அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6416
அவன் தன்னைப் பற்றி மட்டுமே நினைச்சான். வந்திருந்த விருந்தாளியைப் பற்றி சின்ன அளவுலகூட அக்கறை எடுத்துக்கல. அப்படி வந்திருந்த விருந்தாளி யார்? சாட்சாத் கடவுள்! அவர் என்னைத் தேடி வந்தா, நான் அதே மாதிரிதான் நடப்பேனா?'
மார்ட்டின் தன் தலையை இரண்டு கைகள்மீதும் வைத்துக் கொண்டு தன்னை மறந்து அப்படியே தூங்கிவிட்டான்.
“மார்ட்டின்...!” ஒரு குரல் கேட்டது. அவனுடைய காதுக்கு மிகவும் அருகில் யாரோ தன் பெயரைச் சொல்லி அழைப்ப தைப்போல் அவன் உணர்ந்தான்.
தூக்கத்திலிருந்து விடுபட்ட அவன் கேட்டான்: “யார் அங்கே?”
அவன் சுற்றிலும் பார்த்துவிட்டு, கதவைப் பார்த்தான். யாரும் அங்கு இல்லை. அவன் மீண்டும் குரல் எழுப்பினான். அந்தக் குரல் இப்போது முன்பிருந்ததைவிட தெளிவாகக் கேட்டது: “மார்ட்டின்! மார்ட்டின்! நாளைக்கு தெருவைப் பார்த்துக்கிட்டே இரு. நான் வருவேன்!”
அவ்வளவுதான்- உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு மார்ட்டின் எழுந்தான். தன் கண்களை அவன் கசக்கி விட்டான். தான் கேட்ட அந்தக் குரல் வந்தது கனவிலா அல்லது உண்மையான விழிப்பு நிலையிலா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் உண்டானது. அவன் விளக்கை அணைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே அவன் படுக்கையை விட்டு எழுந்தான். பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டு நெருப்பை எரிய வைத்து முட்டைக் கோஸ் சூப்பையும், கோதுமைக் கஞ்சியையும் தயாரித்தான். பிறகு கனப்பை எரிய வைத்துக் கொண்டு மேலங்கியை அணிந்து ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினான். வேலை செய்யும்போது நேற்று இரவு என்ன நடந்தது என்பதைப் பற்றி அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அது ஒரு கனவைப்போல சில நேரங்களிலும், அந்தக் குரல் உண்மையாகவே தான் கேட்டதைப்போல் சில நேரங்களிலும் அவனுக்குத் தோன்றியது. "இப்போ நடந்தது மாதிரியே இருக்கு...' அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
அவன் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து வேலை செய்வதைவிட வெளியே தெருவைப் பார்ப்பதிலேயே அதிக கவனத்தைக் கொண்டிருந்தான். இதற்கு முன்பு பார்த்திராத காலணிகளுடன் யார் கடந்து சென்றாலும் அவன் பாதத்தைப் பார்ப்பதோடு நிற்காமல் தலையைத் தூக்கி மேலேயும் பார்த்தான். கடந்து செல்பவர்களின் முகங்களையும் பார்க்கவேண்டும் என்பதே அவன் எண்ணம். ஒரு வீட்டு வேலைக்காரன் புதிய காலணிகளுடன் நடந்து போனான். பிறகு நீர் எடுத்துக்கொண்டு போகும் ஒரு மனிதன் நடந்து சென்றான். இப்போது நிக்கோலஸ் ஆட்சியின்போது போர் வீரராக இருந்த ஒரு மனிதர் கையில் ஒரு தோண்டியுடன் ஜன்னலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.
அவருடைய காலணிகளை வைத்தே அவர் யார் என்பதை மார்ட்டின் தெரிந்து கொண்டான். அந்தக் காலணிகள் மிகவும் பழமையானதாகவும், அழுக்கடைந்து போயும் இருந்தன. தோல் கொண்டு இங்குமங்கும் அது ஒட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த வயதான மனிதரின் பெயர் ஸ்டெபானிச். அவர்மீது கொண்ட கருணை காரணமாக அருகிலிருந்த ஒரு வியாபாரி அவரைத் தன் வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தான். வீட்டு வேலைக் காரனுக்கு உதவியாக இருக்க வேண்டியது அவருடைய வேலை. மார்ட்டினின் ஜன்னலுக்கு முன்னால் படிந்திருந்த பனியை அவர் நீக்கிக் கொண்டிருந்தார். மார்ட்டின் அவரைப் பார்த்துவிட்டு, தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
"நான் வயசானதுனால பைத்தியக்காரன் மாதிரி ஆயிட்டேன்.' மார்ட்டின் தன் மன ஓட்டத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். ஸ்டெபானிச் பனியை நீக்க வந்திருக்காரு. ஆனா, கிறிஸ்துதான் என்னைத் தேடி வந்திருக்காருன்னு நான் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் ஒரு கிழட்டு ஆளுன்றது சரியாத்தான் இருக்கு...'
கிட்டத்தட்ட பன்னிரண்டு தையல்களைப் போட்டு முடித்த பிறகு, அவன் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதிக்க ஆரம்பித்தான். ஸ்டெபானிச் தன் கையில் வைத்திருந்த தோண்டி யைச் சுவரின்மீது சாய்த்து வைத்துவிட்டு ஓய்வு எடுக்கவோ, தன்னை கதகதப்பு ஆக்கிக் கொள்ளவோ முயன்று கொண்டிருந் தார். அவர் மிகவும் வயதாகித் தளர்ந்து போய் காணப்பட்டார். அங்கிருந்த பனியை நீக்கும் அளவுக்கு சொல்லப்போனால் அவர் உடம்பில் தெம்பே இல்லை.
"அவரை நான் உள்ளே வரவழைச்சு, தேநீர் கொடுத்தா என்ன?' மார்ட்டின் நினைத்தான். "தண்ணி கொதிக்கிற நிலைமையில இருக்கே!'
அவன் தன்னுடைய ஊசியை அதே இடத்தில் வைத்து விட்டு, எழுந்தான். மேஜைமீது கனப்பை வைத்து, தேநீர் தயாரித்தான். பிறகு ஜன்னலை தன் விரல்களால் தட்டினான். ஸ்டெபானிச் திரும்பி ஜன்னலை நோக்கி வந்தார். மார்ட்டின் அவரை உள்ளே வரும்படி சொன்னதுடன், தானே கதவைத் திறப்பதற்காக நடந்து சென்றான்.
“உள்ளே வாங்க”. அவன் சொன்னான்: “கொஞ்சம் உடம்பை கதகதப்பு ஆக்கிக்கங்க. நீங்க சரியான குளிர்ல இருந்தீங்கன்னு நினைக்கிறேன்.”
“கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.” ஸ்டெபானிச் சொன்னார்: “குளிர்ல என் எலும்பு ஒவ்வொண்ணும் பயங்கரமா வலிக்குது.” அவர் உள்ளே வந்து முதலில் தன்மீது படிந்திருந்த பனியை உதறினார். கால்களால் நடக்கும்போது தரையில் கறை படிந்தது. அதை நீக்குவதற்காக அவர் பாதங்களைத் தேய்த்தார். அப்போது எங்கே அவர் தடுமாறிக் கீழே விழுந்து விடுவாரோ என்பதைப் போல இருந்தது.
“நீங்க ஏன் சிரமப்படுறீங்க?” மார்ட்டின் சொன்னான்: “நான் தரையைத் துடைச்சிக்கிறேன். அது ஒரு பிரச்சினையே இல்ல. வாங்க நண்பரே, உட்காருங்க. கொஞ்சம் தேநீர் குடிங்க.”
இரண்டு குவளைகளில் தேநீரை ஊற்றிய மார்ட்டின் அவற்றில் ஒன்றை விருந்தாளியிடம் தந்தான். தனக்காக ஊற்றிய குவளையிலிருந்த தேநீரைக் கோப்பையில் ஊற்றிப் பருக ஆரம்பித்தான்.
ஸ்டெபானிச் குவளையைக் காலி செய்தார். பிறகு அதை தலைகீழாகக் கவிழ்த்து வைத்தார். மீதமிருந்த சர்க்கரைக் கட்டியை அதன்மீது வைத்தார். அவர் தன் நன்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். மேலும் சிறிது தேநீர் கிடைக்கும்பட்சம், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்பது தெரிந்தது.
“இன்னொரு குவளை தேநீர் குடிங்க.” மார்ட்டின் சொன்னான். மீண்டும் விருந்தாளியின் குவளையையும் தன்னுடைய குவளையையும் அவன் தேநீரால் நிரப்பினான். தேநீரைப் பருகிக் கொண்டிருக்கும் பொழுதே, மார்ட்டின் தெருவையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க யாரையும் எதிர்பார்க்கிறீங்களா?” விருந்தாளி கேட்டார்.
“நான் யாரையும் எதிர்பார்க்கிறேனா? நீங்க சொல்றது சரிதான். இதை உங்கக்கிட்ட சொல்றதுக்கு எனக்கே வெட்கமா இருக்கு. உண்மையாகவே நான் யாரையும் எதிர்பார்க்காமத்தான் இருந்தேன்.