அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6416
“கிறிஸ்துவை மனசுல நினைச்சுக்கிட்டு இதை வாங்கிக்கணும்.” மார்ட்டின் சொன்னான். அடகு வைத்த போர்வையை மீட்பதற்காக அவன் அவளிடம் ஆறு பென்ஸ்களைத் தந்தான். அந்தப் பெண் தன்மீது சிலுவை வரைந்தாள். மார்ட்டினும் அதையே செய்தான். தொடர்ந்து அவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அந்தப் பெண் அங்கிருந்து போனவுடன், மார்ட்டின் கொஞ்சம் முட்டைக் கோஸ் சூப்பைச் சாப்பிட்டான். பிறகு அங்கிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி முடித்து மீண்டும் வேலை செய்வதற்காக உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்து வேலை செய்தாலும் ஜன்னலை மறக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு நிழல் ஜன்னலருகில் தெரிந்தவுடன், அவன் தலையை உடனடியாக உயர்த்தி யார் அங்கு கடந்து போவது என்று பார்த்தான். அவனுக்குத் தெரிந்த மனிதர்களும், அறிமுகமே இல்லாத பலரும் அங்கு கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் குறிப்பிட்டுக் கூறும்படி இல்லை.
சிறிது நேரம் கழித்து ஒரு ஆப்பிள் விற்கும் பெண் தன்னுடைய ஜன்னலுக்கு அருகில் நின்றிருப்பதை மார்ட்டின் பார்த்தான். அவளிடம் ஒரு பெரிய கூடை இருந்தது. ஆனால், அதில் நிறைய ஆப்பிள்கள் இருப்பது மாதிரி தெரியவில்லை. அவள் தன்னிட மிருந்த ஆப்பிள்களில் பெரும்பகுதியை விற்று முடித்திருந்தாள். தன்னுடைய முதுகில் வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு மூட்டை மரத்தூள்களை அவள் வைத்திருந்தாள். கட்டடம் கட்டும் ஏதாவதொரு இடத்திலிருந்து அவள் அவற்றைச் சேகரித்திருக்க வேண்டும். அந்த மூட்டை அவளை வேதனைப்படுத்திக் கொண்டி ருந்தது. அதனால் அவள் அதை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றிக் கொண்டே இருந்தாள். பிறகு அதை நடைபாதையில் இறக்கி வைத்துவிட்டு தன்னுடைய கூடையை ஒரு தூணுக்குப் பக்கத்தில் இருக்குமாறு செய்துவிட்டு மூட்டையில் இருந்த மரத் துகள்களைக் குலுக்கினாள். அவள் அதைச் செய்து கொண்டிருந்தபோது கிழிந்துபோன தொப்பியை அணிந்திருந்த ஒரு பையன் ஓடி வந்து கூடையிலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொண்டு ஓடப் பார்த்தான். ஆனால், அந்த வயதான கிழவி அதைப் பார்த்துத் திரும்பி, பையனின் சட்டை கழுத்துப் பகுதியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். பையன் அவளிடமிருந்து தப்பிப் பதற்காக போராடினான். ஆனால், அந்தக் கிழவி தன்னுடைய இரண்டு கைகளாலும் அவனை இறுகப் பிடித்தவாறு, அவனுடைய தொப்பியை தலையிலிருந்து கழற்றி எறிந்தாள். தொடர்ந்து அவனுடைய தலைமுடியை அவள் இறுகப் பற்றினாள். பையன் வாய்விட்டு அழ ஆரம்பித்தான். கிழவி அவனை வாய்க்கு வந்தபடி திட்டினாள். மார்ட்டின் தன்னுடைய வேலையை நிறுத்திவிட்டு, வேகமாக கதவைத் திறந்து வெளியே வந்தான். படிகளில் தடுமாறிய வண்ணம் நடக்கும் வேகத்தில் மூக்குக் கண்ணாடி கீழே விழ, அவன் தெருவை நோக்கி வேகமாக ஓடினான். அந்த வயதான கிழவி பையனின் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள். போலீஸிடம் கொண்டு செல்லப் போவதாக அவனை அவள் மிரட்டிக் கொண்டிருந்தாள். பையன் அவளிட மிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தான். அவன் அவளைப் பார்த்து எதிர்ப்புக் குரலில், “நான் ஆப்பிள் பழத்தை எடுக்கல. என்னை ஏன் நீ அடிச்சே? என்னை விடு. நான் போகணும்” என்று கூறிக் கொண்டிருந்தான்.
மார்ட்டின் அவர்களை விலக்கி விட்டான். அவன் பையனின் கையைப் பற்றிக் கொண்டு சொன்னான்: “இவன் போகட்டும், பாட்டி... கிறிஸ்துவை நினைச்சு இவனை மன்னிச்சுடுங்க.”
