கண்ணால் பார்த்த சாட்சி - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6821
"இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் நூறு போண்டா சாப்பிடுவார்கள். ஒரு ஐம்பது கேக்குகளையும்... இவர்கள் ஏதாவது ஹோட்டலில் போய் சாப்பிடக்கூடாதா? இப்படி வீடு வீடாக ஏறி இறங்கி சாப்பிடணுமா?"
சிறுவன் எதுவும் பேசவில்லை. அதனால் சமையல்காரன் மீண்டும் தொடர்ந்து சொன்னான்: "தர்மம் செய்ததென்னவோ நல்லதுதான். ஆனால், இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த பன்றிக் குட்டிகளுக்கு அல்ல!" சமையல்காரன் சிரித்தான்: "ஓ... இதையெல்லாம் அம்மாவிடம் பற்ற வைத்திடாதீங்க... என் வேலையில் மண்ணை அள்ளிப் போட்டுடாதீங்க. உங்களுடைய பணம்... உங்களுடைய போண்டா... எனக்கு என்ன இழப்பு?"
சமையல்காரன் தரையில் ஒரு பலகையைப் போட்டு அதன்மீது உட்கார்ந்தான்.
"எனக்கு நீங்கள் எதைக் காட்டினால் என்ன... செத்தால் என்ன... சாப்பிட்டால் என்ன...?"
சிறுவன் பால் கோப்பையை தரையில் வைத்துவிட்டு எழுந்தான். அதே நேரத்தில் டுக்காராம் கையில் சுத்தியலுடன் சமைலறைக்கு வந்தான். சிறுவனைப் பார்த்ததும் அவன் சிறிது நேரம் அமைதியாக நின்றான். தன்னை அவன் மிகவும் கவனம் செலுத்திக் கூர்ந்து பார்க்கிறான் என்பதை சிறுவன் உணர்ந்து கொண்டான். வரவேற்பரையிலிருந்து ஏதோ ஒருபெண்ணின் சொற்பொழிவு காதில் விழுந்தது.
"ஒரு சிங்கத்தைவிட கொசுவிற்கு நாம் பயப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமம் எவ்வளவு பேருக்கு அது மலேரியா காய்ச்சலை அளித்துக் கொண்டிருக்கிறது!"
"பாபா, உங்க வீட்டில் இன்றைக்கு தேநீர் பார்ட்டி இருக்கிறதா? எதற்கு இவ்வளவு அதிகமாகப் பெண்கள் வந்திருக்கிறார்கள்?" டுக்காராம் கேட்டான்.
சிறுவன் தற்போதைக்கு தன்னுடைய பயத்தை மறந்துவிட்டான். அவன் சிரித்தான். டுக்காராம் அவனுடைய கையைப் பிடித்து அவனைப் பார்த்து சீட்டி அடித்தான்.
"பாபா, உனக்கு என்னைப் பார்த்து என்ன பயம்?"
"எனக்கு பயமில்லை."
"நான் வந்தப்போ ஏன் பயந்து அழுதாய்? நான் பிடித்து தின்றுவிடுவேனா? என் வயிற்றில் குழந்தைகள் இருக்கிறார்களா?" டுக்காராம் தன்னுடைய நீல நிற சட்டையை உயர்த்தி தன் வயிற்றைக் காட்டினான். அவனுடைய சிரிப்பைப் பார்த்து சமையல்காரன் சொன்னான்:
"பல் வைக்கிறப்போ, தங்கத்தில் வைக்கணும். அப்படியென்றால் தான் பார்க்க நல்ல இருக்கு!"
"உங்களுக்கு மதராஸி மொழி மட்டும்தான் தெரியுமா?" டுக்காராம் சமையல்காரனிடம் கேட்டான். சமையல்காரன் பற்களைக் காட்டி சிரித்தான். எதுவும் கூறவில்லை. ஆனால் ஒரு கண்ணாடிக் குவளையில் தேநீர் எடுத்துக் கொண்டு வந்து அவன் டுக்காராமிற்குக் கொடுத்தான்.
"பாபா... இங்கே வா. என் மடியில் உட்காரு!"
டுக்காராம் சொன்னான். அவன் பெஞ்சின் ஒரு ஓரத்தின் உட்கார்ந்து தேநீரைப் பருகினான்.
"பாபா, உனக்கு என்னைத் தெரியவில்லை. எனக்கு நீ யார் என்று தெரியும். இதற்கு முன்பு என்னைப் பார்த்திருக்கிறாயா?"
சிறுவன் சொன்னான்: "இல்லை."
"இதோ... இந்த கொய்யாப் பழத்தை எடுத்துக்கோ. என் வீட்டிருக்கும் கொய்யா மரத்தில் பழுத்தது. உப்பைச் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்!"
சிறுவன் அதை வாங்கித் தன்னுடைய பாக்கெட்டிற்குள் போட்ட போது, டுக்காராம் கேட்டான்: "பாக்கெட்டில் பணம் இருப்பது மாதிரி தெரியுது!"
