
பொதுவாக இந்தச் சிறையில் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ இதே கதைதான் நாட்டிலுள்ள எல்லாச் சிறைகளிலும். சிறை என்பது ஒரு தனி உலகம். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூமியில் சிறை என்ற ஒன்று எந்தக் காலத்திலும் கட்டாயம் இருக்கும். சிறைகள்!
"பிரியமுள்ள 1051,
உங்களின் கடிதத்தை நான் படித்தேன். என்னுடைய தோழிகள் பலரும் அதைப் படித்தார்கள். உலகமே கேட்கிற மாதிரி அந்தக் கடிதத்தை உரத்த குரலில் படித்தால் என்ன என்றுகூட நினைத்தேன். நான் நினைப்பது சரிதானே!
நான் இந்தக் கற்சுவருக்குள் இருக்கும் மடத்தில் உட்கார்ந்து கொண்டு நினைத்துப் பார்க்கிறேன். உங்களின் தாயுடன் நானும் சேர்ந்து உங்களை நினைக்கிறேன். சிறையைப் பற்றிய இன்னும் பல
விஷயங்களையும், உங்களின் நற்சுகத்தைப் பற்றியும் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.
என்னையும் சேர்த்து நாட்டிலுள்ள பொதுமக்களின் நலமான வாழ்விற்காகவும், சுதந்திரமான வாழ்க்கைக்கும் வேண்டி பாடுபடும் உங்களின் தியாக மனதிற்கும், சேவை எண்ணத்திற்கும் இருகரம் கூப்பி வணக்கம் சொல்கிறேன்.
உங்களின்,
எம்.பி. மரியாம்மா"
"நான் அறியாமல் இருக்கும் சினேகிதியே,
நான் உங்களின் கடிதத்தைப் படித்துவிட்டு பல மணி நேரம் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன். உங்களுக்கு என்ன பதில் எழுதுவது?
நான் அப்படியொன்றும் பெரிய சேவைகள் செய்யவில்லை. மரியாதைக்காக இதை நான் கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். என் தாய், தந்தையைப் போன்ற எத்தனையோ ஆயிரம் பேர் வீடுகளில் ஆதரவின்றி இருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகள் நாடு முழுக்க உள்ள பல சிறைகளிலும் அடைபட்டுக் கிடக்கிறார்கள். சிலர் முப்பது தடவையோ நாற்பது தடவையோகூட சிறைக்குள் வந்தவர்களாய் இருப்பார்கள். கை- கால் உடைந்தவர்கள், கொடிய நோயால் பீடிக்கப்பட்டவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், தூக்கு மரத்தை முத்தமிட்டவர்கள்... இப்படி யாரையும் நீங்கள் எண்ணிப்பாருங்கள். நான் என்ன பெரிய சேவை செய்து விட்டேன்? சேவை என்ற பெரிய வார்த்தைக்கு முன்னால் நான் கூனிக்குறுகி உட்கார முற்படுகிறேன். இந்த இயக்கத்தை பலப்படுத்தி வெற்றி பெறச் செய்ய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நான் கேட்பதற்காக மன்னிக்க வேண்டும். உங்களின் வயது என்ன என்று எனக்குத் தெரியாது. பல வயதுப்
பெண்களும் இங்கு இருக்கிறார்கள்.
பூமியில் உள்ள எல்லா போலீஸ் லாக்-அப்களிலும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களிலும், எல்லா சிறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை மறந்துவிடக் கூடாது. வீர சகோதரிகள்!
கடந்த இரண்டரை வருடங்களில் அரசியல் கைதிகளில் ஒன்பது பேர் மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். அதில் ஆறு பேர் பெண்கள். இதைப்போல எல்லா சிறைச்சாலைகளையும் சேர்த்துப் பார்த்தால், எத்தனை பெண்கள் இறந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
வீர சகோதரிகள்! அவர்களை நீங்கள் மறக்கவே கூடாது.
சிறையைப் பற்றி இதற்குமேல் நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? போன கடிதத்தில் நான் எழுதியிருந்தேனே- மனிதர்கள் உண்டாக்கிய ஒரு தனி உலகம் சிறை!
சிறையின் மிகப்பெரிய சுவருக்கு மூன்று பக்கங்களில் மூன்று கதவுகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு சிறியவை- ஒன்று மட்டும் பெரியது. மூன்றுமே இரும்பால் ஆனவை. பெரிய கதவு வழியாகத்தான் ஒருவர் உள்ளே நுழைய முடியும். அங்கே எப்போதும் ஆயுதம் தாங்கிய காவல்காரர்கள் நின்று கொண்டிருப்பார்கள். யார் வந்தாலும் முழுமையாகச் சோதித்துவிட்டுத்தான் உள்ளேயே விடுவார்கள். அதன் வழியாகத்தான் கைதிகளை உள்ளே கொண்டு வருவார்கள்.
