அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6416
அவங்க ரொம்பவும் அருமையான குழந்தைங்க. யாருமே என்னைப் பார்க்க வர்றது இல்ல. என் பேரப் பிள்ளைகளைப் பார்க்கத்தான் வருவாங்க. சின்னப் பிள்ளை ஆன்னி என்னைக் கொஞ்சம்கூட பிரிஞ்சிருக்க மாட்டா... "பாட்டி... பாட்டி...'ன்னு எப்போ பார்த் தாலும் கூப்பிட்டுக்கிட்டே இருப்பா...”
கிழவி கூறினாள். தன் வீட்டுக் கதையில் அவள் முழுமையாக மூழ்கிப் போனதில் அவளிடமிருந்த கடுமையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டிருந்தது.
“இவன் விவரம் தெரியாம இருந்த காரணத்தாலதான், கடவுள் இவனுக்கு உதவியிருக்காரு” என்று சொன்ன கிழவி அந்தப் பையன் பக்கம் கையை நீட்டினாள்.
அந்தக் கிழவி கீழே இறக்கி வைத்த மூட்டையை மீண்டும் எடுத்து தன் முதுகில் வைக்க முயன்றபோது, பையன் அவளுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு சொன்னான்: “நான் இந்த மூட்டையைத் தூக்கிக்கிட்டு வர்றேன், பாட்டி. நான் அந்த வழியிலதான் போறேன்.”
அதற்குச் சம்மதித்த கிழவி அந்த மூட்டையைத் தூக்கி பையனின் முதுகில் வைத்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து தெருவில் இறங்கி நடந்தார்கள். மார்ட்டினிடம் ஆப்பிள் பழத்திற்கு காசு வாங்கக்கூட கிழவி மறந்துவிட்டாள். ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் தெருவில் நடந்து போவதைப் பார்த்தவாறு மார்ட்டின் நின்றிருந்தான்.
அவர்கள் பார்வையை விட்டு மறைந்ததும், மார்ட்டின் மீண்டும் தன் வீட்டை நோக்கி வந்தான். படிகளில் அவனுடைய கண்ணாடி சேதமடையாமல் கிடந்தது. அவன் உட்கார்ந்து மீண்டும் வேலையில் ஈடுபட்டான். செருப்பைத் தைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த வழியாக தெருவிளக்குகளை எரிய வைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மனிதன் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
"விளக்கேத்துற நேரம் ஆயிடுச்சு போல இருக்கே! '' அவன் மனதிற்குள் நினைத்தான். அவன் எழுந்து விளக்கை ஏற்றித் தொங்க விட்டபிறகு, உட்கார்ந்து மீண்டும் வேலையில் மூழ்கினான். அவன் ஒரு காலணியைச் செய்து முடித்திருந்தான். அதை இப்படியும் அப்படியுமாகத் திருப்பி பரிசோதித்தான். அது நன்றாக வந்திருந்தது. அவன் தன் கருவிகளை எடுத்தான். கீழே கிடந்த தோல் துண்டு களைப் பெருக்கினான். ப்ரஷ், நூல் ஆகியவற்றை எடுத்து வைத்தான். விளக்கை எடுத்து மேஜைமீது வைத்தான். பிறகு அலமாரியிலிருந்து வேத நூலை எடுத்தான். நேற்று படித்து முடித்து அடையாளப்படுத்தி வைத்திருந்த பக்கத்தைத்தான் அவன் புரட்ட நினைத்தான். ஆனால், அதுவோ வேறொரு பக்கத்தில் திறந்தது. மார்ட்டின் அதைத் திறந்தபோது, நேற்று கண்ட கனவு மீண்டும் அவனுடைய ஞாபகத்தில் வந்தது. அவன் அதை நினைத்ததுதான் தாமதம், காலடிச் சத்தம் ஒலிப்பதைப்போல் அவனுக்கு கேட்டது. தனக்குப் பின்னால் யாரோ நடப்பதைப் போல் அவன் உணர்ந்தான். மார்ட்டின் வேகமாகத் திரும்பினான். இருட்டாக இருந்த மூலையில் யாரோ சிலர் நின்றிருப்பதைப் போல் அவனுக்குப் பட்டது. அவர்கள் யாரென்று அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு குரல் மெதுவாக அவனுடைய காதில் விழுந்தது:
“மார்ட்டின், மார்ட்டின்... என்னை உனக்கு தெரியலையா?”
“யார் பேசுறது?” மார்ட்டின் மெதுவான குரலில் கேட்டான்.
“அது நான்தான்.” அந்தக் குரல் சொன்னது. இருட்டான மூலையிலிருந்த ஸ்டெபானிச் நடந்து வெளியே வந்தார். அவர் மார்ட்டினைப் பார்த்து புன்னகைத்து, அடுத்த நிமிடம் மேகத்தைப்போல மறைந்து போனார். அதற்குப் பிறகு அவர் உருவம் தெரியவில்லை.
“அது நான்தான்.” மீண்டும் குரல் ஒலித்தது. இருட்டான மூலையிலிருந்து அந்தப் பெண் கைகளில் குழந்தையை வைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவள் மார்ட்டினைப் பார்த்து புன்னகைத்தாள். அந்தக் குழந்தையும் சிரித்தது. அவர்களும் மறைந்து போனார்கள்.
“அது நான்தான்” மீண்டும் அந்தக் குரல் சொன்னது. இப்போது அந்த வயதான கிழவியும் ஆப்பிள் பழத்தைக் கையில் வைத்திருந்த பையனும் வெளியே வந்தார்கள். மார்ட்டினைப் பார்த்து அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு அவர்கள் மறைந்து போனார்கள்.
எல்லாவற்றையும் பார்த்து மார்ட்டினுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் தன்மீது சிலுவை அடையாளம் வரைந்து, கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு, எங்கு திறந்ததோ, வேத நூலின் அந்தப் பக்கத்தை அவன் படிக்க ஆரம்பித்தான். பக்கத்தின் மேற்பகுதியை அவன் படித்தான்:
“நான் பசியாக இருந்தேன். நீ எனக்கு மாமிசம் தந்தாய். நான் தாகமாக இருந்தேன். நீ எனக்கு நீர் தந்தாய். நான் யாரென்று உனக்குத் தெரியாது. என்னை நீ வீட்டுக்குள் அழைத்தாய்!”
பக்கத்தின் கீழ்ப்பகுதியை அவன் படித்தான்:
“இந்த என் சகோதரர்களில் யாராவது ஒருவருக்கு நீ இவற்றைச் செய்திருந்தாலும், சாதாரண நிலையிலிருக்கும் ஒருவருக்கு என்றாலும், அது எனக்கு நீ செய்ததாகவே அர்த்தம்! (மத்தாய் 25)”
தான் கனவில் கண்டது உண்மையில் நடந்திருப்பதை மார்ட்டின் தெரிந்து கொண்டான். அன்று உண்மையாகவே கடவுள் அவனைத் தேடி வந்திருக்கிறார். அவனும் அவரை வரவேற்றிருக்கிறான்.