பறவை வெளியே வருமா - Page 51
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
"ஓ... தாராளமா கூச்சல் போடு. கூப்பிடு அவங்களை... என்னை நீ மாட்டி விட்டா... நான் உன்னை மாட்டி விட்ருவேன். உன் வண்டவாளம், தண்டவாளத்துல ஏறிடும்... அதனால நீ கத்தவும் மாட்ட. யாரையும் கூப்பிடவும் மாட்ட. சும்மா என்னை மிரட்டிப் பார்க்கறியா…? உன்னோட கடந்த கால வாழ்க்கை, உங்க அப்பாவுக்கோ... எங்க அம்மாவுக்கோ... என் அண்ணனுக்கோ தெரிஞ்சா? என்ன ஆகும்ன்னு தெரியும்ல? மாமா, பார்பர் ஷாப் போயிருக்காரு. எங்கம்மா நல்லா தூங்கறாங்க. சும்மா.. ஜஸ்ட்... கொஞ்ச நேரம்... என்னோட ஆசைக்கு இணங்கிட்டினா... உன்னோட கடந்தகால ரகசியம், இறந்து போன காலமா இருக்கும், இல்லைன்னா... உன்னோட எதிர்காலமே சூன்யமாகிடும்..."
"ப்ளீஸ் பிரகாஷ்... என்னை விட்டுடு. நிம்மதியா வாழ விடு. உன் அண்ணன் என் மேல உயிரையே வச்சிருக்காரு... உன்னைக் கெஞ்சி கேட்டுக்கறேன்... என்னை விட்டுடு..."
மேகலா பேசிக் கொண்டிருக்கும் பொழுது பிரகாஷின் மொபைல் ஒலித்தது. நம்பரைப் பார்த்தான். அது சக்திவேலின் நம்பர். பரபரப்புடன் எடுத்து "ஹலோ..." என்றான்.
"பிரகாஷ்... நீ எங்கே இருக்க? காலேஜ்லயா?"
"இ...இ... இல்லைன்னா... வீ... வீட்ல..."
"வீட்லதான் இருக்கியா? ஏன் லேண்ட் லைனை எடுக்கலை? மாமா இல்லையா?"
"மாமா சலூன் போயிருக்கார். அம்மா தூங்கறாங்க. நான்... நான்... டாய்லெட்ல இருந்தேன் அண்ணா. காலேஜ் ப்ரொஃபஸர் இறந்துட்டாரு. அதனால லீவு விட்டுட்டாங்க..."
"சரி...சரி... காலையில நான் ஆபீஸ் கிளம்பும் போது மேகலா தலைவலின்னு படுத்திருந்தா. இப்ப எப்படி இருக்குன்னு கேக்கறதுக்குதான் ஃபோன் பண்ணினேன். யாரும் லேண்ட் லைன் எடுக்கலை. மேகலாவை நீ பார்த்தியா?" சக்திவேல், பிரகாஷின் மொபைல் ஃபோனில் பேசுவது மேகலாவிற்கு கேட்டது.
பிரகாஷ் சமாளித்தான்.
"நான் பார்க்கலை அண்ணா. இதோ நான் மாடிக்குப் போய் பார்க்கறேன்."
'பாவி என்னமாய் சமாளிக்கிறான்.... என்னமாய் நடிக்கறான்?' மேகலா நினைத்தாள்.
பிரகாஷ், மொபைலில் பேசியபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனான்.
43
'தன் நிலைமை இப்படி இருக்கிறதே... திருமணமான பிறகும் இந்த பிரகாஷால் தொல்லை தொடர்கிறதே' என்று நினைத்து, தலையணையில் முகம் புதைத்து கத்தி அழுதாள் மேகலா. அழுதபடியே கட்டிலின் அருகே உள்ள சிறிய மேஜை மீதிருந்த அவளது அம்மா மனோன்மணியின் புகைப்படத்தைப் பார்த்தாள் மேகலா. பார்த்த பிறகு அவளது அழுகை மேலும் அதிகரித்தது.
"அம்மா... என் நிலைமையைப் பார்த்தியாம்மா? இந்தக் கொடுமையை நான் உன்னைத்தவிர வேற யார் கிட்டம்மா சொல்ல முடியும்? உன்கிட்ட மட்டும்தான்மா சொல்ல முடியும். கிராதகன், காமுகன்... பிரகாஷ்ட்ட இருந்து என்னைக் காப்பாத்தும்மா. என் புருஷன் என் மேல வச்சிருக்கற அன்பு எனக்கு ஆயுசு முழுசும் வேணும்மா. இந்த பிரகாஷ் பாவி என்னைப் பாடாப் படுத்தறானேம்மா... எனக்கு சின்னதா தலைவலி வந்தாக்கூட துடிச்சுப் போற என் புருஷனோட மனசு எப்பவும் நிம்மதியா இருக்கணும்மா. என்னைக் காப்பாத்தும்மா... என்னைக் காப்பாத்தும்மா" அம்மாவிடம் பிராத்தனை பண்ணியபடியே அழுத களைப்பில் மீண்டும் கண் அயர்ந்தாள்.
