சோதனைக்கூடம் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6387
நீலா அங்கிருந்து கிளம்பினாள். ரேபதி மேஜைக்கு மேலே தலையைச் சாய்த்துக் கொண்டு, ஒரு மூட்டையைப் போல கிடந்தான். அந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும் வசீகரம் அவனுடைய கற்பனைக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. ஒரு மின்சாரப் பெருக்கு அவனுடைய நரம்புகளின் வழியாக வேகமாகப் பாய்ந்தது. நாளை தேநீர் குடிப்பதற்காக அவளுடைய வீட்டிற்குப் போகக் கூடாது என்று கைகளைச் சுருட்டி வைத்துக் கொண்டு அவன் தனக்குள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான். அவன் தீவிரமாக முடிவை எடுப்பதற்கு விரும்பினான். ஆனால், வார்த்தைகள் அவனுடைய உதட்டிலிருந்து வெளியே வரவே இல்லை. "நான் போக மாட்டேன்... நான் போக மாட்டேன்... போக மாட்டேன்" என்று அவன் தனக்கு முன்னால் கிடந்த கையெழுத்து போடும் தாளில் எழுதினான். மேஜைமீது கிடந்த அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்ட கைக்குட்டை அவனுடைய பார்வையில் திடீரென்று பட்டது. அந்தக் கைக்குட்டையின் ஒரு மூலையில் நீலா என்று அழகாகத் தைக்கப்பட்டிருந்தது. அவன் அதை தன்னுடைய முகத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டான். அதன் நறுமணம் அவனுடைய மனதிற்குள் நுழைந்து பெருகி ஓட ஆரம்பித்தது. பைத்தியம் பிடித்துவிட்டிருப்பதைப் போன்ற ஒரு தோணல் அவனுடைய உடலெங்கும் பரவியது.
நீலா திரும்பவும் அறைக்கு வந்தாள். "எனக்கு ஒரு முக்கிய வேலை இருந்தது. ஆனால், நான் அதை மறந்து விட்டேன்.'' அவள் சொன்னாள்.
காவலாளி அவளைத் தடுக்க முயற்சித்தான். "பயப்பட வேண்டாம்.'' அவள் சொன்னாள்: "நான் எதையும் திருடுவதற்காக வரவில்லை. எனக்கு ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வேண்டும். நான் உங்களை "அவேக்கனர்ஸ் க்ளப்" பின் தலைவராக ஆக்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு புகழ் பெற்ற மனிதராயிற்றே!''
நெளிந்து கொண்டே ரேபதி எதிர்ப்பை வெளிப்படுத்தினான். "உங்களுடைய க்ளப்பைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.''
"நீங்கள் எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ப்ரஜேந்திர பாபுதான் எங்களுடைய க்ளப்பின் புரவலர் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.''
"ப்ரஜேந்திர பாபு யாரென்று எனக்குத் தெரியாது.''
"அவர் மெட்ரோபாலிட்டன் வங்கியின் இயக்குனர். நீங்கள் அதை மட்டும் தெரிந்திருந்தால் போதும். போதும் டியர்... இனி ஒரே ஒரு கையெழுத்து... ஒரு கையெழுத்தை மட்டும் போட்டால் போதும்.'' ரேபதியின் தோளில் கையை வைத்துக் கொண்டே அவனுடைய வலக்கையை எடுத்து உயர்த்தியவாறு அவள் சொன்னாள்: "இதோ... இங்கே கையெழுத்தைப் போடுங்க!''
கனவு காணும் ஒரு மனிதனைப் போல அவன் அவள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டான்.
நீலா அந்தத் தாளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தபோது, காவலாளி இடையில் புகுந்தான்: "அந்தத் தாளை நான் கொஞ்சம் பார்க்கணும்.''
"அதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குப் புரியாது.'' நீலா சொன்னாள்.
"எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.'' காவலாளி சொன்னான். அவன் அவளுடைய கையிலிருந்து அந்தத் தாளை வாங்கிக் கிழித்தெறிந்தான். "உங்களுக்கு ஏதாவது கையெழுத்து வேண்டுமென்றால், அதை இந்தக் கட்டிடத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே வேண்டாம்.''
தன் மனதிற்குள் ரேபதி நிம்மதி பெருமூச்சு விட்டான். காவலாளி சொன்னான்: "வாங்க மேடம்... நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்.''
அவன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
சிறிது நேரம் தாண்டிய பிறகு அந்த மனிதன் திரும்ப வந்தான். "நான் எல்லா கதவுகளையும் அடைத்து வைத்திருந்தேன். நீங்கள் அவங்களை உள்ளே வர வைத்து விட்டீர்கள். அப்படித்தானே?''
