மரணத்தின் சிறகுகள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
ஒவ்வொருவராக மணமக்களை வாழ்த்திவிட்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
மகாதேவனும் ரேஷ்மாவுக்கு அருகில் வந்தார்.
அவருடைய முகத்தை சற்று பார்த்தார்.
ரேஷ்மாவின் முகத்தில் மெல்லிய ஒரு புன்னகை மட்டும் தவழ்ந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. தெரிந்ததாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்து விட்டுத் திரும்பி வந்துவிட்டார். ரேஷ்மாவிடம் எந்தவொரு சலனமும் இல்லை.
அதுதான் பெண்... புத்திசாலி!
சாயங்காலம் வழக்கம்போல காகம் வந்தது.
"திருமணத்திற்குச் சென்றிருந்தீர்கள். இல்லையா?''
"ஆமாம்... போயிருந்தேன். எப்படித் தெரியும்?''
"தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே! மணப்பெண் பார்த்துவிட்டு, ஏதாவது சொன்னாளா?''
"எதுவும் சொல்லவில்லை. என்னைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.''
"அதுதான் பெண்...''
"என்ன இருந்தாலும் அவள் பயங்கரமான ஒருத்திதான்!''
"இல்லை... முன்பு நடைபெற்றது வயதால் உண்டான சபலத்தால்... இப்போது நடைபெற்றது பிறவியின் விளைவால்...! சார், அதை புரிந்துகொள்வதற்கு உங்களால் முடியவில்லை. அவ்வளவுதான்...''
பதில் கூறுவதற்கு மகாதேவனால் முடியவில்லை. விஷயம் எந்த அளவிற்கு சரியானதாக இருக்கிறது?
"ஏதாவது சாப்பிடணுமா?''
மகாதேவன் கேட்டார்.
"வேண்டாம்... கொஞ்சம்கூட பசியில்லை. வராமலிருந்தால், நீங்கள் வேதனைப்படுவீர்களே என்று நினைத்து வந்தேன். சரி... வரட்டுமா? நாளை பார்க்கலாம்.''
காகம் சிறகை விரித்துக்கொண்டு பறந்து சென்றது.
காகமாக இருந்தாலும், அது கூறியதுதான் எவ்வளவு உண்மை!
ஆனால், கவுசல்யாவும் பெண்தானே?
பதில் கிடைக்காத கேள்வி...
6
சமீபகாலமாக மது அருந்துவது சற்று அதிகமாகி விட்டதோ என்ற தோணல் மகாதேவனின் மனதில் உண்டானது. புகை பிடிப்பதும். வாழ்க்கையில் ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்ததைப்போல இருந்தது. குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்த விஷயங்களும் நடக்காத பகல்களும் இரவுகளும்... மொத்தத்தில் உண்டாகிவிட்டிருப்பது மனிதர்களிடம் சிறிதும் பழக்கம் கொண்டிராத காகத்துடன் கொண்டிருக்கும் நட்பு. பிறகு கவுசல்யாவின் கனவு வருகை.
இரண்டும் இரண்டு வகையானவை.
ஒன்று யதார்த்தமென்றால், இன்னொன்று கற்பனை.
ஒரு சராசரி பள்ளிக்கூட ஆசிரியருக்கு சாதாரணமாக உண்டாகக்கூடிய வழக்கமான வளர்ச்சியோ தளர்ச்சியோதான் மகாதேவனின் வாழ்க்கையிலும் நடைபெற்றிருக்கிறது.
நிரந்தரமான வருமானம்- நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை- பகலில் பள்ளிக்கூடத்தில்- இரவில் வீட்டில். ஆசிரியர் என்ற பொய் முகத்தை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.
அந்த சங்கிலியிலிருந்து ஒரு விடுதலையைப் பெற வேண்டுமென்று பலமுறை நினைத்திருக்கிறார். ஆனால், முடியவில்லை.
இனி இயலும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
தனியார் பள்ளிக்கூடமாக இருந்தாலும், ஒரு எல்லையைத் தாண்டிவிட்டால் "பென்ஷன்" என்ற கிரீடத்தை தலையில் அணிந்து, பள்ளிக்கூடத்தின் படிகளில் இறங்க வேண்டியதிருக்கும் என்பது மட்டும் உண்மை.
அதற்குப் பிறகு பென்ஷன் வாங்கக் கூடிய ஆசிரியர்...
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிணத்தின் அனுபவம்...
மொத்தத்தில்- வெறுப்பு உண்டாகிறது.
மாணவர்களின் குறும்புத் தனங்கள் நிறைந்த கண்களிலிருந்து விடை பெற்றுவிட்டு, நான்கு சுவர்களுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டு இருக்க வேண்டிய ஒரு நிலைமை...
தனக்கு மட்டுமே உண்டாகியிருக்கும் ஒரு நிலையா அது?
எல்லாருக்குமே இறுதியில் நடக்கப்போவது இதுதானே?