சுபிட்சாவின் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் விழுந்து விழுந்து செய்து கொடுத்தான் பிரகாஷ். சுபிட்சாவைத் தன் பக்கம் இழுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ... அத்தனையும் செய்தான். இக்காரணத்தால் சுபிட்சாவிற்கு பிரகாஷ் மீது அன்பும், மதிப்பும் உயர்ந்தது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மேகலாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. பிரகாஷ் விரிக்கும் வலையில் தன் தங்கை சிக்கி விடக்கூடாதே என்ற தவிப்பில் துவண்டாள் மேகலா. தங்கையின் எதிர்காலம் பற்றிய பயத்தினால் அவ்வப்போது, மௌனமாக ஆகிவிடும் மேகலாவை கவனிக்கத் தவறவில்லை சக்திவேலும், சுபிட்சாவும்.
"என்ன மேகலா... திடீர் திடீர்னு மௌனசாமியா மாறிடறே... ஏதோ..... ஒரு யோசனைக்குப் போயிடறே... என்ன விஷயம்?" சக்திவேல் இவ்விதம் கேட்கும் பொழுது எதையாவது காரணம் சொல்லி சமாளிப்பாள் மேகலா. அடிக்கடி சக்திவேல் இப்படிக் கேள்வி எழுப்புவதும் அதற்கு மேகலா மழுப்புவதுமாக பதில் கூறுவதும் வழக்கமாக நிகழ்ந்து வந்தது.
மேகலா 'உம்' என்று இருக்கும் பொழுது 'அக்காவுக்கு பழைய ஞாபகம் வந்துருச்சோ... குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாளோ?' என்று நினைப்பாள் சுபிட்சா. நினைப்பதை வெளிப்படையாகக் கேட்கவும் முடியாமல் கேட்காமல் இருக்கவும் முடியாமல் குழம்பினாள் சுபிட்சா.
யாரிடமும், எதையும் வெளிப்படையாகப் பேச முடியாத மேகலா, கயவனான பிரகாஷை சுபிட்சா திருமணம் செய்யக் கூடாது என்பதைத் தெளிவாக சுபிட்சாவிற்கு ஒரு கடிதத்தில் எழுதினாள். நேரில் பேசினால், ஏதாவது சமாளிப்பாக பேசி பிரகாஷ் பற்றிய உண்மைகளை நம்ப மறுத்து விடுவாள், என்ற யோசனையில் கடிதமாக எழுதினாள் மேகலா. நாளுக்கு நாள் பிரகாஷினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போனதால், மனதில் உள்ளதை வார்த்தைகளில் கொட்டி எழுதி வைத்து, தற்காலிக நிம்மதி அடைந்தாள்.
44
ஒரு நாள் காலை நேரம். வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட வெகு சீக்கிரமாக எழுந்து உட்கார்ந்திருந்த கமலத்தைப் பார்த்தாள் மேகலா.
"என்ன அத்தை... ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டீங்க?"
"லேசா நெஞ்சு வலிக்குதும்மா...ராத்திரியே வலி இருந்துச்சு. அவசரமா போடற மாத்திரையை போட்டுட்டு தூங்கலாம்னு பார்த்தேன். ஆனா வலி விடலை..."
"இத்தனை பேர் இருக்கோம். யாரையாவது எழுப்பி இருக்கக் கூடாதா அத்தை? என்ன அத்தை நீங்க..." என்ற மேகலா, அவசரமாக சக்திவேலை அழைத்தாள். சுபிட்சாவை எழுப்பினாள். பால் வாங்கச் சென்றிருந்த மூர்த்தி வந்ததும் தகவலைக் கூறினாள்.
சக்திவேல் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தான். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. கமலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.
கமலம் மருத்துவமனையில் அவசரப்பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டாள்.
டாக்டரை சந்தித்து பேசினார்கள் மேகலாவும், சக்திவேலும்.
"பயம் ஒண்ணுமில்லையே டாக்டர்..." மேகலா கேட்டாள்.
"ஐ.ஸி.யு.ல இருந்து வெளியே வர்றதுக்கே இன்னும் ஒரு வாரம் ஆகும்மா. எங்க ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் க்ரூப் உங்க அத்தைக்கு பை-பாஸ் சர்ஜரி பண்ண வேண்டி இருக்கும்னு அபிப்பிராயப்படறாங்க...."
"பை பாஸ் சர்ஜரியா டாக்டர்? " அதிர்ச்சியுடன் கேட்டாள் சக்திவேல்.
"ஆமா. ஆனா அதை நாளைக்குதான் டிஸைட் பண்ணுவோம். சர்ஜரிக்கு டைம் இருக்கு. அவசரம் இல்லை.."
"சரி டாக்டர். அதுக்கப்புறம் அத்தை பழையபடி நல்லா இருப்பாங்கள்ல?" மேகலா கேட்டாள்.