"என்னை இப்படி சந்தேகப்படுவதா? அவமானம்!'' திரும்பத் திரும்ப அவன் அதை மறுத்தான். "நான் கதவு எதையும் திறந்து விடவில்லை.''
"பிறகு... அவங்க எப்படி உள்ளே வந்தாங்க?''
ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது அது. அந்த இளம் விஞ்ஞானி எல்லா கதவுகளையும் தெளிவாக ஆராய்ந்தான். ஆராய்ந்ததில் ஒரு அறையின் சாளரத்தின் தாழ்ப்பாள் கழன்று போய் இருப்பதை அவன் பார்த்தான். பகல் நேரத்தில் யாரோ அதைத் திறந்து விட்டிருக்க வேண்டும். ரேபதி அப்படிப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடிய ஆள் என்று காவலாளிக்குத் தோன்றவில்லை. அவன் ரேபதியை ஒரு அப்பாவி என்று மட்டுமே நினைத்தான். புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடப்பதற்கு மட்டுமே பலத்தைக் கொண்டிருக்கும் ஆள்... அவன் தன்னுடைய நெற்றியில் கையை வைத்து அழுத்தினான். "அட பெண்ணே! விதி உன்னை பிசாசாக ஆக்குகிறதே!"
இரவு முடிவடைவதற்கு இன்னும் சிறிது நேரம் மட்டுமே எஞ்சியிருந்தது. தேநீர் குடிப்பதற்குப் போகும் பிரச்சினையே இல்லை என்று ரேபதி திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
காகம் கரைய ஆரம்பித்திருந்தது. ரேபதி வீட்டிற்குத் திரும்பினான்.
12
மறுநாள் நேரத்திற்கு வேறுபாடு எதுவும் உண்டாகவில்லை. சரியாக 4.45 மணிக்கு ரேபதி தேநீர் விருந்திற்கு வந்து விட்டான். வெறும் தேநீர் குடிப்பது மட்டுமே அங்கு இருக்கும் என்று அவன் நினைத்திருந்தான். வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் வேடதாரிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாமலிருந்தது. புதிதாக சலவை செய்து தேய்க்கப்பட்ட வேஷ்டியும் குர்தாவும் அவன் அணிந்திருந்தான். தோளில் ஒரு கதர் துண்டை அவன் அழகாக மடித்துப் போட்டிருந்தான். மிகவும் நவீன பாணி மனிதர்கள் பங்கெடுக்கும் ஒரு பார்ட்டி அது என்பதே அங்கு போன பிறகுதான் அவனுக்குப் புரிந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோ போல இருந்தது. யாரும் பார்க்காத மாதிரி ஒரு மூலையில் போய் உட்கார அவன் தீர்மானித்தான். அப்படி ஒரு மூலையில் அமர்வதற்கு முயற்சித்தபோது, "டாக்டர் பட்டாச்சார்யா அவர்களே! வருக. உங்களுடைய இருக்கை இங்கே இருக்கிறது!'' என்று கூறியவாறு ஆட்கள் அடங்கிய ஒரு கூட்டம் எழுந்து நின்றது.
நடுவில் இடப்பட்டிருந்த வெல்வெட் போட்டிருக்கும் ஒரு நாற்காலியில் யாரோ அவனை அமரச் செய்தார்கள். தான்தான் எல்லாரும் கவனிக்கக் கூடிய மைய கதாபாத்திரம் என்பதை அவன் புரிந்து கொண்டான். நீலா முன்னோக்கி நடந்து வந்து அவனுடைய கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவித்து, நெற்றியில் சந்தனக் குறியைப் போட்டாள். அவன்தான் அவேக்கனர்ஸ் க்ளப்பின் தலைவராக ஆகவேண்டும் என்று ப்ரஜேந்திர பாபு கேட்டுக் கொண்டார். பங்கு பாபு அந்த வேண்டுகோளை வழிமொழிந்தார். அந்தத் தீர்மானத்தை வரவேற்று கைத்தட்டல்கள் பெரிதாக எழுந்தன.
டாக்டர் பட்டாச்சார்யாவின் சர்வதேச அளவில் உள்ள பெருமையைப் பற்றி எழுத்தாளரான ஹரிதாஸ் பாபு ஒரு சொற்பொழிவே செய்தார். ரேபதி பாபுவின் புகழ்பெற்ற காற்றில் அவேக்கனர்ஸ் க்ளப் என்ற கப்பலின் வேகம் அதிகரிக்கும். மேற்கு கடலின் பல்வேறு துறைமுகங்களிலும் அந்த கப்பல் நங்கூரமிடும்.
