ஒரு சிறை கைதியின் புகைப்படம் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6945
நான் ஒரு அரசியல் தொண்டன். இதன் அர்த்தம், எனக்குக் காதலோ காமமோ இல்லை என்று இல்லை. நீங்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கை நிலை இல்லாத ஒன்று. பாதுகாப்பே இல்லாதது அது. நான் எத்தனையோ போலீஸ் லாக்-அப்களில் இதுவரை கிடந்திருக்கிறேன். எத்தனையோ சிறைகளிலும் இருந்து விட்டேன். "என்னைப்போல நாட்டிலுள்ள பல சிறைச் சாலைகளிலும் எத்தனையோ அரசியல் கைதிகள் அடைபட்டுக் கிடக்கின்றனர். எங்களிடம் பல மாறுதல்களும் உண்டாகி இருக்கின்றன. இதை எல்லாம் இங்கு விவரித்து எழுத வேண்டிய அவசியமில்லை.
எங்களைப் பொறுத்தவரை கால அளவு என்று எதுவும் கிடையாது. எப்போது எங்களை விடுதலை செய்வார்கள் என்பது எங்களுக்கே தெரியாது. இந்த விவரத்தை நீங்கள் என் தாய்க்கும் தந்தைக்கும் சொல்லக்கூடாது."
"அப்பா... அவர் இறந்து, அவரை மண்ணு தின்னு எவ்வளவு நாளாச்சு!"- கண்ணீர் மல்க நினைத்த மரியாம்மா கடிதத்தைத் தொடர்ந்து வாசித்தாள்.
"நீங்கள் எனக்குக் கடிதம் எழுதிய விவரம் தாய்க்கோ தந்தைக்கோ தெரிந்திருந்தால், என்னைப் பற்றி அவர்கள் ஏதேனும் கேட்டால், சீக்கிரம் எங்களை விடுதலை செய்ய இருக்கிறார்கள் என்று கூறுங்கள். அவர்கள் மனம் எதற்கு வீணாக வேதனைப்பட வேண்டும்?
எங்களுக்குக் கிடைத்திருப்பது தனிமைச் சிறை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடாது. பேசக்கூடாது. நான்கு சுவர்களுக்குள் தனிமையாக இருக்க வேண்டும். இது எவ்வளவு பயங்கரமானது! மனிதர்களின் கொடூரமான அக்கிரமம் இது!
நட்சத்திரங்களையும், நிலவையும், இரவுநேர ஆகாயத்தையும் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன! எனக்கே தெரியவில்லை.
நான் ஒரு தனியான கட்டிடத்தில் இருக்கிறேன். அதாவது- ஒரு சிறிய அறை. இப்படி இருக்கும் சின்னச்சின்ன அறைகளில் தான் அரசியல் கைதிகள் ஒவ்வொருவரும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எங்கள் எல்லாரையும் ஒரே அறையில் அடைப்பதற்கான தைரியம் அரசாங்கத்திற்கு இல்லை. மற்ற சாதாரண கைதிகளுடன் எங்களைப் போடவும் அவர்களுக்குச் சம்மதம் இல்லை. எங்களையும் அவர்களையும் பிரித்து வைத்துதான் அவர்கள் பார்க்கிறார்கள். இது தூக்குத் தண்டனைக் கைதிகளை அடைத்து வைத்திருந்த அறை. இதில் பலரும் இதற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அறை எத்தனை சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கும்! இதன் நீளம் பன்னிரண்டு அடி. உயரம் பன்னிரண்டு அடி. அகலம் ஆறு அடி. கருங்கல்லால் ஆன சுவர். உள்ளே சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. முன்பக்கம் கறுத்து இருண்டுபோய் இருக்கும் அகழியுடன் கூடிய ஒரு இரும்புக் கதவு. வெளியில் வாசல் கதவுக்குப் பக்கத்தில் உள்ளே இருந்து கை எட்டாத தூரத்தில் வெளிச்சம் பரப்பிக் கொண்டிருக்கும் மின்சார விளக்கு. அறைக்கு வெளியே நாலடி அளவில் உள்ள முற்றத்தை விட்டுப் பார்த்தால், மூன்று பக்கங்களிலும் பெரிய கற்சுவர். அதற்கும் ஒரு இரும்புக் கதவு. கற்சுவருக்கு உள்ளே ஒரு தண்ணீர்க் குழாய். ஒரு கழிப்பறை.
