கண்ணால் பார்த்த சாட்சி - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6821
கண்களை அந்த கறுத்த முகத்திலிருந்து எடுத்தால், உடனே மரணம் வந்து சேர்ந்துவிடும் என்று பயந்து சிறுவன் அதே இடத்தில் இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்திருந்தான். சமையல்காரன் கழிவறையிலிருந்து காலியான டால்டா டின்னுடன் திரும்பி வந்தபோது கூட, டுக்காரா¬மைப் பார்த்தவாறு பதைபதைப்புடன் சிறுவன் தரையில் உட்கார்ந்திருந்தான். சமையல்காரனைப் பார்த்ததும், டுக்காராம் சிரித்தான்.
"இது யாருப்பா ஒரு தங்கப்பல் வைத்திருக்கும் மனிதன்! ஒவ்வொருவரும் இந்த மாதிரி சமையறைக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்? வெளியே போ." சமையல்காரன் சொன்னான். டுக்காராமிற்கு மலையாளம் தெரியாமல் போனது நல்ல விஷயம் என்று சிறுவனுக்குத் தோன்றியது. இல்லாவிட்டால் சமையல்காரனை அப்போது அவன் வெட்டித் துண்டு துண்டாக்கி இருப்பான்.
"அம்மா எங்கே குழந்தை?" டுக்காராம் கேட்டான்.
சிறுவனால் ஒரு சொல் கூட கூற முடியவில்லை. சமையலகாரன் அவனுடைய கைகளைப் பிடித்து எழுந்திருக்க வைத்தான்.
"யாரோ வந்திருக்காங்கன்னு சொல்லுங்க. தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்ப வேண்டாம். பேப்பர் வாங்கும் ஆள் மாதிரி தெரியுது."
சிறுவன் உள்ளே சென்றான். தன் தாயின்அறையை அடைந்த போது, அவள் கண் விழித்துக் கொண்டு படுத்திருந்தாள்.
"சமையலறையில் யார் இருக்குறாங்க?"
"அம்மா, நீங்க அங்கே போக வேண்டாம். அங்கே ஒரு திருடன் இருக்கிறான்." சிறுவன் தன் தாயின்அருகில் போய் உட்கார்ந்தான். தாய் சிரித்தாள். "திருடர்கள் இப்படி மதிய நேரத்தில் வருவார்களா? அதையும்தான் பார்ப்போமே!" என்று அவள் சொன்னாள். அவள் உரத்த குரலில் பேசுவது ஆபத்தானது என்று நினைத்து சிறுவன் வேகமாக சொன்னான்:
"அம்மா, நீங்க என் அருகில் படுக்கணும். எனக்குத் தூக்கம் வருது."
"இப்போது உறங்குவதற்கு படுப்பதா? தேநீர் குடிப்பதற்கான நேரமாச்சே இது!" சிறுவனின் தாய் எழுந்து அறையின் சாளரத்தின் திரைச்சீலைகளை அகற்றினாள். சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். "மூன்று மணி... நாலு மணி... நாலே கால்... நாலே கால் ஆகிவிட்டது. இப்போ தூங்குவதற்குப் படுப்பதா?"
தன் தாய் புடவையை எடுத்து அணிவதையும் கண்ணாடிக்கு அரகில் போய் நின்று கொண்டு கூநத்லைச் சரிபண்ணுவதையும் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கட்டிலில் போய் படுத்தான். அவனுடைய தாய் ஒரு பஞ்சுத் துண்டை குளிர்ந்த நீரில் நனைத்து, அதைக் கொண்டு முகத்தைத் துடைத்தாள். தொடர்ந்து இன்னொரு பஞ்சுத் துண்டால் முகத்திற்கு பவுடர் இட்டாள்.
"அம்மா, நீங்க ஏன் உங்களை அழகு படுத்திக் கொண்டிருக்கிங்க?" அவன் கேட்டான். தன் தாய் வீட்டை விட்டு இப்போது போனால், டுக்காராம் தன்னை கொன்றுவிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பான் என்ற பயம் அவனுக்கு இருந்தது. "இன்று... இங்கே மகளிர் சங்கத்தின் கூட்டம் இருக்கிறது. இரண்டு மூன்ற மாதங்களுக்கு முன்பே ஒரு தேநீர் பார்ட்டி இருந்தது அல்லவா? அதைப் போன்றதுதான். உனக்கு போர் அடித்தால் லலிதாவின் வீட்டில் போய் விளையாடு." அவள் சொன்னாள்.
"இல்லை... நான் இங்கேயே இருக்கிறேன்."
"மகனே, உனக்கு லலிதாவைப் பிடிக்கும் அல்லவா?"
"ம்..."
"பிறகு என்ன?"
"நான் போக மாட்டேன்!"
