வளர்ப்பு மிருகங்கள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7612
அதற்குள் கம்பெனி மிகவும் வளர்ச்சி அடைந்திருந்தது. மலபார் சர்க்கஸ் புகழ்பெற்ற ஒன்றாக மாறியது. ஆட்கள், மிருகங்கள் ஆகியோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. பழைய மேனேஜர் விலகிச் சென்றார். புதிய ஆள் கம்பெனியை ஏற்று நடத்தினார். இது நடந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு.
இப்போது கம்பெனியில் நான்கு சிங்கங்கள் இருக்கின்றன. ஐந்து நரிகள் இருக்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. மூன்று யானைகள் இருக்கின்றன. இவை இல்லாமல் பெண்களும், ஆண்களுமாய் கிட்டத்தட்ட நூறு பேர்.
இந்த மாதிரியான விஷயங்களெல்லாம் மேனேஜர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார். எண்ணிக்கை விஷயமெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரியும். தான் இதைத் தெரிந்து வைத்திருப்பதில் அவருக்குப் பெருமையும் கூட. இவ்வளவு மிருகங்களும் மனிதர்களும் அவருக்குச் சொந்தம்!
புதிய மேனேஜர் வந்தபிறகு கம்பெனியில் திறமைசாலிகள் பலரும் வந்து சேர்ந்தார்கள். மோட்டார் சைக்கிளில் தாவும் விளையாட்டும், யானையை மார்பின் மீது ஏறி நிற்கவைக்கும் விளையாட்டும், உயிரோடிருக்கும் மீனை விழுங்கிப் பிறகு அதை வெளியே வரவைக்கும் நிகழ்ச்சியும் முன்பு இல்லை.
வயது ஏற ஏற ஜானம்மா சர்க்கஸ் கம்பெனி வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் ஒரு சிறு நூல் பாலத்தில் நின்று கொண்டு ஆபத்து விளைவிக்கக்கூடிய வித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டம்! அவர்களைப் பற்றி மனதில் நினைத்தபோது ஒரு தெளிவான முடிவுக்கே ஜானம்மாவால் வரமுடியவில்லை.
சிவப்பு நிற ஆடைகளணிந்து தலையில் சிவப்பு நிற ஹெல்மட் மாட்டி அமைதியாக மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு மரணத்தின் இடைவெளியைத் தாவி கடக்கும் அந்த மனிதன் எப்படிப்பட்ட ஒரு பிறவியாக இருக்க முடியும் என்பதை ஜானம்மா நினைத்துப் பார்த்தாள். அவன் தன்னுடைய வாழ்க்கைக் கதையை ஒருமுறை அவளிடம் கூறியிருக்கிறான். அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. வாழ்க்கையைப் பணயம் வைத்து கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் அவன் தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறான்.
"உங்களுக்கு பயம் தோணுறது உண்டா?"& அவர்களில் சிலர் அவனைப் பார்த்துக் கேட்டார்கள்.
"பயமா? அதெல்லாம் முன்பே போயிருச்சு. ஒரு நாள் நான் மோட்டார் சைக்கிள்ல தாவுறதுல தப்பு நிகழும். அப்போ எல்லாம் முடிவுக்கு வந்துடும்..."
இப்படி ஒவ்வொரு நாளும் இரண்டு முறைகள் அவன் மரணத்தின் நுழைவுவாயிலில் நுழைந்துவிட்டு திரும்பி வருகிறான்.
அங்குள்ள பெரும்பாலானவர்களின் நிலையும் அதுதான் என்ற விஷயம் ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும். பதக்கங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்கும் கறுப்பு நிற ஆடையணிந்து சிங்கக் கூட்டுக்குள் நுழையும் மனிதன் மரணத்தை முத்தமிடுகிறான். யானையின் காலடிக்குக் கீழே படுத்திருப்பதும், மீனை விழுங்குவதும் உண்மையிலேயே ஆபத்தான விஷயங்கள்தாம். இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? ஜானம்மா பல நேரங்களில் இதைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறாள்.
தானும் அதே இனத்தைச் சேர்ந்தவள்தான் என்பதை அடுத்த நிமிடம் அவள் நினைத்துப் பார்ப்பாள். கம்பி வழியே சைக்கிள் ஓட்டும் போதும் ட்ரப்பீஸில் பறக்கும் போதும் அவள்கூட ஆபத்தைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள்.
சர்க்கஸ் வாழ்க்கையில் ஜானம்மா இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறாள்.
"குழந்தை, இது சர்க்கஸ் கம்பெனி, இங்கே இருக்கிறவங்க மனிதர்கள் இல்ல. எல்லோரும் மிருகங்க.."
இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை ஜானம்மா புரிந்து கொண்டது சற்று வயது வந்த பிறகுதான். அங்கிருக்கும் லாயத்திலும் இரும்புக்கூண்டுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகங்களுக்கும் அதற்கு வெளியே வாழும் மனிதர்களுக்குமிடையே பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதை ஜானம்மா புரிந்து கொண்டாள். மனிதர்களைக் கடுமையான விரோதத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்டு மிருகங்கள் நாணுவின் சாட்டை காற்றில் அலையும் போது தங்களையே சுருக்கிக் கொள்ளும். சொல்கிறபடியெல்லாம் அவை நடக்க ஆரம்பிக்கும். ஆனால், ஒரு விஷயத்தில் மிருகங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பதையும் புரிந்து கொண்டாள் ஜானம்மா. ஒரே ஒரு மனிதனின் கட்டளைக்கு மட்டுமே அவை கீழ்ப்படிந்து நடக்கும். கம்பெனியில் இருக்கும் மனிதர்களோ வாய் மூடிக் கொண்டு பலரையும் அனுசரித்துப் போக வேண்டியிருக்கிறது.
சம்பளம் வாங்கும் நாளன்று பெண்களுக்கிடையே பொதுவாகவே முணுமுணுப்பு உண்டாகும். ஆண்களுக்கிடையில் அப்படியெதுவும் எதிர்ப்பு இருக்காது. அவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். ஆனால், மேனேஜர் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளமாட்டார்.
பெண்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். அவர்கள் அதற்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆனால், அவர்களின் அந்தக் குரல் அறையின் சுவர்களுக்கு வெளியில் போகாது.
ஜானம்மாவிற்குச் சம்பளம் கிடையாது. அதற்கான தேவை அவளுக்கு எப்போதும் இல்லை. உணவும் அணிவதற்கு ஆடையும் கிடைக்கின்றன. பிறகு எதற்கு சம்பளம்? யாருக்காக அவள் பணம் சம்பாதிக்க வேண்டும்? உலகத்திலேயே அவளுக்குச் சொந்தமென்று கூற ஒரே ஒரு உயிர்தான் இருந்தது. எழு வருடங்களுக்கு முன்பு அவளின் தாயும் மண்ணோடு மண்ணாய்ப் போய் சேர்ந்து விட்டாள். அப்போது ஜானம்மா தமிழ்நாட்டின் ஏதோ ஒரு நகரத்தில் இருந்தாள். ஊரிலிருந்து வந்த ஒரு ஆள்தான் அந்தச் செய்தியை அவளிடம் சொன்னான். அகன்று பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கிடையில் இப்படித்தான் அவள் ஒரு தனி உயிரானாள்.
ஒரு சூழ்நிலையில் மேனேஜரிடம் அவள் சம்பளம் கேட்டாள். லட்சுமி சொல்லித்தான் அத்தகைய முயற்சியில் அவள் இறங்கினாள்.
லட்சுமி சொன்னது உண்மைதான் என்பதை ஜானம்மா உணரவும் செய்தாள்.
"ஜானம்மா, இந்தக் காலம் இப்படியே போயிடும். கையில் காசு இல்லைனா வயசான காலத்துல நமக்கு என்ன துணை இருக்கு? என் நிலைமையைப் பார்த்தேயில்ல?"
லட்சுமியின் நிலை என்னவென்பது ஜானம்மாவிற்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு வேலைக்காரியாக, பழைய புகழின் மங்கலான நினைவுகளில் கிடப்பதில் திருப்தியடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
மேனேஜரிடம் போய் பேசுவதற்கு ஜானம்மா பயந்தாள். மேனேஜர்! அவள் இளமையாக இருந்த காலத்தில் முதல் தடவையாக ஒரு முறை அத்துமீறி நடந்தது அந்த மனிதர்தான். அந்த நினைவு ஜானம்மாவின் இதயத்தை சதாநேரமும் வேதனைப்படுத்தக்கூடிய ஒரு கொடூரமான நிகழ்ச்சியாக இப்போதும் பசுமையாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த மனிதரை நினைத்தால் இப்போது கூட அவளுக்குப் பயம்தான்.
இருப்பினும் அவள் மேனேஜரைத் தேடிச் சென்றாள். மற்றவர்களுக்குத் தருவதைப் போல தனக்கும் சம்பளம் தர வேண்டுமென்று அவள் சொன்னாள்.
அதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டு நின்றுவிட்டார். தொடர்ந்து அவர் கேட்டார்: "ஜானம்மா, உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே கிடைக்குதுல்ல?"