அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6416
அங்கியை அணிந்திருக்கும், மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதன் தன்னை அழைப்பதைப் பார்த்து அந்தப் பெண் மிகவும் ஆச்சரியப்பட்டாள். எனினும், அவள் அவனைப் பின்பற்றி உள்ளே வந்தாள்.
அவர்கள் படிகள் வழியே நடந்து உள்ளேயிருந்த சிறிய அறைக்குள் வந்தார்கள். மார்ட்டின் அவளிடம் அங்கிருந்த படுக்கையைக் காட்டினான்.
“அங்கே அந்த அடுப்புக்குப் பக்கத்துல உட்காரும்மா. குளிர் காய்ஞ்சுக்கிட்டே குழந்தைக்குப் பால் கொடு.”
“என்கிட்ட பால் இல்ல. நானே காலையில இருந்து இப்போ வரை எதுவும் சாப்பிடல.” அந்தப் பெண் சொன்னாள். எனினும், அவள் அந்தக் குழந்தையைத் தன்னுடைய மார்பை நோக்கிக் கொண்டு சென்றாள்.
மார்ட்டின் தலையை ஆட்டினான். அவன் ஒரு பாத்திரத்தையும் கொஞ்சம் ரொட்டியையும் கொண்டு வந்தான். அடுப்பிலிருந்து அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் முட்டைக்கோஸ் சூப்பை ஊற்றினான். அடுப்பிலிருந்து அவன் கஞ்சி பாத்திரத்தையும் எடுத்தான். ஆனால், கஞ்சி இன்னும் தயாராகாமல் இருந்தது. அதனால் அவன் மேஜைமீது ஒரு துணியை விரித்து சூப்பையும் ரொட்டியையும் அதில் வைத்தான்.
“உட்கார்ந்து சாப்பிடும்மா. நான் குழந்தையைப் பார்த்துக்குறேன். எனக்கும் குழந்தைங்க இருந்தாங்க. அதனால குழந்தைகளை எப்படி பார்த்துக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.”
அந்தப் பெண் தன்மீது சிலுவை வரைந்தவாறு கீழே மேஜைக்கு அருகில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். மார்ட்டின் குழந்தையைப் படுக்கைமீது வைத்து அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். குழந்தை வாயைச் சப்பிக் கொண்டே இருந்தது. அதற்குப் பற்கள் எதுவும் இல்லாததால், அதற்குமேல் சப்ப முடியாமல், குழந்தை அழ ஆரம்பித்தது. மார்ட்டின் தன் விரலை வைத்து அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றான். அவன் தன்னுடைய விரலை நேராக குழந்தையின் வாய்க்குள் நுழைத்து, பின்னர் வேகமாக அதை வெளியே எடுத்தான். இதை அவன் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தான். வாய்க்குள் படும்படி அவன் தன் விரலை உள்ளே வைக்கவில்லை. காரணம்- அந்த விரல் கறுப்பு நிறத்தில் கறை படிந்தும், செருப்பு தைப்பவனின் மேற்பூச்சு படிந்தும் இருந்ததே. முதலில் அந்தக் குழந்தை அவனுடைய விரலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு விரலைப் பார்த்து அது சிரிக்க ஆரம்பித் தது. அதைப் பார்த்து மார்ட்டின் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
அந்தப் பெண் உட்கார்ந்து சாப்பிட்டவாறு பேசிக் கொண்டிருந்தாள். தான் யார் என்பதையும் எங்கிருந்து வருகிறாள் என்பதையும் அவள் அவனிடம் சொன்னாள்.
