேளையில் ஒருமுறை கண் விழித்தபோது தான் ஒரு பூனையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டதாக வேலைக்காரி சொன்னாள்.
“எழுந்து பார்த்திருக்கலாம்ல?'' -என் தந்தை ஆர்வத்துடன் கேட்டார்.
“அய்யோ... எஜமான்... எனக்கு பயமாக இருந்தது'' -அவள் சொன்னாள்.
காணாமற்போன பூனை என்னுடைய வருகையை வாசனை பிடித்து, எங்களுடைய வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் என்று என் தந்தை கூறினார். நான் டாக்டர் மாலதியின் முகத்தை கவனித்தேன். அவள் மேலும் வெளிறிக் காணப்பட்டாள். பூனையை காலனின் ஊருக்கு அனுப்பியது அவள்தான் என்ற காரணமாக இருக்கலாம் - அவள் என் தந்தையின் கதையை நம்பியது மாதிரி காட்டிக் கொள்ளவேயில்லை.
மறுநாள் அமாவாசை. எனக்குத் தூக்கம் வரவில்லை. தலைக்கு உள்ளேயும் முழுமையான இருள் வந்து நிறைந்திருக்கிறது என்ற ஒரு தோணல் என்னை மிகவும் பலவீனமாக ஆக்கியது. எவ்வளவு நேரம் நான் ஒரு பிணத்தைப் போல அசைவே இல்லாமல் அந்தக் கட்டிலில் படுத்திருந்தேன் என்று எனக்கு இப்போது ஞாபகம் வரவில்லை. தோட்டத்தை நோக்கி இருக்கும் ஜன்னல்கள் திறந்து கிடந்தன. பாரிஜாத மலர்களின் வாசனை காற்றில் மிதந்து வந்து என்னுடைய நாசித் துவாரங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தது. இனம் புரியாத ஒரு ஆனந்தம் என் இதயத்தை மேலும் வேகமாக அடிக்கச் செய்தது. சரளைக்கற்கள் வழியாக மெதுவாக... மிகவும் மெதுவாக... என்னுடைய பூனையின் ஆவி நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு முறை அவள் "ம்யாவ்” என்று நீட்டி முழங்கினாள். நான் பாசத்துடன் அவளை வரவேற்பதற்காக ஜன்னலை நோக்கி ஓடினேன். கறுத்த வெளியாக இருந்தாலும், வெள்ளை நிறத்தைக் கொண்ட பூனையை என்னால் காண முடியும் என்று நான் நம்பினேன். கருப்பிலும் ஒரு வெளுத்த நிழல் விழ வேண்டும். "ம்யாவ்...” -அது குரல் தந்தது. அதன் பாதத்தின் சத்தத்தை மீண்டும் நான் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே குதிக்க நான் தீர்மானித்தேன். ஆனால் என் டார்ச் விளக்கு எரியவில்லை. நான் என் கெட்ட நேரத்தை நினைத்து மனதில் திட்டினேன்.
மறுநாள் வீட்டில் ஒரே ஆரவாரமாக இருந்தது. என் இரண்டாவது தாயின் மரணம்- எதிர்பாராத மரணம் இரவில் நடந்து முடிந்திருந்தது. பாவம் பெண்! அவளுடைய முகத்திலும் கழுத்திலும் சிவப்பு அடையாளங்கள் இருந்தன. கழுத்தில் தாலி கிடக்கும் இடத்தில் ஒரு அங்குலத்திற்கும் அதிகமாக இரண்டு ஆழமான காயங்கள் இருந்ததையும் எல்லாரும் பார்த்தார்கள். முகத்தில் பூனையின் பற்கள் பதிந்தால் இருக்கக்கூடிய ரத்த அடையாளங்கள்.