வளர்ப்பு மிருகங்கள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7612
ஆனால், ஜானம்மாவுக்கு அது ஒரு புதுமையான விஷயமில்லை. கீழே வட்டமாக அமைக்கப்பட்ட பால்கனி பகுதியில் ஏராளமானவர்கள் அமர்ந்து அடக்கி வைக்கப்பட்ட ஆர்வத்துடன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையை எங்கே அவள் மறந்துவிட்டாளோ என்று நமக்கு அப்போது தோன்றும்.
சிறிது தவறினாலும் ஆபத்து நிறைந்த இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மனத்தில் நூற்றுக்கணக்கான கேள்விகளை எழச் செய்வதென்னவோ உண்மை. இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு உயிர் மீது பற்று இல்லையா? இவர்களும் மனிதர்கள்தானா? இப்படி எத்தனையோ கேள்விகள். பார்வையாளர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஜானம்மா ஒருமுறை கூட சிந்தித்ததில்லை. அந்த அளவுக்கு இயந்திரத்தனமாக அவள் அந்த விளையாட்டில் ஈடுபட்டாள்.
இந்தச் சூழ்நிலையில்தான் அந்த ஆபத்தான சம்பவம் நடந்தது. உண்மையில் பார்க்கப்போனால் தவறு யார் பக்கம் இருந்தது? தவறாக நடந்தது ஜானம்மாவின் தோழி மாதவிதான். நேரத்தையும் தூரத்தையும் சரியாகக் கணக்குப்போட்டு அவள் மறு பக்கத்திலிருந்து ட்ரப்பீஸை அனுப்பியிருக்க வேண்டும்.
ஜானம்மா கீழே விழுந்தாள். ஆனால், அப்படி விழுந்தது ஒரு சாதாரண வீழ்ச்சி அல்ல.
ட்ரப்பீஸிலிருந்து இதற்கு முன்பும் அவள் கீழே விழுந்திருக்கிறாள். கீழே கட்டப்பட்டிருக்கும் வலையில் விழுவது தான் எப்போதும் நடந்திருக்கிறது. பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதற்காக கோமாளி குள்ளன் ராமு நூறு தடவை அங்கு போய் விழுவானே!
ஆனால், ஜானம்மா கீழே விழுந்தது பெரிய ஆபத்தில் போய் முடிந்தது. வலை மேல் விழுந்த அவள் வெளியே வேகமாக தூக்கி எறியப்பட்டாள். பார்வையாளர்களிடமிருந்து ஒரு சத்தம் எழும்பியது மட்டும் அவளின் ஞாபகத்தில் இருந்தது.
நினைவு வந்தபோது அவள் சர்க்கஸ் கம்பெனிக்குச் சொந்தமான லாரியில் படுத்திருந்தாள். மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்த பெரிய சாலை வழியாக லாரி ஹோட்டலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவளைச் சுற்றிலும் பெண்களும் ஆண்களும் கூட்டமாக நின்றிருந்தனர். ஒருவித பதைபதைப்புடன் அவள் அவர்களின் முகத்தையே பார்த்தாள். எல்லோரும் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள்.
பயங்கரமாக வலித்துக் கொண்டிருந்த தன்னுடைய வலது கையைப் பார்த்த ஜானம்மா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
"கவலைப்படாதே ஜானம்மா& கண்ணன் மாஸ்டர் சொன்னாரு பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லேனு"& இரக்கம் நிறைந்த குரலில் மாதவி சொன்னாள்.
கண்ணன் மாஸ்டர்தான் அந்தக் கம்பெனியின் குருக்கள். காயம்பட்டிருக்கும் இடத்தைத் தடவி சரி செய்வதற்கு அந்த வயதான கைகளுக்கு நல்ல பலம் இருந்தது.
லாரியை விட்டு இறங்குவதற்கு ஜானம்மாவிற்கு இரண்டு மூன்று பேரின் உதவி தேவைப்பட்டது.
கண்ணன் மாஸ்டர் இரவில் வந்து கையைத் தடவிப் பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியேறினார். அவர் சென்றது மேனேஜரின் அறைக்கு.
ஒரு மணி நேரம் சென்றதும் டாக்டர் வந்தார். கையில் இரண்டு எலும்புகள் முறிந்திருக்கின்றன என்று அவர் சொன்னபோது ஜானம்மா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
ஜானம்மாவின் கை ப்ளாஸ்ட்டரால் கட்டப்பட்டது. கையைக் கட்டி முடித்துவிட்டு டாக்டர் போகும் போது சொன்னார்: "பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. வலி இருந்தா மட்டும் சொன்னா போதும்."
பகல் முழுவதும் லட்சுமி அவளின் அருகிலேயே இருந்தாள். மற்றவர்கள் பகலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரவில்தானே அவர்களுக்கு வேலை!
