ஒரு சிறை கைதியின் புகைப்படம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6945
போலீஸ்காரர்களைப்போலவே வார்டர்களுக்கும் சம்பளம் மிகக்குறைவே. இரண்டு பேருக்குமே குடும்பம் இருக்கின்றன. கடமைகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகளை அவர்கள் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வாங்கும் சம்பளத்தை வைத்து ஒரு மாதத்திற்கு காப்பி குடிக்கக்கூட முடியாது. பிறகு அவர்கள் எப்படித்தான் வாழ்வது? அவர்களின் எல்லா நடவடிக்கைகளையும் நான் நன்கு அறிவேன். இருந்தாலும் அவர்கள்மேல் நான் அனுதாபம் கொள்ளவே செய்கிறேன். அவர்களை இப்படி கொடூர மனப்பான்மை கொண்ட மனிதர்களாக மாற்றியது அரசாங்கம்தான் என்பேன் நான். பூமியில் உள்ள எல்லா போலீஸ் லாக்-அப்களிலும், கான்ஸன்ட்ரேஷன்
கேம்ப்களிலும், சிறைகளிலும் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் கிடைக்கும் பயன் என்ன? குற்றம் செய்யும் எண்ணத்தையே மாற்றி, குற்றவாளிகளை உத்தம மனிதர்களாக ஆக்குவதுதானே சிறைச்சாலையில் கொடுக்கப்படும் தண்டனையின் பின்விளைவாக இருக்க வேண்டும்? ஆனால், இது நடக்கிறதா?
நான் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். என் மனதில் உள்ளவற்றை எல்லாம் எழுதுவது என்றால், அதற்கு பேப்பர் போதுமா? பென்சிலால் எழுதுவதால், சில எழுத்துகள் உங்களுக்குச் சரியாகப் புரியாமல்கூட இருக்கலாம்.
அரசியல் கைதிகளுக்குத்தான் இங்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. எல்லாருக்கும் உணவு வேண்டும். வீடு வேண்டும். கல்வி கற்க வசதியும், வைத்திய உதவிகளும் வேண்டும். சமத்துவம் நிலவ வேண்டும். சகோதரத்துவம் இருக்க வேண்டும். அன்பு, பரிவு, கருணை இவை எங்கும் இருக்க வேண்டும். வன்முறை கூடாது. இவற்றை நாம் சொன்னால் கடுமையான தண்டனையாம்! கடவுளின் பிரதிநிதியாம் இந்த அரசாங்கம்! எந்த அரசாங்கமும்!
அன்பான சினேகிதியே, என்னுடைய கருத்துகளுடன் நீங்கள் ஒத்துப்போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேதனை நிறைந்த பல அனுபவங்களையும் மனதில் வைத்துக் கொண்டு தான் நான் இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன். என்னைப்போல அனுபவங்கள் பல கொண்ட எத்தனையோ ஆயிரம் ஆண்களும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் போலீஸ் லாக்-அப்களிலும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களிலும், சிறைச்சாலைகளிலும் கிடந்து நரகத்தின் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செய்த குற்றம்தான் என்ன?
அச்சம் தலைவிரித்துக் கோலோச்சும் இடம்தான் நம் அரசாங்கம்! சொல்லப்போனால், பூமியில் உள்ள எல்லா அரசாங்கங்களுக்கும் இது பொருந்தும். இங்கு இருப்பவர்கள் கம்பீரமானவர்கள் இல்லை. ஆட்சி செய்பவர்கள், ஆட்சி செய்யப்படுபவர்கள்- எல்லாருமே அடிமைகள்! அடிமைகள்!
கடவுளே... எவ்வளவு வேதனையாக இருக்கிறது ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கிறபோது. மனதையும் உடலையும் நடுங்கச் செய்கிற பயங்கரமான இருள் நிறைந்த உலகம் இது!
என் இனிய சினேகிதியே, நான் எதை எல்லாமோ எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கன்னியாஸ்திரீ மடத்தில் தங்கிக் கொண்டு படிப்பதாக எழுதி இருந்தீர்கள். என்ன வகுப்பில் படிக்கிறீர்கள்? வேதப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் தவிர வேறு ஏதாவது புத்தகங்களை நீங்கள் படிப்பதுண்டா? நான் கேட்பதற்காக மன்னிக்க வேண்டும். மாணவிகளும் மாணவர்களும்தான் நாட்டின் எதிர்கால உயிர்கள். நீங்கள் அடிமைகளாக எந்தக் காரணம் கொண்டும் வளரக்கூடாது.
பிரகாசமான எதிர்காலத்தை வாழ்த்தியவாறு,
உங்களின் 1051"
"என்னுடைய பிரிய 1051,
உங்களின் கடிதம் என் இதயத்தில் என்னென்னவோ மாற்றங்களை உண்டாக்கிவிட்டது. நான் ஒரு சாதாரணமானவள். எனக்கு எதுவுமே தெரியாது. இருந்தாலும் நான் உங்களின் இயக்கத்தை ஆதரிக்கிறேன். அதன் வெற்றிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் தற்போது இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வயது இருபத்தியிரண்டு.
நான் ஒரு அறிவாளி அல்ல. மக்குதான். விளைவு- பல வகுப்புகளிலுமாக நான்கு ஆண்டுகள் தோற்றிருக்கிறேன். நான் பார்க்க கருப்பாக இருப்பேன். அழகியும் அல்ல.
உங்களின் கருத்துகளை நான் சிந்தனையில் கொண்டுள்ளேன். அவற்றோடு மனப்பூர்வமாக உடன்பாடு கொள்ளவும் செய்கிறேன். அதைப்பற்றி நீங்கள் பெரிதாக எண்ணவேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் எது சொன்னாலும், அதன்மீது நம்பிக்கை கொள்ளத் தயாராக இருக்கிறேன். முழுமையாக என்னை அதில் இணைத்துக் கொள்ளவும் செய்கிறேன். வேதப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் படித்ததுபோக நான் நம்முடைய பத்திரிகையைப் படிக்கிறேன். அதை இங்கு அனுமதிக்கக் கூடாது என்பதுதான் மதர் சுப்பீரியரின் கடுமையான கட்டளை. இருந்தாலும்- அதை எப்படியோ இங்கு வரவழைத்து நான் படிக்கிறேன். அதில் சொல்லப்படும் புத்தகங்களையும் படிக்கிறேன். இனியும் நான் எதையெல்லாம் படிக்க வேண்டும் என்று நீங்கள் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும். அரசியல் கைதிகளுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும் என்று எழுதி இருந்தீர்கள். அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதைப் படித்து நான் மிகவும் வேதனைப்பட்டேன்.
உங்களின் தாயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த உங்களின் அழகான புகைப்படத்தைப் பார்த்த நிமிடத்தில், இப்படி எல்லாம் உங்களைப்பற்றி நான் நினைக்கவில்லை. அந்தப் புகைப்படம் என் இதயத்தில் அப்படியே பசுமரத்தாணிபோல் ஆழமாகப் பதிந்துவிட்டது.
உங்களை எப்போது விடுதலை செய்வார்கள்? எப்போது வீட்டிற்கு வருவீர்கள்?
எல்லா விவரத்திற்கும் உடனடியாக பதில் கடிதம் எழுதவும். பதில் தாமதம் ஆகிறபோது, என் மனதில் வேதனையும் கவலையும் உண்டாகின்றன. செத்துப்போவதைப்போல உணர்கிறேன்.
உங்களின் மன நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
உங்களின் சொந்தம்.
எம்.பி. மரியாம்மா"
அந்தக் கடிதத்திற்கு உடனே பதில் வரவில்லை. மரியாம்மா கவலையில் ஆழ்ந்துவிட்டாள். வகுப்பறையில் இருக்கும்போது அவளின் கவனம் படிப்புமீது செல்லவில்லை. கண்களைத் திறந்தவாறு, வெறுமனே அமர்ந்திருப்பாள். ஏன் அவன் பதில் கடிதம் எழுதவில்லை? அந்தக் கடிதம் ஒருவேளை அவன் கையில் கிடைக்காமல் போயிருக்குமோ? பாதி இரவு கழிந்த பிறகும்கூட அவள் இருட்டையே வெறித்துப் பார்த்தவாறு படுத்திருப்பாள்.
காலையில் பொழுது புலர்வதிலிருந்தே ஒரே சிந்தனை மயம்தான். ஒவ்வொரு நாளும் கடிதம் வரும் என்று எதிர்பார்ப்பாள். ஆனால், வராது. இப்படியே ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. கடைசியில் அவள் தன் பொறுமையை இழந்துவிட்டாள். மீண்டும் ஒரு கடிதம் எழுதலாமா என்று நினைத்தாள். அப்போது ஜோசப்பிடமிருந்து பதில் கடிதம் வந்தது!
"பிரிய சகோதரி,
என் தாயின் அருகில் இருக்கும்போது நீங்கள் என் புகைப்படத்தைப் பார்த்ததாக எழுதியிருந்தீர்கள். அது ஒரு சிறைக்கைதியின் படமல்ல.
நீங்கள் அறிவாளி அல்ல என்றும், மக்கு என்றும், நிறம் கருப்பு என்றும் எழுதி இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா? அப்படியானால், அந்த எண்ணத்தை இந்த நிமிடத்திலேயே மாற்றிக் கொள்ளுங்கள். என்னை நீங்கள் முழுமையாக மறந்துவிட வேண்டும்.