“நான் ஒரு சிப்பாயோட மனைவி.” அவள் சொன்னாள்: “அவங்க என் கணவரை எங்கேயோ அனுப்பிட்டாங்க. அவர் தூர இடத்துக்குப் போயி எட்டு மாதங்கள் ஆயிடுச்சு. அதற்குப் பிறகு அவரைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் வரல. நான் எனக்குக் குழந்தை பிறக்குறது வரை சமையல்காரியா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, குழந்தை பிறந்தவுடனே என்னை அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. கடந்த மூணு மாதங்களா நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எனக்குன்னு உலகத்துல ஒரு இடமில்ல. சாப்பாட்டுக்காக என்கிட்ட இருந்த எல்லா பொருட்களையும் நான் வித்துட்டேன். நான் தாதிப் பெண்ணா போயி வேலை பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன். ஆனா, யாருமே என்னை வேலைக்கு எடுத்துக்கல. நான் வறுமையில அடிபட்டுப் போய் காணப்படுவதாகவும் ரொம்பவும் மெலிஞ்சு போய் இருப்பதாகவும் எல்லாரும் சொல்லிட்டாங்க. எங்க கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்கூட வேலை பார்த்தா. அவ ஒரு வியாபாரியோட மனைவி. அவளைப் பார்க்குறதுக்குத்தான் நான் இங்கே வந்தேன். அவ எனக்கு ஒரு வேலை தர்றதா சொல்லியிருந்தா. எல்லமே பேசி முடிவாயிடுச்சுன்னு நான் நினைச்சேன். ஆனா, அடுத்த வாரத்துக்கு முன்னாடி வரவேண்டாம்னு என்னைப் பார்த்து அவ சொல்லிட்டா. அவளோட இடம் ரொம்பவும் தூரத்துல இருக்கு. நான் ரொம்பவும் தளர்ந்து போயிட்டேன். குழந்தையும் பசியால துடிக்குது. அதிர்ஷ்டவசமா வீட்டு சொந்தக்காரம்மா எங்கமேல இரக்கப்பட்டு பணம் எதுவும் இல்லாம எங்களைத் தங்க வச்சிருக்காங்க... இல்லாட்டி நாங்க என்ன செய்றதுன்னு எனக்கே தெரியாமப் போயிருக்கும்...”
அதைக் கேட்டு மார்ட்டினுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. அவன் கேட்டான்: “கதகதப்பா இருக்குற மாதிரி ஆடை எதுவும் இல்லியா?”
“அந்த ஆடைகளுக்கு நான் எங்கே போவேன்?” அவள் சொன்னாள்: “என்கிட்ட இருந்த கடைசி போர்வையை எட்டு பென்ஸ்க்கு நேற்றுதான் அடமானம் வச்சேன்.”
அந்தப் பெண் வந்து குழந்தையைக் கையில் எடுத்தாள். மார்ட்டின் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். அவன் போய் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தவற்றைப் பார்த்தான். பிறகு ஒரு பழைய அங்கியுடன் திரும்பி வந்தான்.
“பழைய நைஞ்சு போன துணியா இருந்தாலும், குழந்தையைப் போர்த்திக்க இது சரியா இருக்கும்.”
அந்தப் பெண் அந்த ஆடையைப் பார்த்தாள். பிறகு வயதான மார்ட்டினைப் பார்த்தாள். அந்த ஆடையை வாங்கியபோது அவளுக்கு கண்ணீர் வந்தது. மார்ட்டின் திரும்பி, படுக்கைக்குக் கீழேயிருந்த ஒரு சிறு பெட்டியை வெளியே எடுத்தான். அவனால் அதற்குமேல் நிற்க முடியாததால் அந்தப் பெட்டிமீது அந்தப் பெண்ணுக்கு நேர் எதிரில் உட்கார்ந்தான். அந்தப் பெண் சொன்னாள்: “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், நண்பரே. கிறிஸ்துதான் கட்டாயம் என்னை உங்க ஜன்னல் பக்கம் வர்றமாதிரி அனுப்பி வச்சிருக்கணும். இல்லாட்டி குழந்தை பனியில உறைஞ்சு போயிருக்கும். நான் புறப்படுறப்போ, கொஞ்சம் பனிதான் இருந்துச்சு. ஆனா, இப்போ பாருங்க எவ்வளவு குளிர் இருக்குன்னு. கிறிஸ்துதான் உங்களை ஜன்னல் வழியா பார்க்க வச்சு, இந்த ஏழைமேல பரிதாபப்பட வச்சிருக்கணும்...”
மார்ட்டின் சிரித்துக் கொண்டே சொன்னான்: “நீ சொல்றது உண்மையா இருக்கலாம். என்னை அவர்தான் அப்படி பார்க்க வச்சாரு. இல்லாட்டி நான் அந்த நேரத்துல வெளியே பார்த்திருக்க வாய்ப்பே இல்ல...”
அவன் அந்தப் பெண்ணிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொன்னான். அன்று தன்னைத் தேடி வரப்போவதாக ஒலித்த கடவுளின் குரலைப் பற்றியும் சொன்னான்.
“யாருக்குத் தெரியும்? எல்லாமே நடக்கக் கூடியதுதான்.” அந்தப் பெண் சொன்னாள். அவள் எழுந்து அவன் கொடுத்த துணியை தோள்மீது போட்டு தன்னையும் குழந்தையையும் அதைக் கொண்டு மூடிக் கொண்டாள். பிறகு அவள் சற்று குனிந்து, மார்ட்டினுக்கு மீண்டும் நன்றி சொன்னாள்.