உன் மனதை நான் அறிவேன் - Page 42
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 10466
கடற்கரை சாலையின் நடைபாதையில் வந்து கொண்டிருந்தாள் பாவனா. வாழ்க்கையில் வழுக்கி விழுந்து வழி மாறி தடம் புரண்டுவிட்ட தன் விதியை எண்ணி நொந்து கொண்டபடியே நடந்து கொண்டிருந்தாள்.
'அம்மா' என்கிற ஒரு ஜீவன் இல்லாமல் நான் படும் பாடு... என் துன்பங்களை பகிர்ந்து கொள்ள தாயின் மடி இல்லாத கொடுமை! அப்பா இல்லாமல் கூட வளர்ந்து விடலாம், வாழலாம். ஆனா... அம்மா இல்லாமல் வளர்வதும், வாழ்வதும் துயரம் நிறைந்தது. 'அம்மா... எங்களை விட்டுட்டு எங்கோ மேல போயிட்டியே. நான் அழுவதைப் பார்க்க உன் மனம் ஏற்குமா? நீ இருந்திருந்தா நான் ஏன் அழப் போறேன்?! அம்மா... அம்மா...'
பெற்ற தாயின் இழப்பை எண்ணி, மனம் தவிக்க, எதிர்காலம் பற்றிய திகிலை எண்ணித் தகிக்க, சுதாகரின் நாடகத்தில் நடிப்பது எதில் போய் முடியுமோ என்று உள்ளம் துடிக்க, இயந்திர கதியாய் நடந்து கொண்டிருந்தவளின் கவனத்தை திடீரென கலைத்தது ஒரு காட்சி.
சாலையில் எதிர்ப்புறம், வயதான ஒரு அம்மா, தெருவை கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். 'சர்... சர்....' என்று வாகனங்கள் எதையும் கவனிக்காமல் விரைந்து ஓடிக் கொண்டிருந்தன.
சாலையைக் கடக்க முயன்ற அந்த அம்மா, வேகமாக வந்து கொண்டிருந்த காரை கவனிக்கவில்லை. அந்தக் காரை ஓட்டி வந்தவனும் அந்த அம்மாவை கவனிக்கவில்லை. இதை கவனித்துக் கொண்டிருந்த பாவனா, வேகமாக பாய்ந்தோடிச் சென்று அந்த அம்மாவைத் தன் பக்கம் இழுத்து நிறுத்தி காப்பாற்றினாள். அதன் மூலம் நிகழவிருந்த பெரிய விபத்தையும் தவிர்த்தாள். தெருவில் டயர் தேயும் பெரும் ஒலியுடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான் அந்தக் காரை ஓட்டி வந்தவன்.
''வயசானவங்களை ரோட்டை க்ராஸ் பண்ண விட்டுட்டு இப்பிடித்தான் அலட்சியமா இருக்கறதா?'' என்று பாவனாவை திட்டினான்.
''அந்தப் பொண்ணை திட்டாதேப்பா. யார் பெத்த பிள்ளையோ... அவதான் என்னை காப்பாத்தினா...''
''சரி... சரி... பார்த்து போங்க'' என்று அந்த ஆள் காரில் ஏறி கிளம்பினான்.
பயத்தில் இதயம் படபடக்கப் பேசிய மூதாட்டியை ஆறுதல் படுத்தினாள் பாவனா.
''பயப்படாதீங்க... வந்து இப்பிடி உட்காருங்க'' என்று கூறியபடி கைத்தாங்கலாகப் பிடித்து அனைத்து வந்து உட்கார வைத்தாள். பாக்கெட் தண்ணீர் வாங்கிக் குடிக்க வைத்தாள்.
தண்ணீர் குடித்ததும் சற்று தெளிர்ச்சி பெற்ற அந்த மூதாட்டி, நன்றியுடன் பாவனாவைப் பார்த்தாள்.
''நீ நல்லா இருப்பம்மா. அந்தக் கார்ல அடி பட்டிருந்தா... அநாதையா தெருவுல செத்துக் கிடந்திருப்பேன். உண்மையிலேயே அனாதையா இருந்தா பரவாயில்லை. எனக்கு ஒரு மகன் இருக்கான். அவன் இருந்தும் நான் அப்பிடி செத்துப் போயிட்டா... அவனுக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கும்?! ''
''என்னது? மகன் இருந்துமா இப்பிடி தனியா வெளில வர்றீங்க? உங்களைப் பார்த்தா ஏதோ... உடம்புக்கு முடியாத மாதிரி தெரியுதே? ஏன் உங்க மகனோட துணை இல்லாம வெளில வர்றீங்க? ''
''அவனுக்காகத்தான்மா. அவன் சொல்ல சொல்ல கேட்காம தனியா கிளம்பி வந்தேன். என் மகன் ஹோட்டல்ல சர்வரா வேலை செய்யறான். சம்பளம் கம்மிதான். அவனுக்கு இரக்க சுபாவம். தாராள மனசு. உதவி செய்யற குணம். இங்கே கடற்கரையில எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கற அஞ்சலை, பஜ்ஜிக் கடை போடறவ. அவளுக்கு ஏதோ பணக்கஷ்டம்ன்னு சம்பளம் வந்ததும் அதில இருந்து குடுத்தான் என் மகன். அவ அதைத் திருப்பித் தரலை. என் பையனுக்கு மொபெட்ல பெட்ரோல் போடக்கூட காசு இல்லை. வீட்டு வாடகை குடுக்காததுனால வீட்டுக்காரம்மா வந்து கத்திட்டு போனாங்க. அதனால அஞ்சலையைப் பார்த்து பணத்தைக் கேட்கலாமேன்னு கிளம்பி வந்தேன். அவ வீட்டுக்கிட்ட அவளைப் பார்க்க முடியறதில்லை. எண்ணெய், மாவு வாங்க, வாழைக்காய் வாங்கன்னு கடை கண்ணிக்கு போயிடறா. அவளைப் பார்க்க வந்தப்பதான் கார்ல மாட்டிக்கப் பார்த்தேன். புண்ணியவதி நீ காப்பாத்திட்ட...''
