கண்ணால் பார்த்த சாட்சி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6821
சிறுவனின் பெயர் ‘கண்ணால் பார்த்த சாட்சி’ இல்லை மோகன் என்பதுதான் அவனுடைய பெயர். அதனால் அந்த தங்கப்பல் வைத்திருந்த மனிதன் ‘கண்ணால் பார்த்த சாட்சி’யை மூன்று நாட்களுக்குள் சொல்லப்போவதாக கூறுவதைக் கேட்டபோதுகூட சிறுவன் பெரிய அளவில் பதைபதைப்பு அடையவில்லை.
பால்காரனை அவர்கள் தலையில் அடித்துக் கீழே விழ வைத்ததையும் அவனுடைய தலையை தரையில் போட்டு நசுக்கியதையும் ஒரு மரப்பெட்டியில் அதை வைத்து மூடியதையும் அவன் அந்த திருட்டு வேளையில் பதுங்கி நின்று பார்த்திருந்தான். ரத்தத்தின் குளிர்ந்த வாசனை தன்னைவாந்தி எடுக்க வைக்கும் என்பது தெரிந்திருந்தும், அவன் நின்ற இடத்தைவிட்டு அசையவேயில்லை. அவர்கள் அலிபாபா கண்ட நாற்பது திருடர்களைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். பால்காரனைக் கொல்லாவிட்டால், அவனுடைய சைக்கிளையோ, பாக்கெட்டில் இருந்தரூபாய் நோட்டையோ அவர்களால் எடுக்க முடியாதே! அதனால் அவர்கள் அந்த கீழ்த்தரமான செயலைச் செய்துவிட்டார்கள். சிறுவன் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. எறுப்பைக் கொல்வது பாவம் என்றான். பால்காரனைக் கொல்வதும் பாவமாக இருக்க வேண்டும். ஆனால், பாவத்தைச் செய்யக்கூடாது என்பதை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால், ஒரு மனிதனால் சிறந்த திருடனாக ஆக முடியுமா? கடல் கொள்ளைக்காரனாக ஆகவே முடியாது. மாமா வாங்கித் தந்த புத்தகத்தில் கடல் கொள்ளைக்காரர்கள் பணக்காரர்களைக் கொலை செய்து அவர்களுடைய மோதிரங்களையும் கைக்கடிகாரங்களையும் எடுக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருந்ததே! சிறுவன் பெரியவனாக ஆனால், ஒரு மீசை வைத்திருக்கும் கடல் கொள்ளைக்காரனாக ஆவான். அதன் மூலம் தன்னுடைய தாய்க்கும் தங்கைக்கும் எப்போதும் புதிய ஆடைகளை வாங்கலாமே!
‘‘நான்தான் வேண்டுமா பாண்டுரங்க்? நான் இதுவரை இவ்வளவு சிறிய ஒரு பையனை...’’
‘‘நீங்க என்ன டுக்காராம்? ஒரு ஆட்டுக்குட்டியா?’’ கறுப்புத் தொப்பி அணிந்திருந்த மனிதன் கோபத்துடன் கேட்டான். தங்கப்பல் வைத்திருந்தவன் ஒரு மரப்பெட்டியின் மீது தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் சொன்னான்: ‘‘சரி... ஆனால், இன்றைக்கு முடியாது. இன்று ஏகாதசி.’’
கறுப்புத் தொப்பி அணிந்திருந்தவன் சிரித்தான். அவனுடைய உதடுகளின் வலது பக்கக் கோணல் சிறிதும் அழகாக இல்லை என்று சிறுவனுக்குத் தோன்றியது. அவனுடைய சிவந்த கண்களும் மெலிந்து வளைந்த உடலும்... எதுவுமே சிறுவனுக்குப் பிடிக்கவில்லை. பால்காரனின் தலையை ஒரு சுத்தியால் அடித்துக் கூழாக்கியது அவன்தான்! (ஆனால், அவன் ஒரு பலசாலியாக இல்லை. சிறுவனுக்கு தடிமனாக, சதைப் பிடிப்புடன் இருப்பவர்கள் மீதுதான் எப்போதும் மதிப்பு. தங்கப்பல் வைத்திருந்த மனிதனின் கைகள் உருண்டையாக இருந்தன. ஆனால், அவனுடைய முகத்தில் எப்போதும் தான் அழப் போகிறோம் என்பதைப் போன்ற ஒரு வெளிப்பாடு இருந்தது. சிறுவன் ஒரு முறை தன் மாமாவுடன் சர்க்கஸ் பார்ப்பதற்காகச் சென்றபோது, அவனுடைய சாயலைக் கொண்ட ஒரு கோமாளியைப் பார்த்தான். அந்தக் கோமாளி பெரிய தொப்பியுடன் நடந்து நடந்து ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறச் சென்றபோது, ஒரு தெரு நாய் அவனைக் கடிப்பதற்காக வந்தது. உடனே அவன் ஒரு அழும் முக பாவனையுடன் பின்னோக்கி நடக்கத் தொடங்கினான். சிறுவன் அவனைப் பற்றிநினைத்து பல நேரங்களில் சிரித்து புரண்டிருக்கிறான். ‘‘இவன் சிரிப்பில் முதல் ஆள். படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் எதற்கும் லாயக்கில்லாதவன்’’ என்று அவனுடைய தாய் இடையில் அவ்வப்போது கூறுவதுண்டு. அவனுடைய மாமா ஒரு நாள் சொன்னாள்: ‘‘லீலா, இவன் வேறு எதுவுமே படிக்க வேவ்டாம். சிரிக்க முடிந்தால், அவன் எப்போதும் நன்றாக இருப்பான். மனிதனாகப் பிறந்தால், எப்போதும் சிரிப்பதற்கு இயல வேண்டும்.’’ அவனுடைய தாய் உடனே அதற்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பிப்பாள். இறுதியில், அவனுடைய மாமாவின் க்ளார்க் வேலையைப் பற்றி அவன் தாய் கிண்டல் பண்ணுவாள். மாமா ஸோஃபாவில் உட்கார்ந்து தலையைக் குனிந்து கொண்டிருப்பார். மாமா அவருடைய வீட்டில் முதன்முதலாகப் பிறந்த முட்டாள் என்று பல நேரங்களில் சிறுவன் கேள்விப்பட்டிருக்கிறான். மீதி அனைவரும் புத்திசாலிகளாக இருந்தார்கள். தாத்தா கிரீடம் அணியாத மன்னராக இருந்தார். ஊரின் வழியாக நடக்கும்போது ஒரு மனிதன்கூட எதிரில் வர மாட்டான். எல்லாரும் பின் வழியாக வந்து முன்னால் நின்று கைகளைக் குவித்து வணங்குவார்கள். மாமாவின் அன்னை நிறைய படித்திருக்கும் ஒரு பெண்ணாக இருந்தாள். நல்ல அழகியும்கூட தந்தை பெயர் பெற்ற ஒரு வக்கீலாக இருந்தார். மாமாவின் தம்பிகள் இருவரும் பெரிய டாக்டர்களாக இருந்தார்கள். அக்கா ஒரு பெரிய அரசாங்க அதிகாரியின் மனைவியாக இருந்தாள். மாமா மட்டும் இந்த ஐம்பதாவது வயதிலும் ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் க்ளார்க்காக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். சிகரெட்டுக்குப் பதிலாக பீடி புகைக்கிறார். நகரத்தில் இருக்கும் ஒரு சிறிய மதராஸி ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிக் கொண்டிருக்கிறார்.
‘‘இன்றைக்கு அவன் பள்ளிக் கூடத்தில் இருந்து வர்றப்போ அதைச் செய்திருக்கலாமே, டுக்காராம்? எப்போது வேண்டுமானாலும் லாரியைத் தர்றேன் என்று சம்புநாத் கூறியிருக்கிறார் அல்லவா?
கறுத்த தொப்பி அணிந்திருந்த மனிதன் பேசிக் கொண்டேயிருந்தான். அவனுடைய அந்த மெல்லிய குரலைக் கேட்டுக் கொண்டே தான் தூங்கி விடுவோமோ என்றுகூட சிறுவன் நினைத்தான். அவன் கதவிற்குப் பின்னால் இருந்த அடர்த்தியான இருட்டில் சுவரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான். தான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில், டின்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மூலையில் உட்காருவதற்கு அவனுக்கு இனிமேல் தைரியம் இருக்காது. அங்கு இல்லாமலிருந்தால் சிறுவனை அவர்களில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். சாளரத்தின் கதவு மெதுவாகத் திறக்கும் என்றும் வெளியிலிருந்து வரும் வெளிச்சம் தன்மீது விழும் என்றும் அவனுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் தன்னைப் பார்த்தவுடன், சிறுவன் அறையின் வெளியே நோக்கி நடந்தான். ஆனால், கறுத்த தொப்பி அணிந்திருந்த மனிதன் படிகளுக்கு மேலே அவனையே பார்த்தவாறு நீண்டநேரம் நின்று கொண்டிருந்தான். சிறுவன் இரண்டு படிகள் இறங்கி அசையாமல் நின்றான். பிறகு, எதுவும் கூறாமல் அந்த மனிதன் இருட்டறைக்கு நுழைந்தபோது, அவன் தன் வீட்டை நோக்கி ஓடினான். இரண்டு வாரங்களாக தான் அந்தக் கூட்டத்தினரின் செயல்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் விஷயத்தையும், யாரும் நுழையாத அந்த கட்டிடத்திற்குள் தான் பகல் இரண்டு மணிக்குத் தனியே நுழைந்து, சில டின்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு அந்தத் திருடர்கள் அடுப்பு பற்ற வைப்பதையும் பிற செயல்களையும் பார்ப்பது உண்டு என்பதையும் எந்தச் சமயத்திலும் சிறுவன் தன் தாயிடம் கூறவில்லை.