உன் மனதை நான் அறிவேன் - Page 50
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
மழை கொட்டிக் கொண்டிருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கிய பாவனா, சரிதாவின் பங்களாவை நோக்கி நடந்தாள். மழையை எதிர்பார்க்காததால் அவள் குடை எடுத்து வரவில்லை. எனவே அவள் நனைந்தாள். அவளது உடைகள் தொப்பலாக நனைந்து விட்டபடியால் அவளது உடைக்குள் இருந்த உள் அங்கங்கள், எடுப்பான வடிவத்தையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தின.
தெருவில் போகும் ஆண்கள், அவளது அந்த ஈரமான கவர்ச்சியில் தங்கள் வயதைக் கூட மறந்து, வாய் பிளந்தபடி ரஸித்துக் கொண்டே நடந்தார்கள். அவர்களது கண்களில் தெரிந்த காமவெறியைக் கண்ட பாவனா உடலும், உள்ளமும் கூனிக் குறுகிப் போனாள். வெகு வேகமாக நடந்து சென்று சரிதாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.
அன்று வத்சலாம்மா லீவு என்பதால் சரிதாவே வந்து கதவைத் திறந்தாள். ஈரமான உடையில் புறா போல் நடுங்கிக் கொண்டிருந்த பாவனாவைப் பார்த்து பதற்றமடைந்தாள் சரிதா.
''என்ன பாவனா? உள்ள வா. இப்பிடி நனைஞ்சிருக்கியே? முதல்ல வந்து தலையை துவட்டு. என்னோட சுடிதார் ஸெட் உனக்கு கொஞ்சம் லூஸ் ஃபிட்டிங்கா இருக்கும். பரவாயில்லை. எடுத்து தரேன், போட்டுக்க'' என்று கூறியபடி துண்டு எடுத்துக் கொடுத்தாள் சரிதா.
அதன்பின் தன் அறைக்கு சென்று சுடிதார் ஸெட் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாள். கீழே ஹாலில் இருந்த வத்சலாம்மாவின் அறைக்கு சென்று, தலையைத் துடைத்துவிட்டு சரிதாவின் சுடிதாரை அணிந்து கொண்ட பாவனா, வெளியே வந்தாள்.
''அட... கொஞ்சம் லூஸா இருக்கும்ன்னு பார்த்தா... ரொம்ப லூஸா இருக்கே. சரி சரி இது கூட உனக்கு நல்லாத்தான் இருக்கு.''
சரிதா பேசியது எதையும் கவனிக்காத பாவனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
''அட! ஏன் பாவனா அழறே? என்ன ஆச்சு?''
''பஸ்ல இருந்து இறங்கி உங்க வீட்டுக்கு நடந்து வர்றதுக்குள்ள... ஈரமாயிட்ட என்னோட உடம்பை ரொம்ப கீழ்த்தரமா பார்த்துக்கிட்டே போனானுங்க மேடம். ரொம்ப கஷ்டமா இருக்கு... பொண்ணா பொறந்து நான் படற கஷ்டங்களுக்கு எனக்கு என்னிக்குதான் விடுதலை கிடைக்குமோன்னு இருக்கு...''
சரிதாவின் அனுதாப அலைகளில் நீந்தினாள் பாவனா. செயற்கையாகப் பேச ஆரம்பித்தாலும் இயல்பான அவளது பெண்மை ஒரு விழிப்புணர்வை அடைந்து, அதனால் தன் துக்கத்தை வெளிபடுத்தினாள் பாவனா.
''அழகான பொண்ணுங்களை எப்பவும் பிரச்னை எதிர் நோக்கி காத்திருக்கும். அதுவும் நீ பேரழகான பொண்ணு. உன்னை சும்மா விடுமா சமூகம்? அது சரி, நீ ஆட்டோவுல வர வேண்டியதுதானே? எத்தனையோ தடவை சொல்லிட்டேன் உனக்கு... பஸ்ல வராதன்னு...''
''உங்க வீட்ல இருந்து அரை கிலோ மீட்டர்தான் மேடம் பஸ் ஸ்டேண்ட். அதுக்கு ஏன் ஆட்டோ செலவுன்னு யோசிச்சேன். இப்ப மழை சீஸனும் கிடையாது. திடீர்னு இப்பிடி பெரிய மழை அடிக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...''
''ஆமா... இப்ப சீஸன் பார்த்தா மழை பெய்யுது? நினைச்ச நேரம் பெய்யுது...''
