ஒரு சிறை கைதியின் புகைப்படம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6945
"தேவையில்லாமல் அவன் ஏன் மனசுல கவலைப்படணும்? எங்களோட வீட்டையும் நிலத்தையும் அரசாங்கத்துல ஜப்தி செஞ்சிட்டாங்க. இந்த விஷயத்தையும் நான் அவனுக்குச் சொல்லவே இல்ல. அவன் ஏதோ மனிதர்களுக்கு நல்லது செய்ற விஷயத்துக்காகத்தான் ஜெயிலுக்கே போயிருக்கான். இங்கே நடக்குறது எதுவுமே அவனுக்குத் தெரியவேண்டாம்னு நினைக்கிறேன்!''
"இந்த வீடு?''
"என் மகளைக் கல்யாணம் பண்ணின மருமகனோட வீடு இது.''
"ஜெயில்ல இருந்து கடிதம் வருமா?''
"ம்... வீட்டோட அட்ரஸுக்குத்தான் கடிதம் எழுதுவான்.''
அந்த வயதான தாய் பெட்டியில் ஒரு கைக்குட்டையில் வைத்திருந்த நான்கு கடிதங்களை எடுத்து மரியாம்மாவின் முன் வைத்தாள்.
"இது அவனோட கைக்குட்டைதான்!''
மரியாம்மா கைக்குட்டையை அவிழ்த்தாள். நான்கு சிறைச் சாலைகளில் இருந்தும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை.
முதல் கடிதத்தில்-
மொத்தம் சிறையில் உள்ளவர்கள் 2114
ஆண்கள் 1817
பெண்கள் 297
இதில் அரசியல் கைதிகள் 1742
அதில் ஆண்கள் 1344
பெண்கள் 398
தூக்கில் தொங்க இருப்பவர்கள் 16
இரண்டாவது கடிதத்தில்-
மொத்தம் சிறையில் இருப்பவர்கள் 172
ஆண்கள், பெண்கள் உட்பட அரசியல் கைதிகள் 984
தூக்கில் தொங்க இருப்பவர்கள் 34
மூன்றாவது ஜெயிலில்- மொத்தம் 2512
தூக்கில் தொங்க இருப்பவர்கள் 99
மொத்தம் அரசியல் கைதிகள் 1115
நான்காவது சிறையில்- மொத்தம் 1648
தூக்குத் தண்டனை கைதிகள் 42
அரசியல் கைதிகள் 849
இந்த விவரங்கள் போக, தந்தை- தாயின் நல்ல சுகத்தைப் பற்றி, அக்காமார்களின் நலத்தைப் பற்றி, அவர்கள் கணவர்களின், குழந்தைகளின் நற்சுகத்தைப் பற்றி எல்லாக் கடிதங்களிலும் விசாரித்து
எழுதியிருந்தான். ஒவ்வொன்றிலும் சிறைக்கு வெளியே உள்ள ஒரு ரகசிய முகவரி எழுதப்பட்டிருந்தது. அதைப் பற்றி நான்காவது கடிதத்தில் அவன் இவ்வாறு எழுதியிருந்தான்.
"எனக்குக் கடிதம் எழுதும்போது, எழுதிய கடிதத்தை ஒரு கவருக்குள் போட்டு, அதன் வெளிப்பக்கத்தில் 1051 என்ற எண்ணை எழுத வேண்டும். அதற்குப்பிறகு அந்தக் கவரை இன்னொரு கவருக்குள் போட்டு அதற்கு வெளியே நான் கொடுத்திருக்கும் முகவரிக்கு ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணவும். கடிதம் சரியாக என் கையில் கிடைக்கும்."
கடிதம் கிடைக்கும்.
மரியாம்மாவின் இதயத்தில் ஒரு சிறு மின்னல்... ஒரு கடிதம் எழுதினால் என்ன? எதற்கு அவள் எழுத வேண்டும்? ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது? அவளுக்கே இதற்கான விடை தெரியவில்லை. இதுவரை அவனை அவள் பார்த்ததில்லை, அவனுடன் பேசியதில்லை. யாரென்றே தெரியாமல், எங்கோ, எதற்கோ சிறையில் கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
அழகான சுருட்டை முடியும், புன்னகை தவழ்கின்ற முகமும், பெரிய கண்களும்- மொத்தத்தில் அழகான ஒரு இளைஞன்.