குறிப்பிட்ட சொற்பொழிவின் ஒரு வார்த்தைகூட விட்டுப் போய் விடக்கூடாது என்று விருந்தை ஏற்பாடு செய்தவர்கள் அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களின் காதுகளில் முணுமுணுத்தார்கள்.
ஆட்கள் ஒவ்வொருவராக உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் டாக்டர் பட்டாச்சார்யா நம் நாட்டின் நெற்றியில் திலகம் வைத்திருக்கிறார் என்று ஒரு சொற்பொழிவாளர் கருத்து தெரிவித்த போது, ரேபதியின் மனம் பெருமையால் நிறைந்தது. அந்த கலாச்சார உலகத்தில் தான் ஒரு மதிய நேர சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டு நிற்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவேக் கனர்ஸ் க்ளப்பைப் பற்றி தான் கேள்விப்பட்டிருந்த வதந்திகள் அனைத்தும் அடிப்படையே இல்லாதவை என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. ரேபதி பாபுவின் பெயர் நம்முடைய க்ளப்பிற்கு ஒரு மந்திரக் கயிற்றைப் போன்றது என்று ஹரிதாஸ் பாபு பேசியபோது, ரேபதியின் இதயம் பூரிப்படைந்தது. ஏற்கெனவே தன்னுடைய மனதில் நினைத்து வைத்திருந்த தவறான எண்ணங்களை அவன் ஓரத்தில் ஒதுக்கி வைத்தான். சிகரெட்டை உதட்டிலிருந்து எடுத்துவிட்டு, பெண்கள் அவனிடம் இனிமையாகப் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்கள்: "உங்களை சிரமத்திற்குள்ளாவதற்காக வருந்துகிறோம். எனினும் உங்களுடைய ஒரு ஆட்டோக்ராஃப் எங்களுக்கு வேண்டும்.''
இவ்வளவு காலமாக தான் கனவில் வாழ்ந்ததைப் போல ரேபதிக்குத் தோன்றியது. அந்த கனவுகளின் கூட்டிற்குள் இருந்து அவன் மெதுவாக ஒரு பட்டாம்பூச்சியாக வெளியே வந்து கொண்டிருந்தான்.
விருந்தினர் ஒவ்வொருவராக பிரிந்து போய்க் கொண்டிருந்தார்கள். ரேபதியின் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டே நீலா சொன்னாள்: "நீங்கள் உடனே இங்கேயிருந்து போனால் சரியாக இருக்காது.''
அவள் அவனுடைய நரம்புகளின் வழியாக போதையை உண்டாக்கும் மதுவைப் பரிமாறினாள். பகல் சாயத் தொடங்கியிருந்தது. சாயங்காலத்தின் பச்சை நிறத்தைக் கொண்ட நிழல்கள் அந்த புல் வெளியில் பரவியது.
அந்த புல்வெளியில் இருந்த பெஞ்சில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். "டாக்டர் பட்டாச்சார்யா, ஒரு ஆணான நீங்கள் ஏன் பெண்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?'' அவனுடைய கையைத் தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அவள் கேட்டாள்.
"பயமா? எந்தச் சமயத்திலும் இல்லை.'' ரேபதி மிகுந்த தன்னம்பிக்கையுடன் சொன்னான்.
"உங்களுக்கு என் தாயைப் பார்த்து பயமில்லையா?''
"நான் எதற்கு அவங்களுக்கு பயப்படணும்? நான் அவங்களை மதிக்கிறேன்.''
"என்னை?''
"உண்மையாக... உன்மீது எனக்கு நிறைய பயமிருக்கு!''
"அது நல்ல செய்தி. நீங்கள் என்னை எந்தச் சமயத்திலும் திருமணம் செய்ய முடியாது என்று என் தாய் சொல்றாங்க. அப்படியென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.''
"நம்மைத் தடுக்கக்கூடிய எந்தவொன்றையும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்ன நடந்தாலும் நாம் திருமணம் செய்வோம்.''
அவனுடைய தோளில் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டே அவள் சொன்னாள்: "நான் எந்த அளவிற்கு உங்களை விரும்புகிறேன் என்று ஒருவேளை உங்களுக்குப் புரியாது.''
அவளுடைய தலையைத் தன்னுடைய மார்பின்மீது நெருக்கமாக வைத்துக் கொண்டு ரேபதி சொன்னான்: "உலகத்தில் இருக்கும் எந்தவொரு சக்தியாலும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடியாது.''
