
ஆனால், நேற்று ராத்திரி நான் கேட்ட குரலை என்னாலே இப்போக்கூட மறக்கவே முடியல. அது உண்மையிலேயே நடந்ததா இல்ல வெறும் கனவான்னு என்னாலேயே சரியா சொல்ல முடியல. இங்க பாருங்க, நண்பரே... நேற்று ராத்திரி நான் வேத நூலைப் படிச்சிக்கிட்டு இருந்தேன். கடவுள் எப்படியெல்லாம் தொல்லை களை அனுபவிச்சார், பூமியில் அவர் எப்படி நடந்தார்னு படிச்சிக் கிட்டு இருந்தேன். அதுல என்ன சொல்லப்பட்டிருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.”
“அதைப் பற்றி நான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.” ஸ்டெபானிச் சொன்னார்: “ஆனா, நான் ஒரு அப்பிராணி மனிதன். எனக்கு படிக்கத் தெரியாது.”
“அப்படியா? சரி... நான் அவர் எப்படி பூமியிலே நடந்தார்ன்றதை படிச்சிக்கிட்டு இருந்தேன். அவர் ஒரு மதவாதிக்கிட்ட போறார். அவன் அவரை சரியாவே வரவேற்கல. ஆமா நண்பரே, அந்த ஆளு ஆண்டவரான கிறிஸ்துவை எப்படி முறையான மரியாதையுடன் வரவேற்காம போனான்றதை மனசுல நினைச்சுப் பார்த்தேன். அதே மாதிரி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடந்திருந்தா, நான் எப்படி நடந்திருப்பேன்னு சிந்திச்சுப் பார்த்தேன். அந்த ஆளு கடவுளை கொஞ்சம்கூட கண்டுக்கல. சரி, நண்பரே... நான் அந்த விஷயத்தை நினைச்சுக்கிட்டே இருந்ததுல, அசந்து போய் தூங்கிட்டேன். என்னை மறந்து தூங்கிக்கிட்டு இருக்குறப்போ, என் பேரைச் சொல்லி யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்துச்சு. அடுத்த நிமிடம் நான் எழுந்தேன். யாரோ மெதுவா முதல்ல "என்னை எதிர்பார்த்திரு. நாளைக்கு நான் வருவேன்'னு சொன்னாங்க. இப்படி ரெண்டு முறை கேட்டுச்சு. அந்தச் சம்பவம் என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. அதுக்காக என் மேலயே எனக்கு வெட்கமா இருக்கு. நான் ஆண்டவரை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.”
அதைக் கேட்டு ஸ்டெபானிச் அமைதியாகத் தன் தலையை ஆட்டினார். தேநீர் குடித்து முடித்துவிட்டு குவளையை ஒரு ஓரத்தில் கவிழ்த்து வைத்தார். ஆனால், மார்ட்டின் அதை மீண்டும் நேராக வைத்து, அதில் தேநீரை அவருக்காக ஊற்றினான்.
“இன்னும் ஒரு குவளை தேநீர் குடிங்க. ஆண்டவர் எப்படி கால்நடையா நடந்து போனார்ன்றதை நான் நினைச்சுப் பார்த்தேன். அவரை ஒருவர்கூட அடையாளம் கண்டு பிடிக்கல. இவ்வளவுக்கும் அவர் சாதாரண மக்கள் மத்தியில்தான் நடந்து போறாரு. ஏழை மக்கள் இருக்குற இடங்களைத் தேடி அவர் போறாரு. நம்மை மாதிரி இருக்கிற ஆட்கள்ல இருந்து சீடர்களை அவர் தேர்ந் தெடுக்குறாரு. நம்மை மாதிரி தொழிலாளிங்க, பாவம் செய்தவங்க மத்தியில இருந்து... "எவன் ஆணவம் கொண்டிருக்கிறானோ, அவன் அடக்கப்படுவான்... எவன் அடக்கமாக இருக்கிறானோ, அவன் உயர்த்தப்படுவான்'னு அவர் சொல்றாரு. அவர் மேலும் "என்னை நீ ஆண்டவரே என்று அழைக்கலாம். நான் உன் பாதங்களைக் கழுவுகிறேன்" னு சொல்றாரு. "எவன் முதலில் இருக்கிறானோ, அவன்தான் எல்லாருக்கும் வேலைக்காரனாக இருக்கிறான். ஏழைகள், அடக்கமானவர்கள், கருணை உள்ளம் கொண்டவர்கள்- இவர்களே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்'னும் அவர் சொல்றாரு.”
