பறவை வெளியே வருமா - Page 50
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
முள்ளங்கி சாம்பார் கேட்டார். முள்ளங்கி, தக்காளியெல்லாம் வாங்கிட்டேன். சமையல் கட்டுல மளிகை சாமான்ல சாம்பார் பொடி இல்லை. உங்க சாம்பார் பொடி கொஞ்சம் தரேளா? மாமி..."
"அதுக்கென்ன மீனா... இதோ எடுத்துத்தரேன்..." கமலம், சமையலறை சென்று சாம்பார் பொடி எடுத்துவந்தாள். மீனா மாமியிடம் கொடுத்தாள்.
கமலம் மாமி வீட்டு சுவரில் புதிதாக, சக்திவேல், மேகலா திருமண புகைப்படம் அழகிய சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்ததை மீனா மாமி பார்த்தாள்.
"பொருத்தமான ஜோடி கமலம் மாமி. உங்க மகளா வளர்த்த பொண்ணு மேகலாவை மருமகளா அழைச்சுட்டீங்க. எப்படிப் பார்த்தாலும் மகள், மருமகள்... இந்த ரெண்டு உறவுகள்லயும் மகள்ங்கற பாசமான ஸ்தானம் இருக்கு. மேகலா மாதிரி ஒரு நல்ல பொண்ணு மருமகளா கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணி இருக்கணும். நீங்களும் வயசால மட்டுமில்ல மனசாலயும் ரொம்பப் பெரியவா. நான் ஏன் இப்படி சொல்றேன் தெரியுமா...? ஒரு ஆண் பையனைப் பெத்து வளர்த்துட்டா போதும். இந்த அம்மாக்கள் பெண் வீட்டார்ட்ட சீர், செனத்தின்னு வரதட்சணையா குடுன்னு பெரிய லிஸ்ட் குடுப்பா. நீங்க எதுவுமே கேட்கலியாமே? நிஜமாவே நீங்க பெருந்தன்மையானவாதான் கமலம் மாமி..."
"ஐயய்யோ... வரதட்சணையாவது ஒண்ணாவது... இந்த மாதிரி கேட்டு வாங்கறது கேவலமான விஷயம்னு நினைக்கறவ நான். அவரவர் கை, கால் கொண்டு பிழைச்சு எது வேணுமோ வாங்கிக்கணுமே தவிர பொண்ணு வீட்ல கேட்டு வாங்கறது பிச்சை எடுக்கறதுக்கு சமம். ஒரு வீட்ல பிறந்து வளர்ந்த பொண்ணு, நமக்கே நமக்குன்னும், நம்ப குடும்பத்துக்காகவும் பிறந்த வீட்டை விட்டு தன் தாய், தகப்பன், உடன் பிறப்புகளை விட்டுட்டு இன்னொரு குடும்பத்து ஆட்களை 'தன்னோட உறவுகள் இனி இவங்கதான்'னு புகுந்த வீட்டுக்கு வந்து, புருஷன் குடும்பத்தோட வந்து ஐக்கியமாகறாளே... அது என்ன சாதாரண விஷயமா? தங்களோட பொண்ணையே தானமா குடுக்கற பெத்தவங்ககிட்ட... தங்கம் குடு, பொன் நகை குடு அதைக்குடு, இதைக்குடுன்னு கேக்கறது நியாயமே இல்லை..."
"ஒரு மகள் மருமகளா வர்றதைப்பத்தி நல்லா அழகா எடுத்து சொல்றீங்க கமலம் மாமி... ஆண் பையன்களைப் பெத்த எல்லாத் தாய்மார்களும் உங்களைப் போலவே பெருந்தன்மையா இருந்துட்டா... கேஸ் சிலிண்டர் வெடிக்காது... மருமகள்கள் தற்கொலை நடக்காது..."
"அல்பாயுசுல என் புருஷன் போய் சேர்ந்துட்டாலும், எங்க அண்ணணோட ஆதரவுல, என் மகன்களோட அன்புல, எங்க அண்ணணோட மகள்கள் பாசத்துல நிம்மதியா இருக்கேன். இந்த நிம்மதி நிலைச்சு இருந்தா அது போதும் மீனா எனக்கு..."
"உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது கமலம் மாமி. சக்திவேலும், மேகலாவும் வந்ததும் சுத்திப் போடுங்கோ, என் கண்ணே பட்டுடும் போலிருக்கு. கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாதும்பாங்க..."
"பொறாமைக்காரங்க கண்ணுதான் கொள்ளிக்கண்ணா எரிக்கும். நீ எங்களைப்பத்தி பெருமையா நினைக்கறவ. மதிக்கறவ, உன்னோட கண்ணெல்லாம் ஒண்ணும் பண்ணாது."
"சரி மாமி. குக்கர்ல பருப்பு போட்டு 'சிம்'ல வச்சிட்டு வந்தேன். நான் போய் சமையலை கவனிக்கிறேன். வரேன் மாமி..."
