கண்ணால் பார்த்த சாட்சி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6821
தங்கப்பல் வைத்திருந்த மனிதன் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு புட்டியை எடுத்து வெளியே வைத்தான். உயரம் குறைவாக இருந்த இன்னொரு மனிதன் அதில் ஏதோ நீரை ஊற்றி கார்க்கால் மூடி, திரும்பக் கொடுத்தான்.
"மூணு நாட்கள் தர வேண்டும்." டுக்காராம் சொன்னான்.
"அந்த வகையில் ஒரு நேரடி சாட்சியும் இல்லாமல் போய்விடும். பிறகு... தற்போதைக்கு நாம் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. மழைக்காலம் முடிவது வரை இந்த வீட்டை யாரும் இடிப்பதற்கு வரப் போவதில்லை."
கறுத்தத் தொப்பி அணிந்திருந்த மனிதன் தரையில் இருந்து எழுந்து அறைக்கு வெளியே சென்றான். அவனுக்குப் பின்னால் ஒவ்வொரு தோல் பையையும் எடுத்துக் கொண்டு எஞ்சியிருந்தவர்களும் வெளியே சென்றார்கள். சிறுவன் சுவரின்மீது மறைந்து நின்று கொண்டு அவர்கள் படிகளில் இறங்கி மறைவதைப் பார்த்தான். அந்த அறையில் அப்போதும் பால்காரனின் ரத்தத்தின் வாசனை இருந்தது. ஆனால், பால்காரனின் சட்டையோ வேட்டியோ அங்கு இல்லை. பால்காரனை மரப்பெட்டிக்குள் அடைத்து அவர்கள் வெளியே கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று சிறுவன் நினைத்தான். அவன் அந்த தரையில் காலடிகள் நன்கு பதியும் வண்ணம் நடந்தான். செருப்புகள் அணியாமல் சொர சொர என்று இருக்கக் கூடிய தரையிலும் மண்ணிலும் நடப்பது என்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருந்தது. அவனுடைய தாய் அவன் காலடிகளைப் பார்த்துக் கொண்டு சத்தம் போட்டுக் கூறுவதுண்டு: "இங்கே வந்து பாருங்க... இவனுடைய பாதங்களை... சலவை செய்பவனின் பாதங்களைப் போல சொர சொர என்று இருக்கின்றன."
"நீ சலவை செய்பவனின் பாதங்களைப் பார்ப்பதற்காக திரிந்ததால்தான், அவன் என்னுடைய சட்டைகள் எதையும் கொண்டு வரவில்லை." அவனுடைய தந்தை கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறுவார். அவன் தந்தைக்கு, அவனுடைய தாயை எப்போதும் கேலி செய்வதுதான் வேலை...
சிறுவன் காலில் தட்டிய பொருளைப் பொறுக்கி எடுத்தான். சுவருக்கு அருகில், தரையில் இருந்த ஒரு சிறு வெடிப்பில் அந்தப் பதக்கம் விழுந்து கிடந்தது- பால்காரனின் அதிர்ஷ்டப் பதக்கம். அவன் அதைத் துடைத்துப் பாக்கெட்டிற்குள் போட்டான். இனிமேல் தானும் அதிர்ஷ்டசாலிதான் என்று அவனுக்குத் தோன்றியது. பால்காரனைப் போல சீட்டி அடிக்கவும், பாக்கெட்டிற்குள் ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு நடக்கவும், இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு சைக்கிளை மிதிக்கவும் தனக்கும் இனிமேல் முடியலாம். ஒரு வேளை தான் ஒரு கடல் கொள்ளைக்காரனாக மாறலாம். ஒரு பெரிய கப்பலில் மண்டை ஓட்டின் படத்தைப் போட்டிருக்கும் கோட்டை அணிந்து கொண்டு, சுருட்டைப் புகைத்துக் கொண்டே தான் நடக்கலாம். வேறு கப்பல்களை குண்டு வைத்து தகர்த்து, அங்கு இருக்கும் தங்கத்தையும் வைரக் கற்களையும் தன்னுடைய கப்பலுக்கு கடத்திக் கொண்டு வரலாம். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் பெரிய மீசையையும் வைத்துக் கொண்டு தான் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்காக போவோம். அவனுடைய தாய் கூறுவாள்: "சே... என் மகனே, இந்த அளவிற்கு தைரியம் கொண்ட ஒரு கடல் கொள்ளைக்காரனாக நீ ஆகிவிட்டாயே! நீ இப்படி ஆவாய் என்று உன்னைப் பார்த்தபோது, நான் நினைக்கவேயில்லை..." என்று.
சிறுவன் அறைக்கு வெளியே போய் படிகளில் இறங்கினான். படிகளில் இறங்கும் போது, அவனுடைய பாக்கெட்டிற்குள் இருந்த பளிங்கு குண்டுகள் பட்டு அந்த வெள்ளிப் பதக்கம் ஓசை உண்டாக்கியது.