அப்போது அவர்களை நோக்கி ஒரு இளைஞன் வந்தான்.
''என்னம்மா நீ? உனக்கு எத்தனை தடவை சொல்றது? உடம்புக்கு முடியாத நிலைமையில தனியா வெளிய வராதன்னு? இப்பதான் அஞ்சலை அக்காவைப் பார்த்து பணம் கேட்டுட்டு வரேன். வர்ற வழியில நீ இங்க இருக்க?! அது சரி... இவங்க யாரு?!''
''படபடன்னு பேசிக்கிட்டே போனா... நான் என்னப்பா சொல்றது? வண்டிக்கு பெட்ரோல் போடக்கூட காசு இல்லாம அல்லாடறியேன்னு நானும் அஞ்சலையைப் பார்க்கத்தான் வந்தேன். தெருவைத் தாண்டி வரும்போது ஒரு கார்ல மாட்டிக்கப் பார்த்தேன். நல்ல வேளையா இந்தப் பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்து காப்பாத்துச்சு...'' என்று கூறிய அந்த அம்மா பாவனாவிடம் திரும்பினாள்.
''உன் பேரைக் கூட கேக்கலியேம்மா?''
''என் பேர் பாவனா...''
''என் பேர் வஸந்த். அம்மாவை சரியான நேரத்துல, விபத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க. தேங்க்ஸ்...''
''என் கண் முன்னால நடக்க இருந்த ஒரு விபத்துல இருந்து இவங்களைக் காப்பாத்தறதுக்கு கடவுள் அனுக்கிரகம் புரிஞ்சிருக்கார். அது சரி, அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னா அவங்க கூட இருந்து பார்த்துக்கக் கூடாதா?...''
''நல்ல கேள்விதான் கேக்கறீங்க. நான் வேலை செய்யற ஹோட்டல்ல ஒரு நாள் லீவு போட்டா... அன்னிக்கு சம்பளத்தை குறைக்கறது மட்டுமில்ல எக்ஸ்ட்ராவா, நூறு ரூபா ஃபைன் போடுவாரு முதலாளி. அம்மாவை வீட்ல படுத்து ரெஸ்ட் எடும்மா. முதலாளிகிட்டே கேட்டுட்டு சீக்கிரமா வந்துடறேன்'னு சொல்லிட்டுதான் போனேன். சொன்ன மாதிரியே பெர்மிஷன் கேட்டுட்டு அஞ்சலை அக்காவை பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம்ன்னு இங்கே வந்தேன். இங்கே என்னடான்னா... இந்தக் கூத்து நடந்திருக்கு...''
''நீங்க கையில காசு இல்லாம... செலவுக்கு கஷ்டப்படறீங்களேன்னு உங்க அம்மா தன்னோட கஷ்டத்தைப் பார்க்காம இவ்ளவு தூரம் வந்திருக்காங்க. நீங்க... அவங்க கஷ்டப்படக் கூடாதேன்னு பெர்மிஷன் போட்டுட்டு வந்திருக்கீங்க. ஆக மொத்தம் உங்க ரெண்டு பேரோட பாசப்பிணைப்புலதான் இந்த விஷயம் நடந்திருக்கு.''
இதைக் கேட்ட வஸந்த்தின் அம்மா விசாலம், பாவனாவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.
''நல்லா புரிஞ்சுக்கிட்டியேம்மா. புத்திசாலியான பொண்ணும்மா நீ...''
''இந்த அளவுக்கு பாராட்டும்படியா நான் இன்னும் எதுவும் பெரிசா செஞ்சுடலை...''
''மத்தவங்களுக்கு உதவி செய்யறதே பெரிய விஷயம்தான்மா. நான் யார்னே உனக்குத் தெரியாது. முன்ன பின்ன முகம் அறியாத எனக்கு ஓடி வந்து உதவி செஞ்ச. என்னோட ஆயுசுக்கும் இதை மறக்கவே மாட்டேன்மா'' பேசிக்கொண்டே போனவளைத் தடுத்தான் வஸந்த்.
''போதும்மா விட்டா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்ப. அவங்க என்ன வேலையா வந்தாங்களோ... அவங்க நேரத்தை நாம ஏன் கெடுக்கணும்? வாம்மா நாம கிளம்பலாம்'' என்றவன், பாவனாவை பார்த்து, ''தேங்க்ஸ்ங்கற வார்த்தை சாதாரணமானது பாவனா. ஆனா அதை சொல்லாமப் போனா ரொம்ப தப்பாயிடும், எங்க அம்மாவோட உயிரைக் காப்பாத்தியதுக்கு ரொம்ப நன்றி...'' என்று கூறிய வஸந்த், பாவனாவின் கையில் இருந்த மொபைலைப் பார்த்தான்.
''உங்க மொபைல் நம்பர் குடுக்கலாம்னா குடுங்க ப்ளீஸ்...''
''ஓ... தரேனே...'' என்ற பாவனா, தன் மொபைல் நம்பர்களைக் கூறினாள்.
தன்னுடைய மொபைலில் அவனது நம்பர்களைக் குறித்துக் கொண்டபின் அவனது அம்மாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். பாவனாவும் பஸ் ஸ்டேன்டை நோக்கி நடந்தாள்.