டுக்காராம் சிறுவனின் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துத் தேடினான். பால்காரனின் பதக்கத்தையும் இரண்டு பளிங்கு குண்டுகளையும் அவன் வெளியே எடுத்தான்.
"இது எங்கே இருந்து கிடைத்தது, இது பால்காரனின் பதக்கம் தானே?" சமையல்காரன் ஆச்சரியத்துடன் கேட்டான். ஆனால், டுக்காராம் எதுவும் கூறவில்லை. சிறுவன் எந்த விதமான அசைவும் இல்லாமல் நின்று கொண்டு டுக்காராமின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்களின் நிறம் மேலும் இருள்வதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவன் வேகமாக சமையலறையை விட்டு வெளியே ஓடினான்.
"நாம் இந்த அரக்கர்களை, இந்த ரத்தம் குடிப்பவர்களை முழுமையாக அழிக்காவிட்டால், அவர்கள் நம்மை என்றைக்காவது அழித்துவிடுவார்கள். சகோதரிகளே, கொசுக்களை நாம் கொன்றே ஆக வேண்டும். நாம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவர்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி, கொசுக்களைக் கொல்ல வேண்டும்."
உயரம் குறைவான பெண் வரவேற்பறையில் எழுந்து நின்று கொண்டு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தாள். சிறுவனைப் பார்த்ததும் ஒன்றோ இரண்டோ பெண்கள் தலையைத் திருப்பிக் கொண்டு சிரித்தார்கள். சிறுவன் அவர்களைப் பார்த்து சிரிக்கவில்லை. அதன் சுவரின் மீது சாய்ந்து நின்று கொண்டு டுக்காராம் கொடுத்த கொய்யாப் பழத்தைத் தின்று கொண்டிருந்தான். தன்னை டுக்காராம் கொல்வானா என்று அவன் இடையில் அவ்வப்போது தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். தன்னை எதற்காகக் கொல்ல வேண்டும்? தன்னுடைய பாக்கெட்டிற்குள் இருக்கும் பதக்கம் வேண்டும் என்பதற்காகவா? தன்னுடைய வெள்ளை நிறத் துப்பாக்கியை அடைவதற்காகவா? எதற்காக தன்னைக் கொல்ல வேண்டும்?
'ஒரேயடியில் கொல்ல வேண்டும். டி.டி.டி.-யை பயன்படுத்திக் கொல்வதுதான் சிறந்தது!'
கொய்யாப்பழம் சரியாகப் பழுத்திருக்கவில்லை. எனினும், தன் சுவை சிறுவனுக்குப் பிடித்திருந்தது-. அவன் அதை முழுமையாகத் தின்று முடித்த நேரத்தில், அவனுடைய தாய் எழுந்து அவனுக்கு அருகில் வந்து சொன்னாள்: "மகனே, நீ லலிதாவின் வீட்டிற்குப் போய் விளையாடு. இங்கே இப்படி நிற்க வேண்டாம்."
டுக்காராம் சமையலறையில் அப்போதும் உட்கார்ந்து கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சிறுவன் நினைத்தான். அதனால் அவன் சொன்னான்: "சரி... நான் தனியாகப் போய்க் கொள்கிறேன். சமையல்காரனை அனுப்பி வைக்க வேண்டாம்."
அவன் வாசலுக்கான கதவைத் திறந்து வெளியே வந்தான். வெயில் மேற்குப்பக்க வாசலுக்கு வந்து விட்டிருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்திருக்கும் சிறிய மஞ்சள் நிற பட்டாம்பூச்சிகள் தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் அவற்றைப் பார்க்க நின்று கொண்டிருக்காமல் வேகமாக நடந்து சென்று படிகளுக்குச் செல்லும் கதவைத் திறந்தான். சாலையில் ஒன்றோ இரண்டோ வேலைக்காரர்கள் நாய்களுடன் நடந்து கொண்டிருந்தார்கள். நீல நிறத்தில் ஆடை அணிந்த ஒருவனைக் கூட அவன் பார்க்கவில்லை. டுக்காராம் சமையலறையில் இருக்க வேண்டும். அவன் வேகமாக நடந்து லலிதாவின் வீட்டை அடைந்தான்.
லலிதாவின் தாய் அவனைப் பார்த்ததும் சொன்னாள்: "அங்கு அருமையான சொற்பொழிவுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன போலிருக்கிறதே! மிசஸ். பிள்ளையின் மலேரியா சொற்பொழிவு இருக்கும் என்ற விஷயம் தெரிந்துதான் நான் இந்த முறை வரவில்லை. நான் அந்தச் சொற்பொழிவை இந்த வருடம் ஐந்து முறை கேட்டுவிட்டேன்"
லலிதா பழைய சைக்கிளின் மீது ஏறி தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.
"நான் இதன் மீத ஏறுவதற்கு ஒப்புக் கொள்வதில்லை!"