ஆனால், என்ன சொல்லி கடிதம் எழுதுவது? அவன் அவளைப் பற்றி என்ன நினைப்பான்? சொல்லப்போனால் சிறையைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றனவே! சிறை என்பது எப்படி இருக்கும்? அங்கே ஆண்களும் பெண்களும் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி? இவற்றை எல்லாம் அவள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லையே! இவை மட்டும்தானா? வேறு ஏதேனும் கூடத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
"அம்மா... நான் இந்தக் கடிதங்களை என்னோட அப்பா, அம்மாகிட்ட படிச்சுக் காண்பிச்சிட்டு திருப்பிக் கொண்டு வரட்டா?''
அந்த வயதான தாய் அவளையே பார்த்தாள். அவள் சம்மதித்தாளா இல்லையா என்பது பற்றியெல்லாம் மரியாம்மா கவலைப்படவே இல்லை. அந்தக் கடிதங்களுடன் அவள் தன் வீட்டுக்குப் போனாள். யாரிடமும் அந்தக் கடிதங்களைப் படித்து அவள் காட்டவில்லை.
அவள் அன்று இரவு, அந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்பப் படித்தாள்.
சிறை!
நாட்டில் மொத்தம் எத்தனை சிறைகள் இருக்கும்? அதில் மொத்தம் எத்தனை ஆண்களும் பெண்களும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்...? கம்பிகளுக்குள் அடைபட்டு...
இதுவரை படித்த படிப்பை வைத்து இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா என்ன? தான் தங்கியிருந்த கன்னியாஸ்திரீ மடத்தைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். நினைக்கும்போதே மூச்சை அடைப்பதுபோல் இருந்தது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் ஜோசப்பிற்கு கடிதம் எழுதத் தீர்மானித்தாள். வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்தாள். "பிரிய..." என்று ஆரம்பித்தாள். அதை எப்படித் தொடர்வது என்ற குழப்பம் இப்போது அவளுக்கு. தான் எழுதிய அந்த வார்த்தையையே பார்த்தவாறு எந்தவித சலனமும் இல்லாமல் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
"பிரிய..."
மரியாம்மா அன்று கடிதம் எழுதவில்லை. அவள் வெளியே எழுதும் முகவரியை மட்டும் தனியாக ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டாள். அவனின் நம்பரை அவள் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் எழுதினாள். கிறிஸ்துவ பாதிரியார்கள், மதர் சுப்பீரியர், கன்னியாஸ்திரீகள், கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோரின் கையெழுத்துக்களும் அவர்களின் அறிவுரைகளும் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அதில் ஒரு சிவப்பு நிறப் பக்கத்தில் 1051 என்று அவள் எழுதினாள்.
அடுத்த நாள் அந்தக் கடிதங்களைக் கொண்டு போய் ஜோசப்பின் தாயிடம் திருப்பிக் கொடுத்தாள்.
ஒவ்வொரு நாளும் அவள் அந்த வீட்டுக்குச் செல்வாள். அந்த அறையில் அமர்ந்து அந்தத் தாயுடன் பேசிக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் மரியாம்மா அதிகம் பேசுவதில்லை. அந்த வயதான கிழவி சொல்லும் பல சம்பவங்களையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பாள் என்பதே உண்மை.
விடுமுறைக் காலம் முடிந்தது. ஜோசப்பின் தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டவாறு பிரியாவிடை பெற்றாள் மரியாம்மா.
கன்னியாஸ்திரீ மடத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடன், அவள் ஜோசப்பிற்குக் கடிதம் எழுதிவிடவில்லை. மனமும் உடலும் மிகவும் சோம்பல் அடைந்திருந்தன. ஏதாவது பண்ண வேண்டுமே என்று அவள் நினைத்தாள். அரசியல் செய்திகள் ஏதாவது படிக்கலாமா என்று பார்த்தாள். அவளுக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. படிக்கும்போது பல விஷயங்களையும் அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவளுக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. பத்திரிகைகள் இரண்டு வகை. பெரும்பாலான பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு ஆதரவான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடியவை. சில பத்திரிகைகள் மட்டுமே சுதந்திரமாக, தாங்கள் நினைக்கக் கூடியவற்றை எந்தவித அச்சமும் இல்லாமல் எழுதக் கூடியவையாக இருந்தன. அப்படிப்பட்ட பத்திரிகைகள் மடத்தில் இருக்கவே கூடாது என்று மதர் சுப்பீரியர் கடுமையான உத்தரவு போட்டிருந்தார்.