''சரி மேடம். இன்னிக்கு என்ன பண்ணலாம்?''
''இன்னிக்கு என்னோட முகத்துக்கோ, காலுக்கோ ப்யூட்டி ட்ரீட்மெண்ட் தேவையில்லை. என்னோட ரூம்ல இருக்கற ஷெல்ஃப் எல்லாத்தையும் அழகுபடுத்தி அடுக்கணும். செய்வியா?''
''என்ன மேடம் கேள்வி இது? நீங்க என்ன வேலை குடுத்தாலும் நான் செய்வேன் மேடம்.''
''சரி, வா... என் ரூமுக்கு போகலாம்!''
இருவரும் சரிதாவின் அறைக்கு சென்றனர். அங்கே சுவரில் பதித்த மூன்று பெரிய அலமாரிகள் இருந்தன. சாவி வைத்து முதல் அலமாரியைத் திறந்தாள் சரிதா.
மேல்தட்டிலும், கீழ்த்தட்டிலும் பட்டுப்புடவைகள் அடுக்கப்பட்டிருந்தன.
ஒரு தட்டில் ஏகப்பட்ட நகைகள் சிதறிக் கிடந்தன. வெல்வெட்டால் தயாரிக்கப்பட்ட நகைப்பெட்டிகள் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பிரமித்துப் போன தன் உணர்வை அவளையும் அறியாமல் வெளிப்படுத்தினாள் பாவனா. ஓரிரு நிமிடங்களில் சமாளித்தபடி பேச ஆரம்பித்தாள்.
''என்ன செய்ய மேடம்?''
''முதல்ல இந்த நகைகளை எல்லாம் எடு. எடுத்து ஸெட் ஸெட்டா பெட்டியில அடுக்கு. வெளிய போகும்போது போட்டுக்கிட்டு போன நகைகளை அடுக்காம அப்பிடியே கலைச்சுப் போட்டிருக்கேன் பாரு. நகைப் பெட்டியில இருந்த நகைகளும் மாறி இருக்கும், அதையும் சரியா பார்த்து எடுத்து அடுக்கு. அதுக்கப்புறமா பட்டு புடவைகளை அடுக்கலாம். இன்னைக்கு வத்சலாம்மா வரலை. காலையில எழுந்திருச்சதுல இருந்து சரியான வேலை. தூக்கம் கண்ணை சுழட்டுது. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன். நீ அடுக்கிக்கிட்டிரு.''
''அ... அ... அது வந்து மேடம்... நீங்களும் என் கூட இருந்தா... நல்லது...''
''ஏன்? நான் எதுக்கு கூட இருக்கணும்? உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்கு, இப்ப தூங்கியாகணும். நீ அடுக்கு...'' என்று அன்பாக கட்டளை இட்ட சரிதா, போர்வையை எடுத்து போர்த்தியபடி கட்டிலில் படுத்துக் கொண்டாள். படுத்தவள், அடுத்த நிமிடம் அயர்ந்து தூங்கிவிட்டாள்.
தங்க நகைகள், வைர நகைகள் பலவித விலை உயர்ந்த நவரத்தினக் கற்கள் பதித்த ஏராளமான நகைகள் இவற்றை கலர் பார்த்து, டிஸைன் பார்த்து ஸெட் ஸெட்டாக அடுக்கிய பாவனாவிற்கு கைகள் நடுங்கியது. அதைவிட நெஞ்சம் நடுங்கியது.
நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அடுக்கினாள். சில நகைப் பெட்டிகளில் ஐநூறு ரூபாய் நோட்டுகளும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மகாலஷ்மியும், தனலஷ்மியும் தங்கள் கடாட்சத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
'சரிதா மேடமும் பெண். நானும் பெண். என்னோட நிலைமை...? இங்கே இருக்கற தங்க நகைகளுக்கு இருக்கற தங்கம்ங்கற பேர் கூட எனக்குக் கிடையாது. ஆனா மேடத்தோட நிலைமை? அவங்ககிட்ட இருக்கற தங்க நகைகளால அவங்களையே அபிஷேகம் பண்ணலாம் போல... ஹூம்' பெருமூச்சு விட்டாள் பாவனா.