சாம்பார் பொடி கிண்ணத்துடன் மீனா மாமி கிளம்பினாள்.
42
காலையில் எழுந்திருக்கும் பொழுதே மேகலாவிற்கு தலைவலியாக இருந்தது. கமலத்திற்கு உதவியாய் சில வேலைகளை முடித்து விட்டு மாடி அறைக்கு வந்து சக்திவேலுக்கு பணிவிடைகள் செய்தபின் அவனிடம் தனக்கு தலைவலிப்பதாகக் கூறினாள் மேகலா.
"என்னம்மா... தலைவலிக்குதா? ஏன் இவ்வளவு நேரமா என்கிட்ட சொல்லலை?" என்று அன்பாக கோபித்துக் கொண்டான், தைலத்தை எடுத்து வந்து தேய்த்து விட்டான். மேகலாவின் முகம் வாடி இருப்பதைக் கண்டு துடித்துப் போய் விட்டான்.
"தலைவலிதானேங்க? என்னோட தலையே போயிட்ட மாதிரி துடிக்கறீங்க…?"
"இப்படியெல்லாம் பேசாதே. எனக்குக் கஷ்டமா இருக்கு. இன்னிக்கு நீ லீவு போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு. குளிக்க வேண்டாம். குளிச்சா தலைவலி அதிகமாயிடும். அம்மாகிட்ட சுடச்சுட காபி போட்டு வாங்கிட்டு வரேன். சூடு ஆறாம குடி."
"என் அன்பான புருஷரே... காபியெல்லாம் குடிச்சாச்சு. உங்க டிபனும் ரெடியாயிடுச்சு. நீங்க சொன்னபடி ஆபிசுக்கு லீவு போட்டுடறேன். இப்ப நீங்க குளிக்கப் போறீங்களா?" கிண்டலாக கேட்ட மேகலாவை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டான் சக்திவேல்.
"எழுந்திருக்கும் போதே தலைவலிங்கறே? பின்னே எதுக்கு கீழே போய் வேலை செஞ்சே? 'மாமியாரே ஒரு காபி'ன்னு குரல் குடுத்தா உங்க அத்தை காபியோட வரப் போறாங்க. அவ்வளவுதானே..."
"என்னால முடிஞ்ச வேலையை அத்தைக்கு செஞ்சு குடுத்தேன். நீங்க குளிச்சிட்டு கீழே போய் அத்தைகிட்ட கேட்டு சாப்பிடுங்க. லன்ஞ்ச் பாக்ஸை வாங்கிக்கோங்க..." என்று கூறிய மேகலா படுத்துக் கொண்டாள்.
குளித்து விட்டு வெளியே வந்த சக்திவேல், ஆபீஸ் போவதற்குத் தயாராகிய பின், மேகலாவின் அருகே வந்தான்.
"மேகாம்மா..." அன்பு ததும்ப அழைத்தான்.
"என்னம்மா... தலைவலி இன்னும் விடலியா? ஒரு நாளும் இப்படி அசந்து தூங்கமாட்டியே..."
"கொஞ்ச நேரம் நல்ல தூங்கி முழிச்சா தலைவலி சரியாகிடும்ங்க.”
"சரிம்மா. நான் கிளம்பறேன். தலைவலி விடலைன்னா என்னோட மொபைல்ல கூப்பிடு. நான் பெர்மிஷன் போட்டுட்டு உன்னை வந்து ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன். பதினோரு மணிக்கு ஒரு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதை முடிச்சுட்டா... லீவு கூட போட்டுக்கலாம்..."
"அதெல்லாம் வேண்டாம்ங்க, தூங்கினா சரியாயிடும். இல்லைன்னா நான் ஃபோன் பண்றேன்."
"சரிம்மா. நான் சாப்பிட்டுட்டு கிளம்பறேன்" என்றவன், குனிந்து மேகலாவின் கன்னத்தில் முத்தமிட்டான். தன் ப்ரீஃப் கேஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் போனான். மேகலா கண் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் தூங்கியபின், திடீரென அவளது முகத்தில் சூடான மூச்சுக் காற்று படுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள். எதிரே, பிரகாஷ் நின்றிருந்தான். அவளைத் தொட்டணைத்து இழுத்தான்.
"ச்சீ... நீயா? அண்ணிக்காரி தனியா இருக்கற நேரம் ரூமுக்குள்ள வந்து இப்படி நிக்கறியே... வெட்கமா இல்லை உனக்கு?"
"எனக்கு வெட்கம் இல்லை. அதே மாதிரி உனக்கும் வெட்கம் இருக்கக் கூடாது... வா..."
"ச்சீ நாயே..." மேகலா சீறினாள்.
"நான் நாயா? நாய் என்ன பண்ணும்? கடிக்கும்... இதோ இப்ப... உன்னை..."
"டேய் பிரகாஷ்... இப்ப நான் கூச்சல் போட்டு அத்தையையும், அப்பாவையும் கூப்பிட்டிருவேன்... ஜாக்கிரதை..."