வளர்ப்பு மிருகங்கள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7612
எல்லோரும் தயாராகி அறையை விட்டு கிளம்பினார்கள். சாலையில் லாரி 'ஸ்டார்ட்' செய்யப்பட்டு புறப்படத் தயாராக நின்றிருந்தது. ஹோட்டலுக்கு முன்னால் சர்க்கஸ் வீரர்கள் பெண்கள் வருவதற்காக காத்து நின்றார்கள். மோட்டார் சைக்கிளில் பாய்ந்து சாகசங்கள் காட்டும் கறுத்து மெலிந்து போன வழுக்கைத் தலையனும், 'சான்டோ' கிருஷ்ணனும் மேனேஜரின் காரில் ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் பெண்களுடன் சேர்ந்து லாரியில் ஏறினார்கள். உயிரோடிருக்கும் மீனை விழுங்கக்கூடிய கறுத்து உயரமாக இருக்கும் மனிதன், யானைகளையும் குதிரைகளையும் காட்டு மிருகங்களையும் விளையாட வைக்கும் விற்பன்னர்கள், பார் விளையாட்டு வீரர்கள், சீனியர் கோமாளி, ரிங் மாஸ்டர்கள்& இப்படி பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.
லாரி அந்த இடத்தைவிட்டு நகரும் ஓசை கேட்டதும் ஜானம்மா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.
சிறிதும் அசையாமல் படுக்கையில் உடல் வலியுடனும் மன வேதனையுடனும் போராடிக் கொண்டிருந்த அவளுடைய மனம் கடந்த காலத்தை நோக்கித் திரும்பிச் சென்றது.
பதினாறு வருடங்களுக்கு முன்பு ஜானம்மா சர்க்கஸ் கம்பெனியில் வந்து சேர்ந்தாள். அப்போது அவளுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தது. நினைத்துப் பார்க்கும் போது ஒரு உண்மை அவளுக்குத் தெளிவாகத் தெரிய வந்தது. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு சர்க்கஸ்காரியாக வர வேண்டும் என்ற ஆசை சிறிதும் அவளிடம் இருக்கவில்லை.
நினைவு தெரிந்த நாள் ஆனபோது அவள் தன் தாயுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். காற்று வேகமாக வீசும் போது எங்கே பாதிப்பிற்கு உள்ளாகிவிடுமோ என்று நினைக்கக்கூடிய ஒரு மண் குடிசையில்தான் அவளும் அவளுடைய தாயும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தன் தந்தையைப் பற்றி அவள் எப்போதும் விசாரித்ததில்லை. அப்படியொரு மனிதன் தனக்கு இருந்தானா என்பதுகூட அவளுக்குத் தெரியாது.
தன் தாயை அவளுக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு அன்பு வைத்திருந்த பெண் அவள்! அவளுடைய தாய் மிகவும் கஷ்டப்பட்டு அவளை வளர்த்தாள் என்பதே உண்மை. வாழ்வதற்காக அவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். ஒருவேளை அதன் விளைவாக இருக்கலாம்& தான் சர்க்கஸ் கம்பெனிக்குள் வந்து மாட்டிக் கொண்டது என்று ஜானம்மா நினைத்தாள்.
பக்கத்திலிருந்த சர்க்கஸ் விளையாட்டுக்களைச் சொல்லித்தரும் குருக்கள் ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு வந்ததை இப்போது கூட ஜானம்மாவால் தெளிவாக யோசிக்க முடிகிறது. அவர் அவளுடைய தாயுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அழுக்குப் படிந்திருந்த அவளுடைய ஆடைகளை மாற்றி சுத்தமான ஆடைகளை அவளுக்கு அணிவித்துவிட்ட அவள் தாய் சொன்னாள்: "மகளே, இவர் கூட போ..."
தாய் அதைச் சொன்னபோது அவளுடைய தொண்டை இடறியதை அவள் உணர்ந்தாள்.
"எங்கம்மா?"
அதற்கு அவளுடைய தாய் பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவள் தன் முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் ஜானம்மாவின் எண்ணெய் இல்லாத தலைமுடியைக் கைகளால் கோதி சரிப்படுத்தினாள். அப்போது அவள் தலையில் சூடாக ஒரு துளி கண்ணீர் வந்து விழுந்தது.
ஜானம்மாவால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கள்ளங்கபடமற்ற தன்னுடைய பெரிய விழிகளால் அவள் ஒரு வித பரபரப்புடன் தன் தாயைப் பார்த்தாள். அவளுடைய தாயின் சிவந்து போன கன்னங்கள் வழியாகக் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஜானம்மாவின் கண்களும் ஈரமாயின& காரணமெதுவுமில்லாமலே.
"மகளே, நீ புறப்படு. இவரோட வீட்டுக்கு... உனக்கு என்ன வேணுமோ, அதை இவர் தருவாரு..."
அப்போதுதான் அவளுடைய மனமே தாய் அழுததற்கான காரணத்தைக் கண்டுபிடித்தது. குருக்கள் தன்னுடைய வீட்டிற்கு அவளுக்குச் சாப்பாடு கொடுக்க அழைத்துச் செல்கிறார். அது நல்ல விஷயம்தானே! ஆனால், அதற்காக அவளின் தாய் ஏன் வருத்தப்பட்டு அழ வேண்டும்?
அவள் புறப்பட்டாள். படியைத் தாண்டும்போது அவள் தன் தாய் அழும் சத்தத்தைக் கேட்டாள். அவள் மனம் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது.
அவள் நினைத்ததைப்போல குருக்கள் அவளைத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு செல்லவில்லை. அதற்குமாறாக தலசேரி நகரத்தின்¢ ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு சிறு சர்க்கஸ் கம்பெனிக்கு அவர் அவளை அழைத்துச் சென்றார்.
சிறிதும் அறிமுகமில்லாத முகங்கள்! பழக்கமில்லாத இடங்கள்! 'அம்மா' என்று உரத்த குரலில் அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. பதினாறு வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. அதற்குப் பிறகு என்னவெல்லாம் நடந்திருக்கிறது!
சர்க்கஸ் விளையாட்டுக்களைப் படித்த காலத்தை நினைத்துப் பார்க்கும் போது இப்போது கூட ஜானம்மாவிற்கு தாங்கமுடியாத அழுகை வரும்.
களைத்துப் போய் கீழே விழுந்து விடுவாள் என்று மனதில்பட்டால் கூட கேளு ஆசான் அவளை விடமாட்டார். சிறிது தவறு செய்துவிட்டால் கூட போதும்& கிழவனின் கண்கள் செம்பருத்திப் பூவைப் போல சிவந்துவிடும். விரல் அளவிற்கு உள்ள பிரம்பு அவளின் மென்மையான உடம்பைப் பதம் பார்க்கும். திரும்பத் திரும்ப அவள் உடல்மீது அடிகள் விழும்.
பகல் முழுவதும் சர்க்கஸ் வேலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். இரவில் கற்றவற்றில் சிலவற்றைச் செய்து காட்ட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஏதாவது தவறு நடந்தால், ஒப்பனை அறைக்கு மீண்டும் திரும்பி வரும்போது ஆசானின் பிரம்பு ஆர்வத்துடன் காத்திருக்கும்.
அன்பு ததும்பும் கொஞ்சல்களை அனுபவித்து வாழ வேண்டிய காலத்தில் அவள் ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாமல் கடுமையாக உழைத்தாள்.
ஆடைகளும், உணவும் கிடைக்கவே செய்கின்றன. எனினும் ஜானம்மாவிற்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லை.
எல்லாவற்றையும் அவள் அமைதியாகச் சகித்துக் கொண்டாள்.
இரவில் விளையாட்டு முடிந்து படுத்தால் அவளுக்குத் தூக்கமே வராது. மிருகங்கள் இருக்கும் கூண்டுகளிலிருந்து இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு உறுமல் சத்தம் கேட்கும்போது அவள் பயந்து நடுங்குவாள். அவள் மனம் அப்போது தன்னுடைய அன்பான அன்னையை நினைக்க ஆரம்பித்துவிடும்.
தன் தாயைத் தேடி ஓடி அவளின் மடியில் தலைசாய்த்துப் படுத்து சிறிது நேரமாவது தேம்பி அழ வேண்டும் போல் ஜானம்மாவிற்கு இருக்கும்.
ஆனால், அவள் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு எவ்வளவோ தூரத்திலல்லவா இருந்தாள்!
ஜானம்மா வளர்ந்தாள். அவளும் சர்க்கஸ் விளையாட்டுக்காரியாக ஆனாள். அவளுடைய இடத்திற்குப் புதிய இளம்பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.