வளர்ப்பு மிருகங்கள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7612
நல்ல நிலவொளி திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலான பனி மூட்டத்தினூடே தூரத்தில் மேற்கு திசையில் இருந்த மலை முகடுகள் தெளிவில்லாமல் நிழல்களைப் போல தெரிந்தன. இரவு நேரத்தின் உறைந்து போன அமைதி எங்கும் பரவியிருந்தது.
ஜானம்மா மெத்தையில் அசையாமல் படுத்திருந்தாள். பாதி இரவு தாண்டியிருக்கும். இருப்பினும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அமைதியின் மரத்துப்போன சரீரத்தை வேதனைப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்த சர்க்கஸ் கொட்டகையிலிருந்து மெல்லிய பேண்ட் வாத்திய இசை காற்றில் மிதந்து வந்தது.
இரண்டாவது ஆட்டம் முடியப் போகிறது என்பதை ஜானம்மா புரிந்து கொண்டாள்.
எவ்வளவு நேரம்தான் இப்படியே கண்களைத் திறந்து கொண்டு படுத்திருப்பது? ஜன்னல் வழியாகப் பரந்து கிடக்கும் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவாறு ஜானம்மா படுத்திருந்தாள். கை பயங்கரமாக வலித்தது. மூச்சு விடும்போது மார்புகள் மேலும் கீழுமாக அசைகிற நிமிடத்தில் அவளின் கையில் தாங்க முடியாத வலி உண்டானது. மார்பு மீது வைத்திருந்த தன்னுடைய வலது கையில் போடப்பட்டிருந்த 'ப்ளாஸ்டர்' பகுதியை நோக்கி அவளுடைய இடது கை விரல்கள் அவளையுமறியாமல் நீண்டன.
உடல் பயங்கரமாக வலித்தது. பலமணி நேரங்களாக அவள் அதே இடத்தில் படுத்திருந்தாள். சிறிது கூட திரும்பியோ புரண்டோ அவளால் படுக்க முடியவில்லை. அசையும் போது காயம்பட்ட கை தாங்க முடியாத அளவிற்கு வலித்தது.
அறையின் ஒரு மூலையில் படுத்திருந்த லட்சுமியை ஒரு நிமிடம் அவள் பார்த்தாள். லட்சுமி தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றி ஜானம்மா இதற்கு முன்பு கூட சிந்தித்திருக்கிறாள். ஜானம்மா சர்க்கஸ் கம்பெனியில் நுழைந்த காலத்தில் லட்சுமி குறிப்பிடத்தக்க ஒரு சர்க்கஸ் விளையாட்டுக் காரியாக இருந்தாள். மற்றவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், அவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதும் அவளாக இருந்தாள்.
இன்று லட்சுமி பணிவிடை செய்யும் பெண்ணாக மாறியிருக்கிறாள். அதற்குக் காரணம் இருக்கிறது. அவளுக்கு வயது நாற்பதைத் தாண்டி விட்டது. சிறப்பான ஒப்பனையாலும் அவளின் முகத்திலிருக்கும் சுருக்கங்களைச் சரி பண்ண முடியாது என்ற நிலை வந்தபோது அவளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவளின் இளமை முழுமையாக அவளைவிட்டு விடைபெற்றிருந்தது.
இது உலகத்தில் சர்வ சாதாரணமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான் என்பதை ஜானம்மா அறியாமல் இல்லை. மலர்கள் வாடும், வதங்கி கீழே விழும்; அந்த இடத்தில் புதிய மொட்டுக்கள் விரியும்.
இளமை இல்லாமற் போயிருந்தாலும், வாடி உலர்ந்து போகாத ஒரு மலராக இருந்தாள் ஜானம்மா.
அவள் மீண்டும் காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டாள். பேண்ட் வாத்தியத்தின் இனிய ஒலி காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கடைசி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். 'ஃப்ளையிங் ட்ரப்பீ'ஸின் பின்னணி இசைதான் இப்போது அவள் காதுகளில் விழுந்து கொண்டிருக்கிறது. அந்த இசையுடன் சேர்ந்து அங்கு கூடியிருக்கும் எண்ணிப் பார்க்க முடியாத பார்வையாளர்களின் இதயமும் படுவேகத்தில் துடித்துக் கொண்டிருக்கும்.
பறக்கும் ட்ரப்பீஸ்! அதை மனதில் நினைத்துப் பார்த்த போது ஜானம்மாவின் இதயத்தில் ஒரு வேதனை உண்டாகாமலில்லை. இதற்கு முந்தைய இரவில்தான் கீழே விழுந்தது! அதை நினைத்துப் பார்த்த போது காயம் ஏற்பட்ட கையில் இருந்த வலி இரண்டு மடங்காகக் கூடியது.
அவள் அசையாமல் படுத்திருந்தாள். கொஞ்சமாவது தூங்கமுடிந்தால்...? கண்ணீர் சிந்தியவாறு மனதில் உண்டான வேதனையை மறைத்துக் கொண்டு அவள் மெதுவான குரலில் அனத்தினாள்: 'ஹாவ்...'
ஒரு உறக்கம் முடிந்து லட்சுமி எழுந்தபிறகும் ஜானம்மாவிற்குத் தூக்கம் வரவில்லை. லட்சுமி மெதுவாகத் தலையை உயர்த்திக் கேட்டாள்: "ஜானம்மா, உறங்கலையா?"
"இல்ல..."
"கை வலிக்குதா?"
"ரொம்ப..."
அவள் மீண்டும் அனத்தினாள்.
லட்சுமி மீண்டும் தூக்கத்திற்குள் புகுந்தாள். முழுமையான அமைதி சுற்றிலும் நிலவிக் கொண்டிருந்தது. ஜானம்மா காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டாள். இல்லை... பேண்ட் வாத்தியத்தின் இசை கேட்கவில்லை. காட்சி முடிந்திருக்கும்.
கீழே சாலையில் சர்க்கஸ் லாரியின் இரைச்சல் சத்தம் கேட்டது. அவள் தோழிகள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
படிகளில் அவர்கள் ஏறிவரும் சத்தம் கேட்டது. அவர்கள் அறைக்குள் வந்தார்கள். எல்லோரும் மிகவும் களைத்து தளர்ந்து போய் காணப்பட்டனர். ஜானம்மா கண்களை மூடி உறங்குவதைப் போல படுத்திருந்தாள்.
மின்சார விளக்கு அறைக்குள் நிறைந்தது. உடலுடன் ஒட்டியவாறு அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்துப் போட்டு விட்டு படுக்க வேண்டிய நேரம். எல்லோரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். இனி சூரியன் வானத்தின் உச்சியில் வரும்போது மட்டுமே அவர்கள் கண்களைத் திறப்பார்கள்.
நகரத்தில் சுமாரானது எனப் பெயர் பெற்றிருக்கும் ஒரு ஹோட்டலில் தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். மேனேஜருக்கு மட்டும்தான் சிறப்பு வசதிகள் கொண்ட அறை. பெண்கள் மூன்று அறைகளில் மிகவும் நெருக்கமாகத் தங்கியிருந்தார்கள். ஆண்கள் அனைவரும் கீழ் தளத்தில் தங்கியிருந்தார்கள். தாழ்ந்த நிலையில் உள்ள பணியாட்கள் அனைவரும் சர்க்கஸ் கூடாரத்திலேயே தங்கிக் கொள்வார்கள்.
முதல்நாள் இரவுதான் அந்தச் சம்பவம் நடந்தது. இரண்டாவது காட்சி முடியப்போகும் நேரம். பறக்கும் ட்ரப்பீஸ் நிகழ்ச்சிதான் எல்லாவற்றிருக்கும் கடைசி. ஜானம்மாவின் திறமை முழுவதும் அதில்தான் என்ற விஷயம் கம்பெனியில் உள்ள எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். கடந்த நான்கு வருடங்களாக அவள் சிறிது கூட இடைவெளி விடாமல் ட்ரப்பீஸ் விளையாட்டில் தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்டிருந்தாள்.
மிகவும் உயரத்தில் ட்ரப்பீஸ்களைக் கட்டியிருப்பார்கள். கீழே தரையிலிருந்து ஒரு ஆள் உயரத்தில் வலை கட்டப்பட்டிருக்கும்.
ஜானம்மாவும் அவளுடைய தோழியும் இரண்டு முனைகளிலுமிருந்த பலகைகளில் எதிரெதிராக நின்றிருந்தார்கள். அவளிடம் எந்தவித பதைபதைப்பும் இல்லை. அந்த அளவுக்கு அவள் அந்த விளையாட்டில் அனுபவம் பெற்றிருந்ததே காரணம். பார்வையாளர்களின் கண்கள் பயத்தாலும் ஆச்சர்யத்தாலும் விரிந்து நிற்க, நிகழ்ச்சி அமைதியாக ஆரம்பமானது. அதிகமான வேகத்தில் அவர்கள் ஒரு கையை விட்டு, இரண்டு கைகளையும் விட்டு காற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள். ஒரு பலகையிலிருந்து இன்னொரு பலகைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ட்ரப்பீஸிலிருந்து இன்னொரு ட்ரப்பீஸுக்கு மாறிக் கொண்டிருந்தார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரு ட்ரப்பீஸைப் பிடிப்பதை விட்டுவிட்டு காற்றில் மிதந்தவாறு தன் தோழி அனுப்பிவரும் ட்ரப்பீஸைப் பிசகாமல் பற்றிக்கொண்டு ஜானம்மா பயணம் செய்து கொண்டிருந்தாள். பார்வையாளர்கள் பலமாகக் கைகளைத் தட்டினார்கள்.