கண்ணால் பார்த்த சாட்சி - Page 8
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6821
"மகனே..."
அவன் சிரித்தான். அவனுடைய அன்னை அவன் முகத்தில் தன் கைவிரல்களால் ஓவியங்கள் வரைந்தாள்.
"மகனே, எல்லாரும் உன்னைப் பார்ப்பதற்கு வருகிறார்கள். உன்னுடைய மாஸ்டரைப் பார்த்தாய் அல்லவா?"
அது தன்னுடைய மாஸ்டரே அல்ல என்று அவன் கூற நினைத்தான். ஆனால், அதற்குப் பிறகு ஒரு நீளமான கதை முழுவதையும் கூற வேண்டியது இருக்குமே என்று நினைத்து அவன் எதுவும் பேசாமல் படுத்திருந்தான். பேசினாலும், குரல் வெளியே வராது என்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய மனம் குமைந்து கொண்டிருந்தது. பாண்டுரங்க் மீது தான் கொண்டிருக்கும் பயம்தான் மனம் புரண்டு கொண்டிருப்பதற்கும் தலை வலிக்கும் காரணம் என்பதை சிறுவன் புரிந்து கொண்டான். டுக்காராம் தன்னைக் மகொல்லவில்லை. அதனால் பாண்டுரங்க்கே அந்த வேலையைச் செய்வதற்கு கிளம்பியிருக்க வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தையும் மாமாவிடம் கூறாமல் இருக்க முடியாது. வேறு யாரும் நம்பாவிட்டாலும், அவனுடைய மாமா நம்புவார். மாமா தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்.
"என்ன மோகன், தூக்கம் முடிஞ்சிடுச்சா?"
மாமாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த போது அவனுடைய மாமா அங்கு வந்து சேர்ந்ததைப் பார்த்து சிறுவன் மிகவும் ஆச்சரியடைந்தான். "மாமா, உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கும்!" அவன் சொன்னான்.
"எதனால் சொல்றே?" அவனுடைய மாமா கட்டில்மீது உட்கார்ந்தவாறு அவனுடைய கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார். அவனடைய தாய் சிரித்தாள்.
"மாமா, உங்களைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன்."
அதற்குப் பிறகு, அவனுடைய தாய் உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்றபோது, அவன் அந்தக் கதை முழுவதையும் தன் மாமாவிடம் கூறினான். "இவை அனைத்தும் உண்மையா, மகனே?" மாமா பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டார்: "மாமாவிடம் பொய் சொல்லவில்லையே?"
"இல்லை... சத்தியமா!"
அவனுடைய மாமா நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு அந்தக் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தார். அன்று அவனுடைய தந்தை சிறுவனைப் பார்ப்பதற்காக வந்தபோது, மாமா சொன்னார்: "நான் கொஞ்ச காலம் விடுமுறை எடுத்து இந்த மருத்துவமனையிலேயே இருக்கப் போகிறேன்."
"அப்படியா?"
"மோகனுக்கு அது சந்தோஷத்தைத் தரக்கூடிய விஷயமாக இருக்கும்."
அவனுடைய தந்தை சிரித்தார். மாமா சிறுவனை கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு கெடுதல் உண்டாக்குகிறார் என்றால், அப்படியே உண்டாகிவிட்டுப் போகட்டும் என்று அவனுடைய தந்தை சொன்னார். அன்று இரவு சிறுவனும் அவனுடைய மாமாவும் நீண்ட நேரம் ஒன்றாக உட்கார்ந்து பேசினார்கள். போலீஸ்காரர்களிடம் கூறிப் பயனில்லை என்று மாமா சொன்னார். அது மட்டுமல்ல-அது பல பிரச்சினைகளையும் உண்டாக்கவும் செய்யும் பாண்டுரங்க் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட காரணத்தால்தான் பால்காரன் இறந்தான். பாண்டுரங்கையோ டுக்காராமையோ பிடித்து சிறைக்குள்போட்டால், இனிமேலும் அப்படிப்பட்டவர்கள் வெளியே இருப்பார்கள். அவர்கள் பழிக்குப் பழி வாங்குவார்கள். சட்டத்தை மீறியவர்களை போலீஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டியதுதான். எனினும், அதனால் அவனவனின் உயிர் இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை வரும் பட்சம், எதையும் பேசாமல் இருப்பதே நல்லது. அந்த மாதிரியான பல விஷயங்களையும் மாமா அவனிடம் சொன்னார். மாமா சிறந்த புத்திசாலி என்பதை சிறுவன் புரிந்து கொண்டான். மாமா தைரியசாலியும்கூட என்பதை அவன் புரிந்து கொண்டது பாண்டுரங்க் மாஸ்டரின் வேஷத்தில் மீண்டும் அங்கு வந்த போதுதான். மாமா உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே சொன்னார்:
"நண்பரே, கையிலிருக்கும் கத்தியை அங்கு வைத்தால்தான், இந்த அறைக்குள் வர முடியும்."
பாண்டுரங்க் நெளிந்தான்.
"கத்தியா?"
"பிறகு... இந்த சிறிய பையனை எதற்குக் கொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள்? மூச்சைவிட முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கமா?"
பாண்டுரங்க் வாசல் கதவிற்கு அருகில் நின்று கொண்டே சொன்னான்: "நீங்க என்னசொல்றீங்க? நான் சிறுவனின் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியராயிற்றே! கொல்வதற்காகநான் வரவில்லையே!"
"ஆஹா! சிறுவனின் தலைமை ஆசிரியர் நான். எனக்கு உங்களைத் தெரியவே தெரியாதே!"
அவர்களுடைய வாதங்கள் நீண்ட நேரம் நீடிக்க வில்லை பாண்டுரங்க் புறப்படுவதற்கு அவசரப்பட்டான்.
மாமா சொன்னார்: "நண்பரே, நாம் ஒரு காரியம் செய்வோம். இந்த சிறுவனுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. இவற்றையெல்லாம் மறப்பதற்கு இவனுக்கு இன்னும் ஒரு வருடம் ஆகும். மறக்கவில்லையென்றால் கூட, என்ன வரப்போகுது, இவன் சொல்வதை யாராவது நம்புவார்களா? இனி நீங்கள் என்னை நம்புங்கள். இந்த வைபங்களை நானும் இந்த சிறுவனும் வேறு யாரிடமும் கூற மாட்டோம் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். கூறினால், பல சிரமங்களும் வரும் என்று உங்களுக்கு சந்தேகம் உண்டானால், நீங்கள் என்னைக் கொன்றுவிடுங்கள், புரிகிறதா?"
பாண்டுரங்க் விடை பெற்றுக் கொண்டு அறைக்கு வெளியே சென்றபிறகு, மாமா தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை வெளியே எடுத்தார்.
"இன்று மாதத்தின் நான்காவது சனிக்கிழமை. இந்தப் பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று கூற முடியுமா?"
"ம்... பல்லி மிட்டாய்..." சிறுவன் சிரித்தான். அன்று முதல் தடவையாக அவன் தன் மாமாவின் முகத்தில் முத்தமிட்டான்.
"இந்த வகையான குணங்கள் கடல் கொள்ளைக்காரர்களிடம் இருக்கக் கூடியவை அல்ல." கன்னத்தில் இருந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டே மாமா சிரித்தார். மாமாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. அதனால் தன் மாமா சிரிக்கிறாரா அழுகிறாரா என்பதை சிறுவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.