நல்ல குடும்பத்துல பிறந்து வளர்ந்த நான், சூழ்நிலையோட கட்டாயத்துல என் பெண்மையை பறிகுடுக்கும்படி ஆயிடுச்சு. அந்தக் கொடுமையான பாவத்தைத் தொலைக்க இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்கணுமோ தெரியலை. சுதாகரோட திட்டப்படி அந்த தப்பை செய்ய வேண்டிய நிர்பந்தத்துல இருக்கேன். என்னோட பாவங்கள்ல்ல இருந்து நான் விடுதலையாகறதுக்கு அந்த தப்பை கடைசியா செஞ்சு, அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். சரிதா மேடம் மனசைக் கலைக்கற நாடகத்துல எனக்கு குடுத்திருக்கற வேஷத்தை ஒழுங்கா முடிச்சுட்டு, நாடக முடிவுல திரை போடற மாதிரி என்னோட தொடர் தவறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்.
கவனமாக நகைகளை சீராக அடுக்கினாள். ஒரு பேப்பர் எடுத்து எல்லா நகைகளுக்கும் லிஸ்ட் எழுதினாள். அதன்பிறகு சரிதாவின் புடவைகளை எடுத்து வெளியே வைத்தாள். ஷெல்ஃப் முழுவதையும் துடைத்து, புதிதாக நியூஸ் பேப்பர் விரித்தாள். புடவைகளை மிக அழகாக மடித்து, நேர்த்தியாக அடுக்கினாள். அப்போழுதும் சரிதா தூங்கிக் கொண்டிருந்தாள். மற்ற அலமாரிகளைத் திறக்க வேண்டாம் என்று எண்ணிய பாவனா, தூங்கிக் கொண்டிருந்த சரிதாவை மெதுவாக எழுப்பினாள்.
''மேடம்... மேடம்...''
அவளது குரலைக் கேட்ட சரிதா, மெதுவாகக் கண் விழித்தாள்.
''என்ன பாவனா?... நல்லா தூங்கிட்டேன் போலிருக்கு?...''
''ஆமா மேடம். ஒரு ஷெல்ஃப் அடுக்கிட்டேன் மேடம். இந்தாங்க நகைகளுக்கு லிஸ்ட் போட்டிருக்கேன்...''
''அட... இந்த வேலையை செய்யணும்ன்னு எவ்ளவோ நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன். அப்பாடா... ஒரு பெரிய வேலையை முடிச்சுட்ட...'' என்றபடியே எழுந்தவள், பாத்ரூமிற்கு சென்றுவிட்டு வந்தாள்.
பாவனா அடுக்கி முடித்த அலமாரியைத் திறந்து பார்த்தாள்.
''வாவ்... சூப்பர்! பிரமாதமா அடுக்கிட்டியே?!'' நகைகளை பாவனா அடுக்கி இருக்கும் நேர்த்தியைப் பார்த்தவள் மறுபடியும் பாராட்டினாள்.
''அது சரி... மறந்து போச்சு பாரேன். மணி ரெண்டாகுது. நீ இன்னும் சாப்பிடாம இருக்க. எனக்கு பசிக்குது. வா. சாப்பிடலாம். நேத்து வத்சலாம்மா சமைச்சு வச்சுட்டுத்தான் போயிருக்காங்க. ஃப்ரிட்ஜில் இருக்கு எல்லாமே. வா... மைக்ரோவேவ் அவன்ல சூடு பண்ணிக்கலாம்...''
பாவனாவிற்கும் பசி, வயிற்றைக் கிள்ளியது. இருவரும் சமையலறைக்கு சென்றனர். ஃப்ரிட்ஜில் இருந்த உணவு வகைகளை எடுத்து, ஒவ்வொன்றாக மைக்ரோவேவ் அவன்-ல் வைத்து சூடு பண்ணினாள்.
அவள் சூடு பண்ணியதை டைனிங் டேபிளுக்கு கொண்டு வந்து வைத்தாள் பாவனா. சரிதா ப்ளேட் எடுத்து வைத்தாள். இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
மறுபடியும் சரிதாவின் அறைக்கு சென்று, மற்ற இரண்டு ஷெல்ஃப்களையும் அடுக்கி முடித்தாள் பாவனா. அவள் அடுக்கும் பொழுது அவளுடன் அரட்டை அடித்தது மட்டுமல்ல... சரிதாவின் மனது குழம்பிப்போகும் விதமாக பல கதைகளை பேசினாள் பாவனா.
அடுக்கி முடிக்கும் பொழுது மாலை நேரம் ஆகிவிட்டது. பாவனாவிற்கு ஒரு நல்ல தொகையை கொடுத்தாள் சரிதா. அதை வாங்க மறுத்த பாவனாவின் கைகளில் பணத்தைத் திணித்தாள் சரிதா. சரிதாவிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினாள் பாவனா.