"ஜாதியைப் பற்றி என்ன கூறுவீர்கள்?''
"ஜாதிகள் ஒழியட்டும்!''
"அப்படியென்றால் நாளையே நீங்கள் பதிவாளரைப் பார்க்க வேண்டும்.''
"சரி... நான் நாளைக்கே செல்கிறேன்.'' ரேபதி ஆணுக்கே இருக்கக் கூடிய வீரத்தை வெளிக்காட்ட ஆரம்பித்திருந்தான்.
அதன் தொடர் செயல்கள் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தன.
சோஹினியின் பாட்டிக்கு வாத நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் மரணப் படுக்கையில் இருந்தாள். தன்னுடைய இறுதி நிமிடம் வரை சோஹினி அங்கிருந்து புறப்படக்கூடாது என்று அவள் பிடிவாதம் பிடித்தாள். அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நீலா இரண்டு கைகளையும் நீட்டி வரவேற்றாள். இளமைக்கே உரிய ஆசைகள் முழுவதும் அவளிடமிருந்து அப்போதே கிளர்ந்து மேலே வர ஆரம்பித்தன.
நிறைய படித்த சுமையின் காரணமாக ரேபதியின் ஆண்தனத்திற்கு சோர்வு உண்டாகிவிட்டிருந்தது. அவன் அழகானவன் என்று நீலா நினைக்கவில்லை. ஆனால், ஒரு கணவன் என்ற வகையில் அவன் பாதுகாப்பிற்கான வழியாக இருப்பான். திருமணத்திற்குப் பிறகு அவள் மேலும் அதிகமான கட்டுப்பாடற்ற தன்மையுடன் தன்னுடைய செயல்களைத் தொடரலாம். அதை எதிர்க்கக்கூடிய சக்தி எதுவும் அவனுக்கு இல்லை. அதையும் தாண்டி, சோதனைக் கூடத்தின் சொத்துகள் அவளை அந்த அளவிற்கு வெறி கொள்ளச் செய்தது. சோதனைக் கூடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ரேபதி அளவிற்கு பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லையென்று அவளுடைய நண்பர்கள் கூறினார்கள். சோஹினி அவனை தன்னுடைய கையைவிட்டு விலகிச் செல்ல அனுமதிக்க மாட்டாள் என்று அறிவுப்பூர்வமாக சிந்திக்கக்கூடிய எல்லாரும் கருதினார்கள்.
அதே நேரத்தில் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று அவேக் கனர்ஸ் க்ளப்பின் தலைவராக தன் பெயரை அறிவிக்க அவன் பத்திரிகைகளுக்கு அனுமதி அளித்தான். "உங்களுக்கு பயமாக இருக்கிறதா?'' என்று நீலா அவனிடம் கேட்டதற்கு,"எனக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை'' என்று அவன் பதில் கூறினான்.
அவனுடைய ஆண்மைத்தனத்தைப் பற்றி சந்தேகத்தை வெளிப்படுத்தியவர்கள் எல்லாருடைய மனங்களில் இருந்தும் அப்படிப்பட்ட சந்தேகங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். "எட்டிங்டனும் நானும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள் நடத்தியிருக்கிறோம். ஒருநாள் நம்முடைய இடத்திற்கு நான் அவரை வரச் செய்வேன்.'' அவன் சொன்னான். க்ளப் உறுப்பினர்கள் "பிரமாதம்" என்று ஆரவாரித்தார்கள்.
ரேபதியின் முக்கிய வேலைகள் நின்று போய்விட்டிருந்தன. அவனுடைய ஆராய்ச்சியின் தொடர் ஓட்டம் தடைப்பட்டிருந்தது. நீலா வந்துவிட்டால் அவனுடைய மனதில் சலனம் உண்டாகிவிடும். அவனுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு திடீரென்று இரண்டு கைகளாலும் அவள் அவனுடைய கண்களை மூடுவாள். அவனுடைய நாற்காலியின் கைப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையால் அவள் அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பிடிப்பாள். அதனால் தன்னுடைய ஆராய்ச்சிக்கு உண்டாகக் கூடிய தடை தற்காலிகமானது என்றும், சற்றுக் கட்டுப்பாட்டை மீண்டும் கையில் எடுத்து விட்டால் பிரிந்த முனைகள் திரும்பவும் சேர ஆரம்பித்துவிடும் என்றும் அவன் நம்பினான். ஆனால், அவனுடைய அறிவு சாதாரண நிலைக்குத் திரும்பி வருவதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாமலிருந்தன.