அவனுடைய தாய் மீண்டும் அவனை வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். லலிதாவின் வீட்டிற்கு என்றில்லை. எங்குமே போக வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய தாய் அறைக்கு வெளியே வந்தாள். சிறிது நேரம் கழித்து குளியலறையிலிருந்து சிறுவனின் தாய், டுக்காராம்- இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடலை சிறுவன் கேட்டான்.
"இதை மட்டுமே சரி பண்ண வேண்டும். இது ஒரு வருட காலமாக லூஸாக இருக்கிறது."
"அதை நான் அரை மணி நேரத்தில் சரி பண்ணுகிறேன், மேம் ஸாஹிப். பிறகு... வேறொன்றுமில்லையே!"
"இல்லை."
சிறுவனின் மனதில் பல வகைப்பட்ட இருண்ட சிந்தனைகளும் நகர்ந்து கொண்டிருந்தன. டுக்காராம் தன்னைக் கொல்வதற்காகவா வந்திருக்கிறான்? இல்லாவிட்டால், குழாயைச் சரி பண்ணுவதற்கா? அவன் அடர்த்தியான நீல நிறத்தைக் கொண்ட பேன்ட்டையும் சட்டையையும் அணிந்திரந்தான். அதனால் உண்மையாகவே அவன் ஒரு மெக்கானிக்காக இருக்க வேண்டும். பால்காரனைக் கொல்வதற்கு அவன் உதவினான். ஆனால்...
வெளியே கதவை யாரோ தட்டினார்கள். சமையல்காரன் ஓடுவதையும் கதவைத் திறப்பதையும் சிறுவன் பார்த்தான். அவன் எழுந்து வாசலுக்குச் சென்றான்.
அவனுடைய தாயின் தோழிகள் சிலர் வந்திருந்தார்கள் அவர்களில் உயரம் குறைவாக இருந்த ஒரு பெண் கையில் சில தாள்களைப் பிடித்திருந்தாள். அவளுடைய முகத்தில் மட்டும் ஒரு கெட்ட வெளிப்பாடு தெரிந்ததால், அந்தக் கூட்டத்தின் தலைவி அவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு சிறுவன் வந்தான். அவன் ஒரு சாளரத்தின் பீடத்தின் மீது ஏறி உட்கார்ந்தான். வந்திருந்தபெண்கள் பல வகையான விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அசைகின்ற உதடுகளையும் பற்களையும் சிரிப்பையும் பார்த்துக் கொண்டே அவன் நினைத்தான்- அவர்களையெல்லாம் பார்த்துவிட்டு, டுக்காராம் பயந்து போய் திரும்பிப் போகாமல் இருக்க மாட்டான் என்று. அந்த நினைப்பு அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது.
"மழை பெய்துவிடப் போகிறதோ என்று பயந்து நான் ஜார்ஜெட் புடவையை அணியவில்லை."
"நான் வாங்கிய நைலான் புடவை சுருங்கிப் போய்விட்டது. இந்த வகையான முட்டாள்தனத்திற்கு..."
"அய்யோ... லீலா, எதற்கு இவ்வளவு அதிகமான பலகாரங்கள்!"
"ஆறு மணிக்கு நான் திரும்பிச் செல்ல வேண்டும். குழந்தைக்கு கோரா கொடுக்கணும். ரமாவிற்கு அது மட்டும் தெரியாது."
"அப்படிச் சொன்னது நன்றாக இல்லை. இவ்வளவு காலமாக ரமாவின் மிகவும் நெருங்கிய தோழியாக இருந்துவிட்டு, இவங்க இப்படி... ஓ... ஹோஹொஹொ... ஓ...ஹொஹொ... ஹோ..."
அவர்களின் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு, ஒரு முறை சமையல்காரன் கதவு வரை வந்துவிட்டான். தொடர்ந்து தன்னுடைய எல்லா பற்களையும் வெளியே காட்டியவாறு சொன்னான்: "குழந்தை... உள்ளே வந்து பால் குடிங்க... அது ஆறிக் குளிர்ந்திடுச்சு!"
சிறுவன் அசையவில்லை. குளியலறையிலிருந்து கழற்றியதாலும் திருகியதாலும் உண்டான சத்தம் அவனுடைய காதுகளில் விழுந்தன.
"குழந்தை... காது கேட்கவில்லையா? பால் குடிக்க வேண்டாமா?" சமையல்காரன் அவனக்கு அருகில் வந்து கேட்டான். பெண்கள் எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து தேநீர் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அன்னை எல்லாருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். உயரம் குறைவான பெண் தாள்களை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து ஒரு கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சமையல்காரன் சிறுவனை சமையலறைக்குத் தூக்கி எடுத்துக் கொண்டு சென்றான். அங்கு பெஞ்சின் மீது உட்கார்ந்து பால் குடிக்கும்போது, சமையல்காரன் அவனிடம் சொன்னான்.