
இருந்தாலும் அவளுக்கு எப்படியோ அப்படிப்பட்ட பத்திரிகைகள் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. மடத்தில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டே வெளியில் தங்கியிருந்த ஒரு பெண்ணிடம் இருந்து அவ்வகை பத்திரிகைகளை வாங்கி வரச் சொல்லி படித்தாள் மரியாம்மா. படிக்கப் படிக்க, அரசியல் காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டுப் போராடும் ஆட்கள்மீது ஒரு வகையான ஈர்ப்பும் ஒட்டுதலும் அவளுக்கு உண்டானது. அரசியல் சம்பந்தமான விஷயங்களில் அவளின் ஆர்வம் அதிகரித்தது. சாலையில் சில நேரங்களில் செல்லும் அரசியல் ஊர்வலங்கள் எழுப்பும் உணர்ச்சிகரமான கோஷங்களைக் கேட்டு அவள் மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பு உண்டாகும். அவர்கள் உச்ச குரலில் எழுப்பும் கோஷம் அவளின் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கும்.
"அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்க!" இப்படி அவர்கள் கூறிச் செல்லும்போது, அவள் மனதில் பலவித எண்ணங்களும் உண்டாகும். இரவும் பகலும் உட்கார்ந்து சிறையில் இருக்கும் ஜோசப்பைப் பற்றி நினைத்துப் பார்ப்பாள். ஜோசப்... ஜோசப்.. இப்படி அவள் எந்த நேரம் பார்த்தாலும் அவனைப் பற்றி எண்ணி எண்ணியே, அவனுடன் ஒருவகை நெருக்கத்தை அவள் தனக்குள் உண்டாக்கிக் கொண்டாள். அவள் அவனுக்கு ஒன்பது கடிதங்கள் எழுதினாள். ஆனால், எதையும் அவள் அனுப்பவில்லை. எல்லாவற்றையும் கிழித்து துண்டு துண்டாக்கி கன்னியாஸ்திரீ மடத்தின் ஜன்னல் வழியே வெளியே எறிந்தாள். அதற்காக அவள் வெறுமனே இருந்துவிட
முடியுமா? மீண்டும் அவள் எழுதினாள். மடத்தில் இருந்து எழுதப்படும் கடிதங்களையும், மடத்திற்கு வரும் கடிதங்களையும் மதர் சுப்பிரீயர் கட்டாயம் பார்ப்பார். படிப்பார். அப்படி ஒரு சட்டம் அங்கு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், மரியாம்மா தான் எழுதிய கடிதத்தை மதர் சுப்பீரியரிடம் காட்டவில்லை. வெளியே தங்கிப் படிக்கும் மாணவியின் வீட்டு முகவரியைத்தான் அவள் கடிதத்தில் எழுதி இருந்தாள். பல மணி நேரங்கள் சிந்தித்து மரியாம்மா ஜோசப்பிற்கு எழுதிய முதல் கடிதம் இப்படி இருந்தது.
"பிரிய நண்பரே,
உங்களுக்கு நான் யார் என்பது தெரியாது. ஆனால், உங்களை எனக்குத் தெரியும்.
நான் மடத்தில் தங்கிக் கொண்டு படிக்கும் ஒரு மாணவி. உங்களின் தாயை எனக்கு நன்றாகத் தெரியும். என் தந்தையும் தாயும் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறார்கள். என் தந்தை இம்பீரியல் வங்கியில் கேஷியராகப் பணியாற்றுகிறார். விடுமுறையில் வீட்டுக்குப் போயிருந்தபோது, உங்களின் தாயை ஒவ்வொரு நாளும் போய்ப் பார்ப்பேன். நீங்கள் எழுதியிருந்த கடிதங்களை நான் படித்தேன்.
உங்களின் தாய் நன்றாகவே இருக்கிறார்.
எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா? சிறையைப் பற்றி பல உண்மையான செய்திகளை நீங்கள் எழுதி அனுப்பினால், எனக்கு அவை உபயோகமாக இருக்கும். உங்களுக்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கட்டும்.
இப்படிக்கு,
எம்.பி. மரியாம்மா"
இந்தக் கடிதத்தை மரியாம்மா அனுப்பினாள். அதில் அவளின் இதய ஒலியும் கலந்திருந்ததே! அந்த ரகசியத்தை ஜோசப்பால் தெரிந்து கொள்ள முடியுமா?