ஸ்டெபானிச் தேநீர் குடிக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டார். அவர் மிகவும் வயதான மனிதராக இருந்ததால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார். அவர் உட்கார்ந்து மார்ட்டின் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த போது, கண்ணீர் தாரை தாரையாக அவருடைய கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.
“வாங்க... இன்னும் கொஞ்சம் குடிங்க...” மார்ட்டின் சொன்னான். ஆனால், ஸ்டெபானிச் தன்மீது சிலுவையை வரைந்தவாறு மார்ட்டினைப் பார்த்து நன்றி கூறிவிட்டு, தன்னுடைய தேநீர் குவளையை சற்று தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார்.
“நன்றி, மார்ட்டின் அவ்டேயிச்.” அவர் சொன்னார்: “நீங்க என் மனசுக்கும் உடலுக்கும் உணவும் ஆறுதலும் தந்திருக்கீங்க.”
“நீங்க இங்கே வந்ததுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம். மீண்டும் இன்னொரு முறை நீங்க வரணும். இங்கே ஒரு விருந்தாளி வர்றதை நினைச்சு நான் மனப்பூர்வமா சந்தோஷப்படுறேன்...” மார்ட்டின் சொன்னான்.
அடுத்த நிமிடம் ஸ்டெபானிச் அங்கிருந்து கிளம்பினார். மார்ட்டின் மீதமிருந்த தேநீரை ஊற்றிக் குடித்தான். பிறகு தேநீர் குவளைகளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு தன் வேலையில் தீவிரமாக அவன் ஈடுபட்டான். ஒரு காலணியின் பின்பகுதியைத் தைக்கத் தொடங்கினான். காலணியைத் தைக்கும்போது ஜன்னலுக்கு வெளியேயும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். கிறிஸ்து வருவதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் கிறிஸ்துவையும், அவருடைய செயல்களையும் நினைத்துக் கொண்டிருந்தது. கிறிஸ்துவின் சொற்கள் அவனுடைய தலையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.
இரண்டு சிப்பாய்கள் கடந்து போனார்கள். அவர்களில் ஒருவன் அரசாங்க காலணிகளை அணிந்திருந்தான். இன்னொருவன் தன்னுடைய சொந்த காலணிகளை அணிந்திருந்தான். பிறகு அருகி லிருக்கும் ஒரு வீட்டு உரிமையாளர் பளபளக்கும் காலணிகளுடன் நடந்து போனார். அதற்குப் பிறகு ரொட்டிக்காரன் ஒரு கூடையு டன் போய்க் கொண்டிருந்தான். அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் கடந்து சென்றன. பிறகு ஒரு பெண் ஒரு மோசமான நிலையிலிருந்த கால் உறையுடனும் விவசாயி செய்த காலணிகளுடனும் வந்தாள். அவள் ஜன்னலைக் கடந்து, அவருக்குப் பக்கத்தில் வந்ததும் நின்றாள். மார்ட்டின் ஜன்னல் வழியாக அவளைப் பார்த்தான். அவள் தனக்கு இதற்கு முன்பு அறிமுகமில்லாதவள் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அழுக்கடைந்த ஆடை களை அவள் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணின் கைகளில் ஒரு சிறிய குழந்தை இருந்தது. அவள் சுவரோரமாக காற்றுக்கு முதுகைக் காட்டியவாறு நின்றிருந்தாள். குழந்தையைச் சரியாக மூடுவதற்கு எதுவுமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மூட முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் கோடை காலத்திற்கு அணியக்கூடிய ஆடைகள் மட்டுமே இருந்தன. அவைகூட மிகவும் அழுக்கடைந்து போயும் கிழிந்துபோயும் இருந்தன. ஜன்னல் வழியாக மார்ட்டின் பார்த்தபோது, அந்தச் சிறு குழந்தை அழும் குரல் கேட்டது. அந்தப் பெண் குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சித்தாள். ஆனால், அவளால் முடியவில்லை. மார்ட்டின் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான். படியில் நின்றவாறு அவளை அவன் அழைத்தான்:
“பெண்ணே, இங்கே வா.”
அந்தப் பெண் அவன் அழைப்பதைக் கேட்டு இந்தப் பக்கம் திரும்பினாள்.
“குளிர்ல குழந்தையை வச்சுக்கிட்டு ஏன் அங்கே நிக்கிற? உள்ளே வா. வெப்பம் இருக்குற இடமா இருந்தா, நீ அவனை நல்லா போர்த்தி வச்சிக்கலாம். இந்த வழியா வா!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook