வளர்ப்பு மிருகங்கள் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7612
"கிடைக்குது ஆனா..."
"பிறகு எதற்கு பணம்? உனக்குச் சொந்தம்னு சொல்லிக்கிறதுக்கு யாருமே இல்லைன்னு கண்ணன் மாஸ்டர் சொன்னாரே! ஏதாவது தேவைப்படுறப்போ, கேளு..."
அவ்வளவுதான்& ஜானம்மா திரும்பி வந்துவிட்டாள்.
அவள் அழவில்லை. அவளிடம் ஒரு அளவுக்கும் மேலே சகிப்புத்தன்மை குடிகொண்டிருந்தது. இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் முன்பும் அவளைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. கம்பெனியை விட்டு வேறு எங்காவது போய் பிழைத்துக் கொண்டால் என்ன என்று கூட பல நாட்கள் அவள் நினைத்திருக்கிறாள். கண்ணீர் வழிய அவள் அதை எத்தனையோ நாட்கள் நினைத்து நினைத்துக் குமுறியிருக்கிறாள்.
அவளின் இளமை மலர்ந்து விரிந்த காலம். காமவெறி பிடித்த கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை அவளால் எப்போதும் உணரமுடிந்தது. உண்மையில் சொல்லப்போனால் கம்பெனியில் இருக்கும் எல்லா ஆண்கள் மீதும் அவளுக்கு வெறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவள் லட்சுமியிடம் மெதுவான குரலில் அப்போது கூறியிருக்கிறாள். "பாரு... ஒவ்வொருத்தரும் என்னை எப்படி பார்க்கிறாங்கன்றதை..."
"நான்தான் சொன்னேனே ஜானம்மா, இங்கே மனிதர்களே இல்லைன்னு..."
லட்சுமியின் வாழ்க்கைக் கதை என்னவென்பது ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும். அவளின் உடம்பில் அழகு இருந்த காலத்தில் வெறுக்கத்தக்க அளவிற்கு அவளிடமிருந்து எல்லோரும் ஆனந்தத்தை அனுபவித்திருக்கின்றனர். கடைசியில் அவள் ஒரு சக்கை என்று ஆனபோது, அவளை அவர்கள் மூலையில் வீசி எறிந்துவிட்டார்கள்.
அனுபவங்களின் இருப்பிடமான அந்த வேலைக்காரி சொல்கிறாள்: "குழந்தை, இதெல்லாம் இங்கே ரொம்ப சர்வ சாதாரணம்."
ஜானம்மா பயப்பட்டாள். இளமை என்பதே ஒரு சாபம் என்று அவளுக்குத் தோன்றியது. மேனேஜர் முதல் கோமாளி வரை பலரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள்.
ஜானம்மா வெறுப்புடன் தன்னுடைய தோழிகளைப் பார்த்தாள். முழுதும் மூழ்கினால் குளிர் இல்லை என்ற நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆண்களுடன் மிகவும் உரசிக் கொண்டு நடக்கவும், அவர்களுடன் கொஞ்சவும் குழையவும் அவர்கள் சிறிதும் தயங்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் ஜானம்மாவின் வெறுப்பிற்கு பதில் சொல்வது போல இருந்தது: "வரும்டி... உனக்கும் வரும்."
ஜானம்மாவின் இதயத்திலும் இனிய கனவுகளும் மென்மையான உணர்வுகளும் எழுந்த ஒரு காலமும் இருந்தது. அவள் சந்திரனை மனதில் நினைத்தாள். பார் விளையாட்டில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்த வெளுத்த உடலைக் கொண்ட இளைஞன் அவன். புதிதாக கம்பெனியில் வந்து சேர்ந்திருந்தான்.
மற்றவர்களிடம் இல்லாத பலவற்றை அவனிடம் அவள் பார்த்தாள். அவனுடைய கண்கள் அவளைப் பார்க்கும் போது காமவெறியின் அடையாளங்களை அவள் காணவில்லை. வார்த்தையால் விவரிக்க முடியாத இதயத்தின் அடித்தளம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஏதோ ஒன்று அவன் பார்வையில் இருப்பதை அவளால் உணர முடிந்தது. அவனுடைய நீளமான விரல்கள் தன்னைத் தொடும் போது அவள் உணர்ச்சிவசப்பட்டு தன்னை மறந்து நின்றிருக்கிறாள். அவன் பார் விளையாட்டில் திறமைகளைக் காட்டும் போது அவள் திரைச் சீலையின் இடைவெளி வழியாக மலர்ந்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.
அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.
தனிமை நிறைந்த ஒரு பயணத்துக்கு இடையே இதயமுள்ள ஒரு இளைஞனைத் தன் தோழனாகப் பெற்றதற்காக அவள் அகமகிழ்ந்து போனாள். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
அதை நினைக்கும் போது ஜானம்மாவின் இதயத்தில் இப்போதும் வேதனை கொழுந்துவிட்டெரியும்.
டிசம்பர் மாதத்தின் ஒரு இரவில்தான் அது நடந்தது. வட இந்தியா முழுவதும் பயணம் செய்துவிட்டு கேரளத்திற்குத் திரும்பியவுடன் அவர்கள் நடத்திய முதல் காட்சி அது.
இரவு காட்சி முடிந்து தங்கியிருக்கும் இடத்திற்கு எல்லோரும் திரும்பி வந்த போது, மணி இரண்டு கழிந்திருந்தது. ஆடைகளை மாற்றி படுக்கலாம் என்று போகும் போது பயிற்சி நடத்தும் இளைஞர்களில் ஒருவன் வந்து சொன்னான்: "ஜானம்மா, உன்னைக் கூப்பிடுறாங்க!"
"யாரு?"
"மேனேஜர்."
அடுத்த நிமிடம் ஜானம்மா ஒருவித பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டாள். அவள் தன் தோழிகளின் முகத்தைப் பார்த்தாள். சிரிப்பும் அர்த்தம் நிறைந்த முணுமுணுப்பும்தான் பதிலாக அவர்களிடமிருந்து வந்தது.
புதிய மேனேஜர் வந்து ஒரு மாதம் ஆகவில்லை. என்ன காரணத்தாலோ அந்த மனிதரைக் கண்டாலே அவளுக்குப் பயமாக இருந்தது. அந்த ஆளின் பார்வைதான் அதற்குக் காரணம். அவர் பார்க்கும் போது மாமிசத்தை எடுத்துக் கொண்டு போய் வேலைக்காரர்கள் நிற்கும் போது உதட்டில் வரும் சிரிப்பை மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் ஒரு பெரிய நரியின் கண்கள்தான் அவளுக்கு ஞாபகத்தில் வரும்.
ஜானம்மா சொன்னாள்: "நான் போக மாட்டேன்."
அவளைவிட மூன்று வயது மூத்தவளான மாதவி சொன்னாள்:
"போகாம இருக்க முடியாது."
அதைக் கேட்டு மற்ற பெண்கள் சிரித்தார்கள்.
ஜானம்மாவை அழைக்க மீண்டும் ஆள் வந்தான்.
ஒருத்தி சொன்னாள்: "போய் என்ன விஷயம்னு கேட்டுட்டு வா ஜானம்மா."
ஜானம்மா எழுந்து நடந்தாள். மிகவும் இயந்திரத்தனமாக இருந்தது அவளின் நடை. அப்போது அவளுடைய இதயத்தில் ஒரு கடும்புயல் வீசிக்கொண்டிருந்தது. சந்திரனைப் பார்த்தால் என்ன என்று அவள் நினைத்தாள்.
மேனேஜரின் அறைக்கு முன்னால் அவள் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள்.
மேனேஜர் ஒரு ஷோபாவில் படுத்திருந்தார். சிகரெட் புகையும் மதுவின் தாங்க முடியாத நாற்றமும் அறையெங்கும் பரவிவிட்டிருந்தது.
"ஜானம்மா, வா... உள்ளே வா..."& மதுவின் போதையில் வார்தைகள் வந்தன.
"ஏன் என்னை அழைச்சீங்க?"& அவள் மூச்சு வாங்கக் கேட்டாள்.
"உள்ள வா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."
அவள் மெதுவாக உள்ளே வந்தாள். மேனேஜர் எழுந்து கதவை அடைத்தார்.
"நான்... நான் போறேன். கதவைத் திறங்க."
"இரு ஜானம்மா.. நீ நல்ல திறமையான பொண்ணு... உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்."
அவருடைய கைகள் பாம்புகளைப் போல அவள் உடம்பில் படர்ந்து கொண்டிருந்தது.
ஜானம்மா அவரிடமிருந்து விலகிப் போக வேண்டும் என்பதற்காக இப்படியும் அப்படியுமாகப் போராடினாள். கடைசியில் வேறு வழியே இல்லை என்று தோன்றியவுடன் அவள் உரத்த குரலில் கத்திவிட்டாள்.
அவ்வளவுதான்& அந்த மனிதர் தன் பிடியை விட்டார். அவளையே அவர் முறைத்துப் பார்த்தார். அவரின் கண்களில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
"அடியே... முன்னாடி ஒரு பொண்ணு..."
"டக் டக்..."
அடைக்கப்பட்ட கதவை யாரோ தட்டினார்கள். தான் சொல்ல வந்ததை நிறுத்திய அந்த மனிதர் ஒருவகை வெறுப்புடன் ஜானம்மாவையே உற்று பார்த்தவாறு கதவைத் திறந்தார். வெளியே சந்திரன் நின்றிருந்தான்!