உன் மனதை நான் அறிவேன் - Page 47
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
அபிலாஷ், சரிதாவின் முந்தானையை பிடித்து இழுத்தான்.
''என்ன இது? உன் கையால சூடா ஒரு காஃப்பி போட்டுக் குடுப்பன்னு பார்த்தா சுத்தி சுத்தி வந்து என்னென்னமோ பண்ணிக்கிட்டிருக்க?''
சரிதா பதில் ஏதும் கூறாமல் காஃப்பியுடன் வந்தாள்.
சரிதா மௌனம்.
''என்னடா இது... நம்ம ஆளு மௌன சாமியாரா ஆயிட்டாங்க! ஏய் சரித், என்ன ஆச்சு?''
''எனக்கு ஒண்ணும் ஆகலை. உங்களுக்குத்தான் என்னமோ ஆயிடுச்சு.''
''உன்னை பொண்ணு பார்த்ததில இருந்தே எனக்கு என்னமோ ஆயிடுச்சுதான். சிரிக்கிறாள். உனக்கு சிரிப்பு வரலியா?''
''பொண்ணு பார்த்ததில் இருந்தா அல்லது பொண்ணுகளை பார்க்க ஆரம்பிச்சதுல இருந்தா?''
''அடிப்பாவி... உன்னோட கிண்டலுக்கும் ஒரு அளவு இல்லையா?''
''கிண்டலும் இல்லை சுண்டலும் இல்லை. சீரியஸாத்தான் பேசறேன்.''
''சரிதா... சீரியஸா பேசறீயா? இது சரியா?''
''போதும் உங்க தமாஷ். வெண்ணிலா ஹோட்டலுக்கு போனீங்களா?''
''அதை ஏன் கேக்கற... அந்த ஹோட்டலுக்கு வேண்டாம்னு சொன்னா... டைரக்டர் கேக்கவே இல்லை. அங்கதான் போணும்னு சொல்லிட்டார். அதனால போனேன். புது படம். புது டைரக்டர். புது நடிகர்கள் நடிக்கற படத்துக்கு ம்யூஸிக் போடணும்னு பேசறதுக்கு அங்கே கூப்பிட்டுட்டு போனாங்க. ஆனா... எனக்கு டேட்ஸ் இல்லை. இன்னொரு விஷயம், அவங்களோட ரேட் எனக்கு ஒத்து வரலை.''
''வெண்ணிலா ஹோட்டலுக்கு போனதை என்கிட்ட ஏன் சொல்லலை?''
''மறந்தே போயிட்டேன்மா. அது சரி... ஏன் இவ்ளவு சீரியஸா கேக்கற?''
''விஷயம் இருக்கு. அங்கே வேற யாரை பார்த்தீங்க?''
''அங்கே... வேற... யாரை பார்க்க முடியும்? நம்ப கயல்விழி டான்ஸ் ஆடற ஹோட்டல். ஆனா அங்க அவளை பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. தற்செயலா ரிஸப்ஷனுக்கு போன் பேச வந்தா. அப்போ அவளைப் பார்த்து நான் பேசினேன். அதுக்கென்ன இப்போ?''
''அதுக்கென்னவா? அதைப்பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லியே?''
''இப்ப சொல்லிட்டேனே...''
சரிதாவின் கேள்விகளில் சந்தேகம் கொக்கி நிற்பதை அறியாத அபிலாஷ், குறும்பாகவும், வேடிக்கையாகவும் பதில் கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது குறும்புப் பேச்சை ரஸிக்க முடியாத மனநிலையில் இருந்த சரிதா, மேலும் அவனிடம் கேள்விக் கொக்கிகளைப் போட்டாள்.
''அவ என்ன சொன்னா?''
''வழக்கம் போல குசலம் விசாரிச்சா. உன்னைப் பத்தி கேட்டா.''
''என்னைப் பத்தி உங்ககிட்ட கேட்டிருக்கா. என்னைப் பத்தி உங்ககிட்ட கேட்ட அவ, அதைப்பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லியே...?''
''அடடா... நான் உன்கிட்ட சொல்லலை. அவ உன்கிட்ட சொல்லலை. ஏன் இப்பிடி பேசற... கேக்கறன்னு எனக்கு புரியவே இல்லை...''
''எனக்கும் எதுவும் புரியலை...''
''உனக்கு நட்டு கழண்டிருக்குன்னு எனக்கு புரியுது...''