“இவனைச் சும்மா விடக்கூடாது. அப்படின்னாத்தான் வாழ்க்கை முழுவதும் இவன் இதை மறக்காம இருப்பான். நான் இந்த ராஸ்கலை போலீஸ்கிட்ட அழைச்சிட்டுப் போறேன்.” கிழவி சொன்னாள்.
அதற்கு மார்ட்டின் சொன்னான்:
“இவன் போகட்டும், பாட்டி. இவன் இனியொரு முறை இந்தத் தப்பைச் செய்ய மாட்டான். கடவுளை நினைச்சிக்கிட்டு இவனை விட்டுடுங்க...”
கிழவி அவனைப் போக விட்டாள். பையன் அங்கிருந்து ஓட முயன்றான். அப்போது மார்ட்டின் அவனைப் பிடித்து நிறுத்தினான்.
“பாட்டிக்கிட்ட மன்னிப்பு கேளு.” அவன் சொன்னான்: “இந்த தப்பை இன்னொரு முறை நீ செய்யக் கூடாது. நீ ஆப்பிள் பழத்தை எடுக்குறதை நானே பார்த்தேன்.”
அடுத்த நிமிடம் பையன் அழ ஆரம்பித்தான். தன்னை மன்னிக்கும்படி அவன் சொன்னான்.
“ம்... இப்படிக் கேக்குறதுதான் சரி. இந்தா, இந்த ஆப்பிளை நீ வச்சுக்கோ” என்று சொன்ன மார்ட்டின் கூடையிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து பையன் கையில் தந்தான். தொடர்ந்து அவன் சொன்னான்: “இதுக்கு நான் காசு தர்றேன், பாட்டி!”
“நீங்க இந்த மாதிரி போக்கிரி பயல்களை இப்படித்தான் நாசம் பண்றீங்க.” கிழவி சொன்னாள்: “இவனையெல்லாம் நல்லா சாட்டையை வச்சு விளாசணும். ஒரு வாரத்துக்காவது இந்த ஞாபகம் இவனுக்கு இருக்கணும்.”
“அய்யோ பாட்டி... நீங்க சொல்றது சரிதான். அது வேணும்னா நம்ம வழிமுறையா இருக்கலாம். கடவுளோட வழிமுறை அது இல்லையே! ஒரு ஆப்பிள் பழத்தைத் திருடினதுக்காக இவனைச் சாட்டையால அடிக்கலாம்னா நாம செய்த பாவங்களுக்காக நம்மை என்ன செய்றது?”
அதற்கு அந்தக் கிழவி பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
கடவுள் தன் வேலைக்காரனை எந்த அளவுக்கு பெரிய அளவில் மன்னித்தார் என்பதையும், அந்த வேலைக்காரன் வெளியே போய் தனக்கு பணம் தரவேண்டியவனை எப்படி கழுத்தைப் பிடித்து துன்புறுத்தினான் என்பதையும் விளக்கும் கதையை மார்ட்டின் சொன்னான். அதை கிழவி கூர்மையாகக் கேட்டாள். அங்கு நின்றிருந்த பையனும் அதை கவனமாகக் கேட்டான்.
“கடவுள் நம்மை மன்னிக்கச் சொல்கிறார்.” மார்ட்டின் சொன்னான்: “இல்லாட்டி அவர் நம்மை மன்னிக்க மாட்டார். எல்லாரையும் நாம மன்னிக்கணும். சிந்திக்கத் தெரியாத சின்ன பையன்களை கட்டாயம் மன்னிக்கணும்.”
அந்தக் கிழவி தலையை ஆட்டி சம்மதித்தாள்.
“நீங்க சொல்றது உண்மைதான்.” அவள் சொன்னாள்: “ஆனா, அவங்க ரொம்பவும் கெட்டுப் போயிடுவாங்க.”
“அப்படின்னா நம்மைப்போல இருக்குற வயசானவங்க அவங்களுக்கு நல்ல வழிகளைக் காட்டணும்.” மார்ட்டின் சொன்னான்.
“அதுதான் நானும் சொல்ல வர்றது.” அந்தக் கிழவி சொன்னாள்: “எனக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்தாங்க. இப்போ இருக்குறது ஒரே ஒரு மகள்தான்.” தொடர்ந்து கிழவி தன் மகளுடன் தான் வசிக்கும் இடத்தையும், தனக்கு எத்தனை பேரப் பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதையும் கூறினாள். “என் உடம்புல கொஞ்சந்தான் பலமிருக்கு. இருந்தாலும் என் பேரப் பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்றதுக்காக நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன்.