முதுமை, முதுமைக்கென்றே இருக்கக் கூடிய சிரமங்கள்... மற்றவர்களின் உதவி இல்லாமல் வாழமுடியாத நிலை- இறுதியாக எலும்புக் கூட்டிலிருந்து ஒருநாள் உயிர் விடை பெற்றுக் கொள்வது- கடைசியாக உயிர் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தாங்கிக் கொள்ள முடியாத காத்திருத்தல்...!
குறிப்பாக- தனி மனிதனாக!
சொல்லப்போனால்- விருப்பம் எதுவுமே இல்லையென்றால் பிறகு எதற்கு இந்த வண்டியை இப்படி கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும்?
மனதிற்குள்ளிருந்து யாரோ கேட்பதைப்போல இருந்தது.
பிரபஞ்சத்தில் சாதாரணமாக இருக்கக் கூடிய இந்தக் குழப்பமான சூழ்நிலையில் தனியாக ஒரு தீர்மானத்தை யாரால் எடுக்க முடியும்?
ஆனால், மகாதேவனுக்கு வெறுப்பு உண்டானது.
அந்த வெறுப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக கண்டுபிடித்த எளிய வழிதான் மது அருந்தும் பழக்கமா?
"என்ன சார், ஆழமான சிந்தனையில் மூழ்கியிருப்பதைப் போல தோன்றுகிறதே?''
சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
ஆசிரியர்களுக்கான அறையில்தான் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதே மகாதேவனுக்கு அப்போதுதான் தெரிந்தது.
சாவித்திரி டீச்சர்!
வேதியியல் ஆசிரியை!
அவரைப்போலவே தனிமையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அப்பிராணி ஆசிரியை! அவளுடைய கணவர் வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிவிட்டார். இளமை இன்னும் விலகிச் சென்றிராத சாவித்திரி டீச்சர் மிகவும் சீக்கிரமே வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் ஒத்துப்போகக் கூடிய பெண்ணாகி விட்டிருந்தாள்.
அவளுடைய கணவர் மரணமடைந்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் இன்னும் பெரியவர்களாக ஆகவில்லை. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தை அடைவதற்கு இன்னும் வருடங்கள் இருக்கின்றன. இளமை ததும்பிக் கொண்டு நின்றிருக்கும்போது, கணவனை இழக்கும் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? பல நேரங்களிலும் சாவித்திரி டீச்சரைப் பார்க்கும்போது இரக்கம் தோன்றியிருக்கிறது.
எதுவும் கேட்டதில்லை.
அங்கு- இரக்கத்திற்கு முன்னால் முகத்தைத் தருவதற்கு என்ன காரணத்தாலோ சாவித்திரி டீச்சர் முயற்சிக்கவில்லை.
அவளுக்கு முன்னால் இரண்டு குழந்தைகள் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை.
"சார், நீங்கள் ஏதோ ஆழமான சிந்தனையில் இருப்பதைப் போல தோன்றுகிறதே!''
சாவித்திரி டீச்சரின் கேள்வி மனதில் வந்து மோதியது.
"என்ன சிந்தனை டீச்சர்? எல்லாமே வெறுத்துப் போய்விட்டது.... உண்மை...''
"ஏன் அப்படிச் சொல்றீங்க, சார்?''
"தெரியல டீச்சர்.''
"உங்களைப் போன்ற ஆண்கள்... குறிப்பாக- பொறுப்புகள் எதுவும் இல்லாத நிலை. மகாதேவன் சார், நீங்கள் வாழ்க்கையை எப்போதும் சந்தோஷம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளக் கூடாதா?''
அந்தக் கேள்விக்கான அர்த்தம் என்ன என்று மகாதேவனுக்குத் தெரியவில்லை.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிலேயே மலையாளிகளாக இருப்பவர்கள் மகாதேவனும் சாவித்திரி டீச்சரும்தான். சாவித்திரி டீச்சர் தலச்சேரியைச் சேர்ந்தவள். குடும்பம் இங்கு வந்து குடியேறியது.
அவளுடைய கணவர் மரணமடைந்த பிறகு, இரண்டாம் திருமணத்திற்காக குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்திக் கூறியும், டீச்சர் அதற்கு சம்மதிக்கவில்லை என்ற விஷயத்தை அவர் தெரிந்துகொண்டார். எதுவும் கேட்கவில்லை. இரக்கத்தைக் காட்ட வேண்டும் என்றும் நினைக்கவில்லை. யார் பார்த்தாலும் ஆசைப்படக் கூடிய உடல் அழகைக் கொண்ட டீச்சருக்கு முன்னால் இப்போதும் ஒரு இளமையின் மிச்சம் மீதி தலையை நீட்டிக் கொண்டு காணப்பட்டாலும், அவள் அந்த வழியை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம்- தன்னுடைய கணவர்மீது வைத்த பாசமா? இல்லாவிட்டால் குழந்தைகள்மீது அளவற்ற அன்பா?