அந்த கட்டிடத்திற்கு வெளியே வந்தவுடன், மஞ்சள் வெயில் அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. வாசலில் எங்கும் ஒரு ஆள் கூட இல்லை. முருங்கை மரத்திற்குக் கீழே சில பூக்கள் விழுந்து கிடந்தன. முருங்கைப் பூக்களை இரண்டு நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்றால், கண்கள் சிவப்பாக ஆகும் என்று சமையல்காரன் கூறியதை அவன் நினைத்துப் பார்த்தான். சமையல்காரன் சிறுவனாக இருந்தபோது, எப்போதும் சிவந்த கண்களுடனே இருந்தாலும் அவனுடைய தந்தையின் தம்பி, கதகளி நடத்துபவர்கள் கண்களில் இடுவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பூவை அவனுக்குக் கொடுப்பாராம். சமையல்காரன் அதை வைத்து கண்களைச் சிவப்பாக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்வானாம். சமையல்காரனை பள்ளிக்கூடத்தில் பார்த்தவுடன் ஆசிரியர் கூறுவார்: "அடடா... இன்றைக்கு வேறு வந்திருக்கிறானே! இன்று மழை பெய்யும். சந்தேகமே இல்லை!"
சமையல்காரன் அந்த பழைய கதைகளைக் கூறிக்கொண்டு இருக்கும்போது, ஒருநாள் அவனுடைய தாய் சமையலறைக்குள் வந்துவிட்டாள். சமையல்காரன் போக்கிரித்தனமான விஷயங்களையெல்லாம் சிறுவனுக்கு கற்றுத் தரக்கூடாது என்றும், சிறுவனுடன் இவ்வளவு நேரமாக வெறுமனே பேசிக்கொண்டிருந்து நேரத்தைப் போக்க வேண்டாம் என்றும் அவனுடைய தாய் சொன்னாள். அன்று சாயங்காலம் சமையல்காரன் சிறுவனுக்கு சோறு பரிமாறும் போது சொன்னான்: "உங்களைத் தவிர, வேறு யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்க முடியும்? இந்த பம்பாய்க்கு வந்த பிறகு தையல்காரன் வர்க்கியைத் தவிர, வேறு எந்தவொரு மலையாளியையும் நான் பார்த்ததே இல்லை. பார்க்குமிடங்கள் எல்லாவற்றிலும் தோல் வெளுத்த வெள்ளைக்காரர்களும் வெள்ளைக்காரிகளும்தான். சில நேரங்களில் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க முடியாதா என்று ஒரு ஆவல் தோன்றுகிறது.’’
சிறுவனின் மாமா சிலநேரங்களில் சமையல்காரனை அழைத்து அவனிடம் தீப்பெட்டி கேட்பதுண்டு. ஒரு நாள் அவனுடைய மாமா சமையலறையிலிருந்து கேட்ட பாட்டைக் கேட்டுவிட்டு சொன்னார்: ‘‘சமையல்காரன் மலையாள சினிமாவில் சேர்ந்தால் நன்றாக இருக்கலாம்’’ ªன்று. பாக்கெட்டிற்குள் பணம் வந்து விழுவதைப் பார்க்கலாம். என்றும் சொன்னார். அன்றிலிருந்து சமையல்காரன் எப்போதும் மாமாவைப் புகழ்ந்து கொண்டே இருப்பான். சமையல்காரனின் மேல் நோக்கி உயர்ந்த நீளமான பற்களை வெள்ளையாக ஆக்க வேண்டுமென்றும், அதற்குப் பிறகு திருவனந்தபுரத்திற்குச் சென்று சினிமா கம்பெனியில் சேர வேண்டுமென்றும் மாமா கூறும்போதும், சமையல்காரன் முழு வாயையும் திறந்து வைத்துக் கொண்டு நின்றிருப்பான். மாமா சமையல்காரர்களிடமும் கூலி வேலை செய்பவர்களிடமும் எப்போதும் தமாஷாகப் பேசிக் கொண்டு நேரத்தை வீணாக்கும் காரணத்திற்காகத்தான், மாமாவை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று சிறுவனின் தாய் அவன் தந்தையிடம் கூறுவதுண்டு. மாமா எல்லா சனிக்கிழமையும் சிறுவனுக்கு ஒவ்வொரு பொட்டலம் மிட்டாய் கொண்டு வந்து தருவார். மாதத்தின் முதல் வாரத்தில் அந்தப் பொட்டலத்தில் பெரிய சாக்லெட்டுகள் இருக்கும். இரண்டாவது வாரத்தில் தாளில் மூடப்பட்ட ட்ராஃபிகள் இருக்கும். மூன்றாவது வாரத்தில் வெறும் ஆரஞ்சு மிட்டாய். நான்காவது வாரத்தில் பல்லி மிட்டாய் என்று கூறப்படும் இனிப்பு மிட்டாய்கள்.