மற்ற இரண்டு வாசல்களும் உள்ளே இருக்கும் கைதிகளை வெளியே கொண்டு போவதற்கானவை. அங்கு எந்தவித சோதனையும் கிடையாது. சொல்லப்போனால் அந்த இரண்டு வாசல்கள் வழியே கொண்டு போவது பிணத்தைத்தான் என்றுகூடக் கூறலாம். காரணம்- ஒரு வாசல் தூக்குமரத்திற்குப் போவது. இன்னொரு வாசல்- அங்கிருக்கும் மருத்துவமனைக்குப் போவது.
சிறையின் பிரதான வாசலுக்குப் பக்கத்திலேயே சூப்பிரண்டின் அலுவலகமும், ஜெயிலரின் அலுவலகமும், பிற அலுவலகங்களும் இருக்கின்றன. அதைத் தாண்டினால் சிறையின் மையப்பகுதியில் ஒரு பெரிய டவர். அதன் உச்சியில் நின்று பார்த்தால் முழு நகரமும் தெரியும். சிறைக்கூடத்தின் எல்லாப் பகுதிகளையும் அங்கிருந்து பார்க்கலாம். தூக்குத் தண்டனைக் கைதிகள் இருக்கும் இடம், தூக்கு மரம், பெண்கள் சிறை, மருத்துவமனை... இப்படிப் பலவற்றையும்...
டவரின் உச்சியில் இருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் மணி அடிக்கப்படும். அதன் பயங்கரமான ஒலியைக் கேட்டு, அங்குள்ளவர்களுக்கு ஒரு நடுக்கமே உண்டாகும்.
சிறையில் எல்லா இடங்களுக்கும் மின்விளக்குகள் உண்டு. இரவுகூடப் பகல் மாதிரியே இருக்கும்.
சாயங்காலம் ஆகிவிட்டால், கைதிகளைச் சரிபார்த்து, எண்ணி, உள்ளே அனுப்பிப் பூட்டி விடுவார்கள். ஒவ்வொரு கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் காவல் காக்கும் நபர்கள் நின்றிருப்பார்கள். உள்ளே கன்விக்ட் வார்டர். வெளியே சாதாரண வார்டர்.
சிறைக்குள் எது வேண்டுமானாலும் நடக்கும். எது தேவையானாலும் கிடைக்கும். சாராயம், கள்ளு, கஞ்சா, பிற மயக்க மருந்துகள், பீடி, வெற்றிலைப் பாக்கு, தேயிலை, சர்க்கரை- இப்படி எது வேண்டுமானாலும் கவலையே இல்லாமல் அங்குள்ளவர்களுக்குக் கிடைக்கும். வியாபாரிகள் சிறையில் இருக்கும் கைதிகள்தாம். கன்விக்டர் வார்டர், வார்டர், ஹெட் வார்டர்- எல்லாருக்கும் இதில் பங்கு உண்டு. வெளியே ஆறு பைசாவுக்கு விற்பது, உள்ளே ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். லாபத்தின் ஒரு பங்கை பிரதான வாசலில் இருப்பவர்களுக்குத் தர வேண்டும்.
இடுப்பில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டுதான் இந்தப் பொருட்கள் உள்ளே கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. சிறைக்கு வெளியே இருக்கும் தோட்டங்களில் வேலை செய்யச் செல்லும் கைதிகள், வார்டருக்குத் தெரிந்து கொண்டு வருவதுதான் இந்தப் பொருட்கள். வெளியே அவர்களுக்கு விற்பனை செய்வதற்கென்று ஆட்கள் இருப்பார்கள். உள்ளே வரும்போது சோதனை செய்து அவை கண்டுபிடிக்கப்பட்டால், முக்காலியில் கட்டி வைத்து அடிப்பார்கள்.
திருடியும், வழிப்பறி செய்தும், கொலை செய்தும் சிறைக்குள் வந்தபிறகு, ஆறாயிரம் ரூபாய் வரை சம்பாதித்து, யாருக்கும் தெரியாமல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் கைதிகளும் இங்கு உண்டு. திருடாதவனைக்கூட எப்படித் திருடுவது என்பதைக் கற்றுத்தரும் இடங்கள்தாம் நம் சிறைகள். சொல்லப்போனால் குற்றவாளிகள் உருவாகும் இடம் இது என்றுகூடக் கூறலாம். பூமியில் இருக்கும் எல்லா போலீஸ் லாக்-அப்களும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களும், எல்லா சிறைச்சாலைகளும் குற்றவாளிகளை உருவாக்குகின்றன என்றே நான் சொல்வேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook