அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6416
அவனுடைய இதயம் நூலைப் படிக்கப் படிக்க மென்மையாகிக் கொண்டே வந்தது. முன்பெல்லாம் படுக்கைக்குத் தூங்கச் செல்லும்போது கனமான இதயத்துடன்தான் அவன் செல்வான். தன்னுடைய இறந்துபோன சிறு மகனை மனதில் நினைத்து நினைத்து புலம்பிக் கொண்டிருப்பான். ஆனால், இப்போது அவன் வாய் திரும்பத் திரும்ப முணுமுணுப்பது இதைத்தான்: "எல்லாப் புகழும் உமக்கே, எல்லாப் புகழும் உமக்கே, கடவுளே! நீர் நினைச்சா எல்லாம் நடக்கும்.'
அந்த நேரத்திலிருந்து மார்ட்டினின் முழு வாழ்க்கையும் மாறி விட்டது. முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் அவன் உணவு விடுதிக்குச் சென்று தேநீர் அருந்துவான். ஒன்று அல்லது இரண்டு வேளை வோட்கா அருந்துவான். சில நேரங்களில் யாராவதொரு நண்பருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, மனதில் உண்டான உற்சாகத்தில் முட்டாள்தனமாக ஏதாவது உணவு விடுதியில் மற்றவர்களிடம் உளறிக் கொண்டிருப்பான். யாரையாவது பார்த்து தேவையில்லாமல் கத்துவான். இல்லாவிட்டால் திட்டுவான். இப்போது அப்படிப்பட்ட எல்லா விஷயங்களும் அவனிடமிருந்து முழுமையாக விலகிப் போய் விட்டன. அவனுடைய வாழ்க்கை அமைதியானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாறிவிட்டிருந்தது. அவன் காலையில் வேலை செய்ய உட்காருவான். அன்றைய தன்னு டைய வேலை முடிந்துவிட்டால் சுவரிலிருக்கும் விளக்கை கீழே எடுப்பான். அதை மேஜைமீது வைத்துவிட்டு அலமாரியிலிருந்து நூலை எடுத்துத் திறந்து படிக்க உட்கார்ந்து விடுவான். அவன் அந்த நூலை அதிகமாகப் படிக்கப் படிக்க, பல விஷயங்களையும் பற்றி அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னுடைய மனம் தெளிவானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருப்பதை அவனே உணர்ந்தான்.
ஒருநாள் இப்படித்தான் மார்ட்டின் இரவு நேரத்தில் உட்கார்ந்து நூலில் முழுமையாக மூழ்கிப் போயிருந்தான். அவன் லூக்கா எழுதிய வேத நூலைப் படித்துக் கொண்டிருந்தான். அதன் ஆறாவது அத்தியாயத்தில் இந்த வார்த்தைகள் இருந்தன: "உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு. உன்னிடமிருந்து ஒருவன் அங்கியை எடுத்தால், அவனுக்கு உன்னுடைய கோட்டையும் கொடுத்துவிடு. யார் உன்னி டம் கேட்டாலும், நீ கொடு. உன்னிடம் இருக்கும் பொருட்களை யாராவது எடுத்தால், அதை அவர்களிடம் திருப்பிக் கேட்காதே. மற்றவர்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கி றாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்.'
அவன் கடவுள் கூறுவதாக வரும் இந்த வார்த்தைகளையும் படித்தான்:
"என்னை கடவுள் கடவுள் என்று அழைக்கிறாய். ஆனால் நான் சொன்னபடி நீ நடக்கிறாயா? எவன் என்னிடம் வந்து, நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கிறானோ, அவன் எப்படிப் பட்டவன் என்பதை உனக்கு நான் கூறுகிறேன். மிகவும் ஆழமாகத் தோண்டி பாறையில் அடித்தளம் அமைத்து ஒரு வீட்டைக் கட்டியவன் போன்றவன் அவன். வெள்ளம் மேலெழுந்து நீர் பயங்கர வேகத்துடன் அந்த வீட்டின்மீது மோதுகிறபோது, அந்த வீடு சிறிதும் நிலை குலையாது கம்பீரமாக நின்றிருக்கும். காரணம்- அந்த வீடு பாறைமீது கட்டப்பட்டிருப்பதே. அதே நேரத்தில் நான் கூறும் வார்த்தைகளை வெறுமனே கேட்டுவிட்டு வாழ்க்கையில் அதன்படி நடக்காதவன் மணலில் அடித்தளமில்லாமல் வீட்டைக் கட்டிய ஒரு மனிதனைப் போன்றவன் என்கிறேன் நான். நீர் பலமாக அந்த வீட்டின்மீது மோதுகிறபோது, அது உடனடியாகக் கீழே சரிந்து விடுகிறது. அந்த வீட்டின் இழப்பு உண்மையிலேயே மிகப்பெரியதாக இருக்கும்!'
மார்ட்டின் இந்த வார்த்தைகளைப் படித்தபோது, தன்னுடைய மனம் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை அவன் உணர்ந்தான். அவன் தன்னுடைய கண்ணாடியைக் கழற்றி நூலின்மீது வைத்து விட்டு, தாடையை மேஜைமீது வைத்து தான் படித்ததைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். நூலில் இருந்த வரிகளுடன் தன்னுடைய சொந்த வாழ்க்கையை இணைத்துப் பார்த்த அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான்:
"என் வீடு பாறைமீது கட்டப்பட்டதா? மணல்மீது கட்டப் பட்டதா? பாறைமீது கட்டப்பட்டதா இருந்தா, உண்மையிலேயே அது ஒரு நல்ல விஷயமாக இருக்கும். இப்படி தனியா உட்கார்ந்து ஒரு மனிதன் கடவுள் சொன்ன கட்டளைகள்படி நாம வாழ்ந் திருக்கிறோமான்றதை நினைக்கிறது சந்தோஷமான விஷயம்தான். நான் அப்படி நினைக்கிறதை எப்போ நிறுத்திடுறேனோ, அப்போ நான் திரும்பவும் பாவம் செய்ய ஆரம்பிச்சிடுவேன். இதை மனசுல பதிய வச்சுக்கிட்டு நான் வாழ்க்கையை நடத்தணும். எனக்கு உதவிசெய்யும், கடவுளே!'
அவன் இப்படி பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டே படுக்கையை நோக்கி நடந்தான். ஆனால், வேதநூலை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அதனால் அந்நூலை எடுத்து அதன் ஏழாவது அத்தியாயத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். விதவையின் மகனைப் பற்றியும், ஜானின் சீடர்களுக்கு கூறப்பட்ட பதில்களும் அதில் இருந்தன. ஒரு பணக்கார மதவாதி கடவுளைத் தன்னுடைய வீட்டுக்கு அழைக்கும் பகுதியை அவன் படித்தான். பாவம் செய்த ஒரு பெண் கடவுளின் பாதங்களைத் தொட்டு அவற்றை எப்படி அவள் தன் கண்ணீரால் கழுவினாள் என்பதையும், அவர் எப்படி அவளுக்கு ஆறுதல் கூறினார் என்பதையும் அவன் படித்தான். நாற்பத்து நான்காவது வசனம் வந்தபோது அவன் படித்தான்:
“அந்தப் பெண் இருக்கும் திசையைத் திரும்பிப் பார்த்த அவர் சைமனைப் பார்த்துச் சொன்னார்: "இந்தப் பெண்ணைப் பார்த் தாயா? நான் உன்னுடைய வீட்டிற்கு வந்தேன். நீ என் கால்களை நீரால் கழுவவில்லை. ஆனால், இவளோ தன் கண்ணீரால் என் கால்களை ஈரமாக்கினாள். அவற்றை தன் தலை முடியால் துடைத் தாள். நீ எனக்கு முத்தம் தரவில்லை. ஆனால், இவள் முத்தம் தந்தாள். நான் இங்கு வந்தவுடன், இவள் என் பாதங்களை முத்தமிடுவதை நிறுத்தவேயில்லை. என் தலையை நீ எண்ணெய்யால் தடவவில்லை. ஆனால், இவளோ என் பாதங்களை களிம்பு கொண்டு தடவினாள்.”
அவன் இந்த வரிகளைப் படித்துவிட்டு நினைத்தான்: "அவன் ஆண்டவரின் பாதங்களை நீரால் கழுவவில்லை. முத்தம் தரவில்லை. தலைக்கு எண்ணெய் தேய்த்து விடவில்லை...' மார்ட்டின் தன் கண்ணாடியைக் கழற்றி நூலின்மீது வைத்துவிட்டு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தான்.
"அந்த மதவாதி என்னை மாதிரி ஒரு ஆளா இருக்கணும். அவன் எப்பவும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கக்கூடிய ஆளா இருந்திருக்கணும். ஒரு கோப்பை தேநீரை எப்படி அடையிறது, எப்படி குளிர்ல இருந்து விடுபட்டு உடம்பை கதகதப்பா வச்சிக் குறது, எப்படி வசதியா இருக்குறது... இப்படி... அவன் தன்னோட விருந்தாளியைக் கொஞ்சம்கூட மனசுல நினைக்கவேயில்ல...