இருபது நாட்கள் கழித்து, அவளுக்கு ஜோசப்பிடமிருந்து பதில் கடிதம் வந்திருந்தது. ஆனால் கடிதம் அவளுக்கு எழுதப்பட்டதுதானா? பெயரோ இடமோ எதுவுமே கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. மொட்டையாகக் கடிதம் இருந்தது. இருந்தாலும் சிறையைப் பற்றி விலாவரியாக அவன் எழுதியிருந்தான்:
"மனிதர்கள் உண்டாக்கிய ஒரு தனியான உலகம் சிறை என்பது. இங்குள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. போலீஸ் லாக்-அப்களில் பலவித கஷ்டங்களையும் அனுபவித்த பிறகுதான் இங்கே ஒவ்வொருவரும் வந்து சேர்கிறார்கள்." மரியாம்மா ஆர்வத்துடன் அந்தக் கடிதத்தைப் படித்தாள். ஜோசப்பின் கையெழுத்துதான்.
"ஜோசப்... ஜோசப்.." அவள் மனம் நினைத்தது.
கடிதம் தொடர்ந்தது:
"உயர்ந்த கற்சுவர்களால் சூழப்பட்ட இந்தச் சிறைக்குள் ஆயிரத்து அறுநூறைத் தாண்டிய ஆண்களும் பெண்களும் கைதிகளாக இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளும்கூட இங்கு இருக்கிறார்கள். ஆசைகளும் லட்சியங்களும் ஏக்கங்களும் ரத்தமும் எலும்பும் கொண்ட ஆண்களும் பெண்களும்... வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை இவர்கள் யாரும் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த சுவர்கள். ஆகாயத்தையே இந்த சுவர் முட்டிக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உள்ளே இதே மாதிரியான சின்னச்சின்ன சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள்...
சூப்பிரண்ட், ஜெயிலர், வார்டர்கள், கன்விக்ட் வார்டர்கள், மேஸ்திரிகள்- இங்கு வேலை பார்ப்பவர்கள் இவர்கள். இவர்கள் தவிர, பெண் வார்டர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் சிறையில் இருப்பார்கள். டாக்டரும் இங்கே உண்டு.
கன்விக்ட் வார்டர்கள், மேஸ்திரிகள்- இவர்கள் வேறு யாருமல்ல... நீண்ட காலம் சிறையில் தங்களின் வாழ்க்கையைக் கழித்த கைதிகள்தாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாரையாவது கொலை செய்திருப்பார்கள். கைதிகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதற்கும், அவர்களை வேலை செய்ய வைப்பதற்கும் வார்டர்களுக்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள். இவர்கள் பயன்படுத்தும் சொற்களையும் அவர்களின் பல நடவடிக்கைகளையும் இங்கு எழுத்தில் காட்ட முடியாது. அந்த அளவிற்கு தரம் தாழ்ந்தவையாகவும் அசிங்கமாகவும் அவை இருக்கும். யாரையும் "டேய்..." என்ற அடைமொழியுடன்தான் இவர்கள் அழைப்பார்கள். அரசியல் கைதிகளையும் சேர்த்து இங்குள்ள மற்ற கைதிகளையும் இவர்கள் வேலை வாங்குவார்கள். வெந்து போகும் அளவிற்கு உள்ள வெயிலிலும், உடலே நடுங்கக் கூடிய கடும் குளிரிலும்கூட இவர்கள் மற்றவர்களை வேலை செய்யச் சொல்லிக் கஷ்டப்படுத்துவார்கள்.
திறந்த வெளியில் இரண்டு கற்களால் அடுத்தடுத்து கக்கூஸ் அமைக்கப்பட்டிருக்கும். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு, இல்லாவிட்டால் தோளோடு தோள் உரசிக் கொண்டு ஐநூறோ அறுநூறோ ஆட்கள் மலத்தை வெளியேற்றிக் கொண்டிருக்கும் காட்சியை என்னவென்பது!
மிருகத்தனமான பல விஷயங்களும் இங்கு தினமும் நடக்கத்தான் செய்கின்றன. சொல்லப்போனால் காட்டு மிராண்டித்தனமான செயல்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன என்று கூடக் கூறலாம். இங்கு தண்டனைகள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் செயல்களுக்கு
ஒரு எல்லையே இல்லை. முக்காலியில் ஆளைக் கட்டி வைத்து அடிப்பது, பிரம்பை வைத்து அடிப்பது எல்லாமே இங்கு உண்டு. தேவாலயங்களும், புரோகிதர்களும், தனியறைகளும், தூக்குத் தண்டனைக் கைதிகளின் அறையும், தூக்கு மரமும்... எல்லாமே இங்கு உண்டு.
"மனிதர்கள் நல்லவர்களாக மாற இதெல்லாம் தேவைதானே..."
பதினான்கு வருடங்களாக பெண்களையே பார்த்திராத ஆண்கள், ஆண்களையே கண்டிராத பெண்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள். இவர்களின் நிலை எப்படி இருக்கும்? இதன் விளைவு- ஆண் ஆணையும் பெண் பெண்ணையும்... இப்படிப் போகிறது இவர்களின் அன்றாட வாழ்க்கை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook