இரவின் காலடி ஓசை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6359
கூறப்பட்ட பிரச்சினைகள் கற்பனையானவை என்ற விஷயம் டாக்டர் மாலதிக்கு தெரியாது. தெளிவான சிந்தனையுடன், முழுமை யான ஈடுபாட்டுணர்வுடன் அவள் அந்த விஷயங்களை விவாதிக்கத் தயாரானாள். “காதலிப்பதற்கு உடல் அழகு தேவையே இல்லை. ஆண் காதலிப்பது, ஒருத்தியின் பெண்மையைத்தான். குணத்தை வெளிப்படுத்தக்கூடிய வெறும் ஒரு கருவியே சரீரம். ஆன்மாவிற்கு அதைத் தாங்கியிருக்கும் மனிதனின் முகத்துடன் என்ன உறவு இருக்கிறது?''
அன்று நாங்கள் அவளிடம் விவாதம் செய்ய முயற்சிக்கவில்லை. அவளுடைய இதயப்பூர்வமான நடத்தை என்னுடைய தோழிகளைத் திருப்தியடையச் செய்தது.
“டாக்டர் மாலதியைக் கிண்டல் பண்ண நாங்கள் தயாராக இல்லை'' - அவர்கள் என்னிடம் கூறினார்கள். எல்லாரும், அறிமுக மான எல்லாரும்தான். அந்த பெண்ணுக்குப் பின்னால் எல்லாரும் அணி திரண்டு நின்றார்கள். அந்த அளவிற்குப் பரந்த மனம் படைத்தவளும், நிறைய படித்தவளுமான ஒருத்தி இரண்டாவது தாயாக கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று எல்லாரும் கூறினார்கள்.
திருமணத்தை டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று ஜோதிடர் என் தந்தையிடம் கூறினார். இரண்டாவது திருமணமாக இருப்பதால், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிக்கனமான செலவில் அந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என் தந்தை கூறினார்.
“ஒரு மணமகனுக்குரிய மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு இந்த வயதில் ஆட்களுக்கு முன்னால் போய் நிற்பதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது'' - என் தந்தை டாக்டர் மாலதியிடம் கூறினார். இறுதியில் பதிவுத் திருமணம் போதும் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். பதிவு செய்யப்படும் அலுவலகத்திற்கு இரண்டு சாட்சிகளை அழைத்துக் கொண்டு போக வேண்டியதிருக்கும். அவ்வளவுதான். தாங்கள் ஒரு மோசமான காரியத்தை நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப்போல, அவர்கள் திருமணத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டார்கள்.
என் தந்தையின் அறையை ஒரு முதலிரவு அறையைப்போல மாற்றும் வேலைகளில் என்னை வளர்த்த வேலைக்காரி ஈடுபட்டிருந்தாள். அவர்கள் சந்தோஷப்படுகிற விதத்தில் கட்டிலின் விரிப்புகளை அவள் மாற்றினாள். நான் அமைதியாக அவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வயதான பெண் ஒருநாள் என்னுடைய தாய்க்காகவும் இதே அறையில் பட்டு விரிப்புகளை விரித்து, பூமாலைகளைக் கோர்த்துக் கட்டியிருப்பாள் அல்லவா? நான் நினைத்தேன். என் தாயை மறந்து, இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணை எஜமானியாக ஏற்று வரவேற்க அவள் தயாராகிவிட்டாள்! என்னுடன் அவள் பழகும் விதத்திலும் சில மாறுதல்கள் தெரிவதை என்னால் காண முடிந்தது. என்னுடைய உத்தரவுகளை இனிமேல் யார் கேட்கப் போகிறார்கள்? என்னுடைய அப்பாவிப் பூனையா?
“என் பூனைக்குட்டிக்கு நீங்கள் யாரும் பால் கொடுப்பதில்லை. அதன் உடல் மெலிந்து போய்விட்டது. எல்லாரும் திருமண விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என் பூனை செத்துப்போனால் கூட உங்களில் யாருக்கும் ஒரு கவலையும் உண்டாகாது. அப்படித்தானே?'' - நான் அந்த வயதான பெண்ணிடம் கேட்டேன்.
என்னுடைய உரத்த சத்தத்தைக் கேட்டதால் இருக்க வேண்டும் - மற்ற வேலைக்காரர்களும் அங்கு ஓடி வந்தார்கள். அவர்கள் என் முகத்தில் கண்களைப் பதித்து, பொம்மைகளைப் போல அசைவே இல்லாமல் நின்றிருந்தார்கள்.