சாயங்காலம் மேனேஜர் அறைக்குள் வந்தார். அவர் சர்க்கஸ் கூடாரத்திற்குப் போகும் வழி அது. வாஸ்லைன் தடவி தலைமுடியை வாரி, இளம் மஞ்சள் நிறத்தைக் கொண்ட சில்க் சட்டையும் பேன்ட்டும் அணிந்திருந்த கறுத்து தடித்த ஒரு நடுத்தர வயது மனிதன்தான் அந்த மேனேஜர்.
சர்க்கஸ் விளையாடும் பெண்கள் ஆடைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர் அப்போது அங்கு வந்தது நல்லதல்ல என்று ஜானம்மா நினைத்தாள். வெறும் பிரேஸியரும் நிக்கரும் மட்டும் அணிந்து நின்று கொண்டிருந்த மாதவியும் வனஜாவும் மற்றவர்களும் எவ்வளவு தரம் தாழ்ந்த விதத்தில் மேனேஜரிடம் பேசுகிறார்கள்! வெட்கம்! ஆனால், அது சர்க்கஸ் கம்பெனி என்பதை ஜானம்மா நினைத்துப் பார்த்தாள். வெட்கப்படத்தக்க பல விஷயங்களும் அங்கு நடக்கத்தான் செய்கின்றன.
ஒரு சிறு குழந்தையாக இருந்த காலத்தில் தான் இதே சர்க்கஸ் கம்பெனியில் வந்து சேர்ந்த போது லட்சுமி சொன்ன வார்த்தைகள் இப்போதும் ஜானம்மாவின் மனதில் அடிக்கடி ஞாபகத்தில் வருவதுண்டு. "குழந்தை... நீயும் இங்கு வந்து மாட்டிக்கிட்டியா? இது சர்க்கஸ் கம்பெனி. இங்கே மனிதர்கள் யாருமில்ல. இருக்கிறவங்க எல்லாரும் மிருகங்கள்..."& இதுதான் அவள் சொன்னது.
அவள் இந்த வார்த்தைகளைச் சொல்லி எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன! அதற்குப் பிறகு பதினாரு வருடங்கள் கடந்தோடி விட்டன.
மேனேஜர் அவள் கை இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதே மாதிரிதான் இருக்கிறது என்று அவள் பதில் சொன்னாள்.
அவள் ஆச்சரியப்பட்ட ஒரு உண்மை இருக்கவே செய்தது. அந்த மனிதரின் குரலில் இரக்கப்பட்டதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தது. அப்படியென்றால் அந்தக் குரல் இருந்துதான் என்ன? அவளைக் குறை சொல்லக் கூடிய ஒரு குணம் அதற்குப் பின்னால் மறைந்திருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ட்ரப்பீஸ்ல யாரு வேலை செய்வாங்க?"
முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு ஒப்பனை செய்து கொண்டிருந்த பெண்கள் பக்கம் திரும்பி மேனேஜர் கேட்டார்.
அதற்கு மாதவிதான் பதில் சொன்னாள்: "நானும் கல்யாணியும் விளையாட வேண்டியதுதான்..."
"யார் வேணும்னாலும் விளையாடுங்க. ஆனா, நேற்று நடந்தது மாதிரி விபத்து உண்டாக்காம இருக்கணும். அப்படி நடக்குறதுனால கம்பெனிக்குத்தான் நஷ்டம்" என்று சொன்ன அவர் சில உண்மைகளை அவளிடம் எடுத்துச் சொன்னார். அங்க ஆறு நாட்கள் காட்சி நடந்தும் அவர்களுக்குச் சுமார் அய்யாயிரம் ரூபாய்தான் இதுவரை வசூலாகியிருக்கிறது. இனி மழைக்காலம் வரப்போகிறது. அதற்கு முன்பு ஒரு நல்ல தொகை கிடைக்கவில்லையென்றால், கம்பெனியை நடத்துவது என்பதே சிரமத்திற்குரிய ஒரு காரியமாக இருக்கும்.
தான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டார்களா என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவர் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? அவ்வப்போது இந்த மாதிரி ஏதாவது சொன்னால்தான் இந்த வளர்ப்பு மிருகங்கள் ஒழுங்காக நடப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?"
அவர் திரும்பி நடந்தார். வாசலில் நின்றவாறு அவர் முகத்திற்குப் பவுடர் போட்டுக் கொண்டிருந்த வனஜாவின் சதைப்பிடிப்பான உடம்பையே வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதை படுக்கையில் படுத்தவாறு ஜானம்மா கவனிக்கத் தவறவில்லை. கம்பெனியில் இருக்கும் பெண்களிலேயே வயது குறைந்தவள் வனஜாதான்.