வளர்ப்பு மிருகங்கள் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7612
ஜானம்மா அணில் குட்டியைப் போல ஒரு மூலையில் தன்னைச் சுருக்கிக் கொண்டு நின்றிருந்தாள். சந்திரனைக் கண்டதும் அவள் அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
"உனக்கு இங்கே என்னடா வேலை? நீ போடா..." &மேனேஜர் கத்தினார்.
"சார்... நீங்க அளவுக்கு அதிகமா போறீங்க."
"இது என்னோட விஷயம் யூ கெட் அவுட்."
வெறுப்பும் ஆவேசமும் கலந்து விறைப்பாக சந்திரன் நின்று கொண்டிருக்க, அவர் அந்தக் கதவை மீண்டும் அடைத்தார்.
அதற்கு அடுத்த நாள் சந்திரன் கம்பெனியை விட்டுப் போய்விட்டான். அவன் இப்போது எங்கு இருக்கிறானோ?
ஜானம்மா மறுநாள் பகல் முழுவதும் அழுது கொண்டேயிருந்தாள். அவளுக்கு வெறுப்பும் கோபமும் மாறி மாறி வந்தன. இரவில் சர்க்கஸ் கூடாரத்திற்கு நெருப்பு வைத்து விட்டாலென்ன என்று கூட அவள் நினைத்தாள். சிங்கங்களையும் நரிகளையும் கூண்டுகளிலிருந்து திறந்து விட்டுவிடலாமா என்று கூட அவள் சிந்தித்தாள். அழியட்டும்! எல்லோரும் அழியட்டும்! எல்லோருடனும் சேர்ந்து தானும் அழிய வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள்.
ஆனால், கண்ணீர் விட்டுக் கொண்டு அமைதியாக இருக்க மட்டுமே அவளால் முடிந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்ல லட்சுமி மட்டுமே இருந்தாள்.
மாலை நேரம் வந்த போது கண்களைத் துடைத்து முகம் கழுவி பவுடர் போட வேண்டிய கட்டாயத்திற்கு அவள் ஆளானாள்.
அதற்குப் பிறகு எவ்வளவோ கசப்பான அனுபவங்களை அவள் வாழ்க்கையில் சகித்துக் கொண்டிருக்கிறாள்!
தன்னுடைய பெண்மைத்தன்மையே முழுமையாக அழிந்து போய் விட்டது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
காட்சி முடிந்து திரும்பி வந்தால் இப்போதெல்லாம் ஜானம்மாவால் எந்தவித தொந்தரவுமின்றி நிம்மதியாக உறங்க முடியும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவளிடமிருந்த இளமையின் பூரிப்பு எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. வயதிற்கு மீறிய மாற்றம் அவள் உடம்பில் வந்து சேர்ந்துவிட்டது. அவளின் கண்களிலிருந்த ஒளியும் கன்னங்களில் இருந்த சிவப்பும் இப்போது இல்லை. அவளை அழைக்க யாரும் வருவதில்லை. இளமை மொட்டுக்கள் பல புதிதாக கம்பெனியில் மலர்ந்திருக்கின்றன.
தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமலிருக்க ஜானம்மா எவ்வளவோ முயற்சிப்பாள். தனக்கு முன்னால் ஒரு பரந்த பாலைவனம் கிடப்பதைப் போல் அவள் உணர்வாள்.
ஒரு பெண்ணுக்குரிய எல்லா ஆசைகளும் அவளுக்கும் இருந்திருக்கின்றன. காதல் உணர்வு பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆண் இதயத்தின் துடிப்பைக் கேட்க அவளின் இதயம் ஒரு காலத்தில் ஏங்கியிருக்கிறது. சுகமான குடும்ப வாழ்க்கை வாழக்கூடிய ஒரு மனைவியின் வாழ்க்கையை அவளும் கனவு கண்டிருக்கிறாள். ஒரு சிறு குழந்தையின் சிவந்த உதடுகள் 'அம்மா' என்று அழைக்கும் போது பூரிப்படைந்து நிற்க அவளுக்குள் ஒளிந்திருந்த தாய்மை தவித்திருக்கிறது.
அவளுடைய கனவுகள் ஒவ்வொன்றும் கருகி சாம்பலாகிவிட்டன.
ஜானம்மா சர்க்கஸ் பார்க்க வரும் பெண்களை சில நேரங்களில் பார்ப்பாள். தன்னையே அறியாமல் அவள் அவர்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்வாள். அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் மாறுபட்டவர்களாக இருப்பார்கள்? காதலிகள், மனைவிமார்கள், இல்லத்தரசிகள், திருமணமாகாதவர்கள்& இப்படி பலரும் அங்கு இருப்பார்கள். எல்லோருக்கும் வாழ்க்கையில் சில இலட்சியங்கள் இருக்கவே செய்கின்றன.
ஒரு வளர்ப்பு மிருகமாக இப்படி தான் எத்தனை நாட்கள் வாழ்வது என்பதை ஜானம்மா நினைத்துப் பார்த்தாள்.
அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்தாள். தூக்கம் வரவில்லை. பொழுது புலர்ந்திருக்குமோ? ஆகாயத்தின் நீலம் மறைந்து வெள்ளை நிறம் இலேசாகத் தெரிந்தது. தூரத்தில் உயரமாக நின்றிருந்த தேவாலயம் இங்கிருந்து பார்க்கும் போது தெளிவில்லாமல் தெரிந்தது. அதற்கு மேல் நின்று கொண்டிருந்த ஒரு ஒற்றை நட்சத்திரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது& ஒரு வெளிறிப் போன சிரிப்பு அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜானம்மாவின் கட்டை அவிழ்த்தார்கள்.
கையில் உண்டாகியிருந்த குறைபாடு சரியாகவில்லை. கையை அவளால் சுதந்திரமாகத் தொங்க விடமுடியவில்லை.
டாக்டர் சொன்னார்: "பயப்பட வேண்டாம். இதைச் சரி பண்ணிட முடியும். ஆனா, மெதுவாகத்தான் முடியும். ஆனா..."
அவள் ஆர்வத்துடன் டாக்டரின் முகத்தையே பார்த்தாள். அவர் ஏதோ தமாஷ் ஒன்றைச் சொல்வது போல கூறினார்: "இனிமேல் சர்க்கஸ் விளையாட்டெல்லாம் விளையாட முடியாது."
அப்போது மேனேஜர் பக்கத்தில்தான் இருந்தார். அவர் தன்னுடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகக் கேட்டார்: "இனிமேல் இவ விளையாட முடியாதா டாக்டர்?"
"முடியாது. இந்தத் தொழிலை இவ நிறுத்தித்தான் ஆகணும்..."
மேனேஜர் தன் உதட்டைக் கடித்து, நெற்றியைத் தடவியவாறு ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்தார்.
ஜானம்மாவின் கை முறிந்தது கம்பெனிக்கு உண்மையிலேயே இழப்புதான். அவள் ஒரு நல்ல சர்க்கஸ் விளையாட்டுக்காரியாக இருந்தாள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், அவள் இப்போது கம்பெனிக்கு ஒரு பாரமாக மாறியிருக்கிறாள் என்பதையும் நினைத்துப் பார்த்தார்.
அந்த ஊரில் அன்றோடு நிகழ்ச்சி முடிகிறது. அடுத்த நாள் காலையில் அவர்கள் அந்த ஊரை விட்டுக் கிளம்புகிறார்கள். சர்க்கஸ் கூடாரம் பிரிக்கப்பட்டு விட்டது. இரவோடு இரவாகப் பொருட்களைக் கொண்டு போவதற்கான ஆயத்தங்கள் நடந்தன.
அடுத்த நிகழ்ச்சியை அந்த ஊரிலிருந்து அறுபது மைல் தூரத்திலிருக்கும் ஒரு நகரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
வனஜாதான் அந்தச் செய்தியை எல்லோரிடமும் சொன்னாள். ஜானம்மாவை என்ன செய்வது என்பதைப் பற்றி மேனேஜர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம். முதல்நாள் இரவு அவள் மேனேஜரின் அறையில் இருந்த போது அவளுக்குக் கிடைத்த தகவல் அது.
அவர்கள் மேனேஜர் என்ன முடிவுக்கு வருவார் என்பதைப் பற்றி பல வகைகளில் சிந்தித்தார்கள். ஜானம்மா அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. ஜன்னலில் இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் எங்கோ பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள். அவளுடைய இதயம் மிகவும் கனத்துப் போயிருந்ததைப் போல் இருந்தது.
ஜானம்மாவை அழைப்பதற்காக வேலைக்காரன் வந்தான். அவள் மேனேஜரின் அறைக்குச் சென்றாள். அந்த ஆளைச் சந்திக்க இப்போது அவளுக்குப் பயமில்லை. இழப்பதற்குத் தன்னிடம் எதுவுமில்லை என்ற விஷயம் ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும்.
மேனேஜர் கட்டிலில் சுவர் மீது சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். அவர் மரியாதை நிமித்தமாக அவளைப் பார்த்து சிரித்தார்.
"ஜானம்மா, கை எப்படி இருக்கு?"
"இப்போ பரவாயில்ல..."