“என் பூனை செத்துவிடும். கொஞ்ச நாட்கள் சென்றபிறகு, நானும் இறந்து விடுவேன். நான் இறந்துவிட்டால், அந்தப் பெண்ணுக்கு சந்தோஷமாக இருக்கும். சொத்து எதையும் பங்குபோட வேண்டி வராதே!'' - நான் உரத்த குரலில் சொன்னேன்.
என் தந்தையின் காலடி ஓசைகளைக் கேட்டு வேலைக்காரர்கள் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்து நின்றார்கள். ஆனால், அவர்கள் அந்த இடத்தைவிட்டு சமையலறைக்குப் போகவில்லை. அவர்கள் ஒரு துயரக் காட்சியின் பார்வையாளர்களாக இருந்தார்கள்.
“ஸ்ரீதேவி, அமைதியாக இரு. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?'' - என் தந்தை சத்தமான குரலில் கேட்டார். அவருடைய முகத்தைப் பார்க்கவே எனக்கு தைரியம் வரவில்லை.
“பைத்தியம் எனக்கு இல்லை. இந்த வயதான காலத்தில் திருமணம் செய்துகொள்ள தயாராகிக் கொண்டிருக்கும் உங்களுக்கு தான்பா பைத்தியம்'' - நான் சொன்னேன்.
என் தந்தை என்னுடைய வலது கன்னத்தில் அடித்தார். மீண்டும் அடித்தார். தோல் உரிந்துவிடுமோ என்று நான் பயந்தேன். என் காதுகளுக்கு உள்ளேயும் ஒரு வேதனை உண்டானது. வாழ்க்கையில் முதல் தடவையாக எனக்கு அப்படிப்பட்ட ஒரு அடி கிடைத்தது. அது என்னை ஆச்சரியப்படச் செய்தது. கவலையுடன் சேர்த்து எனக்கு ஒரு தனிப்பட்ட சந்தோஷமும் உண்டானது. என்னுடைய தந்தையின் அரக்கத்தனத்தை அந்த வகையில் வேலைக்காரர்களால் புரிந்து கொள்ள முடிந்ததே! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த ஒரே மகளை மிருகத்தனமாக அடிப்பதற்கு என் தந்தைக்கு கை எழுந்தது அல்லவா? நான் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீர் அருவிகளை முகத்தில் இருக்கும்படி காட்டிக்கொண்டு, தவறாகக் கருதப்பட்ட ஒரு தேவதையைப்போல அந்த அறையில் நின்றிருந்தேன். என்னுடைய மன ஒளி அந்த அறையில் இருந்த இருளை நீக்கி, அங்கு சூரிய உதயத்தை உண்டாக்கும் என்று நினைத்தேன். என் கள்ளங்கபடமற்ற தன்மை, என் புனிதத் தன்மை, என் தியாகம் - இவை அனைத்தும் கடலின் வெள்ளி அலைகளைப் போல அந்த இரட்டைக் கட்டிலைச் சுற்றி ஆரவாரித்து நின்று கொண்டிருந்தன. ஆமாம்.... ஒரு புனிதப்பெண் அங்கு பிறந்து கொண்டிருக்கிறாள்....
மறுநாள் நான் என்னுடைய வீட்டை விட்டு இன்னொரு நகரத்திற்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் ஏறி உட்கார்ந்திருந்தேன். என்னுடைய முதல் பேருந்துப் பயணம் அது. வியர்வையில் குளித்த மனிதர்களின் கந்தக வாசனை என்னை என்னவோ செய்தது. எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு நடுத்தர வயது மனிதன் தன்னுடைய கைவிரலை வைத்தோ கால் விரலை வைத்தோ என்னுடைய பின் பகுதியை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தான். நான் கோபத்துடன் திரும்பிப் பார்த்தபோது, அவன் வலது கண்களை மட்டும் சுருக்கி, தன்னுடைய மன ஆசையை வெளிப்படுத்தினான்.
“இனி என்னைத் தொட்டால், நான் உன்னைக் கொன்னுடுவேன்'”- நான் சொன்னேன். பயணிகள் என்னை நோக்கி ஆர்வத்துடன் பார்த்தார்கள். நடத்துநர் அருகில் வந்தார். என்னுடைய குற்றச்சாட்டைக் கேட்டுவிட்டு நடத்துநர் சொன்னார்:
“தெரியாமல் கை பட்டிருக்கும் தங்கச்சி..... இந்த அளவிற்குக் கோபப்படக் கூடாது!''
பயணிகளில் சிலர் சிரித்தார்கள். தன்னுடைய தூய குணத்தைப் பற்றியும், கள்ளங்கபடமற்ற தன்மையைப் பற்றியும் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவன் உரத்த குரலில் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தான்.