வெளியில் இருக்கும் சுவரின் வாசலை பகல் நேரத்தில் பூட்டி விடுவார்கள். இரவில் என்னை இங்கே உள்ளே அடைத்துப் பூட்டிவிட்டு வெளியே இருக்கும் கதவைத் திறந்து விடுவார்கள்.
நான் எழுதும் இந்தக் கடிதமும் வெளியே இருக்கும் என் நண்பனின் முகவரிக்கு எனக்கு வரும் கடிதமும் இங்கே இருந்து போவதும், வெளியே இருந்து எனக்கு இங்கே வருவதும் எப்படி என்பதை நான் இங்கு தெரிவிக்கவில்லை. இந்தக் கடிதம் மற்றவர்கள் யாருடைய கையிலாவது ஒருவேளை கிடைத்துவிட்டால்... தேவையில்லாமல் வார்டர்களின் வேலை போய்விடும். அவர்களின் குடும்பம் எதற்கு வீணாகக் கஷ்டப்பட வேண்டும்? உங்களின் காதல் விஷயம் இந்தச் சிறைக்குள் இருக்கும் கைதியைத் தேடி வந்திருப்பது உண்மையிலேயே ஒரு வினோதமான சமாச்சாரம்தான். நான் என்னென்னவோ சிந்தனையில் ஆழ்ந்துபோகிறேன்.
இரவு நேரத்துக்கே உரிய அச்சத்தை வெளிப்படுத்தும் மயான அமைதி. பக்கத்தில் இருக்கும் பெண்கள் சிறையில் இருந்து என்னவோ சப்தம் வருகிறது. வந்த வேகத்திலேயே அது நின்றும் போகிறது. மீண்டும் ஒரே நிசப்தம். அதே நேரத்தில் சற்று தூரத்தில் நகரத்தில் இருக்கும் பயணிகள் மாளிகையில் இருந்து சிங்கத்தின் கண்ணீர் நிறைந்த கர்ஜனை ஒலிகள் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கின்றன. ஆகாயத்தையே எட்டும் துக்கத்தின் இடி முழக்கங்கள் அவை.
சகோதரி, என்னை தயவு செய்து மறந்துவிடுங்கள். எப்போதாவது நீங்கள் என் வீட்டுக்குப் போக நேர்ந்தால், என் தாயிடமும் தந்தையிடமும் அங்கே இருக்கிற என் புகைப்படத்தை எடுத்துவிடச் சொல்வீர்களா? என் தலையில் இருந்த தலைமுடி பெரும்பாலும் உதிர்ந்துவிட்டது. மீதி இருக்கும் கொஞ்சம் முடிகள்கூட நரைத்து விட்டன. எனக்கு இரண்டு கண்கள் இருந்தன. இப்போது வலது கண் மட்டுமே உள்ளது- சிவந்த கூர்மையான ரத்த நட்சத்திரம்போல...
நல்வாழ்த்துக்களுடன்,
உங்களின் சிறைக்கைதி 1051"
ஜோசப்பின் ஒரு கண் எப்படி இல்லாமற்போனது? தலை நரைக்கக் காரணம்?
இதய வேதனையுடன் மரியாம்மா ஜோசப்பிற்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினாள்.
"நான் உங்களுக்காக காத்திருப்பேன்- தேவைப்பட்டால், மரணம் வரையிலும் கூட" இவ்வளவுதான் அவள் கடிதத்தில் எழுதி இருந்தாள். இரண்டு பக்கங்களிலும் உள்ள ரகசியங்கள் அவளின் இதயத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தன. சமீபத்தில் அவள் வீட்டிற்குப் போயிருந்தாள். ஜோசப் எழுதிய கடிதங்கள் அவளின் உள்பாடிக்குள் இருந்தன. அவள் ஜோசப்பின் தாயைத் தேடிப் போனாள். அந்த வயதான தாய் அப்போதும் அதே அறையில்தான்.
நடுவில் இயேசு கிறிஸ்துவின் பெரிய படம். அதற்கு இரண்டு பக்கங்களிலும் இரண்டு சாதாரண புகைப்படங்கள். ஒன்று- வாழ்க்கையின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்து தளர்ச்சியடைந்த ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனின் படம். இன்னொன்று- அழகான சுருண்ட கேசத்துடனும், புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் முகத்துடனும், பெரிய கண்களுடனும் இருக்கும் ஒரு இளைஞனின் படம்.