வழக்கமாக அபிலாஷ் இவ்விதம் கிண்டலாக பேசும்பொழுது, அவனை செல்லமாக அடிப்பதற்கு வருவாள் சரிதா. அவளது அந்த அன்பு கலந்த செய்கையை எதிர்பார்த்திருந்த அபிலாஷிற்கு சரிதாவின் தீவிர மௌனம், வித்தியாசமாக இருந்தது.
'நான் கேக்கறதைப் பத்தி புரிஞ்சும், புரிஞ்சுக்காத மாதிரி நடிக்கறாரா? அல்லது வழக்கமா பேசற மாதிரிதான் பேசறாரா? கயல்விழியை பார்த்ததை ஏன் என்கிட்ட சொல்லலை? இதைப்பத்தி இன்னும் வெளிப்படையா கேட்டா பிரச்னையாயிடுமா? கேக்காமலே விட்டாலும் பிரச்னையாத்தானே ஆகும்? பாவனா சொன்ன மாதிரி... நான் ரொம்ப கவனமா இருக்கணுமா? ஆமா. அதுதான் சரி. இவர்கிட்ட நேரடியாவே கேட்டுடலாமே?' தனக்குள் யோசித்து, குழம்பியவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
''நீங்க இப்ப கொஞ்ச நாளா என்கிட்ட எதையும் சொல்றதில்லை.''
சரிதாவின் குரலில் தென்பட்ட கோபம், எரிச்சல் இதையெல்லாம் லேஸாக புரிந்து கொண்ட அபிலாஷிற்கும் கோபம் உண்டானது.
''என்னமோ உளறிக்கிட்டிருக்க. ஸ்டூடியோ, ம்யூஸிக், வீடுன்னு நான் பாட்டுக்கு இருக்கேன். என்னோட டைட் ஷெட்யூல்ல சில நேரம் எதையாவது சொல்ல மறந்திருப்பேன். வெண்ணிலா ஹோட்டலுக்கு போனதும், அங்கே கயல்விழியை பார்த்ததும் என்ன புதுசான விஷயமா? அப்பிடிப் பார்த்தா... அன்னிக்கு அந்த தயாரிப்பாளரையும், டைரக்டரையும் பார்த்து பேசினது, அவங்க படத்துக்கு டேட் இல்லைன்னு சொன்னது இதைக் கூடத்தான் உன்கிட்ட நான் சொல்லலை. அதையெல்லாம் கேட்காம கயல்விழியைப் பார்த்து பேசினது மட்டும் கேக்கறியே... ஏன்?''
'என்ன பதில் சொல்வது' என்று புரியாமல் விழித்தாள் சரிதா.
அப்போது அபிலாஷின் மொபைல் அவனை அழைத்தது. நம்பரைப் பார்த்தான். தயாரிப்பாளர் பழனிவேலின் நம்பர். எனவே அவருடன் பேச ஆரம்பித்தான்.
'நல்லவேளை... அவருக்கு ஃபோன் கால் வந்துடுச்சு' என்று நினைத்தபடியே அங்கிருந்து நழுவிச் சென்றாள் சரிதா.
'பழனிவேல் ஸார் பேசினார்னா குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவாரு' பொங்கிக் கொண்டு வந்த அவளது கோப அலைகள் சற்று அடங்கின.
படுக்கை அறைக்கு சென்று குப்புறப் படுத்துக் கொண்டாள். ஃபோன் பேசினபடியே அங்கே வந்த அபிலாஷ், சரிதாவின் அருகில் கட்டிலின் சாய்வுப் பலகை மீது சாய்ந்தபடி பேசினான்.
ஒரு கையால் குப்புறப் படுத்துக் கிடந்த சரிதாவின் முதுகைத் தடவினான்.
தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த சரிதா, அவனது ஸ்பரிஸத்தால் சிலிர்த்தாள்.
'இவரோட இந்தப் பாசமான தொடுதலும், அணைப்பும் எனக்கே உரியது. எனக்கு மட்டுமே உரிமையானது. ஆனா... அவர்... மேல தப்பு இருக்கோன்னு எனக்கு சந்தேகம் வருதே. அவர் மனசுல வேற யாராவது இருப்பாளா? கயல்விழி என்னோட ஃப்ரெண்ட். அவ நல்லவ. இவரும் நல்லவர். ஆனா... என்கிட்ட அவங்க சந்திச்சதை மறைக்கறாங்களே... அதுக்கு என்ன காரணம்? பாவனா சொன்ன மாதிரி நான் ஜாக்கிரதையா இருக்கணுமோ? ஆமா. அதுதான் சரி. ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு நான் இவரை அது பத்தி கேட்டா... இவருக்கு கோபம் வருதே... ஓப்பனா கேக்கவும் முடியாம... கேக்காம இருக்கவும் முடியாம... இந்த விஷயத்தை எப்பிடி சமாளிக்கறது... என்ன பண்றதுன்னு தெரியலியே... ஆனா... அபிலாஷ்... என் உயிர். அபிலாஷ் எனக்கு மட்டுமே. எங்களுக்கு நடுவுல வேற யார் வர முடியும்? வந்துட்டா? சினிமா துறையில இருக்கற இவரோட சூழ்நிலைகள், இவரை என்கிட்ட இருந்து பிரிச்சுடுமோ?' சந்தேகத் துளிகள் விஷத்துளிகளாய் சரிதாவின் மனதை அலைக்கழித்தன. அதன் விளைவாய் அவளது கண்களில் இருந்து கண்ணில் துளிகள் துளிர்த்தன.
அவளையும் அறியாமல் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவளது முதுகில் கை வைத்திருந்த அபிலாஷ், திடுக்கிட்டான். அவசரமாய் ஃபோன் பேசி முடித்துவிட்டு, சரிதாவை தன் மடியில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.
''என்னம்மா சரித்... என்ன... ஏன் அழறே... கேட்டபடியே அவளது கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை சுண்டி எறிந்தான். தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
''நீங்க... நீங்க... எனக்கு மட்டும்தான் சொந்தம்.''
''இது என்ன புதுசா? எனக்கு நீ... உனக்கு நான்... கைநடுங்கி, தடி பிடிச்சு நடக்கும் முதுமையிலகூட இது மாறாதே... இப்ப என்ன உனக்கு திடீர்னு இப்பிடி கேக்கன்னு தோணுது? ஏதோ குழப்பத்துல இருக்க. நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு காத்து கூட நுழைய முடியாது. சின்ன வயசுல நீயும் கஷ்டப்பட்டு வளர்ந்தவ. நானும் கஷ்டப்பட்டு வளர்ந்தவன். என்னோட இந்த வளர்ச்சி... என்னை புகழோட உச்சியில ஏத்தினாலும் என் உள்ளத்துல இருக்கற என்னோட சரிதா... நீ... அங்கேயே- என் மனசுக்குள்ளயேதான் இருப்ப. உன்னோட அம்மா, அப்பா ஞாபகம் வந்து மனசு கஷ்டத்துல இருக்கறன்னு எனக்கு புரியுது. பாதுகாப்பு இல்லாத பொண்ணுங்கதான் இப்பிடி எது எதையோ நினைச்சு தடுமாறுவாங்க. உனக்கு பாதுகாப்பா நான் இருக்கும்போது நீ ஏன் குழம்பணும்? தடுமாறணும்? கவலைன்னா என்னன்னு தெரியாம உன்னை வாழ வைக்கிற மனசு எனக்கு இருக்கு, என்னை நம்பி வந்தவள் நீ... உன்னோட வாழ்க்கைக்கு ஆதாரம் நான். ஜீவன் நான். எதைப் பத்தியும் யோசிக்காதே. நிம்மதியா தூங்கு'' என்று சிறகின் மென்மையான தன்மையாக பேசி, அவளைத் தூங்கச் செய்தான்.
அவளைத் தூங்கச் செய்த அபிலாஷின் உணர்வுகள் விழித்துக் கொண்டன. உணர்வுகள் உந்தியதால் எண்ணங்கள் உதயமாகின.
'சரிதாவோட அம்மாவும், அப்பாவும் அகால மரணமடைஞ்ச துக்கத்தோட தாக்கத்துல இப்பிடி ஸ்ட்ரெஸ் ஏறிப் போய் ஏடா கூடமா பேசறாளா? அப்பிடித்தான் இருக்கும், பாவம் சின்ன வயசு. குழந்தைப் பருவத்துல இருந்தே உறவுக்காரங்களோட புறக்கணிப்பும் அவளை பாதிச்சிருக்கு. அவளுக்காகன்னு இருந்த அன்புப் பெற்றோரையும் இழந்தப்புறம் அவ மனசுல எவ்ளவு வேதனை இருந்திருக்கும்? ஆனா... அந்த அன்பை எல்லாம் சேர்த்து வச்சு அவளுக்கு அம்மாவா, அப்பாவா, தோழனா, உறுதுணையா... அனைத்துமாகி நான் அன்பு செலுத்தியும் அடிக்கடி இந்த மாதிரி அவதிப்படறாளே... கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய் வாடிப் போய் கிடக்கற அவளோட மனச்சோர்வை நீக்கி புதுசா பூத்த பூவா மலர வச்சு, சோகமே தீண்டாத மனநிலையை உருவாக்கி அவளை சந்தோஷப்படுத்தணும்ன்னு நினைச்சுதான் டிக்கெட்டெல்லாம் போட்டு வச்சேன். திடீர்னு பழனிவேல் ஸார் புதுப்படம் துவங்கணும்னு சொன்னதுனால அந்தத் திட்டம் தள்ளிப் போயிடுச்சு. புகழை சம்பாதிக்கறேன். பணத்தை சம்பாதிக்கிறேன். என் உயிர் மனைவியோட மன நிம்மதியை என்னால விலை குடுத்து வாங்க முடியலியே...
சரிதா கொஞ்ச நாளா சரி இல்லை. எதையோ நினைச்சு குழம்பறா. அவளோட உயிர்த்தோழி கயல்விழி, அவகிட்ட பேசினதை ஏதோ தற்செயலா சொல்லாம விட்டதுக்கு தேவை இல்லாத கேள்விகள் கேக்கறா. ஒரே கேள்வியை மாத்தி மாத்தி கேட்டுப் பார்க்கறா. உள்ளத்திற்குள் பொங்கிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத அபிலாஷ், மனம் துவண்டான். 'என்ன செய்வது? என்ன செய்வது?' என்ற சிந்தனைகளே திரும்ப திரும்ப அவனது இதயத்தில் மோதியபடி இருந்தன. வர மறுத்த தூக்கத்தை, வலிய வரவழைக்க முயற்சித்தான். அவனது நெஞ்சம், துக்கத்தில் கனத்தது. தூக்கம் தொலைந்து போனதால் அவனது கண் இமைகளும் கனத்துப் போனது. ஆரம்பத்தில் அவதிப்பட்ட அபிலாஷ்... தீர்க்கமாக சிந்தித்தான். 'என் மேல எந்த தப்பும் இல்லை. நான் பெண்களை ஆராதிக்கறவன். அவர்களை மதிப்பவன். வலிய என்னைத் தேடி வரும் பெண்களைக் கூட அறிவுரை சொல்லி அனுப்பறவன். நான் நினைச்சா... எத்தனையோ பெண்கள் கூட எப்பிடி எப்பிடியோ சுத்தியிருக்கலாம். அப்பிடி நினைக்கக் கூட என்னால முடியலியே... என்னை தப்பானவனா சரிதா நினைச்சுட்டா. நான் நல்லவனா இருக்கும்போது எந்தக் காரணமும் இல்லாம, என்னை சந்தேகப்படறா. எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறா. இதுக்கு மேல என்னால என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது. இனிமேல் சரிதாவே என்னைப் புரிஞ்சுக்கிட்டு வரட்டும். நான் ஏன் கஷ்டப்படணும்? துக்கப்படணும்? ஒரு கணவனுக்குரிய எல்லா கடமைகளையும் என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். இனி அவளாவே மனம் தெளியட்டும். இதைப்பற்றியெல்லாம் யோசிச்சு குழம்பிக்கிட்டிருந்தா... என்னோட இசை அமைப்பு பணி பாதிக்கும். சரிதா எப்பிடி எனக்கு முக்கியமோ அது போல இசையும் எனக்கு முக்கியம். சரிதா ஒரு கண். இசை இன்னொரு கண். சரிதா என் உயிர்ன்னா... அந்த உயிரைத் தாங்கற உடல் இசை. அதனால சரிதா என்னைப் புரிஞ்சுக்கற வரைக்கும் இசையே என் சுவாஸமாக, நேசமாக இருக்கும். அவள் மாறுவாள். மாறும் வரை காத்திருப்பேன். துவண்டு போகாமல் இசையில் என் உணர்வுகளை உயிர்ப்பித்துக் கொள்வேன்....' என்று திடமான முடிவு கொண்டான். உள்ளம் தெளிவு பெற்றதும், கண்களில் தூக்கம் தானாகவே வந்தது. அவனைத் தழுவிக் கொண்டது.